‘ஆண்கொத்தி மோகினி’ அசந்து போன வைரமுத்து!

வள்ளுவர் குடும்பம் என்னும் சமூக ஊடகக் குழுமம் சார்பில் சென்னை நாரத கான சபாவில் நாட்டுக்குறள் இசைவிழா நடைபெற்றது. ஒடிசா மாநிலத்தில் கூடுதல் ...

வள்ளுவர் குடும்பம் என்னும் சமூக ஊடகக் குழுமம் சார்பில் சென்னை நாரத கான சபாவில் நாட்டுக்குறள் இசைவிழா நடைபெற்றது. ஒடிசா மாநிலத்தில் கூடுதல் தலைமைச்
செயலாளராக இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் தமிழ்க்கவிஞருமான ஆர்.பாலகிருஷ்ணன் திருக்குறள் இன்பத்துப் பாலை அடிப்படையாகக் கொண்டு எழுதிய நாட்டுப்புறப் பாடல்களுக்கு தாஜ்நூர் இசையமைத்த ஒலிப்பேழை வெளியீட்டு நிகழ்ச்சி மற்றும் இசைஅரங்கேற்றம் நடைபெற்றது. நாட்டுக்குறள் ஒலிப்பேழையை கவிஞர் வைரமுத்து வெளியிட திருச்சியை சேர்ந்த தங்கமணி தவமணி என்னும் அடிப்படைத் தொழிலாளி பெற்றோர்களின் குழந்தைகளான சூரியா, உமா, காவ்யா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்த விழாவில் நாட்டுக்குறள் ஒவியப் பாடல் நூலும் வெளியிடப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி கடற்கரையில் வள்ளுவருக்கு மணற்சிற்பம் அமைத்து மரியாதை செலுத்திய உலகப் புகழ்பெற்ற இந்திய மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் நடிகர் சிவக்குமாரால் கௌரவிக்கப்பட்டார். சுதர்சன் பட்நாயக் உருவாக்கிய திருக்குறள் பற்றிய மணல் ஓவிய அசைவூட்டுப்படம் திரையிடப்பட்டது.

கவிஞர் வைரமுத்து, இயக்குநர் பாரதிராஜா, சிவக்குமார், இந்த விழாவில் நாட்டுப்புறப் பாடல்களுக்கு ஓவியங்கள் தீட்டிய டிராஸ்கி மருது, பரதநாட்டிய கலைஞர் பத்மாசுப்பிரமணியம், நீதியரசர் மகாதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து வள்ளுவர் விழாவிற்கு இவ்வளவு பெரிய கூட்டம் திரண்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டார்.தமிழர்கள் ஒவ்வொருவரும் திருக்குறளை மனப்பாடம் செய்து நடமாடும் திருக்குறள் பிரதிகளாகத் திகழவேண்டும் என வைரமுத்து வேண்டுகோள் விடுத்தார். பாலகிருஷ்ணன் இ. ஆ. ப. என்பது இந்திய ஆட்சிப்பணி மட்டுமல்ல அதை இந்திய ஆராய்ச்சிப் பணி என்றும் குறிப்பிடத்தக்க வகையில் பாலகிருஷ்ணன் சிறந்த சிந்துவெளி ஆராய்ச்சியாளராகத் திகழ்வதாகக் கூறினார்.

திரண்ட கூட்டமெல்லாம் ஐ. ஏ. எஸ். அதிகாரத்திற்காகத் திரண்ட கூட்டமல்ல, வள்ளுவரின் 133 அதிகாரத்துக்குத் திரண்ட கூட்டம் என்று குறிப்பிட்ட வைரமுத்து பாலகிருஷ்ணன் கவிதையில் இடம்பெற்ற ‘ஆண்கொத்தி மோகினி’ என்ற சொல்லாட்சியையும் பாராட்டினார். விழாவில் இயக்குநர் பாரதிராஜா, நடிகர் சிவக்குமார், நீதியரசர் மகாதேவன் ஆகியோரும் வாழ்த்திப் பேசினர்.

விழாவை கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் சங்கர சரவணன் ஆகியோர் தொகுத்து வழங்க வள்ளுவர் குடும்பம் என்னும் சமூக ஊடகக்குழுவின் நிறுவனர் சி. ராஜேந்திரன் நன்றி தெரிவித்தார்.

வாசல் தோறும் வள்ளுவம் என்ற இந்த இசை அரங்கேற்றத்தில் சின்னப் பொண்ணு, வேல்முருகன், நின்சி வின்சென்ட், பிரபு, மீனாட்சி இளையராஜா, அந்தோணிதாஸ், கவிதா கோபி ஆகியோர் பாடினர். 5th Element குழுவின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. ரோஜா முத்தையா நூலகத்தின் சார்பில் 1812ல் பதிப்பிக்கப்பட்ட திருக்குறள் முதல் அச்சுப்பிரதியின் மீள் பதிப்பும் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் நாட்டுக்குறள் குறித்து முகப்புரை வழங்கிய பாலகிருஷ்ணன் ஆண்டுதோறும் நவம்பரில் நாட்டுக்குறள் விழா இனி கொண்டாடப்படும் என்றார். வள்ளுவர் ஓர் உலக மனிதர் என்றும் காமத்துப்பாலில் தலைசிறந்த கவிஞராகிறார் என்றும் கூறினார்.

விழாவில் பேசிய எழுத்தாளர் தமிழ்ச் செல்வன் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூலம் கலைஞர்கள் மற்றும் தெரு பாடகர்கள் மூலம் தமிழகத்தில் புழுதி வீதிகளுக்கு நாட்டுக்குறளை மக்களிடம் கொண்டு சேர்ப்போம் என்று உறுதி கூறினார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About