ஜெ. எப்போது வீடு திரும்புகிறார் ? மீண்டும் சுறுசுறுப்படைந்த அப்போலோ !

தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்து, சென்னையில் வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. ஒருசில அலுவலகங்களில் ஊழியர்கள் ...

தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்து, சென்னையில் வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. ஒருசில அலுவலகங்களில் ஊழியர்கள் வருகை சற்று குறைவாகக் காணப்பட்டாலும், தனியார் மற்றும் அரசு அலுவலகப் பணியாளர்கள் இன்று வழக்கம்போல் தங்களது பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு 40 நாட்கள் தாண்டிய நிலையிலும், தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை சார்பில் இதுவரை 11 அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. நுரையீரல் நோய்த் தொற்று, இதயநோய் சிகிச்சை, பிஸியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு அளிக்கப்பட்டு வருகிறது. லண்டனிலிருந்து வந்த நுரையீரல் நோய் சிறப்பு மருத்துவர் ரிச்சர்டு பீலே, சிங்கப்பூர் மருத்துவர் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வந்த மருத்துவர்கள், முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். ஜெயலலிதா, மருத்துவர்களின்  தொடர் கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை சார்பில் வெளியிடப்படும் ஒவ்வொரு அறிக்கையிலும் தவறாமல் தெரிவிக்கின்றனர்.

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தொடங்கி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வரை, தமிழக தலைவர்கள் மட்டுமின்றி, அகில இந்திய அரசியல் தலைவர்கள் பலரும் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து விசாரித்துச் சென்றுள்ளனர்.  தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்ட தருணத்தில், அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, தி.மு.க பொருளாளர் மு.க. ஸ்டாலின், கருணாநிதியின் துணைவி ராசாத்தி அம்மாள் உள்ளிட்டோரும் அப்போலோவில் சிகிச்சை பெறும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.

தீபாவளிப் பண்டிகை நெருக்கத்தில் வந்தபோது, ஜெயலலிதா, தீபாவளிக்கு முன் வீடு திரும்புவார் என்று பரவலாக தகவல்கள் வெளியாகின.  போயஸ்கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவின் உடல்நிலையைக் கண்காணிக்கும் வகையில் சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டன. வேறு சிலரோ, ஜெயலலிதா சிறுதாவூர் இல்லத்திற்குத் திரும்புவார் என்று தெரிவித்தனர். தீபாவளிக்கு முந்தைய நாள் வரை, ஜெயலலிதா வீடு திரும்புவது பற்றிய இதுபோன்ற தகவல்கள் வெவ்வேறாகப் பரவிக் கொண்டே இருந்தன. ஆனால், அதுபோன்ற எந்த நிகழ்வும் ஏற்படவில்லை.  முதல்வர் அப்போலோ மருத்துவமனையில் இருப்பதால், அ.தி.மு.க-வினருக்கு இந்த தீபாவளிப் பண்டிகை பெரிய அளவில் மகிழ்ச்சியைத் தரவில்லை. பெயரளவுக்கு தீபாவளியைக் கொண்டாடினர்.

சென்னையைப் பொருத்தவரை, பல்வேறு ஊர்களில் இருந்து பணி நிமித்தம் இங்கு வந்து தங்கியிருப்போர் அதிகம் என்பதால், பெரும்பாலானோர் தீபாவளிக்காக வெளியூர்களுக்குச் சென்றனர். இதனால், கடந்த வாரத்தின் இறுதி நாட்களில், அப்போலோ மருத்துவமனை வளாகம் சற்றே பரபரப்பின்றி காணப்பட்டது.

சென்னையில் இன்று வழக்கமான அலுவல்கள் எப்போதும்போல் தொடங்கியிருப்பதால், அப்போலோவும் அதற்கு விதிவிலக்கல்ல என்பது போல், மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.  அன்றாடம் வருகை தரும் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி, காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ யசோதா ஆகியோர் அப்போலோ மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.

ஜெயலலிதா, உடல்நலம் தேறி வருவதாக சி.ஆர். சரஸ்வதி எப்போதும் போல் குறிப்பிட்டார். இதே கருத்தை யசோதாவும் தெரிவித்துச் சென்றார். எனினும் ஜெயலலிதா முழுமையாக உடல்நலம் தேறி, வீடு திரும்ப குறைந்தது 10 நாட்களுக்கு மேல் ஆகும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜெயலலிதாவின் உடல்நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் களைப்பின்றி காணப்படுவதாவும் அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பு நீடிப்பதாகவும், அவர் விரைவில் வீடு திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல...

1 comments

Search This Blog

Blog Archive

About