திரைப்படத்தை விஞ்சிய திடீர் திருப்பம்... பிரபல நடிகையின் வழக்கில் அடுத்த கைது யார்..?

பிரபல மலையாள நடிகைக்குப் பாலியல் தொல்லை தந்ததாகப் தொடரப்பட்ட வழக்கில் மலையாள சினிமா நடிகர் திலீப்பைக் கைது செய்து வழக்கில் பரபரப்பைக் கூட்ட...

பிரபல மலையாள நடிகைக்குப் பாலியல் தொல்லை தந்ததாகப் தொடரப்பட்ட வழக்கில் மலையாள சினிமா நடிகர் திலீப்பைக் கைது செய்து வழக்கில் பரபரப்பைக் கூட்டியுள்ளது கேரளா காவல்துறை.

இந்த வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டிருப்பது முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. “பாதிக்கப்பட்ட நடிகையுடன் இருந்த தனிப்பட்ட விரோதம் காரணமாகவே திலீப் இப்படி ஒரு செயலை அரங்கேற்றியிருக்கிறார். நடிகையைக் கடத்தி, பாலியல் துன்புறுத்தல் செய்த கும்பலுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டிய வழக்கில் இப்போது திலீப்பைக் கைது செய்துள்ளோம்” என்கின்றனர் வழக்கை விசாரித்துவரும் போலீஸார்.

திலீப்பைக் கைது செய்யும் முன் அவரிடமும், அவரது நண்பரும், இயக்குநர்ருமான நதிர்ஷா ஆகியோரிடம் அலுவா போலீஸ் கடந்த ஜூன் 28-ம் தேதி 13 மணி நேரம் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

பிப்ரவரி 17-ம் தேதி இந்தப் பாலியல் தொல்லை சம்பவம் நடந்தது. இது குறித்து நடிகை அளித்த புகாரின் பேரில் பல்சர் சுனி என்பவர் கைதுசெய்யப்பட்டார். போலீஸாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் நடிகையைக் கடத்தி, பாலியல் துன்புறுத்தல் செய்ய 50 லட்சம் ரூபாய் பணம் பெற்றதாகக் கூறி இருக்கிறார். திலீப்புக்கு பல்சர் சுனி அல்லது அவர் சார்பில் சிறையிலிருந்து வேறு ஒருவர் எழுதிய கடிதத்தின் பிரதி மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் பேசிக்கொள்வதாக வெளியான ஆடியோ கிளிப்பிங் ஆகியவையும்தான் திலீப்புக்கு இந்த வழக்கில் உள்ள தொடர்பை உறுதிப்படுத்தியதாகக் காவல்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.
எனினும், இந்த வழக்கில் தனக்குச் சற்றும் தொடர்பில்லை என்பதே இந்த நிமிடம் வரை திலீப்பின் பதிலாக இருக்கிறது. தனக்கும் சம்பந்தப்பட்ட நடிகைக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டு என்பதை ஒப்புக்கொண்ட திலீப், ஆனால் தனக்கும் இந்தச் சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்றும், பல்சர் சுனி என்ற நபரைத் தனக்குத் தெரியாது என்றும் கூறிவருகிறார்.

இந்த வழக்கில் கைதான முதல் நபர் கார்  ஓட்டுநர் மார்ட்டின் அந்தோணி. அவர் கொடுத்த வாக்குமூலத்தை வைத்துத்தான் பல்சர் சுனி மற்றும் அவரது கும்பலை வளைத்தது காவல்துறை.

எப்படி நெருங்கினார்கள்?

வழக்கில் திலீப்பின் தொடர்பு உறுதியானபின்னும் போலீஸார் அவரைத் தங்கள் கண்காணிப்பிலேயே வைத்திருந்தனர். தன் செல்போனில் இருந்து அவர் யார் யாரிடம் எல்லாம் பேசினார் என்ற பட்டியலைப் பெற்று சம்பந்தப்பட்டவர்கள் அனைவரிடமும் விசாரித்தனர். குறிப்பாக சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் பிப்ரவரி 17-ம் தேதி இரவு திலீப் செல்போனில் பல புதிய நபர்களுடன் பேசியிருக்கிறார். ஆனால், விசாரணையின்போது அந்த எண்களுக்குத்தான் தொடர்பு கொண்டது ஏன் என்பது குறித்து போலீஸாரிடம் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைக் கூறியிருக்கிறார். திலீப்பின் மீது சந்தேகப்பார்வை அழுத்தமாக விழுந்தது அப்போதுதான்.

அதேபோல இந்த வழக்கில் திலீப்பின் திரை உலக நண்பர் ஒருவரும் முக்கிய சாட்சி. திரையுலகின் பிரபலமான ஒரு நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் நடந்த தகவலை அவர் திலீப்பிடம் சொன்னபோது அந்தச் செய்தியை எந்தவித சலனமுமின்றி அதைக் கேட்டுக்கொண்டதாக அவர் காவல்துறையில் வாக்குமூலம் அளித்திருந்தார். இதுவும் போலீஸாரின் பார்வை திலீப்பின் மீது அழுத்தமாக விழக் காரணம். இதனால் நடந்த சம்பவங்கள் அனைத்தும் திலீப்புக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது என்ற முடிவுக்குப் போலீஸார் வந்தனர்.

வஞ்சம் தீர்த்தாரா?

நடிகையின் மேல் தனக்கு இருந்த வெறுப்பைப் பழிதீர்த்துக்கொள்ள கடந்த ஒரு வருடமாகவே திலீப் செயல்பட்டுவந்ததாகப் போலீஸார் தெரிவிக்கின்றனர். நடிகையைக் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க வேண்டும் என ஓராண்டுக்கு முன்பே, கொச்சி எம்.ஜி. ரோட்டில் உள்ள ஒரு விடுதியில் திட்டம் தீட்டப்பட்டதாக அவர்கள் சொல்கிறார்கள்.

பல்சர் சுனி என்பவனைத் தனக்குத் தெரியாது என திலீப் ஆரம்பத்தில் சொன்னாலும், திலீப்பை பல ஆண்டுகளாகவே தனக்குத் தெரியும் என்ற பல்சர் சுனி, நடிகையைக் கடத்துவதற்கு கடந்த ஆண்டே திலீப் தன்னிடம் பணியை ஒப்படைத்தாகப் போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார். இதற்கு ஆதாரமாக திலீப் உடன் அவர் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

மலையாள உலகின் பிரபல நட்சத்திரம் இன்னொரு பிரபல நடிகையின் பாலியல் வழக்கில் கைது ஆகியிருப்பது திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. திலீப் கைது குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரபல இயக்குநர் வினயன், " திலீப் கைது மலையாள சினிமா உலகைப் பீதிக்குள்ளாக்கி இருக்கிறது. இது தவறான செய்தியாக இருக்கக் கூடாதா என்று நினைக்கிறேன். திரைக்கலைஞர் ஒருவருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கிறது என்பது மோலிவுட்டுக்கு மிகப்பெரிய அவமானமாக இருக்கும். முறையான ஆதாரங்களுடன் போலீஸார் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால், அவர்களை நான் வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
அதேநேரத்தில் நடிகையின் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் திலீப் தவிர தொடர்புடைய மற்றவர்கள் குறித்தும் கேரளக் காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. அடுத்தடுத்து இன்னும் சில சினிமா பிரபலங்களும் கைதாகலாம் என அதிர்ச்சி தருகிறது காவல்துறை வட்டாரம்.

ஒரு அசல் மலையாளப்படத்தினையும் விஞ்சும்வகையில் நடிகையின் வழக்கில் பல அதிரடித் திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About