படிக்காத பெற்றோர்களின் பிள்ளைகள் எங்களுக்கு தேவையில்லை என்றதா அந்த பள்ளி ?!

சென்னை சிட்லபாக்கத்தில் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வரும் 38 மாணவர்கள் காலாண்டு தேர்வில் சில பாடங்களில் ...

சென்னை சிட்லபாக்கத்தில் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வரும் 38 மாணவர்கள் காலாண்டு தேர்வில் சில பாடங்களில் தோல்வி அடைந்தார்கள் . அதற்காக அந்தப் பள்ளி நிர்வாகம் 38 மாணவர்களையும் டிசி வாங்கிச் செல்லுமாறு மிரட்டியதாகத் தகவல் வெளியானது. அது தொடர்பான வீடியோ வாட்ஸ்ப் மற்றும் பேஸ்புக் போன்ற வலைதளங்களின் வழியே வைரலானது.

டி.சி-யை வீட்டுக்கு அனுப்பி வைப்போம் !

இது குறித்து விவரம் அறிந்தவர்களிடம் பேசினோம்."தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களிடம், '14 -ம் தேதி யாரும் பள்ளிக்கு வரவேண்டாம். உங்களுடைய டி.சி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம்' என்று கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஒரு சில பெற்றோர்களுக்கு மட்டும் இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 17 -ம் தேதி மாணவர்களைத் தயக்கத்துடன் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளார்கள் பெற்றோர்கள்.

மாணவர்கள் யாரும் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. அரை நாள் முழுவதும் வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டனர். உணவு இடைவேளைக்குப் பின்னர், பள்ளியின் நூலகத்துக்குள் அமர வைக்கப்பட்டனர். அன்று மாலை ஒவ்வொரு பெற்றோரையும் தொலைபேசியில் அழைத்து, 'உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு வர வேண்டாமென்று சொன்னோமே. ஏன் அனுப்பினீர்கள்' என்று பெற்றோர்களை மிரட்டினர்" என்றார் விவரம் அறிந்த ஒருவர்.

படிப்பறிவில்லை

பள்ளிக்குச் சென்ற பெற்றோர்களில் ஒருவரிடம் பேசினோம். "கடந்த 18 -ம் தேதி பெற்றோர்கள் அனைவரும் பள்ளிக்குச் சென்றோம். ஒரு மணி நேரத்துக்கு மேல் அலுவலகத்துக்கு வெளியே காக்க வைக்கப்பட்டோம். பொறுமையிழந்த ஒரு சில பெற்றோர் 'ஏன் எங்களை காக்க வைக்கிறீர்கள். எப்போது எங்களை சந்திப்பீர்கள்' என்று கூச்சல் போட, அடுத்த அரை மணி நேரத்துக்குப் பிறகு பள்ளி துணை முதல்வரான டிம்பிள், பெற்றோர்களைச் சந்தித்தார்.

'உங்கள் பிள்ளைகள் எங்கள் பள்ளிக்கு வேண்டாம். எவ்வளவு பணம் கட்டினீர்கள் என்று சொல்லுங்கள். அதற்கான காசோலையையும் டி.சி.யையும் உங்கள் வீட்டுக்கு அனுப்புகிறோம்' என்றார். இதனை ஏற்றுக் கொள்ளாத பெற்றோர்கள், குழந்தைகள் பாடங்களில் தோல்வியடைந்தால் யார் பொறுப்பு எனக் கேட்டு கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். 'பள்ளியில் ஓரளவுதான் நாங்கள் பார்த்துக் கொள்ள முடியும். ஃபெயிலான மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்களே பொறுப்பு. பெற்றோர்கள் வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வீட்டில் நீங்கள் தான் சொல்லிக் கொடுக்க வேண்டும்' என்றும் டிம்பிள் பேசினார்.

பெற்றோர்கள் படிக்காதவர்களாக இருந்தால் என்ன செய்ய முடியும் என பெற்றோர்கள் கேட்க , 'அப்படியான குழந்தைகளை இங்கு படிக்க வைக்காதீர்கள்' என்று பேசியிருக்கிறார் டிம்பிள். இதன் பின்னர், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஒரு பேப்பரில் எழுதிக் கொடுத்து, கையெழுத்துப் போட்டு மன்னிப்புப் கேட்ட பிறகே மாணவர்கள் வகுப்புக்குள் அனுமதிக்கப்பட்டனர்" என்றார்.

இதுகுறித்து பள்ளியின் தாளாளர் சித்ரா பிரசாத்திடம் பேசினோம். "மாணவர்களின் நலன் கருதியே கடுமை காட்டினோமோ தவிர, மாணவர்களுக்கு டி.சி கொடுக்கும் எண்ணத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொரு தேர்வுக்குப் பின்னும் வழக்கமாக பெற்றோர்களுடன் ஆலோசனை நடத்துவோம். அவ்வாறு நடந்த ஆலோசனை கூட்டத்தில் எங்களுடைய கருத்துகளை அனைத்துப் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டனர். அதில் ஒரு மாணவனின் தந்தை மட்டும் எதற்காக இது போன்று நடவடிக்கை எடுக்கிறோம் என்று தெரியாமல் கரடுமுரடாக நடந்து கொண்டார். எங்கள் பள்ளியின் மீது சொல்லப்படும் புகாரில் எந்த உண்மையும் இல்லை. எதிர்காலத்தில் எங்கள் பள்ளியில் அது போன்ற நடவடிக்கைள் இருக்காது. எங்கள் பள்ளி அனைத்துத் தரப்பு குழந்தைகளுக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் செயல்படுகிறது " என்றார்.

மாணவர்கள் நுகர்வு பொருளா ?


"மாணவர்களை மிரட்டியோ அல்லது டி.சி கொடுத்தோ அவர்களை சரிப்படுத்த முடியாது. அவ்வாறு செய்தால் அது அந்த மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குரியாக்கும் செயலாகும்" என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு "தோல்வி அடையும் மாணவர்களுக்கு டி.சி கொடுத்துவிட்டால் அந்த மாணவர்கள் வேறு பள்ளியில் எப்படிச் சேர முடியும்.எந்தப் பள்ளி அவர்களை ஏற்றுக் கொள்ளும்? இது அந்தப் பள்ளியின் கல்வியாளருக்கு தெரியாதா?, இளம் பருவத்தில் உள்ளவர்களை கார்னர் செய்தால் அவர்கள் குற்றவாளிகளாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது . குறிப்பிட்ட மாணவனை தேர்ச்சி பெறவில்லை என்றால், அந்தப் பள்ளி நிர்வாகம் உரிய கல்வி ஆலோசகர்களையோ அல்லது உளவியலாளர்களையே அழைத்து ஆலோசனை வழங்கி இருக்கவேண்டும்.

அந்த மாணவர்களின் கல்வி நிலை குறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்குத் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமா?, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும். கல்விச் சந்தையில் மாணவனை நுகர்வுப் பொருளாகப் பார்ப்பதால்தான் இது போன்ற நடவடிக்கைள் தொடர காரணமாகின்றன. இந்த பள்ளியின் நடவடிக்கை தற்போதைக்கு நிறுத்தப்பட்டிருந்தாலும் எதிர்காலத்தில் வேறு பள்ளிகளும் இதுபோன்ற நடவடிக்கையில் இறங்க வாய்ப்புஉள்ளது. தேர்வில் தோல்வி அடைந்தால் மாணவர்களை நீக்குவது என்பது சட்டத்துக்கு எதிரான செயல். எனவே பள்ளிக்கல்வித்துறை அதன் விதிகளை சரியாக அமல்படுத்த வேண்டும். மேலும் டிசி கொடுக்க முடிவு செய்த அந்த பள்ளியின் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.


"ஒரு மாணவனுக்கு புரியவில்லை என்றால் அவனுக்கு புரியும் படி ஆசிரியர்கள் நடத்தவில்லை என்பதுதான் உண்மை. நன்றாகப் படிக்கும் மாணவர்கள் மட்டும்தான் படிக்க முடியும், சுமாராக படிக்கும் மாணவர்கள் படிக்க முடியாது என்று சொன்னால் , அது தனியார் கல்வி நிறுவனங்களின் லாப வெறியைக் காட்டுகிறது" என்கிறார்கள் கல்வியாளர்கள்.

"தேர்வில் தோல்வி அடைந்தால் பள்ளியை விட்டு அனுப்பி விடுமாறு எந்தக் கல்வி விதிமுறையில் சொல்லப் பட்டுள்ளது? இது கல்வி வியாபாரத்தின் வெளிப்பாடே தவிர மாணவர்களின் நலன் சார்ந்தது இல்லை என்று கொதிக்கிறார்கள் கல்வியாளர்கள் .

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About