634 முறை கொலை முயற்சி... ஃபிடல் சந்தேகம் இல்லாமல் சந்திக்கும் மனிதர்!

கடந்த நவம்பர் 25-ம் தேதி இரவில். கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோ தொலைக்காட்சியில் தோன்றினார். ஏதோ முக்கியமான செய்திதான் என்று  மக்கள் எதிர்பார...

கடந்த நவம்பர் 25-ம் தேதி இரவில். கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோ தொலைக்காட்சியில் தோன்றினார். ஏதோ முக்கியமான செய்திதான் என்று  மக்கள் எதிர்பார்க்கின்றனர்.  ‘கியூபா
புரட்சியின் காமென்டர் இன் சீஃப் மறைந்து விட்டார். தொடர்ந்து வெற்றியை நோக்கி செல்லுங்கள் 'என்ற ஃபிடலின் புகழ்பெற்ற பொன்மொழியுடன் ரவுல் காஸ்ட்ரோ அறிவித்த போது, கியூபா மக்கள் மட்டுமல்ல, அர்ஜென்டினாவில் இருந்த மரடோனாவும் குலுங்கி அழத் தொடங்கி விட்டார். சர்ச்சைகளுக்குப் பெயர் போன ஒரு புகழ்பெற்ற கால்பந்து வீரர், ஒரு நாட்டின் தலைவர் ஒருவர் மறைவுக்கு கண்ணீர் வீடுகிறார் என்றால், அதன் பின்னணி பலமானது.

கடந்த 1959-ம் ஆம் ஆண்டு சேகுவராவுடன் சேர்ந்து கியூபா புரட்சியில் ஈடுபட்டு, படிஸ்டாவை ஆட்சியில் இருந்து அகற்றிய ஃபிடல் கியூபா மக்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல மரடோனாவின் வாழ்விலும் மலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.. மரடோனா இன்று உயிருடன் இருக்கிறார் என்றால் அதற்கு  ஃபிடலும் ஒரு காரணம்.

கடந்த 1986-ம் ஆண்டு அர்ஜென்டினா 2-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் அர்ஜென்டினா அணிக்கு மரடோனாதான்கேப்டன். இந்தத் தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில்,  7 வீரர்களை கடந்து சென்று மரடோனாவால் அடிக்கப்பட்ட மாயகோல் உலக மக்களை கட்டிப் போட்டிருந்தது, ஃபிடலையும் அந்த கோல் மயக்கியிருந்தது. உலகக் கோப்பையை வென்ற கையோடு மரடோனாவைத் தங்கள் நட்டுக்கு வருமாறு ஃபிடல் அழைப்பு விடுத்தார். ஆனாலும் தொடர்ச்சியான ஆட்டங்களால் மரடோனாவால் உடனடியாக கியூபா செல்ல முடியவில்லை.  கடந்த 1987-ம் ஆண்டு மரடோனா முதன்முறையாக கியூபாவுக்கு சென்றார். கியூபா தலைவர் கால்பந்து கிங்கை கட்டியணைத்து வரவேற்று மகிழ்ந்தார். மரடோனா, பாப்புலரான அர்ஜென்டினா 10-ம் எண் ஜெர்சியில் தனது கையொப்பமிட்டு ஃபிடலுக்கு பரிசாக வழங்கினார்.

அந்தக் காலக்கட்டத்தில் புகழ்பெற்று விளங்கிய ஒரு கால்பந்து வீரனை தனது விருந்தினராக வைத்து பராமரிக்கும் பாக்கியம் தனக்கு கிடைத்ததாக கூறி ஃபிடல் மகிழ்ந்தார்.  அப்போது தொடங்கிய நட்பு ஃபிடல் மரணம் அடையும் வரைத் தொடர்ந்தது. மரடோனாவுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், கியூபாவுக்கு சென்று ஃபிடலை சந்திப்பது வழக்கம். ஃபிடலுக்கு பிடித்த கூடைப்பந்து , கால்பந்து, உலக அரசியல் குறித்து இருவரும் விவாதிப்பார்கள்.

ஃபிடலை பொறுத்த வரை, எந்த நேரமும் விழிப்பாகத்தான் இருப்பார். கவனம் சிதறினால் மரணம் என்பது ஃபிடலுக்குத் தெரியும். கியூபாவை, தனது மாகாணங்களில் ஒன்றாக இணைத்து விட வேண்டுமென்பது அமெரிக்காவின் நோக்கம். அதற்கு பெருந்தடையாக இருந்தது ஃபிடல். எனவே சிஐஏ, ஃபிடலை கொல்வதற்கு 50 ஆண்டுகளாக முயன்று கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 634 முறை கொலை முயற்சியில் ஈடுபட்டும்  தோல்வியைத் தழுவியது.

ஃபிடலின் காதலி மரிடா உள்ளிட்டவர்களை வைத்து கூட அவரை கொலை செய்ய முயற்சிக்கப்பட்டது. அதனால், ஃபிடல் எந்த நேரமும் விழிப்புடன்தான் இருப்பார். எந்த அமெரிக்க அதிபரிடம் கேட்டாலும் ''ஃபிடலை நாங்கள் கொல்லவில்லை என்றால், என்ன கடவுள் அவரை ஒருநாள் எடுத்துக்  கொள்வார்' என்பார்கள். உலகிலேயே அதிக முறை கொலை முயற்சிக்குள்ளான நபர் ஃபிடலாகத்தான் இருக்கும். அப்படி உயிருக்கு விலை நிர்ணயிக்கப்பட்ட ஃபிடல் எந்த சந்தேகமும் இல்லாமல் ஒரு வெளிநாட்டு விளையாட்டு வீரர் ஒருவரை சந்திக்கிறார் என்றால் அது மரடோனோவாகத்தான் இருக்கும். இருவருக்கும் அந்தளவுக்கு நெருக்கம்.

இந்த நெருக்கம் அதிகரிக்க இன்னொரு காரணமும் இருந்தது. கடந்த 1983-ம் ஆண்டு மரடோனா இத்தாலியின் நேபோலி அணிக்காக விளையாடி வந்தார். அப்போதிருந்தே அவருக்கு 'கோகைன்' என்ற போதை மருந்து பயன்படுத்தும் பழக்கம் இருந்தது. இதனால், கடந்த 2004-ம் ஆண்டு வாக்கில் மரடோனாவின் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அவரது உடல் எடை 127 கிலோவாக இருந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில், பியூனஸ் அயர்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவரை பிழைக்க வைக்க கடுமையாகப் போராடினர். உலகம் முழுக்கவுள்ள அவரது ரசிகர்கள் மரடோனா உயிர்பிழைக்க பிரார்த்தனை நடத்தினர். தமிழகத்தில் உள்ள பல கிறிஸ்தவ ஆலயங்களில் கூட மரடோனா உயிர் பிழைக்க சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டது. இறுதியில் மரடோனா உயிர் பிழைத்துக் கொண்டார். ஆனால், உயிர் பிழைத்தாலும் போதை மருந்து பழக்கத்தில் இருந்து முழுமையாக விடுவித்துக் கொண்டால்தான் உயிர் வாழ முடியும் என மருத்துவர்கள் உறுதிபடக் கூறினர்.

இதையடுத்து, கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மரடோனாவை உடனடியாக தனது நாட்டுக்கு அழைத்துக் கொண்டார். ஹவானாவில் உள்ள லாபெராடா கிளீனிக் போதைக்கு அடிமையானவர்களை மீட்பதில் புகழ்பெற்றது. அந்த மருத்துவமனையில் மரடோனாவை ஃபிடல் அனுமதித்து சிகிச்சை அளித்தார். பல மாதங்கள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மரடோனா, போதை பழக்கத்தில் இருந்து விடுபட்டார். அவரது உடல் எடை சாதாரண நிலைக்கு வந்தது. பின்னர் மீண்டும் கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டு, கடந்த 2010-ம் ஆண்டு அர்ஜென்டினா கால்பந்து அணிக்கு பயிற்சியாளராகவும் பொறுப்பேற்றார். அந்த வகையில் மரடோனாவின் உயிரை மீட்டு, தந்தவர் ஃபிடல். உடல் நலக்குறைவு காரணமாக பதவியில் இருந்து விலகிய ஃபிடலை அடிக்கடி சென்று  மரடோனா சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

மரடோனாவும் ஃபிடலை தனது சிறிய தந்தை எனக் குறிப்பிடுவது வழக்கம். மரடோனாவின் உடலில் இரு உருவங்கள்தான் பச்சைக் குத்தப்பட்டிருக்கும். அதில் ஒன்று சே... மற்றொன்று ஃபிடலுடையது!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About