`பிக்பாஸ் இல்லுமினாட்டிகளின் சதி!'- பகீர் கிளப்பும் இளைஞர்

`பிக் பாஸ்', இந்த ஒற்றைப் பெயர்தான் தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாபிக். அலுவலகங்களில், கல்லூரிகளில், கடைகளில், இணையதளங்களில், எங்கும் இந்...

`பிக் பாஸ்', இந்த ஒற்றைப் பெயர்தான் தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாபிக். அலுவலகங்களில், கல்லூரிகளில், கடைகளில், இணையதளங்களில், எங்கும் இந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய பேச்சுகளையே கேட்க முடிகிறது.  இந்த நிகழ்ச்சி தேவையானதா, தேவையற்றதா என ஒருபுறம் விவாதங்கள் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் `இது இல்லுமினாட்டிகளின் வேலை' என சிலர் கிளம்பியிருக்கிறார்கள். அதற்கு ஆதாரமாக சில குறியீடுகளையும் சுட்டிக்காட்டி கிலி கிளப்பி வரவே, `ஆன்ட்டி இல்லுமினாட்டி' பாரி சாலனுக்கு போன் செய்து பேசினோம்.

இல்லுமினாட்டிகளைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருபவர் `ஆன்ட்டி இலும்மினாட்டி' பாரி சாலன். கார்ப்பரேட்களின் சதிகளையும், அவர்களின் நோக்கங்களையும் பற்றிக் கற்றுக்கொண்டு அதிலிருந்து இந்த தமிழ்கூறும் நல்லுலகை காப்பாற்ற வேண்டும் என்னும் எண்ணத்தோடு எம்.பி.ஏ படித்து வரும் அவரிடம் `பிக் பாஸ் நிகழ்ச்சி உண்மையிலேயே இல்லுமினாட்டிகளின் வேலையா?' என்ற கேள்வியை முன்வைத்தோம்.

"இதுல என்ன சந்தேகம்? கண்டிப்பா இது இல்லுமினாட்டிகளின் வேலைதான்" என எடுத்த எடுப்பிலேயே அணுகுண்டை எறிந்தார். தொடர்ந்து பேசியவர் "வெளிநாடுகளில் `பிக் பிரதர்' என்ற பெயரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிதான், நம்ம நாட்டில் `பிக் பாஸ்' என்ற பெயரில் நடத்தப்பட்டு வருது. இந்தியில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை நம் ஊரில் நடத்தக் காரணம், நம்ம சமுதாய அமைப்பையே சீரழிக்கணும், பல சமூக பிரச்னைகளை ஏற்படுத்தணும் என்பதுதான். `பிக் பாஸ்' நிகழ்ச்சியை நீங்க தொடர்ந்து பார்த்து வந்தீங்கன்னா, உங்க குடும்ப உறுப்பினர்கள் மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லாமல் போயிடும். அவங்களும் உங்களைப் பற்றி புறம் பேசுவாங்க என்னும் சந்தேகம் உண்டாகும். இந்த உளவியல் போரால், குடும்பமே சிதைந்துப் போயிடும். இப்படி நம் ஊரின் குடும்ப அமைப்புகளை சிதைப்பதுதான் அவங்களோட திட்டம்.

"நம்ம குடும்பங்களை பிரிச்சு அவங்க என்ன பாஸ் பண்ணப் போறாங்க?"

"இங்கேதான் நீங்க ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கணும். இந்த உலகத்தின் மொத்த வணிகத்துறையையும் அவங்கதான் ஆதிக்கம் செஞ்சுட்டு வர்றாங்க. இங்கே குடும்ப அமைப்பு உடைஞ்சதுனா, எல்லோரும் தனித்தனி ஆளாகிடுவோம். ஒரு குடும்பத்துக்கு ஒரு டிவி, ஒரு வாஷிங்மெஷின், ஒரு ஃப்ரிட்ஜ் போதும். அதுவே, நீங்க தனித்தனி ஆளாப் பிரிஞ்சுட்டீங்கன்னா டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் எல்லாம் தனித்தனியா வாங்கணும். வியாபாரம் அதிகமாகும். இதுதான் இந்த நிகழ்ச்சியின் மூலம் இல்லுமினாட்டிகள் செய்ய நினைக்குற சதி."


"இதை கேட்கும்போது, நாலைஞ்சு இடியாப்பத்தை கொசகொசனு பிசைஞ்சு கையில கொடுத்த மாதிரியே இருக்கு. வேற ஏதாவது எளிமையான உதாரணங்கள் சொல்லமுடியுமா?"

"சொல்றேன். பிக் பாஸின் லோகோவான ஒற்றைக்கண் இல்லுமினாட்டிகளின் சின்னம். இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குறது கமல்ஹாசன். அவரே இல்லுமினாட்டிதான். அவர் ஒரு தமிழ்த்திரைப்பட நடிகர். அவரால் எப்படி அவ்வளவு சர்வசாதாரணமா இங்கிலாந்து  ராணியை சந்திக்கமுடியுது? அதேபோல் பின்னால் நடக்கப்போகும் சில விஷயங்களை அவர் முன்கூட்டியே கணிச்சு படத்துல வைக்குறதா சொல்வாங்க. உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன் பாருங்க. `அன்பே சிவம்' படத்துல பந்து வாங்குவார் மாதவன். அதுவும் அந்த பந்து மினி உலகம் மாதிரியே இருக்கும். கமல் மாதவன் கிட்டே, 'பந்தை எப்படி வாங்கினே?னு கேட்கும்போது, மேலே கைகாட்டுவார் மாதவன். அங்கே `கார்டுகள் இங்கு ஏற்றுக்கொள்ளப்படும்'னு எழுதியிருக்கும். எதிர்காலத்தில் உலகில் எந்த பொருள் வாங்க வேண்டியதாயிருந்தாலும், கார்டுகள் மூலம்தான் வாங்கமுடியும் என சொல்ல வர்றார். நீங்களே யோசிச்சுப் பாருங்க, இப்பவே பல பொருட்களை நாம கார்டு மூலமாகத்தான் வாங்குறோம். இன்னும் கொஞ்ச நாளில் எந்தப் பொருள் வாங்க நினைச்சாலும், கார்டு இருந்தால் மட்டுமே வாங்க முடியும்ங்கிற சூழல் உண்டாகும்."


"கமல் இல்லுமினாட்டினு சொல்றீங்க. `பிக் பாஸ்' போட்டியாளர்கள்ல யாரைப் பார்த்தா இல்லுமினாட்டி மாதிரி தெரியுது?"

"அப்படிச் சொல்ல முடியாது. ஆனால், அந்தப் போட்டியாளர்களை வெச்சு நம் மனசுல என்ன மாதிரியான எண்ணங்களை இல்லுமினாட்டிகள் பரப்ப நினைக்குறாங்கனு சொல்றேன். ஜூலியானாங்கிற பெண்ணை ஜல்லிக்கட்டுக்காக போராடிய அத்தனை இளைஞர்களின் பிரதிநிதி மாதிரியா காண்பிச்சாங்க? அந்த பெண்தான் போராடி ஜல்லிக்கட்டு தடையை நீக்கினாங்க எனும் ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுத்தாங்க. ஆனால், அங்கே நடந்தது என்ன? சக போட்டியாளர் ஒருத்தர்  நிகழ்ச்சியில் தொடர விருப்பமில்லைனு சொல்லும்போது, `போகாதே'னு ஃபீல் பண்ணாங்க. ஆனால், காயத்ரியும், ஆர்த்தியும் போராட்டத்தைப் பற்றி கேட்கும்போது, அவங்களால தெளிவான பதிலை சொல்ல முடியல. எல்லாம் இல்லுமினாட்டிகளின் சதி. டயனமிக் திருமணம் நடத்தியவர் சிநேகன். அவர் ஏற்கெனவே ஏஜென்ட். அவரை என்னவோ தமிழ்புலவர், தமிழின் அடையாளம்ங்கிற மாதிரி பேசிட்டு இருக்காங்க. நமீதா, ஓவியா போன்ற கவர்ச்சி நடிகைகளை, வெற்றிகரமான பெண்களா காட்டுவதே பெரிய சதிங்குறேன். இவ்வளவு ஏன், எல்லாப் போட்டியாளர்களையும் தமிழில் பேச சொல்வதே, கிராமப்புற மக்களுக்கும் போய் சேரணும்ங்கிற காரணத்துக்காகத்தான். எல்லாமே இல்லுமினாட்டிகளின் வேலை." என கொந்தளித்தார்.

மேலும் பல...

2 comments

  1. பிரமிப்பான மறுக்க முடியாத உண்மைகள் நன்றி நண்பரே - கில்லர்ஜி

    ReplyDelete
  2. இத்தனை விஷயமிருக்கா?!

    ReplyDelete

Search This Blog

Blog Archive

About