உதவிக்கு நித்யா.. உணவுக்கு செல்வி- கோபாலபுரத்தில் கருணாநிதி!

“கலைஞர் அவர்களுக்கு கடந்த சில நாட்களாக, வழக்கமாக அவர் உட்கொண்டு வரும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு...

“கலைஞர் அவர்களுக்கு கடந்த சில நாட்களாக, வழக்கமாக அவர் உட்கொண்டு வரும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு, அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார்” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். நாள்தோறும் முரசொலிக்கு கடிதம் எழுதியும், அறிக்கைகள் கொடுத்தும் வந்த கருணாநிதிக்கு என்ன தான் ஆச்சு? என்று தி.மு.க வினர் வருத்ததோடு விசாரித்து வருகிறார்கள்.

கருணாநிதி உடல்நிலை குறித்த நாம் விசாரித்த போது “ கடந்த பத்து தினங்களுக்கு முன்பில் இருந்தே அவர் கொஞ்சம் சோர்வாகத்தான் இருந்தார். அதனால் தான், உடல்நிலையை காரணம் காட்டி முரசொலியில் என்னால் இப்போது கடிதம் எழுத முடியாது என்பதையும் தெரிவித்தார்.

காய்ச்சல் இருந்தது, அதற்காக மாத்திரைகள் எடுத்து கொண்டார். ஆனாலும் காய்ச்சல் விட்டு விட்டு வந்தது. அவருக்குச் சிகிச்சை அளிக்க அவருடைய குடும்ப மருத்துவர் கோபால் தினமும் காலையும், மாலையும் வீட்டுக்கு வந்து செல்கிறார். சில தினங்களுக்கு முன் தனக்கு இடுப்புப் பகுதியில் எரிச்சல் இருப்பதாக கருணாநிதி சொல்லியுள்ளார். மருத்துவர் கோபால் பார்த்தபோது, கருணாநிதியின் இடுப்புப் பகுதியில் சிறுசிறு கொப்பளங்கள் இருப்பதைப் பார்த்தார்.

அலர்ஜியின் காரணமாகத்தான் அந்தக் கொப்பளங்கள் வந்திருப்பது தெரிந்தது. இதனால் அவரால் அதிக நேரம் உட்கார்ந்த நிலையில் இருக்க முடியவில்லை. கையிலும் கொப்பளங்கள் உள்ளதால், சட்டை போடாமல் துண்டால் போர்த்திக் கொண்டுள்ளார். பேசுவதற்கும் கொஞ்சம் சிரமப்படுகிறார். தினந்தோறும்,பேப்பர் படிப்பதை விட மாட்டார்.சில நாட்களாக அவர் பேப்பர் படிக்கவில்லை என்கிறார்கள். வீல்சேரில் அவரால் ஏறி உட்கார முடியாமல் கஷ்டப்பட்டதால்தான், கோபாலபுரத்தை விட்டு அவர் எங்கும் கிளம்பாமல் உள்ளார்.

சி.ஐ.டி காலனி வீட்டுக்கு அவர் போகமுடியாததற்கு காரணம் அதுதான். ஆனாலும் ராஜாத்தி அம்மாள் கோபாலபுரத்துக்கு வந்து கருணாநிதியைப் பார்த்து விட்டுச் செல்கிறார். கனிமொழியும் தனது தந்தையை வந்து பார்த்து அவரிடம் பேசி விட்டு, டாக்டர்களிடம் பேசிவிட்டுத்தான் செல்கிறார். கருணாநிதியின் தோலில் ஏற்பட்டுள்ள அலர்ஜிக்கு சிகிச்சை அளிப்பதற்காக காவேரி மருத்துவமனையில் இருந்து இரண்டு மருத்துவர்கள் வந்து சென்றுள்ளனர்.

காய்ச்சல் இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கலாம் என்று ஆலோசனை சொல்லி உள்ளனர். அப்போலோவில் முதல்வர் ஜெயலலிதாவை அனுமதித்து இருப்பதால், அங்கு வேண்டாம் என்று ஸ்டாலின் சொல்லி விட்டார். அதன் பிறகு போரூர் ராமச்சந்திராவில் அனுமதிக்கலாம் என்று முடிவு செய்தனர். அதற்குள் கருணாநிதிக்கு காய்ச்சல் கொஞ்சம் குணமாகிவிட்டது. புதன்கிழமை காலை, வலி குறைந்ததால் உதவியாளர்களுடன் சிறிது நேரம் பேசினார்” என்கிறார்கள்.

கருணாநிதிக்கு உடைகள் மாற்றுவது முதல் பணிவிடை செய்வது வரை அனைத்தையும் கருணாநிதியின் உதவியாளர் நித்யாதான் செய்துவருகிறார். அவர் தான் முழுநேரமும் கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியின் மாடி அறையிலேயே இருந்து, முழுமையாக கருணாநிதியை கவனித்து வருகிறார். அதேபோல் கருணாநிதியின் மகள் செல்வி கருணாநிதிக்கு தினமும் உணவு கொண்டு வந்து கொடுத்து முழுவதையும் சாப்பிட வைத்துவிட்டுதான் வீட்டுக்குச் செல்கிறாராம். பின்னர் மாத்திரைகள் கொடுப்பது என தனது அப்பாவை மிகவும் அக்கறையுடன் செல்விதான் பார்த்துக் கொள்கிறாராம்.

மாத்திரைகள் வீரியத்தால் அவரால் சாப்பிட முடியாமல் கொஞ்சம் கஷ்டப்படுகிறாராம். கொஞ்சம் தளர்ந்த நிலையில் இருந்தாலும்,மாலை வேளையில் சண்முகநாதனை அழைத்து “இன்னைக்கு என்னப்பா விசேஷம்” என்று நாட்டு  நடப்புகளை விசாரிக்கத் தவறுவதில்லை. காய்ச்சல் குறைந்துவிட்டதால், கருணாநிதி விரைவில் உடல்நிலை சீராகி தனது பணியைத் தொடருவார்” என்கிறார்கள் கோபாலபுரத்தில் இருப்பவர்கள்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About