January 21, 2017
“சேர்ந்து நடிக்க நாங்க ரெடி!” - ரஜினி - கமல் விகடன் மேடையில்
January 21, 2017பிரமாண்ட மேடைகள், அலங்காரங்களால், வண்ண விளக்குகளால், நீள அகலத்தால் மட்டுமே உருவானவை அல்ல. மெய்யான பிரமாண்டம், அந்த மேடையை அலங்கரிக்கும் மாண...
பிரமாண்ட மேடைகள், அலங்காரங்களால், வண்ண விளக்குகளால், நீள அகலத்தால் மட்டுமே உருவானவை அல்ல. மெய்யான பிரமாண்டம், அந்த மேடையை அலங்கரிக்கும் மாண்புள்ள மனிதர்களால் தீர்மானிக்கப் படுகிறது; அங்கே உதிரும் ஆழமான சொற்களால் கட்டமைக்கப்படுகிறது; அங்கே பகிர்ந்துகொள்ளப்படும் அன்பின் ஒளியால் அலங்கரிக்கப்படுகிறது. அத்தகைய பிரமாண்டம் பூசியிருந்தது, `ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - 2016' மேடை!
தமிழ் சினிமாவின் தனித்துவமான கலைஞர்கள் அலங்கரித்த விழாவை, தங்களுடைய வருகையால் மேலும் அழகாக்கினர் மூன்று கலைஞர்கள். நெருப்பாக வந்து நின்றார் ரஜினி... கனிவும் நிறைவுமாக நின்றார் கமல்ஹாசன்... நெகிழ்ந்துபோய் நின்றார் விஜய்.
`இன்னும் சில நிமிடங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி அரங்கத்துக்கு வரப்போகிறார்!' என, நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆர்.ஜே பாலாஜி அறிவிக்க, பேரைக் கேட்டதற்கே அரங்கம் அதிர்ந்தது. `நெருப்புடா... நெருங்குடா பாப்போம்...' என்ற `கபாலி' பாடல், விழா அரங்கையே பரபரப்பாக்கியது. வாடிவாசலில் காத்திருக்கும் மாடுபிடி வீரர்களைப்போல அத்தனை பேரும் `பாட்ஷா'வின் வரவுக்காகக் காத்திருந்தனர். ரசிகர்களின் விசில் சத்தம் காதைக் கிழிக்க, சீறிப்பாய்ந்து வந்தார் ரஜினி. உடையிலும் உடல்மொழியிலும் சினேகத்திலும் அதே எளிமை. நடையில் அதே வேகம். அவர் வந்து அமர, அவருக்கு முன்பே வந்து காத்திருந்த விஜய், எழுந்து நின்று வணங்கி ரஜினியை வரவேற்றார். வைரமுத்துவும் பாரதிராஜாவும் ரஜினியைக் கண்டதும் கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தினர்.
நிகழ்வில், எஸ்.எஸ்.வாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாகத் திரையிடப்பட்டது. வறுமையான வீட்டில் பிறந்த எஸ்.எஸ்.வாசன், பிழைப்பு தேடி பல நூறு மைல்கள் சைக்கிளில் சென்னைக்கு வந்து, இங்கே போராடி முன்னேறி, ஆனந்த விகடனை உருவாக்கிய வெற்றிக்கதை. ஜெமினி பிக்சர்ஸ் மூலம் திரைத் துறையிலும் ஜெயித்த கதை. இவற்றைப் பார்த்த அனைவரின் முகத்திலும் பேரமைதி. வாசனின் வரலாற்றைத் தெரிந்துகொண்ட பெருமிதம். தமிழனாகப் பூரிப்பு!
எஸ்.எஸ்.வாசன் அவர்களின் ஆவணப்படத்தை ஆர்வத்தோடு பார்த்து ரசித்த ரஜினி, வாசனின் போராட்டமான வாழ்வைக் கண்டு கலங்கிப்போனார். படம் முடியும்போது ரஜினியின் கண்கள் கலங்கி இருந்தன.
ஆவணப்படத் திரையிடலைத் தொடர்ந்து `எஸ்.எஸ்.வாசன் விருது' நிகழ்வு. அதை வைரமுத்துதான் தொகுத்து வழங்கினார். விருது வழங்க, ரஜினி மேடையேறினார். தொடர்ந்து கமல் குறித்த சிறிய குறும்படம் ஒன்றும் திரையிடப்பட, அதையும் நின்றபடி ரசித்துப் பார்த்தார் ரஜினி. அடுத்து விருது பெறுவதற்காக கமல்ஹாசன் பெயரை முறையாக அறிவித்தார் வைரமுத்து. ஆனால், அதுவரை கமல்ஹாசனை அரங்கத்தில் எங்குமே பார்க்க முடியவில்லை. `கமல் இன்னும் வரலை... இன்னும் வரலை' என ஒரே சலசலப்பு.
ரஜினி, வைரமுத்து இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி மேடையில் காத்திருந்தனர். சில நொடிகள்தான். ஒரே பதற்றம். திடீரென பாடல் ஒலித்தது. `யாரென்று புரிகிறதா... தீயென்று தெரிகிறதா...' மேடையில் பேனா முனைபோன்று வடிவமைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து சகலகலாவல்லவன் கெத்தாகத் தோன்றினார். வெள்ளைவெளேர் குர்தாவில் வந்திருந்தார் `சபாஷ் நாயுடு'. கமலைக் கண்டதும் ஆதுரமாகக் கட்டியணைத்து அன்பைப் பறிமாறிக்கொண்டார் ரஜினி. ஒருவர் மேடை ஏறினாலே தமிழ்நாடே அதிரும். இரண்டு துருவங்களும் மேடையில் காட்சி தர... இணையம் மூலம் விஷயம் பரவ... இந்தியாவே அதிர்ந்தது!
``இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் எங்களோடு எங்க குரு இல்லையே!'' என்று கே.பி வார்த்து எடுத்த இரண்டு பேபிகளும் வருத்தம் தெரிவித்தனர். ``எஸ்.எஸ்.வாசன் விருதைப் பெறும் தகுதி தமிழ் சினிமாவில் கமலைத் தவிர வேறு யாருக்குமே கிடையாது'' என்று ரஜினிகாந்த் புகழாரம் சூட்ட, நெகிழ்ந்துபோனார் கமல்ஹாசன். ``இந்த விருதை என் சகோதரன் கையால் பெறுவதில் பெருமை அடைகிறேன்'' என்று கமல் சொல்ல, ரஜினியின் முகம் பூரித்தது. ``இப்படி ஒரு நிகழ்வு என் பேரக்குழந்தைகளுக்கு இனி நான் சொல்லக்கூடிய ஒரு கதையாக இருக்கும்'' என்ற கமல்ஹாசனின் முகத்தில் பெரும் பூரிப்பு.
எஸ்.எஸ்.வாசன் அவர்களின் உழைப்பையும், ஜெமினி நிறுவனம் தனக்கு முன்மாதிரியாக இருப்பதையும், எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களோடு தான் உரையாடிய அற்புதத் தருணங்களையும் உவகையோடு பகிர்ந்துகொண்டார் உலக நாயகன்.
``எஸ்.எஸ்.வாசன் அவர்கள் இங்கே சைக்கிளில் வந்தார். ரஜினி பஸ்ஸில் வந்தார். நான் நடந்து வந்தேன். ஆனால், எங்களுடைய வாழ்வு ஒன்றுதான். எஸ்.எஸ்.வாசன் அவர்களுடைய பாதிப்பு எப்போதுமே எனக்குள் நிறைய இருக்கின்றன. `சந்திரலேகா'வில் வரும் புகழ்பெற்ற டிரம் டான்ஸில் நடனமணிகளில் ஒருவராக இருந்தவர் தங்கப்பன் மாஸ்டர். அவர்தான் என் குரு. `சந்திரலேகா' படம் குறித்த அனுபவங்களை எனக்கு அவர் நிறையவே சொல்லியிருக்கிறார். தன்னுடைய யூனிட்டில் இருப்பவர்களுக்கான உணவு முதற்கொண்டு, எந்த அளவுக்கு வாசன் அவர்கள் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொள்வார் என்பதை அவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதைத்தான் இன்று வரை நான் பின்பற்றுகிறேன்'' என்றார் கமல்ஹாசன்.
``ரஜினி போல இன்னொரு மனிதரை ஆன்மிகத்தால் உருவாக்க முடியும் என்றால், ஆன்மிகத்தைக்கூட நான் நிச்சயமாக ஏற்றுக்கொள்வேன்'' என்று சொல்ல, ரஜினி முகத்தில் மட்டும் அல்ல, அரங்கத்தில் இருந்த அத்தனை பேர் முகங்களிலும் பெருமகிழ்ச்சி.
``சினிமாவில் பல முன்னோடியான விஷயங்களை, வாசன் அவர்கள் செய்திருக்கிறார். `சந்திரலேகா' படத்தின் பட்ஜெட், அந்தக் காலத்திலேயே 46 லட்சம். அதுபோக கிட்டத்தட்ட 26 லட்சம் ரூபாயை புரமோஷனுக்கு மட்டுமே வாசன் சார் செலவு பண்ணிருக்கார். இது மிகப்பெரிய விஷயம்'' என்ற தகவலோடு பேச்சைத் தொடங்கினார் ரஜினி.
``வாசனின் லெகஸியை, சீனிவாசன் ரொம்ப நல்லா கொண்டுபோறார். அவர் ஒரு முதலாளியா இல்லாம, அவரோட வேலை பார்க்கிறவங்கள்ல ஒருத்தராத்தான் இன்னமும் இருக்கார். ஹேட்ஸ்ஆஃப் சீனிவாசன்! இந்த லெகஸி தொடரணும். எஸ்.எஸ்.வாசன் சார் மாதிரி, நீங்களும் சினிமா இண்டஸ்ட்ரிக்கு வரணும். ஒரு படம் தயாரிக்கணும். அதுல நானும் கமலும் சேர்ந்து நடிக்க ரெடி. நான் சொன்னா கமல் கேட்பார். கால்ஷீட் பிரச்னையை நான் பார்த்துக்கிறேன். நிச்சயமா படம் பண்ணலாம், இன்னும் 50 வருஷங்களுக்குப் பேசற மாதிரியான ஒரு பெரிய படம் பண்ணலாம் வாங்க'' என்று மேடையிலேயே கால்ஷீட்டை கன்ஃபார்ம் பண்ணி, படம் எடுக்க அழைத்தார். விகடன் மீது தான்கொண்ட அபிமானத்தை, இதைவிட அழகாக யாராலும் வெளிப்படுத்த முடியாது என்னும் வகையில் இருந்தது ரஜினியின் பேச்சு.
வைரமுத்து, இரண்டு ஜாம்பவான்களிடமும் கேள்விகள் கேட்க, அசராமல் பதில் சொன்னார்கள் இருவரும். ``வாழ்க்கையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?'' என்று முதலில் ரஜினியிடம் கேட்டார் வைரமுத்து. அதற்கு ரஜினி ``வாழ்க்கை என்பதே ஒரு பகல் கனவு. அதன் படிக்கட்டுகளில் மரணம் என்பது ஒரு படி. அந்தப் படி எப்போ வேண்டுமானாலும் வரலாம்'' என்று தத்துவார்த்தமாகப் பதில் அளித்தார் ரஜினி. அதே கேள்வியை கமலிடம் கேட்டார் வைரமுத்து. ``மரணம் என்பதை வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே நான் பார்க்கிறேன். அழகான கவிதைக்குக்கூட ஒரு முற்றுப்புள்ளி தேவை. அந்த முற்றுப்புள்ளியைப்போல்தான் மரணமும்'' என்று பிராக்டிக்கலாகப் பேசினார் கமல்.
ரஜினிகாந்துக்கு விருதைத் தர, அவருடைய ஆகச்சிறந்த ரசிகர்களில் ஒருவரைவிடவும் யார் பொருத்தமாக இருக்க முடியும்? சூப்பர் ஸ்டாருக்கு விருது வழங்க, ரசிகராக வந்து நின்றார் இளைய தளபதி விஜய். இந்த இருவரையும் மேடைக்கு அழைத்து வந்தவர் சிவகார்த்திகேயன். அவர்தான் ரஜினி விருது பெற்ற நிகழ்வைத் தொகுத்து வழங்கிய திடீர் தொகுப்பாளர். சூப்பர் ஸ்டார் ரஜினி நடுவில் நிற்க, அவருக்கு அருகில் நிற்கத் தயங்கி, கொஞ்சம் தள்ளியே நின்று சிலிர்த்துக்கொண்டிருந்தார் சிவா.
விழாவில், கறுப்புச்சட்டையும் கறுப்புப்பேன்ட்டும் முறுக்கின மீசையுமாக இதுவரை கண்டிராத வித்தியாச விஜய். வந்தது முதலே எல்லோரிடமும் புன்னகையுடன் பேசி மிகவும் அமைதியாகவே அமர்ந்திருந்தார் விஜய். மேடை ஏறியவர் ரஜினியின் கால்களைத் தொட்டு வணங்கி, ஆசி பெற்றது அழகான சர்ப்ரைஸ்.
``நான் ரஜினி சாருக்கு விருது கொடுக்கப் போறேன்கிற விஷயத்தைக் கேள்விப்பட்டதும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதே நேரம் என் கையால் அவர் விருது வாங்கினது அவரோட பெருந்தன்மையைக் காட்டுது'' என்றார் விஜய்.
``விகடன், அரசியலை விமர்சனம் பண்ணுவாங்க. ஆனால், விமர்சனத்துல அரசியல் பண்ண மாட்டாங்க'' என்று செம பன்ச் அடிக்க, அதை ஆமோதிக்கும் வகையில் அரங்கத்தில் அவ்வளவு கைத்தட்டல்.
இப்போதும் `காதலுக்கு மரியாதை' காலத்து இளமையோடு இருந்த விஜய்யைப் பார்த்து ``அப்படியே இருக்கீங்களே சார்!'' என்று சிவகார்த்திகேயேன் ஏக்கமாக மைக்கில் சொன்னார். அதைக் கேட்டு அவ்வளவு நேரம் அமைதியாகவே இருந்த விஜய் முகத்தில், மென்சிரிப்பு எட்டிப்பார்த்தது. விஜய், விருதை அளிக்க... ரஜினி அதை அன்போடு பெற்றுக் கொண்டார். விருதைப் பெற்றுக்கொண்ட ரஜினிகாந்த், ``கே.பி.சார், மகேந்திரன் சார், பாரதிராஜா சார், முத்துராமன் சாருக்குப் பிறகு என்னைக் கஷ்டப்பட்டு நடிக்கவெச்ச இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு எனது நன்றி'' என்றார்.
விஜய் பேசும்போது `` `பில்லா'வில் பாஸ்... ``பாட்ஷா'வில் மாஸ்... `கபாலி'யில் க்ளாஸ் என கேங்ஸ்டரிலேயே மூன்றுவிதமான நடிப்பில் அசத்தியவர் ரஜினி. அவருக்கு இந்த விருதைக் கொடுப்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்'' என்றார்.
``நான், ரஜினி ரசிகன் கிடையாது; வெறியன்'' என்று மேடையிலேயே சொன்னார் சிவா. சிவகார்த்திகேயனை, ரஜினி போலவே மிமிக்ரி பண்ணச் சொன்னார் ஆர்.ஜே பாலாஜி. ஏற்கெனவே படப்படப்பாக இருந்த சிவகார்த்திகேயன், கொஞ்சம் தயங்கியே ஒப்புக்கொண்டார். ஆனால், அச்சு அசலாக ரஜினியின் குரலில் அவரின் வெற்றிப்பயணத்தை அசத்தலாகப் பேசிக்காட்ட, ரஜினி முகத்தில் ஆச்சர்ய மகிழ்ச்சி.
``இங்கே நான் விருது எதையும் வாங்கவில்லை. ஆனால், அதைவிட இப்படி நான் மதிக்கும் இரண்டு நடிகர்களோடு என்னையும் மேடை ஏற்றினதே எனக்குக் கொடுத்த மிகப்பெரிய விருதா நான் கருதுறேன். அதுவும் ரஜினி சார் முன்னாடி அவர் வாய்ஸ்ல பேசினதை வாழ்நாளில் மறக்க முடியாது'' என்று பெருமிதப்பட்டு எமோஷனலானார் சிவகார்த்திகேயன்.
விருது விழாவாக இருந்தாலும், விகடன் மேடையாச்சே... அங்கு மட்டும் மக்களின் குரல் ஒலிக்காமல் இருக்குமா? ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் வந்திருந்த கலைஞர்கள் பலரும், மேடையிலேயே தங்களுடைய ஆதரவைப் பதிவுசெய்தனர். கொம்பு உள்ள காளைகளின் படம் வரைந்த டி-ஷர்ட்கள் மற்றும் வாசகங்கள் அடங்கிய கறுப்புச்சட்டையில் வந்திருந்தனர் வெற்றி மாறனும் சமுத்திரக்கனியும்.
``விகடன் விழாவில்தான் பாரம்பர்யம், கலாசாரம் பற்றிப் பேச முடியும். கலாசாரம் என்பது, மிகவும் முக்கியம். அதிலும் ஜல்லிக்கட்டு என்பது, தமிழர்களின் கலாசாரம். அதை நாம் காப்பாற்ற வேண்டும்; விட்டுக்கொடுக்கக் கூடாது. ஜல்லிக்கட்டுக்கு என ஸ்டிரிக்ட் ரூல்ஸ் கொண்டுவாங்க. யாருக்கும் ரொம்பக் காயம் ஏற்படாத மாதிரி ரூல்ஸ் கொண்டுவாங்க. அதுக்குப் பதிலா, ஒரு கலாசாரத்தையே வேண்டாம் எனச் சொல்வது சரியா?'' என்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தன் முதல் கருத்தைப் பதிவுசெய்தார் ரஜினி.
ரஜினி பேசி முடித்ததும் வைரமுத்து ``ஜல்லிக்கட்டுக்கு யார் வேண்டுமானாலும் கருத்துச் சொல்லலாம். ஆனால், முரட்டுக்காளை சொல்வதுபோல் வருமா!'' என்று ஃப்ரீ ஹிட்டில் சிக்ஸர் அடிக்க, கத்திப்பாரா வரை கேட்டது கைத்தட்டல் ஒலி.
`முரட்டுக்காளை'யோடு, `விருமாண்டி'யும் களத்தில் இறங்கினார். ``நீதிக்கு எதிராக யாரும் கருத்துச் சொல்லக் கூடாது எனப் பலரும் சொல்கின்றனர். நீதியில் பிழை என்பது இல்லாமல் இல்லை. நீதிக்குப் பிழை பெருமை இல்லை. பிழையான நீதிக்கு எதிராக, கண்ணகி தன் சிலம்பை விட்டெறிந்த கதை, நம் வரலாறுதான். நீதியில் தவறு இழைத்த பாண்டியன், தன் கருத்தை மாற்றிக்கொண்டது நாம் அறிந்ததுதான். மனிதர்களால் இயற்றப் பட்டதுதான் சட்டம். மனிதர்களுக்காகத்தான் சட்டம். மனிதர்கள் வேண்டும் என்றால், அதை மாற்றிக்கொள்ளலாம். தீர்ப்புகள் மட்டும் அல்ல சட்டங்களும் திருத்தப்பட வேண்டும்'' என்றார் கமல்ஹாசன் அழுத்தம் திருத்தமாக.
``ஜல்லிக்கட்டு என்பது ஏறு தழுவுதல். கலைக்கு, கலாசாரம் என்பதுதான் அடிப்படை. இவர்களுக்கு மிருகங்களின் மேல் அக்கறை இருக்கிறது என்றால், காற்றை மாசுபடுத்தும், ஒலியை மாசுபடுத்தும், தீபாவளியையும், கடல்வாழ் உயிரினங்களையும் வாழ முடியாத நிலைக்குத் தள்ளும், விநாயகர் சதுர்த்தியையும் தடை செய்யட்டும்'' என்று மேடையிலேயே சீறினார் வெற்றி மாறன்.
பாரதிராஜாவும் ஜல்லிக்கட்டுக்காக உரக்கப் பேசினார். ``கபடிபோலத்தான் ஜல்லிக்கட்டும் ஒரு குழு விளையாட்டு. இரண்டுக்கும் ஒற்றுமை இருக்கிறது. கபடி, சடுகுடுவில் எப்படி ஒருவர் சென்று ஒரு களத்தில் ஒரு சுற்று சுற்றிவிட்டு வருகிறார்களோ, அதேபோலத்தான் ஜல்லிக்கட்டும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு கலாசாரம் இருக்கிறது; பண்பாடு இருக்கிறது; நம்பிக்கைகள் இருக்கின்றன. இந்தியா போன்ற ஒரு தேசம், இதன் அடிப்படையில்தான் உருவாகி இருக்கிறது. இந்த நம்பிக்கைகளின் வழியில்தான், இந்தத் தேசம் இன்னும் உடையாமல் இருக்கிறது. ஜல்லிக்கட்டு நம் கலாசாரம், நம் பாரம்பர்யம், அதை நாம் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கக் கூடாது'' என்று கனலாகப் பேசினார்.
`களத்தூர் கண்ணம்மா'வின் செல்வத்துக்கு மட்டும் அல்ல, `தெறி'யின் நிவி பாப்பாவுக்கும் ரஜினிதான் விருது வழங்கினார். தனக்கும் சூப்பர் ஸ்டார்தான் விருது தரவேண்டும் என்பது குட்டிப் பாப்பா நைநிகாவின் ஆசை. பாப்பாவின் ஆசையை உடனே ஏற்றுக்கொண்டு ரஜினி அங்கிள் மீண்டும் மேடையேறினார். நைநிகா விருது பெற்றதற்கு நன்றி சொல்லி, கூடவே `ஹேப்பி பொங்கல்' என, பிஞ்சுக்குரலால் சொன்னது க்யூட் மொமன்ட். ஸ்பெஷலாக, `அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் மீனா உதிர்த்த அதே `ரஜினி அங்கிள்...' வசனத்தை நைநிகாவும் உச்சரிக்க, `தெறி'பேபியை வாஞ்சையோடு வாரி அணைத்து உச்சி முகர்ந்தார் சூப்பர் ஸ்டார்!
விகடன் விருது பெற்றவர்கள் அனைவரையும் வைத்து வின்டேஜ் ஸ்டுடியோ பின்னணியில் போட்டோ ஷூட் நடத்தினார் ஜி.வெங்கட்ராம். கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் தங்கள் விருதுகளுடன் போட்டோ ஷூட்டுக்கு வர, பரபரப்பு பற்றிக்கொண்டது. ``கமல் சார் சோபாவில் உட்காரட்டும். ரஜினி சார் பக்கத்தில் நிற்கட்டும்'' என வெங்கட்ராம் ப்ளான் சொல்ல, அதை உடனடியாக மறுத்தார் கமல்ஹாசன். ``நான் மட்டும் உட்கார்ந்து, அவர் நின்னா நல்லா இருக்காது'' என்ற கமலை, ``நீங்கதான் உட்காரணும்'' எனக் கட்டாயப்படுத்தினார் ரஜினி. ``ஓ.கே... முதல்ல நீங்க உட்கார்றது மாதிரியும், அடுத்து அவர் உட்கார்றது மாதிரியும் எடுத்துக்கலாம்'' என்று வெங்கட்ராம் சொன்ன பிறகுதான் படம் எடுக்கச் சம்மதித்தார் கமல்ஹாசன். ரஜினி-கமல் நட்பு, கேமராக்களில் பளீரெனப் பதிவானது.
‘நெருப்பின் ஆற்றில் நீந்தியிருக்கிறேன்
நீதிமன்றத்தைத் தாண்டியிருக்கிறேன்
சிறையைக்கூடத் தீண்டியிருக்கிறேன்
தமிழர் தயவால் மீண்டுமிருக்கிறேன்
என் பெயர் விகடன்... ஆனந்த விகடன்.
எல்லா மக்களும் எல்லா காலமும்
இன்புறச் செய்வது எனது கடன்...’
விகடனின் 90 வருட வரலாற்றை, பயணக் கவிதையாக வார்த்தைகளில் வார்த்துத் தந்திருந்தார் கவிப்பேரரசு வைரமுத்து. அந்தப் பாடலுக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் அவ்வளவு பொருத்தமாக இசையமைத்துள்ளார். அதற்கு, சத்யப்ரகாஷ் - ஸ்வேதா மோகன் இருவரும் தங்களின் குரலால் உயிர் தந்திருந்தனர். அந்தப் பாடல், விகடன் கீதமாக விழாவின் தொடக்கத்தில் ஒலித்தது.