20 ரூபாய் டாக்டரும்... குரங்கைக் கொன்ற மருத்துவ மாணவர்களும்... இரு நிகழ்வுகள் உணர்த்தும் உண்மை!

இதைப்பற்றி நாம் பேசுவதால் என்ன பலன் கிடைக்கும் என தெரியவில்லை. அப்படி நாம் பேசுவதால் பலன் கிடைக்கும் என்றால், பல அடுக்கு கொண்ட மாடி ஒன்றின்...

இதைப்பற்றி நாம் பேசுவதால் என்ன பலன் கிடைக்கும் என தெரியவில்லை. அப்படி நாம் பேசுவதால் பலன் கிடைக்கும் என்றால், பல அடுக்கு கொண்ட மாடி ஒன்றின் மேல் இருந்து நாயை கீழே விட்டெறிந்த சம்பவத்தை பற்றி நாம் பேசிய பேச்சுக்கு, இந்த சம்பவம் நடந்திருக்காது. நடந்திருக்கவும் கூடாது.

நாயை மாடியில் இருந்து தூக்கி எரிந்த மருத்துவ மாணவர்களின் கொடூர செயல் கண்டனத்துக்குள்ளான அதே சூழலில், மருத்துவ மாணவர்களின் மனநிலையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. மற்றவர்களின் துன்பத்தை தன் துன்பமாய் தாங்கி, சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டிய மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? என்ற கேள்வியை மிக அழுத்தமாய் பதிவு செய்திருந்தது அந்த சம்பவம்.

ஆனால் அதன் மீது எழுப்பப்பட்ட கேள்விகளும், மருத்துவ மாணவர்களின் மனநிலை எப்படி இருக்க வேண்டும் என்ற தலைப்பில் நடந்த விவாதமும் எந்த பலனையும் அளிக்கவில்லை என்பதை இன்னொரு சம்பவம் மூலம் உணர்த்தி இருக்கிறார்கள் மருத்துவ மாணவர்கள். இம்முறை வேலூர் சி.எம்.சி. மருத்துவக்கல்லூரி மாணவர்கள் இந்த கொடூரத்தை நிகழ்த்தி இருக்கிறார்கள். ஒரு குரங்கை மிக மோசமாக துன்புறுத்தி கொன்று புதைத்தது தான், அந்த மாணவர்கள் செய்த கொடுஞ்செயல்.

பதற வைத்த இரு நிகழ்வுகள் !

இந்த வாரம் தமிழகத்தில் நடந்த இரு வேறு சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. ஒன்று மனிதாபிமானத்தின் முகமாகவும், குரலாகவும் இருந்து மருத்துவத்தில் மகத்தான சேவை புரிந்த 20 ரூபாய் டாக்டரின் மரணம். இன்னுமொரு செய்தியும் மருத்துவத்துறை சார்ந்தது தான்.

நாளைய மருத்துவர்களான, மருத்துவ மாணவர்கள் 4 பேர் ஒன்று கூடி, அறை பகுதியில் சுற்றித்திரிந்த குரங்கை தங்களது படுக்கை விரிப்பை பயன்படுத்தி பிடித்து, அதன் கை, கால்களை கட்டி, தங்கள் அறையில் இருந்த கம்பு, பெல்ட் ஆகியவற்றால் அடித்து துன்புறுத்தியுள்ளனர். உச்சமாக ஒரு கம்பி ஒன்றை எடுத்து குரங்கின் ஆசன வாயில் விட்டு கொடூர தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் துடிதுடித்து இறந்தது அந்த பெண் குரங்கு. அதை விடுதி வளாகத்திலேயே புதைத்துள்ளனர்.

இரு நிகழ்வுகளும் பதற வைத்தன. முதல் நிகழ்வு இப்படியான மருத்துவரை இழந்து விட்டோமே என்ற பதற்றத்தையும், அடுத்த சம்பவம் உயிரை காக்க வேண்டிய மருத்துவ மாணவர்கள் இப்படி கொடுமைப்படுத்தியா குரங்கை கொல்வார்கள் என பதற வைத்தது.

நம்மால் நம்ப முடியாத மருத்துவர் இவர்...

முதல் சம்பவம் மருத்துவம் மற்றும் மருத்துவர்களின் மாண்பை போற்றும் ஒரு உணர்ச்சிகரமான நிகழ்வு. இப்படித்தான் மருத்துவர்கள் இருக்க வேண்டும் என தமிழக மக்களால் விரும்பப்பட்ட நிகழ்வு அது. நம்மால் நம்ப முடியாத சேவை தான் 20 ரூபாய் டாக்டர் என மக்களால் பாசமாக அழைக்கப்பட்ட மருத்துவர் சுப்பிரமணியத்தின் வாழ்க்கை முறை. அரசு மருத்துவராக இருந்த சுப்பிரமணியன், முதலில் கிளினிக் ஒன்றை ஆரம்பித்தது ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதற்காகத்தான்.

முதலில் மருத்துவ ஆலோசனைக்கு இவர் பெற்ற கட்டணம் வெறும் 2 ரூபாய். பணமில்லா ஏழை மக்களிடம் ஆலோசனைக்கும், சிகிச்சைக்கும் இவர் பணமேதும் பெற்றுக்கொண்டதில்லை. 10க்கு 10 அடி அறையில் தான் இவரது கிளினிக் இயங்கியது. பணமுள்ளவர்களிடம் கூட அந்த சொற்ப தொகையை தாண்டி இவர் பெற்றதில்லை. இதற்கான பதில் "அதிகமா பணத்தை வாங்கி நான் என்னப்பண்ண போறேன். கிளினிக் வாடகைக்கு பணம் இருந்தா போதும்' என்பதாகத்தான் இருந்தது. முதியோர், ஏழை குழந்தைகளிடமும் இவர் கட்டணமாக எதையும் பெற்றதில்லை. கடைசியாக சிகிச்சைக்காக இவர் பெற்ற தொகை 20 ரூபாய். அதுவும் பணமுள்ளவர்களிடம் மட்டும் தான்.

மருத்துவத்தின் மகத்துவத்தை உலகறியச்செய்தவர் !

இவர் சில தினங்களுக்கு முன்னர் மாரடைப்பால் மரணித்தார். கோவை முழுக்க பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது இந்த நிகழ்வு. கோவையில் ஒரு அரசியல் கட்சித்தலைவரோ, பெரும் பணம் படைத்த ஒரு தொழிலதிபரோ மரணித்திருந்தால் கூட இத்தனை கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்குமா என்பது தெரியவில்லை.

மருத்துவர் சுப்பிரமணியனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மட்டும் ஆயிரக்கணக்கான மக்கள். இவர்களில் மிக பெரும்பாலானோர் அவரின் மருத்துவ சேவையால் பயனடைந்தவர்கள். இறுதி ஊர்வல ரதத்தை அலங்கரித்து, இறுதி ஊர்வலத்தை நடத்தியதே அவரால் பயன்பெற்ற மக்கள் தான். தங்கள் வீட்டில் இருந்த ஒருவர் இறந்ததைப்போலத்தான் பதபதைத்து போனார்கள். தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து மருத்துவர் சுப்பிரமணியனின் கால்களை தொட்டு வணங்கச் செய்தார்கள். இந்த காட்சிகள் எல்லாம் உணர்ச்சிகாரமானவை.

சொல்லப்போனால் மருத்துவத்தின் மகத்துவத்தை உலகறியச் செய்தவை. கோவை தான் தமிழகத்தின் மருத்துவத்துறையின் மையம். ஆனால் பல மாடியில் மருத்துவமனை கட்டி மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் யாருக்கும் இப்படி ஒரு நற்பெயர் பெற்றதாய் தெரியவில்லை. சொல்லப்போனால், மருத்துவர்கள் பலருக்கே மருத்துவத்தின் மாண்பை உணர்த்தி சென்றிருக்கிறார் மருத்துவர் சுப்பிரமணியன்.

குரங்கின் துன்பத்தில் இன்பம் தேடினார்களா?

இதற்கு நேர் எதிரான சம்பவம் தான் வேலூரில் நடந்திருக்கிறது. மருத்துவ மாணவர்கள் அவர்கள். நாளைய மருத்துவர்கள். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் மருத்துவர்களாக தங்கள் பணியை தொடங்கப்போகும் மாணவர்கள். பிறரின் பிணியை தன் பிணியாக தாங்கி, அதில் இருந்து அவர்களை விடுவிக்கும் ஆற்றல் படைத்தவர்கள். இன்னலோடு வருபவர்களிடம் இனிமையை சேர்க்கும் வித்தை அறிந்தவர்கள். மருத்துவத்தின் மாண்பு என்பதே மக்களுக்கு சேவை ஆற்றுவது தான் என்பதை அறிந்திருக்க வேண்டியவர்கள்.

ஆனால் ஒரு விலங்கின் துன்பத்தில் இன்பம் காண்பவர்களாக இவர்கள் இருப்பது தான் கொடுமை. ஐந்தறிவு கொண்ட ஒரு வனவிலங்கு அந்த பெண் குரங்கு. மாணவர்கள் இருக்கும் விடுதி பகுதிக்குள் நுழைய இப்படி ஒரு கொடூரத்தை நிகழ்த்தி இருக்கிறார்கள். இதை யாருமே செய்திருக்கக் கூடாது. மருத்துவ மாணவர்கள் கட்டாயம் இதை செய்திருக்கவே கூடாது. ஆனால் மருத்துவ மாணவர்களால் தான் இந்த கொடூரம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

மருத்துவம் என்பது வெறும் தொழில் அல்ல...

ஒரு உயிரின் மதிப்பு, உடல் ரீதியிலான துன்பம் தரும் வேதனை, இவை எல்லாம் அறிந்தவர்களான மருத்துவர்கள். ஒரு குரங்கை மிக மோசமாய் துன்புறுத்தி, கொன்று புதைத்திருப்பது நிச்சயம் அதிர்ச்சியளிக்கும் செய்தி தான். மருத்துவ மாணவர்கள் பலர் திரண்டிருக்கவே... இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இதை யாரும் தடுக்க முற்படவில்லை. உடலில் காயங்களோடு வந்தால் சிகிச்சை தந்து காப்பாற்ற வேண்டிய மருத்துவர்கள், உடலில் காயத்தை ஏற்படுத்தி கொடூரமாய் கொன்று புதைத்திருப்பது தான் வேதனை.

மருத்துவம் தான் உங்களை மிகப்பெரிய கொடையாளர்கள் ஆக்குகிறது. மருத்துவராகி பிற உயிர்களை காத்தல் என்பது தான் எத்தனை ஆண்டுகளானாலும்  நீங்கள் பெற முடியாத நற்பெயரை உங்களுக்கு பெற்றுத்தருகிறது.

மருத்துவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை விதைத்துச் சென்றிருக்கிறார் மருத்துவர் சுப்பிரமணியன். மருத்துவர்கள் எப்படியெல்லாம் இருக்க கூடாது என்பதை தங்கள் செயல் மூலம் செய்து காட்டி இருக்கிறார்கள் இந்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள். இரு நிகழ்வுகளும் உணர்த்துவது ஒன்றை தான்.

மருத்துவம் என்பது வெறும் தொழில் அல்ல. அது அளவில்லா மாண்பை, மரியாதையை, நற்பெயரை பெற்றுத்தரும் ஒரு சேவை.

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog