மரகத நாணயம் விமர்சனம் - ‘நாணயமா’ ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்கள். நல்லாயிருப்பீங்கய்யா!

ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ ஆவிகளை கூட, நிற்க வச்சு படம் போட்டு, நிமிர வச்சு கலர் அடிப்பதில் கோடம்பாக்கத்திற்கு நிகர் கோடம்பாக்கம்தான்! சுடுகா...

ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ ஆவிகளை கூட, நிற்க வச்சு படம் போட்டு, நிமிர வச்சு கலர் அடிப்பதில் கோடம்பாக்கத்திற்கு நிகர் கோடம்பாக்கம்தான்! சுடுகாட்டு படங்களுக்கு ‘சூப்பர் மால்’
தியேட்டர்களாகட்டும். சுமார் ஹால் தியேட்டர்களாகட்டும். செம வரவேற்பு என்பதால், டீ கிளாசில் கூட ‘ஆவி பறக்கிறதா?’ என்றுதான் ஆலாய் பறக்கிறார்கள் இயக்குனர்கள். இப்படியொரு ரெகுலர் பார்முலாவுக்குள் வந்தாலும் மரகத நாணயத்தின் மதிப்பும், அது ரசிக்க வைக்கும் அழகும்… ஒவ்வொரு ரசிகனையும் வாய்விட்டே பேச வைக்கும். “ஆவியே உன்னை ஆராதிக்கிறேன்’’!

அந்த காலத்து ராஜா ஒருவனின் சமாதிக்குள்ளிருக்கும் மரகத நாணயத்தை ‘அடித்து’க் கொடுப்பவருக்கு பத்து லட்சம் துட்டு என்று ஆஃபர் தரப்பட, குடும்ப கஷ்டத்திலிருக்கும் ஆதி கிளம்புகிறார். “அந்த நாணயத்தை அடிப்பது அவ்வளவு ஈஸியான விஷயமில்ல. இது வரைக்கும் 132 பேர் அந்த மரகத நாணயத்தை கையால் தொட்டவுடனேயே இறந்து போயிருக்காங்க” என்று மற்றொரு முடிச்சையும் போடுகிறார்கள் அந்த நாணய விபரம் அறிந்தவர்கள். மந்திரவாதி ஒருவர் குறுக்கு வழி ஒன்றை ஏற்படுத்தித்தர, ஏற்கனவே இந்த முயற்சியில் ஈடுபட்டு இறந்த ஆவிகள் நாலு பேரை கூட்டு சேர்த்துக் கொண்டு கிளம்புகிறார் ஆதியும் அவரது பிரண்ட் டேனியலும்! நாணயத்தை நெருங்க கிளம்பும் முயற்சி முக்கால் படமாகவும் நெருங்கிய பின் தவிக்கும் தவிப்பு கால் படமுமாக நகர… முடிவு? “அதுக்குள்ள படம் முடிஞ்சுருச்சே…” என்ற ஏக்கத்தையே கொடுத்துவிடுகிறது. ஆவிப்பட கதைகளில் அடுத்த ஹிட்டுப்பா இது! (டபுள் மீனிங், ஆபாச ஆட்டம், எதுவுமில்லா பரிசுத்த ஆவி இது)

ஹீரோ ஆதி, காமெடியன் ராமதாசையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். நிக்கி கல்ராணியிலிருந்து விமர்சிக்க ஆரம்பிப்பதுதான் நியாயம். பொண்ணு என்னமா நடிச்சுருக்கு? பல நாள் பின் தொடர்ந்து சைட் அடித்த ஆதி, நிக்கிக்கு கல்யாணம் என்பது தெரிந்த பின், “இதுவரைக்கும் உன் குரலை கூட கேட்டதில்ல. ஒரு முறை பேசு. கேட்டுட்டு போயிடுறேன்” என்று கெஞ்ச… அதுவும் நடக்கவில்லை. அப்புறம் சில நாள் கழித்து நிக்கியை பார்க்கும் ஆதி, அவரின் குரலை கேட்பதுதான் பிரமிக்க வைக்கும் கதை பின்னல்! (நிக்கியின் பார்த்திர படைப்புக்காகவே டைரக்டர் ஏஆர்கே சரவணுக்கு தனி அப்ளாஸ்… பிடிச்சுக்கோங்க பாஸ்)

ஒரு ஆணின் ஆவி நிக்கியின் உடம்பில் புகுந்து கொண்டால் எப்படியிருக்கும்? உட்காரும் ஸ்டைலிலிருந்து பார்க்கும் பார்வை வரைக்கும் அப்படியே ஆணாகவே மாறியிருக்கிறார் அவர். நிக்கி வரும் காட்சியெல்லாம் தியேட்டர் அடங்க மாட்டாமல் ரகளை ஆகிறது. குறிப்பாக அவரை டார்ச்சர் பண்ணிய கணவனை அவர் பிற்பாடு சந்திக்கும் காட்சி!

சற்றே ஷட்டிலாக நடித்திருக்கிறார் ஆதி. பெரிய பைட்டெல்லாம் இல்லை. ஆனாலும் என்னவோ அவரை பிடித்துவிடுகிறது.

முதலில் காட்டப்படும் ராமதாசுக்கு யாரோ டப்பிங் கொடுத்திருக்கிறார். அட… ராமதாஸ்சின் குரல்தான் ப்ளஸ். அதை தவற விட்டுட்டாரே என்று டைரக்டரை நொந்து கொள்வதற்குள் கதையில் ஒரு முடிச்சை போட்டு, அதே நமக்கு பிடித்த ராமதாஸ் என்ட்ரி ஆகிறார். அப்புறமென்ன… படம் முடிகிற வரைக்கும் கொண்டாட்டம்தான். இந்தப்படத்தில் டப்பிங் என்ற குரல் சமாச்சாரத்திற்கு பெரிய கவன ஈர்ப்பை கொடுத்திருக்கிறார் டைரக்டர்.

ட்விங்கிள் ராமநாதன் என்றொரு வித்தியாசமான பெயரிலும் அதைவிட வித்தியாசமான ரவுடி லுக்கிலும் வருகிறார் ஆனந்தராஜ். இவர் போக வேண்டிய ஏரியாவுக்கெல்லாம் இவர் குரல் மட்டும் போகிற மாதிரியெல்லாம் யோசித்திருக்கிறார் டைரக்டர். அந்த ஐடியாவே செம! அந்த ஏரியாவே நடுங்கும் ரவுடியான அந்த ட்விங்கிள் ராமநாதன் அதே மரகத நாணயத்துக்கு ஆசைப்பட்டு நடுநடுங்கி ஓடுகிற காட்சிகளை பெரியவர்கள் மட்டுமல்ல. குழந்தைகளே கூட கைதட்டி ரசிக்கும்.

நெருப்புடா புகழ் அருண்ராஜா காமராஜ் இதில் ஒரு ஆவியாக வருகிறார். வாயை திறந்தால் வெடிக்கிறது தியேட்டர். இதே மாதிரி இன்னும் நாலு படங்களில் நடித்தால், தனியாக கால்ஷீட் மேனேஜர் தேவைப்படுகிற அளவுக்கு பிசியாகலாம்.

ஒரு குறியீடாக பயன்பட்டிருக்கிறார் சங்கிலிமுருகன். படத்தில் இவர் ஒரு பிணம். பெயர் தமிழய்யா. எத்தனை முறை புதைத்தாலும் புதை குழியிலிருந்து எழுந்து வந்துவிடுவார் இவர். “என்னை நீங்க புதைச்சுடலாம். தமிழை ஒருபோதும் புதைக்க முடியாதுடா” என்று கூறியபடியே புதைந்துவிடுகிற அந்த தூய தமிழாசன், ஓரிடத்தில் “ங்கொய்யால…” என்ற வார்த்தையை தட்டிவிட, தியேட்டரில் விசில் பறக்கிறது.

ஆவிப்படம்தான். ஆனால் எங்கும் லாஜிக் மீறாமல் யோசித்திருக்கிறார் டைரக்டர் ஏ.ஆர்.கே சரவண். சின்ன சின்னதாய் கடந்து போகிற காட்சிகளில் கூட ஒரு முத்திரையை பதித்து கவனம் பெறுகிற வித்தை இருக்கிறது இவரிடத்தில்! எதிர்காலத்தில் முக்கியமான இயக்குனராக அடையாளம் பெறுவார்.

திபுநினன் தாமஸ் என்ற புதியவரின் இசையில் பின்னணி இசையும் பாடல்களும் கவனிக்க வைக்கிறது. பி.வி.சங்கரின் ஒளிப்பதிவு கவனச்சிதறலுக்கு இடம் தராவண்ணம் ஈர்க்கிறது.

ரசிகர்களிடமிருந்து வாங்கப் போகும் ஒவ்வொரு நயா பைசாவுக்கும் ‘நாணயமா’ ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்கள். நல்லாயிருப்பீங்கய்யா!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About