அனுபவம்
நிகழ்வுகள்
‘ஆர்.கே.நகரில் போட்டியிடும் ஜெ,.அண்ணன் மகள்?’ - சசிகலா எதிர்ப்பின் அடுத்த திட்டம்
December 09, 2016

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காலத்தில், அவரைச் சந்திப்பதற்காக இரண்டு முறை முயற்சி செய்தார் அவரது அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா. முதல்வரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. இதனால் கொந்தளித்தவர், மருத்துவமனை வாசலிலேயே ஆவேசமாகப் பேசினார். கடந்த 6-ம் தேதி முதல்வர் உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தபோதும், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டார். இறுதிக் காரியங்களையும் தீபாவின் சகோதரர் தீபக்கும் சசிகலாவும் முன்னின்று செய்தனர். இதனால் உச்சக்கட்ட கொதிப்பில் இருக்கிறார் தீபா. அவரை முன்வைத்து சசிகலாவுக்கு எதிரான ஆட்டத்தையும் சிலர் தொடங்கியுள்ளனர். அவர்கள் நம்மிடம்,
"ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து வீடு, கொடநாடு பங்களா உள்பட ஏராளமான சொத்துக்களுக்கு தீபாவும், தீபக்கும் உரிமை கொண்டாட முடியும். அதற்கான சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். முதல்வரின் கடைசி நாட்களில் அவரைச் சுற்றி என்ன நடந்தது என்பதைப் பற்றியோ, சொத்துக்கள் குறித்து அவர் எழுதியுள்ள விவரங்கள் குறித்தோ எந்தத் தகவலும் இல்லை. அனைத்தும் மர்மமாகவே உள்ளது. ஜெயக்குமாரின் மகன் தீபக் பல வருடங்களாக சசிகலாவின் பிடியில்தான் இருக்கிறார். அவருக்குத் தேவையான உதவிகளையும் செய்து வருகிறார். கடந்த காலங்களில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து அவருக்கு சில வேலைகள் ஒதுக்கப்பட்டு, அதன் மூலம் மாத வருமானம் கிடைத்து வந்தது. எது தேவையென்றாலும், மன்னார்குடி உறவுகள் மூலம் சலுகைகளை அனுபவித்து வந்தார். ஆனால், தீபாவின் மனநிலை வேறு மாதிரியாக உள்ளது.
ஜெயலலிதாவைப் போலவே, அதிகாரத்தில் அமர வேண்டும் என விரும்புகிறார். ஜெயலலிதாவின் சொத்துக்களைகூட அவர் எதிர்பார்க்கவில்லை. 'நேரடியான வாரிசு' என மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி கட்சியை வழிநடத்த வேண்டும் என விரும்புகிறார். இதனை சசிகலா தரப்பினர் விரும்பவில்லை. அவருக்குத் தொடர்ச்சியான தொல்லைகளைக் கொடுத்து வருகின்றனர். இதையெல்லாம் எதிர்கொண்டு அவர் போராடி வருகிறார். ஆர்.கே.நகரில் இடைத் தேர்தல் அறிவிக்கும்போது, சுயேட்சையாக போட்டியிடும் முடிவில் இருக்கிறார். கட்சி நிர்வாகிகள் மத்தியிலும், தீபாவுக்கு நல்ல இமேஜ் இருக்கிறது. முதல்வரைப் போலவே கட்டுக்கோப்போடு வழிநடத்துவார் என நம்புகிறோம். அதற்கான காலச்சூழல்கள் அமைய வேண்டும் என்பதுதான் அவருடைய எதிர்பார்ப்பும்" என்கின்றனர் விரிவாக.
"அ.தி.மு.க பொதுக்குழுவில் சசிகலாவை முன்னிறுத்தும் பணிகள் தொடங்கிவிட்டன. அதேபோல், ஆர்.கே.நகரில் அவர் போட்டியிட வேண்டும் என மன்னார்குடி உறவுகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ஜெயலலிதா அனுதாப அலையால், ஆர்.கே.நகர் வெற்றி எளிதாகிவிடும் என்பதால், அவரை களமிறங்க வேண்டும் என்பதுதான் மன்னார்குடி உறவுகளின் எதிர்பார்ப்பும். ஆனால், சோனியா காந்தியைப் போல கட்சியின் அதிகாரத்தை மட்டும் கையில் வைத்துக் கொண்டு வலம் வருவதையே விரும்புகிறார் சசிகலா. இடைத்தேர்தல் தேதி அறிவிக்கும்போது, கட்சி விவகாரங்களும் ஒரு முடிவுக்குள் வந்துவிடும்" என்கிறார் தலைமைக் கழக நிர்வாகி ஒருவர்.
1 comments
என்ன கட்டம் போட்டாலும் ,சசி கட்டத்தை தன்டாமுடியாது , பின்னர் கண்டம் தான்
ReplyDelete