செகண்ட் இன்னிங்க்ஸில் சொல்லி அடித்திருக்கிறதா சென்னை 28 அணி? - சென்னை 28 II விமர்சனம்

வெங்கட் பிரபு இயக்குநராக அறிமுகமான முதல் படம் சென்னை 28.  நட்பையும் கிரிக்கெட்டையும் சுமந்து, 10 வருடம் கழித்து அதே கதை ஆனால் வேறு களத்தில்...

வெங்கட் பிரபு இயக்குநராக அறிமுகமான முதல் படம் சென்னை 28.  நட்பையும் கிரிக்கெட்டையும் சுமந்து, 10 வருடம் கழித்து அதே கதை ஆனால் வேறு களத்தில் செகண்ட் இன்னிங்ஸ் விளையாட வந்திருக்கிறது டீம்.நிஜமாகவே “தி பாய்ஸ் ஆர் பேக்” தானா...!

சென்னை ஷார்க்ஸ் டீம் முதல் பாகத்தில் ராக்கர்ஸை செமி ஃபைனலில் ஜெயித்து இத்தோடு  10 வருடங்கள் ஆகிவிட்டன. ப்ளேயர்ஸ் எல்லோருமே வேறுவேறு இடத்தில் வேலை, மனைவி, குழந்தை என செட்டில் ஆகிவிடுகிறார்கள். இவர்கள் அனைவரும் ஜெய் திருமணத்திற்காக ஒன்று சேர்கிறார்கள். ஐடியில் வேலை செய்யும் ஜெய்யின் காதலி தான் சானா அல்ஃதாப். இவர்களின் திருமணத்திற்காக சென்னை 28 டீம், தேனி பக்கம் ட்ரிப் அடிக்கிறார்கள்.

 அரவிந்த் ஆகாஷ் தேனியில்  ஒரு கிரிக்கெட் அணியின் கேப்டன். அவரது அணிக்கு கடும் சவாலாக எட்டு வருடங்களாக கோப்பையை வென்று கொண்டிருக்கிறது வைபவின் அணி. தனது டீம் நண்பர்கள் தேனியில் வந்து இறங்கியதும் குஜாலான அரவிந்த், அவர்களை வைத்து வைபவின் அணியை ஜெயிக்க திட்டம் தீட்டுகிறார். ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்குமா? ஒரு வாரத்திற்குள் திருமணத்தை வைத்துக்கொண்டு கிரிக்கெட் ஆடுகிறார்கள்.  ஜெயிப்பதற்காக எதிர் டீம் கேப்டன் வைபவ் செய்யும் சூழ்ச்சியால், ஜெய் திருமணம் நின்றுபோகிறது. அந்த மேட்ச் என்னாகிறது,  டீம் மீண்டும் ஜெயித்ததா, ஜெய் காதலித்த பெண்ணை திருமணம் செய்தாரா என்பதை ஜாலி கலாட்டாவாக சொல்லியிருக்கும் பாய்ஸின் ரீ யூனியன் தான் கதை.

இரண்டாம் பாகம் என்றதும் முதல் பாகத்தை விட சில காட்சிகள் முன்பின் முரணாக காட்சிப்படுத்தப்படும். ஆனால் எந்தவித மாறுதலும் இல்லாமல் கேரக்டர் முதல் அனைத்தையும்  அப்படியே இதிலும் கடத்தியிருக்கிறார் வெங்கட் பிரபு. கிட்டத்தட்ட கால இடைவெளியும் மேட்ச் ஆவது சிறப்பு. சென்னை 28ல் பார்த்த அனைவருமே இப்பொழுது சீனியர் ப்ளேயர்ஸ். இல்லாத ஒரு சிலருக்கும் தன் வாய்ஸ் ஓவரில் விளக்கம் கொடுத்து படம் ஆரம்பிக்கும் முன்பே, நம்மைத் தயார்படுத்திவிடுகிறார்.

சென்னை 28யை விட, இந்தப் படத்தில் காமெடி காட்சிகள் கொஞ்சம் தூக்கல் தான். அதுவும் மிர்ச்சி சிவா டபுள் டியூட்டி. யூட்யூப் ரிவ்யூ செய்யும் கதாபாத்திரத்தில் பார்க்கும் எல்லாவற்றையும் ரிவ்யூ செய்யும் பாணியிலேயே சிந்திப்பது செம கலாய். “அவதார் படத்தை எங்க ஊரு வியட்நாம் காலனில இருந்து சுட்டதுதான்னு எங்களுக்கு தெரியாதா மிஸ்டர் கேமரூன்?” என அவர் அறிமுகமாகும் காட்சிக்கே தியேட்டரில் க்ளாப்ஸ் அள்ளுகிறது. ஆம்புலன்ஸில் போகும்போது ‘கண்டுபிடிச்சுட்டேன். இது அலைபாயுதே’ என்று சொல்வதற்கும் அவர் அப்படிச் சொல்வதையெல்லாம் யூ ட்யூப் விண்டோவிலேயே காண்பித்த வெங்கட்பிரபுவின் ஐடியாவுக்கும் லைக்ஸ். ஒரு கட்டத்தில் வெங்கட்பிரபுவையே கலாய்க்கிறார் மிர்ச்சி சிவா.  கடைசி வரைக்கும் கல்யாணமே பண்ணாமல் சரக்குகாகவே வாழ்கிறார் பிரேம்ஜி. அவரை மட்டுமல்லாமல் அப்பா கங்கை அமரனையும் சரக்குக்கு ஏங்குபவராய் காண்பித்ததற்கு டிஸ்லைக்ஸ் பாஸ். அதற்கு பரிகாரமாகவோ என்னமோ பிரேம்ஜியின் வாய்ஸ் ஓவரில் ‘மது நாட்டுக்கு வீட்டுக்கு கேடு’ சொல்லி தமாஷ் பண்ணியிருக்கிறாரக்ள். முதல் பாகத்தில் கில்லியாக சுழன்றுவந்த நிதின்சத்யா, விஜய் வசந்த் இப்போ மனைவிக்கு பயந்த கணவர்களாக நச்..

பாய்ஸின் மனைவிகளாக வரும் விஜயலட்சுமி, அஞ்சனா, சாந்தினி மற்றும் ஜெய் காதலியான சனா அல்ஃதாப் என்று எல்லோருமே செம கூல்.. ஒரு பாட்டு என்றாலும் சிங்கிள் பாலில் சிக்ஸராய் மனிஷா யாதவ் சொப்பன சுந்தரியாக செம.

 ‘ஷார்க்ஸ் டீமுக்கு ஏன் ஷார்க்ஸ்னு பேர் வெச்சாங்க தெரியுமா? எனக்கே தெரியாது, ஏன்னா அவ்வளவு பழசு...’ ‘நாங்க என்னைக்கோதான் ஜெயிப்போம். அந்த என்னைக்கோதான் நேத்து’, “உனக்கு பாகுபலி 2 முக்கியமா, இல்ல சென்னை 28 டூ முக்கியமா?”  என்று வசனங்களில் காமெடியை அள்ளித் தெளித்திருக்கிறார்.
 
முதல் பாகத்தில் “பேட் பாய்ஸ்” டீமுடன் தோற்று, பேட்டை இழந்துவிடுவார்கள் சென்னை ஷார்க்ஸ். அந்த பழைய டீம் இப்போ ISL ப்ளேயர்ஸ். அவர்களையும் மறக்காமல் இந்த பாகத்தில் விளையாடவிட்டதும், விஜய் வசந்தின் பழைய பேட் மீண்டும் கிடைத்ததா என்ற ட்விஸ்டும்  அடிபொளி. சென்னை 28 ஃபைனலில் இருந்த அதே ஹைப்பும், டென்ஷனையும் அப்படியே கடத்தி கொண்டுவருவதும், உச்சபட்ச கைதட்டல் பெறுவதும் இந்தக் காட்சியில் தான்.

“15 ஓவருக்கு 90 பால் தானே, அந்த 90 பாலையும் நானே ஸ்பான்ஸர் பண்ணுறேன்”  விளையாட்டுத்துறை அமைச்சராக சண்முகசுந்தரத்தை படத்தில் ப்ளேஸ் செய்த விதமும், சந்தானபாரதி, டி.சிவா, இளவரசு என்று ஒவ்வொருவரின் கேரக்டரும் படத்தின் பக்கபலம்.  சென்னை 28ல் இல்லாத புது என்ட்ரி கொடுத்திருக்கும் வைபவை பொக்கே கொடுத்து வெல்கம் செய்யலாம். மீசையை முறுக்கிக்கொண்டே அவர் செய்யும் வில்லத்தனங்கள் அவரது கதாபாத்திரத்துக்கு அருமையாக செட் ஆகிறது.

யுவன் பின்னணி இசை, இண்ட்ரோ பாடல்கள் என்று அசத்தியிருக்கிறார். அந்த டூயட்.. ஆ....வ்! சென்னை 28ல் பேட் பறிபோகும்போது இசைக்கப்படும்  ‘அபூர்வ சகோதரர்கள்’ பிஜிஎம்-மை இதில் ரீமிக்ஸ் செய்திருக்கிறார் யுவன். இன்னும் சில நாட்களில் பலரது டவுன்லோட் லிஸ்டில் அது இருக்கும். இடைவேளைக்கு முன் இருக்கும் அதே வேகத்தை, இடைவேளைக்குப் பின்னும்கொண்டு சென்றிருக்கிறார்கள். மேட்ச், சேஸிங் சீன்களில் எல்லாம் பிரவீன் கேஎல்லின் எடிட்டிங் குறிப்பிடவைக்கிறது.

நிதின் சத்யா, ஜெய், சிவா, விஜய் வசந்த் என்று பழைய டீமுடன்  மீண்டும் ஒரு படமென்பது மிகப்பெரிய சவால். அதே ஒற்றுமையுடன், பக்கா நடிப்புடன் எந்த வித காம்ப்ரமைஸூம் இல்லாமல் படமாக்கிய  இடத்தில் ஃபைனலுக்கு முன்னேறுகிறார்  வெங்கட் பிரபு. சென்னை பாய்ஸின் இந்த ரீயூனியன் மீண்டும் ஒருமுறை கப் ஜெயித்திருக்கிறது.

நண்பர்கள் என்ற கதைக்களத்தை தொடர்ந்து கையாண்டு கொண்டிருக்கிறார் வெங்கட்பிரபு. அதற்கு பாராட்டுகள்.  குட்டிக்குட்டி குறைகளும் உண்டு.   ஏமாற்றியே தொடர்ந்து ஜெயித்துக்கொண்டிருக்கும் வைபவ் அணிக்கு, இவர்களை போங்கு பண்ணி ஊரைவிட்டு அனுப்புவது அவ்வளவு கடினமா? அதென்ன ஊர் பெரியவர்களெல்லாம் ‘கிரிக்கெட் மேட்ச்னா ஊர்ல இருக்க அனுமதிக்கறோம்’ என்று சொல்கிறார்கள். அவ்வளவு நியாயஸ்தர்களா என்ன? நண்பர்களெல்லாம் கூடினாலே சரக்குதானா? அத்தனை ஜாலியாக மாப்பிள்ளையாக ஜெய்யை ஏற்றுக்கொண்ட மாமனார் சிவா, ஒரு தவறுக்காக -விசாரிக்காமலே - அவரை ஒதுக்கிவிட்டு, உள்ளூரிலேயே இருக்கும் ரவுடி, கட்டப்பஞ்சாயத்து என்று சுற்றும் வைபவின் நண்பனை ஓகே சொல்லிவிடுவாரா? சச்சு, டெம்ப்ளேட்டாக ஹீரோயினின் பாட்டிகள் செய்யும் அதே வேலையை இதிலும் செய்வது ரிப்பீட் அலுப்பு. 

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About