மலச்சிக்கல் தீர என்ன செய்யலாம்? நலம் நல்லது–18

`காலைக் கடன்’... இந்த வார்த்தையை யார் முதலில் அழகாகச் செதுக்கினார்கள் என்பது தெரியவில்லை. உடனே இந்தக் கடனை பைசல் செய்யாவிட்டால், வட்டியைக் ...

`காலைக் கடன்’... இந்த வார்த்தையை யார் முதலில் அழகாகச் செதுக்கினார்கள் என்பது தெரியவில்லை. உடனே இந்தக் கடனை பைசல் செய்யாவிட்டால், வட்டியைக் குட்டியாகப் போட்டு வாழ்வையே சிதைத்துவிடும். மலச்சிக்கல், கடன் சுமையைப்போல பல நோய்களைப் பிரசவித்து, நம் நல்வாழ்வுக்கே சிக்கலைத் தந்துவிடும். இன்றைக்கு நன்கு விளம்பரப்படுத்தப்பட்டு, அலங்காரமாக விற்கப்படும் `ரெடி டு ஈட்’ உணவுகளில் பெருவாரியானவை, நம் ஜீரண நலத்துக்குச் சிக்கலை ஏற்படுத்துபவை. காலை எழுந்ததும், எந்தப் பிரச்னையும் இல்லாமல் மலத்தை வெளியேற்றும் பழக்கத்தைச் சிதைப்பவை.

நவீன மருத்துவம், வாரத்துக்குக் குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது மலம் கழிக்கவில்லை அல்லது இறுகியவலியுடன் கூடிய மலம் கழித்தலை மட்டும்தான் ‘மலச்சிக்கல்’ என வரையறுக்கிறது. ஆனால், பாரம்பர்ய மருத்துவம் அனைத்துமே, எந்த மெனக்கெடலும் இல்லாத சிக்கலற்ற காலை நேர மலம் கழித்தலை மிக ஆணித்தரமாக அறிவுறுத்துகின்றன. ‘கட்டளைக் கலித்துறை’ நூல், நாள் ஒன்றுக்கு மூன்று முறை மலம் கழிப்பது நல்லது என்கிறது. சித்த மருத்துவ, `நோய் அணுகா விதி’, மலத்தை அடக்கினால் ஏற்படும் பின் விளைவுகளைச் சொல்கிறது...

`முழங்காலின் கீழ் தன்மையாய் நோயுண்டாகும்
தலைவலி மிக உண்டாகும்
சத்தமானபான வாயு பெலமது குறையும்
வந்து பெருத்திடும் வியாதிதானே...’ என்கிறது.

மூலநோய், மூட்டுவலி, தலைவலி முதல் எந்த ஒரு தசை, நரம்பு சார்ந்த நோய்க்கும், மலச்சிக்கலை நீக்குவதைத்தான் முக்கியமான முதல் படியாக சித்த மருத்துவமும், தமிழர் வாழ்வியலும் சத்தமாகச் சொல்கின்றன.

இனி, மலச்சிக்கல் தீர கவனிக்கவேண்டிய விஷயங்கள்...

*வரும்போது அல்லது வசதிப்படும்போது போய்க்கொள்ளலாம் எனும் மனோபாவம் எல்லோரிடமும் வலுத்து வருகிறது. இது தவறு. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் முதல் அலுவலகம் செல்வோர் வரை பலருக்கும் காலைக் கடன் கழிப்பது கடைசிபட்சமாகிவிட்டது. பின்னாளில் இதுவே பழக்கமாகி, காலைக்கடன் பலருக்கும் மதியம், மாலை, இரவுக் கடனாக இஷ்டத்துக்கு மாறிவிட்டது. இப்படி, `அதுதான் போகுதே... அப்புறமென்ன?’ என அலட்சியப்படுத்துவதுதான் பல நோய்களுக்கும் ஆரம்பம். காலைக் கடனை காலையிலேயே தீர்த்துவிடுவதே சிறந்தது.

* அதிகாலையில் மலம் கழிப்போருக்குத்தான், பகல் பொழுதில் பசி, ஜீரணம் சரியாக இருக்கும்; வாயுத்தொல்லை இருக்காது; அறிவு துலங்கும்.

* `சாப்பிட்ட சாப்பாட்டுல கொஞ்சம் துவர்ப்பு கூடிருச்சோ... அதனாலதான் மலச்சிக்கலோ...’ என வீட்டிலுள்ள பெரியவர்கள் யோசிப்பார்கள். அடுத்த முறை வாழைப்பூ சமைக்கும்போது, அளவைக் குறைத்து சமைப்பார்கள். இந்தச் சமையல் சாமர்த்தியம், `டூ மினிட்ஸ்’ சமையலில் கைகூடாது. எனவே, துரித உணவை கொஞ்சம் ஓரமாக வைப்பதே நல்லது.

வாழைப்பூ

* பாரம்பர்யப் புரிதலின்படி அன்றாடம் நீக்கப்படாத `அபான வாயு’ உடல், உள்ளம் இரண்டையும் நிறையவே சங்கடப்படுத்தும். எனவே, வாயுவையும் அடக்கக் கூடாது.

* பள்ளிவிட்டு வந்ததும், புத்தகக் கட்டோடு நேரே கழிப்பறைக்கு ஓடும் குழந்தைக்கு, மாலை, இரவு, நள்ளிரவில்தான் பசியெடுக்கும். பகலில் கொண்டுசெல்லும் உணவைப் பத்திரமாகத் திரும்பக்கொண்டு வந்துவிடுவார்கள். எனவே, குழந்தைகளை காலைக்கடனைப் பின்பற்றச் செய்யவேண்டியது அவசியம்.

* நாள்பட்ட மூட்டுவலி, பக்கவாதம், தோல் நோய்கள் அனைத்துக்கும் உடலில் சீரற்று இருக்கும் வளி, அழல், ஐயம் எனும் முக்குற்றங்களை முதலில் சீராக்கி மருத்துவம் செய்ய முதல் மருந்தாக பேதி கொடுப்பார்கள். இது பல ஆயிரம் ஆண்டுப் பழக்கம். ஆரோக்கியமான உடலுக்கு வருடத்துக்கு இரண்டு முறை பேதி மருந்து எடுத்துக்கொள்வது நல்லது. அதற்காக அதைக் கடையில் வாங்கி எடுத்துக்கொள்ளக் கூடாது. குடும்ப மருத்துவரிடம் சென்று, நாடி பார்த்து, உடல் வலிமை பார்த்து, உடலுக்கு ஏற்ற பேதி மருந்தை எடுப்பதே நல்லது.

* இரவில் படுக்கப்போவதற்கு முன்னர் இளஞ்சூடான நீர் இரண்டு டம்ளர் அருந்துவதும், காலை எழுந்ததும், பல் துலக்கி, இரண்டு டம்ளர் சாதாரண நீர் அருந்துவதும் நல்லது.

கிஸ்மிஸ்

* குழந்தைகளுக்கு 5-10 உலர் திராட்சைகளை (கிஸ்மிஸ், அங்கூர் திராட்சை) 2-3 மணி நேரம் மாலையில் ஊறவைத்து, பின் அதை நீருடன் நன்கு பிசைந்து கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

* கடுக்காய் பிஞ்சை லேசாக விளக்கெண்ணெயில் வறுத்து, பொடித்த பொடியை ஒரு டீஸ்பூன் அளவுக்கு முதியோர் சாப்பிடலாம். மலம் கழிப்பது எளிதாகும்.

* கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைக்காய்களின் உலர்ந்த தூள் (விதை நீக்கிய பின்), ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய மிக முக்கிய மருந்து; உன்னதமான உணவு. மாலையில் இந்தப் பொடியை மாலையில் ஒரு டீஸ்பூன் வரை சாப்பிட்டால், காலையில் மலத்தை எளிதாகக் கழியவைக்கும். பல ஆரோக்கியங்களை உடலுக்குத் தரும். இதை `திரிபலா பொடி’ என்றும் சொல்வார்கள்.

மலச்சிக்கல் தீர விரும்புகிறவர்கள் முக்கியமாகத் தவிர்க்கவேண்டியது ஆரோக்கியமற்ற உணவுகளைத்தான்... கவனத்தில் கொள்க!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About