ரெமோ- ஹரி படங்களில் வருகிற சுமோ மாதிரி ச்சும்மா விர்…..ர்!

நடிகர் சங்கத்தில் ரெஜினா மோத்வானிக்கும் ஒரு உறுப்பினர் கார்டு போட்டு வைங்க விஷால்! ‘அவ்வை சண்முகி’ கமலின் அடுத்த பிளாட்டுக்கே குடி வந்திருக...

நடிகர் சங்கத்தில் ரெஜினா மோத்வானிக்கும் ஒரு உறுப்பினர் கார்டு போட்டு வைங்க விஷால்! ‘அவ்வை சண்முகி’ கமலின் அடுத்த பிளாட்டுக்கே குடி வந்திருக்கிறார் நம்ம எஸ்.கே! ரிஸ்கே எடுக்காம ஜெயிக்கிற அளவுக்கு அதிர்ஷ்டக் காற்று அவர் பக்கம் வீசிக் கொண்டிருக்கிற ‘பலே’ பஞ்சாங்க காலத்திலும், எஸ்.கே எடுத்திருக்கிற இந்த ரிஸ்க் “பகுத் அச்சா ஹை!”

சத்யம் தியேட்டர் வாசலில் பிரமாண்டமான ஒரு பேனர்ல முகம் வருகிற அளவுக்கு வளரணும் என்கிற லட்சியத்தோடு திரியும் ஒரு அப்ரசண்டு நடிகனுக்கு, வாழ்க்கை கொடுக்கிற ஒரு வாய்ப்பு, ‘நாள் முழுக்க பொம்பளப் புள்ளையா திரிப்பா…’ என்பதுதான்! அதுவும் லட்டு மாதிரி சிட்டுக்காக என்றால்? ஆளே வழவழப்பாகி கீர்த்திசுரேஷ் பின்னால் சுற்ற ஆரம்பிக்கும் சிவகார்த்திகேயன் தன் வேஷம் கலைத்தது எப்போது? கலைந்தபின் அவருக்கு கிடைக்கும் லாப நஷ்டங்கள் என்ன? இதுதான் ரெமோ.

படத்தில் முக்கால்வாசி நேரம் சிவகார்த்திகேயன் போட்டிருக்கும் ‘ஸ்த்ரீ பார்ட்’ வேஷம்தான் ஏழெட்டு வடிவேலுகளுக்கும், நாலைந்து சூரிகளுக்கும் ‘ஈக்குவல் டூ’ ஆகி புருவம் உயர விடுகிறது. சரண்யா பொன்வண்ணன், கீர்த்தி சுரேஷ், போன்ற ‘நம்பருக்குள் வருகிற’ ஆக்டிங் சுனாமிகளையெல்லாம் அசால்ட்டாக டம்ளரில் பிடித்து மடக் மடக்கென்று விழுங்கி விடுகிற அளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்! ‘…ப்ப்ப்பா’ என்று சொல்ல வைக்கும் சில ‘குளோஸ் அப்’ மேக்கப்பை தாண்டியும் அவர் காட்டுகிற சின்ன சின்ன பர்பாமென்ஸ்தான் இன்னும் அசரடிக்கிறது. குறிப்பாக அந்த குழந்தையை மூக்கோடு மூக்கு வைத்துக் கொஞ்சும் காட்சி! ஒரே நேரத்தில் டபுள் ஆக்ட் கொடுக்க அவர் தவிக்கிற காட்சிகளெல்லாம் ஆடியன்சுக்கு மூச்சிரைப்பு!

தென்னை மரத்தில் சிக்கிக் கொண்ட பட்டம் மாதிரி, இந்த காதல் சரியா, தப்பா? என்கிற குழப்பத்திலேயே தவிக்கும் கீர்த்தி சுரேஷ் செம அழகு! குழந்தைக்கு நடிப்பும் அநாயசமப்பா. “என்னடா… என்னடா வேணும் ஒனக்கு?” என்று சிவகார்த்திகேயனை எகிறுகிற அந்த காட்சி, எண்ணை சட்டியில் கடுகு வெடிப்பதை போல அவ்வளவு பாந்தம். எங்கு விசில் சப்தம் கேட்டாலும், காமராஜர் ஹாலின் அகண்ட கதவு போல கண்களை திறந்து கொண்டு பேந்த பேந்த விழிக்கும் போதெல்லாம் பின்றீயேம்மா…! (அந்த வாண வேடிக்கை சி.ஜிதான். அதை இமேஜ் பண்ணிக் கொண்டே கீர்த்தி எக்ஸ்பிரஷன்களை கொட்டுவதை, வியப்போடுதான் ரசிக்க வேண்டும்)

“அவ எவ்ளோ அழகுடா… சிவா” என்று பதினொரு எழுத்துக்களை சொல்லி முடிப்பதற்குள்ளேயே நவரசத்தையும் பொழிந்துவிடுகிறார் சரண்யா பொன்வண்ணன்! (ஆளை பார்த்து அநேக நாளாச்சு. அடிக்கடி வாங்கம்மா)

‘நானெல்லாம் ஸ்கிரீன்ல வந்தாலே நீங்க வயிறு குலுங்கணும்…” என்று ஒரு ஸ்பெஷல் ‘வரம்’ வாங்கி வளர்ந்து நிற்கிறார் யோகி பாபு. சிவகார்த்திகேயனுக்காக சிரித்து ஓய்வதற்குள் இவர் என்ட்ரி. கண்களில் ரொமான்ஸ் வழிய வழிய இவர் ரெமோவை விரட்டுவதும், பிற்பாடு காதலியை காணவில்லை என்று துண்டு பிரசுரம் கொடுப்பதுமாக, தனக்கான ரசிகர் கூட்டத்தை மாநாடு ஆக்கிக் கொண்டே போகிறார் யோகி!

சதீஷ், மற்றும் மொட்டை ராஜேந்திரனுக்காக அவ்வப்போது சிரித்து வைக்கலாம்.

இந்த இடத்தில் ஒரு பைட் இருந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகனை எதிர்பார்க்க விட்டு, அடிக்க விட்டிருக்கிறார் அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன். நர்ஸ் வேடத்திலிருக்கும் எஸ்.கே. ச்சும்மா பறந்து பறந்து அடிக்கிற போது தியேட்டரே துவம்சம் ஆகிறது. இடம் பெற்ற இரண்டு பைட் காட்சிகளுமே சர்வ பொருத்தமான இடங்கள்! ஆனால் பாடல் காட்சிகளில்தான் படு சுத்தம்! ‘ஏன் இந்தப் பாட்டு இந்த இடத்தில் வரணும் அங்கிள்?’ என்று பேய் முழி முழிக்கிறது ரசிகர்ஸ் நெஞ்சு! குறிப்பாக க்ளைமாக்சுக்கு முன் வரும் அந்த குடி பாட்டை இனிமேலாவது நறுக்கி வீசிவிடலாம். தப்பில்லை.

ஆங்… அனிருத் பற்றி சொல்லணுமே? பின்னணி இசையில் பிரமாதம். பாடல்களில் மட்டும் ஏனோ அந்த இனிப்பான ரசவாதம் மிஸ்சிங்! சிவகார்த்திகேயனின் தாறுமாறு ஹிட் படங்களுக்கென்றே நேர்ந்துவிடப்பட்ட இமானை ஏன் சார் விட்டீங்க?

பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவை பிரேம் பை பிரேம் ‘பிரேம்’ போட்டு வைக்கலாம். அவ்வளவு அழகு! இவரை முழுமையாக பயன்படுத்திக் கொண்ட மொத்த ரெமோ டீமுக்கும் சேர்த்து ஒரு கிரீட்டிங் கார்ட்! அடுத்தது என்ன என்று சுலபமாக யூகிக்கக் கூடிய திரைக்கதைதான். அதில் தங்க முலாம் பூசி மெழுகிவிட்டது படத்தின் ரிச்நெஸ்! இருந்தாலும் இந்தப்படத்துக்கெல்லாம் ஏன் ரசூல் பூக்குட்டி என்றெல்லாம் பலமா யோசிக்க வைக்குதே பாஸ்!

அஜீத், விஜய், ரஜினி ரசிகர்கள் அத்தனை பேரையும் ஒரு காட்சியில் கைதட்ட விடுகிறது சில்மிஷ டயலாக்! சிவகார்த்திகேயனின் சத்யம் தியேட்டர் குளோஸ் அப் பின்னணியில் விஜய் சேதுபதி. இப்படி கூட்டு வலை போட்டு பிற ஹீரோக்களின் ரசிகர்களை வாரியணைத்திருக்கிறார் எஸ்.கே.

படத்தில் லாஜிக் மிஸ்டேக், குறைகளே இல்லையா? ஏன் இல்லை. வண்டி வண்டியாக இருக்கிறது. அவற்றையெல்லாம் ஒரே ஒரு நர்ஸ் குட்டியின் மாய்மாலமும், ஜகஜ்ஜாலமும் வந்து வந்து மறைக்கிறது!

ரெமோ- ஹரி படங்களில் வருகிற சுமோ மாதிரி ச்சும்மா விர்…..ர்!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About