தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு! கவிஞர் கண்ணதாசன் நினைவு நாள்

"காலமெனும் ஆழியிலும் காற்று, மழை, ஊழியிலும் சாகாது கம்பனவன் பாட்டு... அது தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு...! கண்ணதாசன், கம்பனுக்க...

"காலமெனும் ஆழியிலும்
காற்று, மழை, ஊழியிலும்
சாகாது கம்பனவன் பாட்டு...
அது தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு...!

கண்ணதாசன், கம்பனுக்கு எழுதிய கவிதை இது. கம்பனுக்கு மட்டுமின்றி, கண்ணதாசனுக்கும் இது பொருந்தும்.
ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், 20க்கும் மேற்பட்ட நாவல்கள் என காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளைத் தந்த மாபெரும் படைப்பாளி... சங்க இலக்கிங்களின் செழுமையையும், தத்துவங்களையும், அனுபவங்களையும், சமூக, அரசியல் விழிப்புணர்வையும் பாமர மனிதனுக்கும் புரியும் எளிய மொழியில் எழுதிய இந்த மாபெரும் கவிஞனுக்கு இன்று (அக்டோபர் 17ம் தேதி) 35வது ஆண்டு நினைவு நாள்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகில் உள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் கண்ணதாசன். இயற்பெயர் முத்தையா. அப்பா பெயர் சாத்தப்ப செட்டியார். அம்மா பெயர் விசாலாட்சி. உடன் பிறந்தவர்கள், ஆறு சகோதரிகள், மூன்று சகோதரர்கள்.

செட்டிநாட்டில், நிறைய குழந்தைகளைப் பெற்ற தம்பதி, குழந்தைகள் இல்லாத தம்பதிக்கு பிள்ளையை சுவீகாரம் கொடுக்கும் நடைமுறையாக இருக்கிறது. கண்ணதாசனும் அவ்விதம் காரைக்குடியைச் சேர்ந்த பழனியப்ப செட்டியார்-சிகப்பி ஆச்சி தம்பதிக்கு சுவீகாரம் தரப்பட்டார். சுவீகாரம் சென்ற வீட்டில் அவருக்கு வைக்கப்பட்ட பெயர் நாராயணன். எட்டாவதாகப் பிறந்ததாலோ என்னவோ, கண்ணதாசனுக்கு எட்டாம் வகுப்பு வரைக்கும் தான் பள்ளிக்கல்வி வாய்த்தது.

சிறு வயதிலேயே எழுத்தின் மீது தீராத ஆர்வம். சிறு சிறு புத்தகங்கள் வாசிக்கக் கிடைத்தன. பத்திரிகைகளில் கதை எழுத வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது. 16 வயதில் வீட்டுக்குத் தெரியாமல் சென்னைக்கு கிளம்பி வந்தார். சந்திரசேகரன் என்று புனைப் பெயர் சூடிக்கொண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடினார்.



ஆனால், சென்னை அவருக்கு பல கொடுமையான அனுபவங்களைத் தந்தது. பசியும், எதிர்காலம் குறித்த பயமும் வாட்டியது. திருவொற்றியூரில் உள்ள பட்டினத்தார் கோவிலிலேயே படுத்துக் கிடந்தார். ஒரு நிறுவனத்தில் உதவியாளராக வேலை கிடைத்தது. அந்நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே கதைகள் எழுதத் தொடங்கினார். கிரகலட்சுமி என்ற பத்திரிகையில் ”நிலவொளியிலே” என்ற அவரது முதல் கதை வெளிவந்தது. முதல் கதையை அச்சில் கண்ட உத்வேகத்தில், இன்னும் தீவிரமாக எழுதத் தொடங்கினார். பத்திரிகை துறையின் மீது பெரும் நாட்டம் ஏற்பட்டது.

ஒரு நண்பரின் பரிந்துரையோடு, புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த திருமகள் என்ற பத்திரிகையில், "ப்ரூப் திருத்துனர்" வேலை கேட்டு வந்தார். நேர்க்காணலில், பத்திரிகையின் அதிபர், உங்கள் பெயரென்ன? என்று கேட்டார். அந்த நேரத்தில் எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்து எழுதுவது ஃபேஷனாக இருந்தது. அதிலும் ”தாசன்” என்று முடியும் பெயரை வைத்திருப்பவர்களுக்கு தனி மரியாதை கிடைத்தது. கிடைத்த சில நொடிகளில் ”கண்ணதாசன்” என்று பதில் சொன்னார். முத்தையா, கண்ணதாசனாக மாறியது அந்தத் தருணத்தில் தான்.  

கண்ணதாசனின் திறமையைத் தொடர்ந்து கவனித்த பத்திரிகையின் அதிபர், ஒருநாள் இதழுக்கு தலையங்கம் எழுதச் சொன்னார். இந்திய தேசிய ராணுவம் பற்றி கண்ணதாசன் எழுதிய தலையங்கம், பத்திரிகை அதிபரை பெரிதும் கவர்ந்தது. உடனடியாக பத்திரிகையின் ஆசிரியராக பணி அமர்த்தப்பட்டார். அப்போது அவருக்கு வயது 17.

பிறகு திரை ஒலி, சண்டமாருதம், தென்றல், தென்றல் திரை உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றினார். கண்ணதாசன் என்ற பத்திரிகையை அவரே நடத்தினார். அனைத்து பத்திரிகைகளிலும் அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் வெளிவந்தன. அவை அப்போதைய இலக்கிய ஆளுமைகள் மத்தியில் பெரிதும் கவனம் பெற்றன.



கவிதைகள் மூலம் அடையாளம் கிடைத்த பிறகு, திரைப்படங்களுக்கு பாடல் எழுத வேண்டும் என்ற எண்ணம் கண்ணதாசனுக்கு ஏற்பட்டது. சண்டமாருதம் பத்திரிகை நிறுத்தப்பட்ட பிறகு, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கண்ணதாசனும் சேர்க்கப்பட்டார். கதை இலாகா சந்திப்புகளில் கருணாநிதியின் நட்பு கிட்டியது. அதன் வழி திராவிட இயக்கத்தின் மீது ஆர்வம் அதிகமானது.
பிறகு பத்திரிகை பணிகளை உதறிவிட்டு முழுமூச்சாக திரைப்படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்புத் தேடினார். ஜூபிடர் நிறுவன தயாரிப்பில், தான் இயக்கிய கள்வனின் காதலி படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்தார் கே.ராம்நாத். ”கலங்காதிரு மனமே... உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே” என்ற பாடல் தான் கண்ணதாசனின் முதல் பாடல். அதன்பிறகு, அடுத்த 30 ஆண்டுகள் திரைத்துறையை முற்றுமுழுதாக ஆளுமை செய்தார் கண்ணதாசன். திரையுலகமே அவர் எழுதும் கவிக்காக காத்துக் கிடந்தது.
ஆசுகவி என்பார்களே... அதைப்போல, கண்ணதாசனிடம் அருவியெனக் கொட்டியது தமிழ். கதை, வசனம், தயாரிப்பு என சகல துறைகளிலும் இயங்கினார்  இசையமைப்பாளர்கள் எல்லாம் தங்கள் இசையில் அவருடைய பாடல் இடம் பெறுவதை பெருமையாகக் கருதினர்.

பன்மொழிப் புலவர் அப்பாத்துரையாரிடம் கற்ற இலக்கிய வளமை, திராவிட இயக்கத்தின் தீவிரம், பாரதிதாசன் பால் ஏற்பட்ட ஈர்ப்பு எல்லாம் சேர்ந்து கண்ணதாசனை தனித்துவமிக்க படைப்பாளியாக நிலை நிறுத்தியது.

அரசியலிலும் தீவிர ஆர்வம் காட்டினார். திமுகவில் தொடங்கிய அவருடைய அரசியல் காங்கிரசில் முடிவுற்றது. ஒருமுறை தேர்தலில் நின்று தோற்றார். அவரின் இயல்புக்கு அரசியல் பொருத்தமாக இல்லை. வெளிப்படையான பேச்சு, ஒரு கொள்கை தவறெனப் படும்போது தயக்கமில்லாமல் மாற்றிக்கொள்ளும் நேர்மை, எதற்கும் அஞ்சாத விமர்சனங்கள்... இதெல்லாம் அரசியலுக்கு சரிப்படவில்லை.
பாடலில் கொடிகட்டிப் பறந்த காலங்களில் கண்ணதாசன் செல்வத்தில் திளைத்தார். ஆனால், சேமித்து வைக்கும் வழக்கமில்லை. சொந்தப்படங்கள் எடுத்தார். அவை கடனில் தள்ளின.

”பிர்லாவைப் போல சம்பாதித்தேன். ஊதாரியைப் போல செலவழித்தேன். பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நின்ற வாழ்க்கை தான் எனக்கு வாய்த்திருக்கிறது..” என்று ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார் கண்ணதாசன்.

தொடக்கத்தில் திராவிட இயக்கத்தில் தீவிரமாக இயங்கிய கண்ணதாசன் பிற்காலத்தில் இந்து மதத்தில் பற்றுடையவரானார். இந்து மதம் சார்ந்து எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு எளிய மொழில் பதில்களையும், அனுபவங்களையும் உள்ளடக்கி அவர் எழுதிய ”அர்த்தமுள்ள இந்துமதம்” தொகுப்பு இன்றளவும் அதிகம் விற்பனையாகும் நூல்களின் பட்டியலில் இடம் பிடிக்கிறது.
கண்ணதாசனுடைய வாழ்க்கை திறந்த புத்தகம். தனக்கு சரியெனப் பட்டத்தை அவர் செய்யத் தயங்கியதே இல்லை. அது தவறென்று உணரும்பட்சத்தில் அதை ஒப்புக்கொள்ளத் தயங்கியதும் இல்லை. தன்னுடைய வாழ்க்கையை கண்ணதாசன் அளவுக்கு வெளிப்படையாக பகிர்ந்து கொண்ட ஆளுமைகள் யாருமில்லை. வனவாசம், மனவாசம், எனது வசந்தகாலங்கள், எனது சுய சரிதம் ஆகிய 4 நூல்களும் கண்ணதாசனின் சுய சரிதைகள்.  

 கண்ணதாசனுக்கு மூன்று மனைவியர். 15 பிள்ளைகள்.

“கண்ணதாசன் எப்போதுமே பாக்கெட்டில் பணம் வைத்துக் கொள்ள மாட்டார். ஒருநாள் மௌண்ட்ரோடு பக்கமாக காரில் போகும்போது அவரது பாக்கெட்டில் பணம் இருந்தது. உடனடியாக ஒரு துணிக்கடையில் காரை நிறுத்தச் சொல்லி உள்ளே நுழைந்து, ”குழந்தைகளுக்கான உடை வேண்டும்” என்று கேட்டார். கடைகாரர் ”குழந்தைக்கு என்ன வயது?” என்று கேட்டார். கவிஞர் திகைத்து விட்டார். பிறகு சுதாரித்துக் கொண்டு, ”நம்ம வீட்டில் எல்லா வயதிலும் குழந்தைகள் உண்டு. எல்லா வயசுக்கும் ஒன்னொன்னு குடுப்பா” என்று சிரித்துக்கொண்டே வாங்கிச் சென்றார்...” என்று கண்ணதாசன் பற்றிய தன் நினைவுகளை சிரிப்போடு பகிர்ந்து கொள்கிறார் அவரிடம் உதவியாளராக இருந்தவரும் மூத்த இயக்குனருமான எஸ்பி, முத்துராமன்.

கண்ணதாசன் எழுதிய பெரும்பாலான பாடல்கள் அவரின் அனுபவத்தில் விளைந்தவை. அந்தந்த சூழலுக்கேற்ப பாடல் புனைவதில் அவருக்கு இணை யாருமில்லை.

ஒருமுறை, நெஞ்சில் ஓர் ஆலயம் படத்துக்காக இசையமைப்பாளர் விஸ்வநாதன் ஒரு பாடல் எழுத கண்ணதாசனை அழைத்திருந்தார். கண்ணதாசன் வரத் தாமதமாகி விட்டது. நெடுநேரம் காத்திருந்த விஸ்வநாதன், ”இனிமேல் கண்ணதாசனிடம் பாடல் கேட்கப் போவதில்லை” என்று நண்பர்களிடம் வருத்தமாக சொன்னார். இதைக் கேள்விப்பட்டு உடனடியாக விஸ்வநாதனைச் சந்தித்த கண்ணதாசன், பாடலை கொடுத்தார்.

”சொன்னது நீதானா? சொல்... சொல்.., என்னுயிரே” என்ற அந்தப் பாடலைப் படித்ததும் கண்கலங்கி கண்ணதாசனை கட்டி அணைத்துக் கொண்டாராம் விஸ்வநாதன். இப்படி பெரும்பாலான கதைகள் கண்ணதாசன் வாழ்க்கையில் உண்டு.

இன்றைக்கும் பலருக்குத் தாலாட்டாக, பலரின் துயரங்களுக்கு ஆறுதலாக, மனம் தொய்ந்து கிடக்கும் பலருக்கு உத்வேகமாக இருப்பவை கண்ணதாசனின் பாடல்கள். வாழ்வின் அனுபவத்தில் இருந்து எழும், உண்மையான ஒரு படைப்பு காலத்தை வென்று தலைமுறைகளைக் கடந்தும் நீடித்து வாழும் என்பதற்கு கண்ணதாசனின் பாடல்களும், படைப்புகளும் மிகச்சிறந்த உதாரணம்.

”எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான். அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது..” என்றார் அவர்.

காலமாகி 35 ஆண்டுகள் கடந்தும் கண்ணதாசன் இன்னும் நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கக் காரணம் இந்த நேர்மையும், உண்மையும் தான்..!



கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள்


* கண்ணதாசன் பாடல்களை தானே எழுதுவதில்லை. சொல்லச் சொல்ல அவரது உதவியாளர்கள் எழுதுவார்கள். இயக்குனர் எஸ்பி.முத்துராமன், பஞ்சு அருணாசலம், இராம.கண்ணப்பன் ஆகியோர் கண்ணதாசனிடம் உதவியாளர்களாக பணியாற்றினார்கள்.

* ”இவ்வளவு சிறப்பாக பாடல் எழுதுகிறீர்களே... உங்களுக்கு ஆதர்சமாக இருந்தது  யார்?” என்று கண்ணதாசனிடம் கேட்கப்பட்டது. ”என் தாய் வாசாலாட்சி பாடிய தாலாட்டு தான் என் பாடல்களுக்கு ஆதர்சம்” என்றார் கண்ணதாசன்.

* மெட்டுக்கு இசையமைப்பதையே விரும்புவார் கண்ணதாசன். பெரும்பாலும், வெறும் சூழ்நிலையை மட்டும் கேட்காமல் படத்தின முழுக்கதையையும் கேட்டு, அக்கதையை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் பாடல்கள் எழுதுவார். அப்படி அவர் எழுதிய பாடல்கள் இன்றும் உயிர்ப்போடு இருக்கின்றன. இயக்குனர் பீம்சிங் இயக்கிய பெரும்பாலான ”பா” வரிசைப் படங்களின் பாடல்கள் அப்படி எழுதப்பட்டவை தான்.

* கண்ணதாசன் எப்போதும் மதுவில் திளைத்துக்கிடப்பார் என்றொரு கருத்து உண்டு. ஆனால் கண்ணதாசன் பாடல்கள் எழுதும்போது மது அருந்தமாட்டார்.

*மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடுவார் கண்ணதாசன். குறிப்பாக அசைவ உணவுகள். கண்ணதாசனின் மனைவி பார்வதி ஆச்சி மிகச்சிறப்பாக அசைவ உணவுகளை சமைப்பார். அவரது மகள் ரேவதி சண்முகம் சமையல் நிபுணராக இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

* சேரமான காதலி படைப்புக்காக கண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் பல...

1 comments

Search This Blog

Blog Archive

About