அனுபவம்
நிகழ்வுகள்
பிச்சை எடுக்கும் ஆசிரியை... மீட்க உதவிய ஃபேஸ்புக்... ஒரு நெகிழ்ச்சிக் கதை!
November 18, 2017
நவம்பர் ஒன்றாம் தேதி சென்னையில் பலத்த மழை. காலை 10:30 மணி சைதாப்பேட்டை பாலத்தில் நின்றுகொண்டு தண்ணீரின் அளவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 'டமார்' என ஒரு சத்தம். பைக்கில் வந்த ஒருவர் தவறி விழுந்து விடுகிறார். பின்னால் வந்த மூன்று பைக்குகளில் வந்தவர்கள் உடனே மழையைப் பொருட்படுத்தாது விழுந்தவரை தூக்கி விடுகிறார்கள். அடுத்த ஐந்து நிமிடங்களில் சைதாப்பேட்டை வாசன் கண் மருத்துவமனைக்கு அருகில் கண் தெரியாத ஒருவர் கையில் குச்சியுடன் மழையில் சாலையைக் கடக்க நின்றுகொண்டிருக்கிறார். பைக்கை நிறுத்திவிட்டு அவருக்கு உதவலாம் என நினைத்த அடுத்த நொடி என்னைத் தாண்டிச் சென்ற இன்னொரு பைக்கில் வந்தவர் கண் தெரியாதவர் சாலையைக் கடக்க உதவுகிறார். மனிதத்தையும் மனிதர்களையும் உயிர்ப்போடு வைத்திருக்கிற சம்பவங்கள் எல்லா இடங்களிலும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஒன்று நமக்குத் தெரிவதில்லை. இன்னொன்று யாரும் நமக்குத் தெரியப்படுத்துவதில்லை. அப்படி மனிதம் சார்ந்த பதிவு ஒன்று சில நாள்களாக வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என்று எல்லா இடங்களிலும் வைரலாகி இருக்கிறது.
திருவனந்தபுரம் ரயில் நிலையம். மிகவும் பரபரப்பாக இருக்கிறது. அன்று காலை வித்யா என்பவர் தன்னுடைய தோழியின் வருகைக்காக ரயில் நிலைய வாசலில் காத்திருக்கிறார். அங்கு நடக்கிற நிகழ்வுகளைக் கவனிக்க ஆரம்பிக்கிறார். ரயில் நிலைய வாசலில் 60 வயது மதிக்கத்தக்க பிச்சை எடுக்கிற ஒரு பெண்மணியைப் பார்க்கிறார். அவர் அங்கிருக்கிற மரத்தில் பழங்களைப் பறித்துக்கொண்டிருக்கிறார். அவரின் உடைகள் அழுக்குப் படிந்தும் கிழிந்தும் இருக்கிறது. அவருக்குப் பக்கத்தில் இரண்டு பழைய பைகள். பெண்மணி, மரத்தில் இருக்கிற ஓர் இலை கூட உதிர்ந்துவிடாதபடிக்கு மிகவும் கவனமாகப் பழங்களைப் பறிக்கிறார். இதைத் தொலைவில் இருந்து வித்யா கவனிக்கிறார். அந்தப் பெண்மணியின் உடல்மொழிக்கும் அவரது உடைக்கும் சற்றும் தொடர்பில்லாததை உணர்கிற வித்யா அவரிடம் பேச முயல்கிறார். அவரது முகத்தில் சோர்வு இருப்பதைப் பார்க்கிற வித்யா “சாப்பிடுகிறீர்களா” எனக் கேட்கிறார். அந்தப் பெண்மணி “வேண்டாம்... ரொம்ப தூரம் போய் வாங்கணுமே” என்று சொல்லிவிட்டு வித்யாவின் இரண்டு சக்கர வாகனத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார். வித்யா பக்கத்தில் இருக்கிற கடையில் நான்கு இட்லிகளும் ஒரு வடையும் வாங்கி வந்து கொடுக்கிறார். பத்து நிமிட இடைவெளியில் அவரிடம் பேச ஆரம்பிக்கிறார்.
அவருடன் பேசியதில் அந்தப் பெண்மணியின் பெயர் வல்சா எனத் தெரியவருகிறது. 33 ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்கிறார். மகன், கணவரைப் பிரிந்து இருப்பதாகவும் பிச்சை எடுத்துப் பிழைப்பதாகவும் கூறுகிறார். ஆசிரியர் என்றதும் சில நொடிகள் பதறிப் போகிற வித்யா அவரைச் சில புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார். கேரளாவில் மலப்புரத்தில் இருக்கிற இஸ்லாஹியா பப்ளிக் ஸ்கூலில் கணித ஆசிரியராக இருந்தவர் என்பதை அறிந்ததும் வித்யா மேலும் கலங்கி விடுகிறார். இப்படியான ஒரு நிகழ்வை எங்கும் படித்தோ, கேட்டோ இருக்காத வித்யா அவரை மீட்க நினைக்கிறார். ஆனால் ஆசிரியர் வேறு எதற்கும் காத்திருக்காமல் அங்கிருந்து கிளம்பி விடுகிறார். துணி மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு நகரத்தின் சாலையில் அழுக்கு உடையில் அவர் கிளம்பிச் செல்கிற காட்சி வித்யாவை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது.
வீட்டிற்கு வருகிற வித்யா அன்று மாலை நான்கு மணிக்கு அன்றைய நிகழ்வையும் ஆசிரியர் குறித்த புகைப்படங்களையும் சேர்த்து தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றுகிறார். வழக்கமான பதிவாக இருக்காது என்பதை அப்போது வித்யா அறிந்திருக்கவில்லை. அவர் பதிவு செய்திருந்த வார்த்தைகளும் புகைப்படங்களும் படிக்கிறவர்களைக் கடந்து போக முடியாதபடிக்கு துயர்கொள்ள வைக்கிறது. அடுத்த நாள் காலை ஃபேஸ்புக் செல்கிறவர் திகைத்துப் போகிறார். வித்யாவின் பதிவு 1000-க்கும் அதிகமான பகிர்வுகள், கமென்டுகள் என அன்றைய நாளுக்கான வைரல் செய்தியாக மாறுகிறது. பதிவிற்கு வந்திருந்த கமென்டுகளைப் படிக்கிறவர் திக்கு முக்காடிப் போகிறார். தெரிந்தவர் தெரியாதவர் என எல்லோரும் ஆசிரியருக்கு உதவ முன் வருகிறார்கள்.
ஆசிரியர் என்கிற ஒரு வார்த்தை கேரளாவின் ஒட்டு மொத்த இணையத்தையும் ஆக்கிரமிக்கிறது. வந்திருந்த கமென்டுகளில் ஒன்று “மலப்புரத்திலிருந்து திருவனந்தபுரம் வந்து கொண்டிருக்கிறோம் ஆசிரியரை எங்களோடு அழைத்துச் செல்கிறோம்” என இருக்கிறது. கமென்ட் செய்திருந்தவர்கள் யார் என அலசியதில் மலப்புரம் இஸ்லாஹியா பப்ளிக் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் என்பதை அறிகிறார். கமென்டில் கொடுக்கப்பட்டிருந்த முன்னாள் மாணவர்களைத் தொடர்புகொள்கிற வித்யா “வல்சா” ஆசிரியரை ரயில் நிலையத்தில் சந்தித்ததாகவும் அங்குதான் அவர் இருப்பார் எனவும் தெரிவிக்கிறார். சற்றும் தாமதிக்காமல் ஆசிரியரைச் சந்தித்த இடத்திற்கு வித்யா செல்கிறார். ஆனால் அங்கே அவர் இல்லை. ரயில் நிலையத்தில் பல இடங்களிலும் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க இயலாமல் வீடு திரும்புகிறார்.
நவம்பர் 6 காலை 5:45 மணிக்கு ஃபேஸ்புக்கில் வல்சா ஆசிரியர் குறித்த அடுத்த பதிவை இடுகிறார். ஆசிரியரின் புகைப்படத்தைப் பதிந்து “ஆசிரியரை அழைத்துச் செல்ல மலப்புரத்திலிருந்து மாணவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள், ஆசிரியரை மீட்டு அவர்களிடம் ஒப்படைக்கவேண்டியது திருவனந்தபுரம் மக்களின் கடமை. ஆசிரியரைக் கண்டுபிடிக்க உதவுங்கள்” என வித்யாவின் அலைபேசி எண்ணையும் சேர்த்துப் பதிவிடுகிறார். கமென்டுகள் ஷேர்கள் எனப் பதிவு செல்ல ஆரம்பிக்கிறது. வெளிநாடுகளில் இருக்கிற பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர் ஆசிரியர் வல்சாவுடன் எடுத்துக்கொண்ட பள்ளிக் கால புகைப்படத்தை வித்யாவின் பதிவில் பதிகிறார். மாணவர்களோடு ஆசிரியர் இருக்கிற புகைப்படத்தைப் பார்த்ததும் நெகிழ்ந்து போகிற வித்யா மீண்டும் ஆசிரியரைத் தேடி ரயில் நிலையம் செல்கிறார். அதே நேரம் மலப்புரத்திலிருந்து மாணவர்களும் திருவனந்தபுரம் வந்து விடுகிறார்கள்.
ரயில் நிலையம் வருகிற வித்யா அங்கிருக்கிற சிலரிடம் விசாரிக்கிறார். ரயில் நிலைய காவலர்களிடம் விஷயத்தை சொல்கிறார். காவலர்களும் ஆசிரியரைத் தேடுகிறார்கள். பல்வேறு மக்களின் பிரார்த்தனைகளுக்கு மத்தியில் அன்றைய தினம் காலை 10:00 மணிக்கு ஆசிரியரை வித்யா கண்டுபிடித்துவிடுகிறார். இரண்டு நாள்கள் ஆசிரியர் பற்றிய நினைவுகளிலும் தேடலிலும் இருந்த வித்யா ஆசிரியரைக் கண்டதும் உணர்ச்சிவசப்படுகிறார். ஆசிரியரை அழைத்துக்கொண்டு தாம்பனூர் காவல்நிலையம் வருகிறார்.
முன்னாள் மாணவர்களும் இன்னும் சிலரும் வித்யாவோடு இணைகிறார்கள். 10:27 மணிக்கு ஆசிரியர் கிடைத்துவிட்டார் என்று ஃபேஸ்புக்கில் பதிவிடுகிறார். சந்தோசமும் மகிழ்ச்சியும் பரவசமும் ஹார்டின் குறியீடுகளாகப் பதிவுக்கு விழுகிறது. “வித்யா நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்கிற வரிகள் கமென்டுகளாக விழுகின்றன. காவல் நிலையத்தில் ஆசிரியரை அழைத்துச் செல்கிறோம் என முன்னாள் மாணவர்கள் சொல்கிறார்கள். ஆனால் ஆசிரியர் தன் மகனோடு செல்ல ஆசைப்படுவதாகத் தெரிவிக்கிறார். ஆசிரியரை மீட்டு அம்பலத்தரா கல்லடிமுகம் பகுதியில் இருக்கும் முதியோர் இல்லத்தில் சேர்க்கிறார்கள். ஆசிரியர் பாதுகாப்பாய் இருக்கிறார் என்கிற மகிழ்ச்சியில் அன்றைய தினம் மதியம் 1 மணிக்கு எல்லோருக்கும் நன்றி சொல்லி இன்னொரு பதிவை இடுகிறார். அதில் “ஆசிரியரைப் பாதுகாப்பாக ஒப்படைத்துவிட்டோம். ஆசிரியரின் மகனைக் கண்டுபிடித்து அவரிடம் சேர்த்துவிடுவோம் என்கிற வரிகளோடு அந்தப் பதிவு முடிகிறது.
வித்யாவின் ஃபேஸ்புக் கணக்கை தேடிக் கண்டுபிடித்து அவரது டைம்லைன் பார்க்க நேர்ந்தது. எல்லாமே வல்சா ஆசிரியர் குறித்த மலையாள மொழிப் பதிவுகள்தான் இருந்தன. கேரளா மந்திரி திரு கே.த ஜலீல் அலுவலகத்தில் கணினி உதவியாளராக இருக்கிறார். வித்யா தினமும் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு கிளம்பும் போது இரண்டு உணவுப் பொட்டலங்களைக் கையோடு எடுத்துச் செல்கிறார். பயணிக்கிற வழியில் பசியோடு இருக்கும் இரண்டு பேருக்கு அவற்றை கொடுப்பது அவர் வழக்கம். ஆசிரியரின் மகனைக் கண்டுபிடித்து விட்டதாகவும் விரைவில் மகனோடு ஆசிரியர் சேர்ந்து விடுவார் என்கிறார். ஃபேஸ்புக்கில் ஆசிரியர் குறித்த பதிவு வைரலாக மாறி இருப்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். வல்சா ஆசிரியர் குறித்த நிகழ்விற்கு பல இடங்களில் இருந்தும் வாழ்த்துகளும் அழைப்புகளும் வந்த வண்ணம் இருக்கின்றன என்பதை குறிப்பிடுகிற வித்யா, ஆசிரியர் விஷயத்தில் தகவலை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த மற்றும் உதவிய அனைவருக்கும் நன்றி சொன்னார். அவரது ஃபேஸ்புக்கில் பார்த்த நிகழ்வுகளில் முக்கியமான இன்னொரு விஷயம். தசை நார் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு தேவையான இருபது லட்ச ரூபாய் பணத்தை தனி ஒருவாக திரட்டி அந்தச் சிறுவனைக் காப்பாற்றியிருக்கிறார்.
அடுத்தவர் வாழ்க்கைக்கு ஒளி காட்டுவதும் வழி காட்டுவதும்தான் ஒரு மனிதனின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது. இது உங்களது விசயத்தில் உண்மை வித்யா, தொடர்ந்து செல்லுங்கள்.

0 comments