ஜெயலக்‌ஷ்மியை கண்டுபிடித்தாரா விஜய் ஆண்டனி? சைத்தான் விமர்சனம்

"பிச்சைக்காரன்" வெற்றிக்குப் பிறகு விஜய் ஆண்டனி எடுத்திருக்கும் அவதாரம்தான் சைத்தான். முந்தைய வெற்றிகளால் கொஞ்சம் எதிர்பார்ப்பு க...

"பிச்சைக்காரன்" வெற்றிக்குப் பிறகு விஜய் ஆண்டனி எடுத்திருக்கும் அவதாரம்தான் சைத்தான். முந்தைய வெற்றிகளால் கொஞ்சம் எதிர்பார்ப்பு கூடியிருக்க, எப்படி வந்திருக்கிறான் சைத்தான்?

திறமை வாய்ந்த மென்பொறியாளரான விஜய் ஆண்டனிக்கு, திருமணமான ஓரிருநாட்களில் திடீரென சில சம்பவங்கள் நடக்கத் தொடங்குகிறது. கணினியிலிருந்து நீளும் கை தாக்குகிறது.  மண்டைக்குள் ஒரு குரல் துரத்துகிறது. அதன் தொடர்ச்சியாக சில விபரீதங்கள் நிகழ, குடும்பமும், அவரது பாஸும் கோயில், சைக்யாட்ரிஸ்ட் என்று விடைதேடிப் பயணிக்கிறார்கள். இதன் நடுவில் துரத்தும் குரலின் வழிகாட்டுதல் படி, விஜய் ஆண்டனியும் ஜெயலட்சுமியைத் தேடுகிறார். யார் அந்த ஜெயலட்சுமி... எதற்காகத் தேடச் சொல்கிறது அந்தக் குரல் என்பதை பிற்பாதியில் காட்டி முடித்திருக்கிறார்கள்.

டைட்டிலுக்கு முன்னரே சுஜாதா படத்தைப் போட்டு, அவரது நாவலிலிருந்து தழுவி எடுக்கப்பட்டது என்று காட்டிவிடுகிறார்கள். அவரது ‘ஆ’ நாவலின் பெரும்பாலான பகுதிகள்தான் சைத்தான். இடைவேளையில் ஒரு ஃபோட்டோவைப் பார்த்ததும் விஜய் ஆண்டனி ஷாக் ஆகும் தருணத்தில் தியேட்டரும் சேர்ந்து ஷாக் ஆகிறது. நெத்தியடி இண்டர்வெல் ப்ளாக். ஆனால், அதற்குபிறகுதான் கதை எங்கே செல்வது எனப்புரியாமல் திக்கற்று திரிகிறது. இரண்டாம் பாதியில் சுஜாதாவின் கதையை அப்படியே எடுக்க முடியாது என்று மாற்றியதில்தான் சறுக்கியிருக்கிறார்கள்.

நாயகியின் பாத்திரப்படைப்பில் ஏகப்பட்ட குளறுபடிகள். இடைவேளைக்குப் பிறகு, வில்லன் எண்ட்ரி ஆகும் இடம் வரைக்குமான இடைவெளியை நிரப்பும் சங்கிலி தொடர்பற்றுப்போன உணர்வு. அந்த வில்லன் செய்யும் வேலையெல்லாம் பத்துக்கு ஏழு படங்களில் காட்டி கொட்டாவி விட வைக்கிற டெம்ப்ளேட் க்ரைம். விஜய் ஆண்டனியின் ஆக்‌ஷன் அவதாரம் க்ளாப்ஸ் அள்ளினாலும், அது முடிந்தபிறகு மீண்டும் ஒரு தொய்வு. க்ளைமாக்ஸிலும் எப்படி முடிப்பது என்று படத்தின் கேரக்டர்கள் நம்மிடம் கேட்டே விடுவார்கள் போல.

கதைத் தேர்வில் வழக்கம்போலவே சபாஷ் பெறுகிறார் விஜய் ஆண்டனி. அவருக்கு ஏற்ற கதாபாத்திரம். உடல்மொழியெல்லாம் ஓகே. ஸ்கோர் பண்ண வாய்ப்பிருக்கிற காட்சிகள் நிறைய இருந்தும், தவறவிட்டிருக்கிறார். கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

அதேபோல, விஜய் ஆண்டனியின் ஐடி நண்பனாக முருகதாஸைக் காண்பித்ததும், "இனிமே இந்த மாதிரி குரல் கேட்டா, சார் வீட்ல இல்ல வெளியூர் போயிருக்கார், நாளைக்கு வாங்கனு சொல்லிடு" என சின்ன காமெடி சொல்லி சிரிக்க வைத்ததும் சூப்பர். ஆனால், அந்த மொட்டை மாடி சீரியஸ் காட்சியில் அவரை ‘வாட் த ஹெல்’ என்று ஆங்கிலம் பேசவைத்தது நெருடல். ஐடிக்காரர்கள் அப்படித்தான் பேசுவார்கள் என்று வலிந்து திணிக்கப்பட்ட அந்த வசனத்துக்கு தியேட்டரில் சிரிப்புதான் கேட்கிறது. அங்கே  ஆங்கில வசனத்தைப் பேசவிட்டுவிட்டு, வில்லன் ஆங்கிலம் பேசும்போது திட்டுவதெல்லாம்.. ஹி.. ஹி...  அந்த டெர்ரர் வில்லனை, கடைசியில் காமெடியாக காண்பித்திருப்பதும் சிரிப்பதா, சீரியஸாய் இருப்பதா என்று ரசிகனைக் குழப்புகிறது.

அருந்ததி நாயர்

விஜய் ஆண்டனியின் படங்கள் என்றாலே நாயகிக்கு நடிக்கும் வாய்ப்பு நிறையவே இருக்கும். இதிலும் அப்படியே. அதை அருந்ததி நாயர் தெளிவாகச் செய்திருக்கிறார். மனைவியாகவும், பிற்பகுதிக் காட்சிகளிலும் நன்றாகவே நடித்திருக்கிறார். அவருடைய கண்கள் கதைக்கு பலம் கூட்டுகின்றன.

நான் பெத்த மக்கா, யானை பலம் என்று இரண்டு Bit Songs நன்றாக இருக்கிறது. ஹீரோயினை விஜய் ஆண்டனி தேடும் போது வரும் பாடல் மட்டும், "கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிக்கோங்கப்பா, பாட்டு முடிஞ்சதும் படம் ஸ்பீடாகும்" என்பது போல இருக்கிறது.  ஆனால், பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் விஜய் ஆண்டனி. அந்த ‘ஜெயலக்‌ஷ்மீஈஈஈஈஈஈ’ காதுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறது.  பிரதீப் கலிபுரயத்தின்  கேமராவுக்கு ஸ்பெஷல் பாராட்டு. வீட்டில் குரல் கேட்கும் காட்சியில் கன்னாபின்னா ஆங்கிள்கள் வைத்து மிரட்டியிருக்கிறார். கிளைமாக்ஸ் ஃபைட் சீனிலும் சுற்றிச் சுழல்கிறது கேமரா. குட்டிக் குட்டி வசனங்களிலும், சுஜாதாவின் கதைப் போர்ஷன்களை தெளிவாக படமாக்கியவிதத்திலும் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி கவனம் பெறுகிறார்.

மேட்ரிமோனியல் பார்த்து திருமணம் செய்து கொண்டவர், மனைவியின் வயது தெரியாமலா இருப்பார்; கதையை இப்படி மாற்றும்போது, அந்தத் திருமணம் விசாரிக்காமல் எப்படி நடந்தது என்று ரசிகன் கேட்பதற்கு ஒரு குட்டி வசனத்திலா பதில் சொல்வது போன்ற சின்னச் சின்ன விஷயங்களையும் கவனித்திருக்கலாம். இரண்டாம்பாதியில் சொல்கிற கதைப்படி, முதல் பாதியில் நினைவுகள் மட்டும்தான் வரவேண்டும். ஆனால் குரல்கள் ஏன் கேட்கிறது?

சுஜாதா, நாவலையே திரைக்கதை பாணியில் எழுதுபவர். அவருடைய கதையை மாற்றுவதெல்லாம், அதைவிட இரண்டு மடங்கு உழைப்பு தேவைப்படுகிற சமாச்சாரம்.  ஆனால், அங்குதான் இந்தப்படம் தடுமாறுகிறது.

விஜய் ஆண்டனிக்கு, இது இன்னும் ஒரு ஹிட்டாக அமையலாம். ‘ஒகேதான் இல்ல?’ என்றபடியேதான் தியேட்டரில் இருந்து வருகிறார்கள் ரசிகர்கள்.

ஆனால் சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்தை ஜஸ்ட் லைக் தட் தட்டிவிட்டு சிங்கிள் எடுத்த ஃபீல்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About