’’நாங்க போராடிட்டு இருக்கோம், கேசினோ விளையாடிக் கொண்டிருக்கிறார் ரஜினி..!’’ - சீமான்

"தமிழ்தேசிய இன மக்கள் சந்திக்கும் சிக்கல்களும், தீர்வுகளும்" என்ற தலைப்பில் சேலம் அஸ்தம்பட்டியில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட...

"தமிழ்தேசிய இன மக்கள் சந்திக்கும் சிக்கல்களும், தீர்வுகளும்" என்ற தலைப்பில் சேலம் அஸ்தம்பட்டியில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு அனல்பறக்கும் பேச்சுகளால் பொதுமக்களைக் கட்டிப்போட்டார்கள்.

நாம் தமிழர் கட்சியைச்சேர்ந்த ஜெகதீசன் பேசுகையில், ''மாடு சாப்பிடுகிறவன் புலி, சிங்கத்தைச் சாப்பிட வேண்டியதுதானே என்று பி.ஜே.பி-யைச் சேர்ந்த ஹெச்.ராஜா சொல்கிறார். அவரைப்பார்த்து நான் கேட்கிறேன். முருங்கை சாப்பிடுகின்றவர்கள் எட்டிக் கொட்டை, அரளிக்காயையும், பால் குடிக்கிறவர்கள் பால்டாயிலையும் குடிக்க வேண்டியது தானே'' என்றார்.

சீமான் பேச்சு

அடுத்துப்பேசிய கல்யாண சுந்தரம், ''ஜி.எஸ்.டி வரியால் இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, 'ஜி.எஸ்.டி நிறைவேறினால் என் பிணத்தின் மீதுதான் நிறைவேறும்' என்று கூறினார். தற்போது அவர் பிணமாக இருப்பதால், ஜி.எஸ்.டி-யை நிறைவேற்றி இருக்கிறார்கள். தமிழகத்தில் எந்தக்காலத்திலும் பி.ஜே.பி ஆட்சிக்கு வரமுடியாது என்பதால் ரஜினியை முன்னிறுத்தி ஆட்சிக்குவரத் துடிக்கிறார்கள். நாம் தமிழர் கட்சி, இந்த மக்களுக்கானது மட்டுமல்ல; இந்த மண்ணுக்கானதும்கூட'' என்றார்.

இறுதியாக மைக் பிடித்த சீமான், ''கிரிக்கெட் விளையாட்டைக்கூட இந்தியா - பாகிஸ்தான் போராகப் பார்க்கிறார்கள் மக்கள். ஆனால், இருநாட்டு மீனவர்கள் எல்லைதாண்டி வந்தால் பாகிஸ்தான் படையினர் சுடுவதில்லை. ஆனால், தமிழக மீனவர்கள் 740 பேரை இலங்கை இராணுவம் சுட்டு கொன்றிருக்கிறது. இதைத் தட்டிக்கேட்பதற்கு இந்தியாவிற்குத் துப்பில்லை. கச்சத்தீவு எப்போதும் இந்தியாவிடம் இருந்ததில்லை என்கிறார்கள். பிறகு எப்படி நீ இலங்கைக்குத் தாரை வார்த்தாய். கச்சத்தீவை மீட்டுக்கொடு, இல்லையேல் எங்களை பிரித்துவிடு. நான் ஆட்சிக்கு வருவேன். கடல்படையை உருவாக்குவேன். அதற்கு 'நெய்தல்படை' என்று பெயர் சூட்டுவேன். படிக்காத மீனவப் பிள்ளைகளையும் வேலைக்குச் சேர்ப்பேன். ஒரு படகில் நான்கைந்து பேரை அனுப்புவேன். அவர்கள் சோறுகொண்டு போகிறார்களோ, இல்லையோ அவர்களிடம் கையெறி குண்டுகளைக் கொடுத்து அனுப்புவேன். என் அக்கா, தங்கைமார்களின் தாலியை அறுத்த சிங்கள இராணுவத்தை ஒழித்துக் கட்டுவேன். சுபாஷ் சந்திரபோஸ் கூற்றுப்படி, ''உன்னை ஒருவனாலும் தோற்கடிக்க முடியாது. உன் தன்னம்பிக்கை இழக்கும்வரை'' என்பதைப் போன்ற இளைஞர்களை உருவாக்குவேன். தமிழர்கள், தமிழர் என்ற உணர்வு கொள்ளாததாலும், நமக்கென்று அரசு இல்லாததாலும் தமிழராகிய நாம் வீழ்ந்தோம். ஆட்சியில், அதிகாரத்தில் தமிழ் மொழி இல்லை.

பி.ஜே.பி-யைச் சேர்ந்த வானதி சீனிவாசன் சொல்கிறார், 'வடநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வருபவர்களிடம் பேசுவதற்காவது இந்தியை படிக்க வேண்டும்' என்று. அந்த மாநிலத்தில் வேலையில்லாமல் என் மாநிலத்திற்குவரும் அவர்கள் ஏன் தமிழ் படிக்கக்கூடாது? இந்தி 500 ஆண்டுகளுக்கு முந்தையமொழி. தமிழ் 50,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மொழி. 'இந்தியாவின் பெரும்பகுதியில் பரந்துவிரிந்து வாழ்ந்தவர்கள் தமிழர்கள். என் மூதாதையர்கள்கூட, தமிழ்ப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள்' என்கிறார் அண்ணல் அம்பேத்கர். பிரதமர் மோடி ஏதாவது குண்டைப் போட்டுவிட்டு வெளிநாடுபோய் விடுகிறார். முன்பு மாட்டுக்கறி, தற்போது ஜி.எஸ்.டி வரி. இந்தியாவில் கறி, வரி பிரச்னையாக இருக்கிறது. பிரதமர் கண்டுகொள்ளாமல் இஸ்ரேல் சென்றுவிட்டார். இந்த ஜி.எஸ்.டி வரி எதற்கெல்லாம் போட்டிருக்கிறார்கள் தெரியுமா? ஊதுபத்தி, கொசுவர்த்தி, மெழுகுவர்த்திக்கு வரி விதித்திருக்கிறார்கள். இதனால் சிறு, குறு தொழில்களை அழித்துவிட்டு கார்ப்பரேட் கம்பெனிகளை வளர்த்துவிடுகிறார்கள். ஒருநாடு தற்சார்பு பொருளாதாரக் கொள்கையால் மட்டும்தான் வளர்ச்சி அடைய முடியும். மக்கள் மீது வரியைத் திணித்து வளர்ச்சி அடைய முடியாது.

அடிமை இந்தியாவில்கூட, எம் மண்ணில் 50 கிலோ மீட்டருக்கு ஒருமுறை கப்பம் கட்டி பயணிக்கவில்லை. ஆனால், சுதந்திர இந்தியாவில் டோல்கேட் சுங்கச் சாவடியில் கப்பம்கட்டிப் போகின்ற அவலத்தில் இருக்கிறோம். இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் மதவேறுபாட்டால் பிரிந்தது. பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் மொழி வேறுபாட்டால் பிரிந்தது. இந்தியாவில் இந்திமொழியைத் திணித்தால், பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட நிலைதான் இந்தியாவிற்கும் உருவாகும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் காவிரிப்படுகையில் மட்டுமல்ல; கங்கை நதி ஓரத்திலும், குஜராத்திலும் இருக்கிறது. அங்கெல்லாம் இவை எடுக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டில் கேட்பதற்கு யாரும் இல்லாததால் இங்கு எடுக்கிறார்கள். நாம் தற்போது 70-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட இருக்கிறோம். ஆனால் 100-வது சுதந்திர தினத்திற்குள் இந்தியாவை வெளிநாட்டிற்கு முழுவதுமாக விற்றுவிடுவார்கள். தமிழகத்தில் நாங்கள் போராடி கொண்டிருக்கிறோம், ஆனால் ரஜினி அமெரிக்காவில் கேசினோ விளையாடி கொண்டிருக்கிறார். இதை பற்றி சொல்ல வேறு ஒன்றும் இல்லை'' என்று ஆவேசமாகப் பேசினார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About