மளமள சரிவில் பருப்பு விலை! கறுப்பு பணம் வெளிவந்ததுதான் காரணமா?

சில வாரங்களுக்கு முன்பு வரை ரூ.225 வரை விற்ற துவரம் பருப்பு முதல் அனைத்து பருப்பு வகைகளின் விலைகள் தற்போது இறங்கு முகத்தில் உள்ளன. கடந்த 8-...

சில வாரங்களுக்கு முன்பு வரை ரூ.225 வரை விற்ற துவரம் பருப்பு முதல் அனைத்து பருப்பு வகைகளின் விலைகள் தற்போது இறங்கு முகத்தில் உள்ளன. கடந்த 8-ம் தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இந்தியாவில் புழங்கிய பணத்தில் 85 சதவிகித பணத்தை செல்லாது என அறிவித்ததால் பெரும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன் பின்னர் இந்திய ரிசர்வ் வங்கி புதிய 2000 ரூபாய் தாளை வெளியிட்டாலும் மக்களிடையே பணத்தட்டுப்பாடும் தீர்ந்தபாடில்லாமல்தான் இருக்கிறது. பழைய ரூபாய்களை மாற்றி புதிய 2000 ரூபாய் பெற்றவர்களுக்கு சில்லறை கிடைக்காமல் மற்றொரு பெரும் சிக்கல் ஏற்பட்டது. கடந்த வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய 500 ரூபாய் தாளும் இன்னும் சரிவர விநியோகிப்படவில்லை. பணத்தட்டுப்பாடு நிலவுவதால் கடைகளில் நடைபெறும் அன்றாட வியாபாரம் பெருமளவு சரிந்து விட்டன.

இந்நிலையில் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி குறைந்து வருவது குறித்து சில்லறை வியாபரிகள் சங்க தலைவர் எஸ்.பி.சொரூபன் அவர்களிடம் கேட்டபோது

" வழக்கமாக இந்த மாதத்தில்தான் பருப்பு விலை ஏறும். ஆனால் எப்போதும் இல்லாத வகையில் இந்த மாதத்தில் விலை வீழ்ச்சியாகிக்கொண்டிருக்கிறது. தென் மேற்கு பருவ மழை அதிகம் பெய்து பருப்பின் விளைச்சல் அதிகரித்துவிட்ட காரணத்தால் உள்நாட்டு உற்பத்தி பெருகி உள்ளது. கள்ளப்பண ஒழிப்பு நடவடிக்கை காரணமாக பதுக்கல் அதிகம் நடக்கும். எனவே பருப்பின் விலை அதிகரிக்கும் என்றும் சிறுவியாபாரிகள் அஞ்சிக்கொண்டிருக்கும்போது இப்படி குறைந்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி போட்டுள்ள பருப்பு இறக்குமதி  ஒப்பந்தமே முதல் காரணம். கடந்த காங்கிரஸ் அரசுக்கு முந்தைய பாரதிய ஜனதா அரசில் கூட பருப்பு விலையை கட்டுக்குள் வைக்க ஏற்றுமதி இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பிரதமர் செய்துள்ள ஒப்பந்தத்தினால் தான்சானியா, கென்யா, மாளாவியா,கனடா ஆகிய நாடுகளில் இருந்து துவரம்பருப்பு இறக்குமதியாக உள்ளது. அவை வந்தால் இன்னும் விலை குறையும் என்கிற காரணத்தால் சிறிய அளவில் இருப்பு வைத்திருந்த மொத்த வியாபாரிகளும் தங்களின் இருப்பை சந்தையில் வந்த விலைக்கு விற்கத் தொடங்கிவிட்டனர். இவை ஒரு பக்கம் இருந்தாலும் ரூபாய் பிரச்னைதான் பெரிய சிக்கலாக இருக்கிறது. லாரி வாடகையை நூறு ரூபாய்களாக கேட்கின்றனர். 500 ரூபாய்தான் போதிய அளவில் புழக்கத்துக்கு கிடைக்கவில்லை என்றால் நூறு ரூபாய்க்கு பெரும் தட்டுப்படாக உள்ளது. 50 சதவிகிதம் வியாபாரம் சுத்தமாக படுத்துவிட்டது. அனைத்து வகை பருப்புகளின் விலையும் வீழ்ந்துவிட்டது. இந்நிலையில் பர்மாவிலிருந்து உளுந்தம்பருப்பும் வர இருக்கிறது. இந்தியாவில் இம்முறை உளுந்து விளைச்சல் அதிகமாக உள்ளது.இந்த சூழலில் இறக்குமதி செய்யப்படும்போது இன்னும் அதிகமாக விலை வீழ்ச்சியடையவே அதிக வாய்ப்புள்ளது. வரும் ஜனவரியில் 100 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.1000 முதல் ரூ.2000 வரை உளுந்தின் விலை குறைய வாய்ப்புள்ளது.சிறு வியாபாரிகளின் சந்தையில் இந்த ஏற்ற இறக்கம் உடனுகுடன் நடை முறைக்கு வந்து விடுகிறது. ஆனால் பேரங்காடிகளில் "கேஷ் லெஸ்" என்கிற அட்டை வர்த்தகம் செய்யும் இடங்களில் விலை குறைந்தாலும் உடனடியாக குறைக்க மாட்டார்கள்.பொதுமக்கள் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டுள்ள விலையை மட்டுமே நம்பி கொடுக்கிறார்கள், மாத சாமான் வாங்கும் மத்திய வர்க்கத்தினர் நாளைந்து கடையில் விசாரித்து வாங்கினால் பயன் அடையலாம் " என்று தெரிவித்த சொரூபன் வடமாநிலத்தில் கள்ளப்பதுக்கல் பருப்புகள் வெளியே வந்ததும் ஒரு காரணம் என்கிறார். அது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்..

" வடமாநிலங்களான மத்தியப்பிரதேசம், குஜராத் போன்றவற்றில் இந்த பணப்பிரச்னையில் விலை ஏறும் என எதிர்பார்த்து பழைய தாள்களைக் கொண்டு பருப்புகளை வாங்கி ஸ்டாக் வைத்தவர்கள் தற்போது விலை இறங்கும் என தெரியவந்ததும் பதுக்கல் பருப்புகளை சந்தைக்கு கொண்டு வந்ததும் கிடைத்த விலைக்கு விற்று காசாக்கியதும் விலை இறங்கியதற்கு முக்கிய காரணம்." என்று தெரிவித்தார்.

பருப்பு வகைகளை தொடர்ந்து அரிசி, கோதுமை மற்றும் எண்ணை வித்துக்களின் விலையும் குறைய வாய்ப்புகள் உள்ளதாக தெரிகின்றன.  

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About