இயக்குனர் கோபியின் வெற்றிக்குப் பின் ஒளிந்திருக்கும் வலி..! -பத்திரிகையாளர் பா.ஏகலைவன்

 அது பதட்டமும் பரபரப்புமாக ஓடிக்கொண்டிருந்த நேரம். தந்தி தொலைக் காட்சியின் ‘மக்கள் முன்னால்‘ நிகழ்ச்சிக்கு கருத்தாக்கக் குழு ஆசிரியராக இருந...

 அது பதட்டமும் பரபரப்புமாக ஓடிக்கொண்டிருந்த நேரம்.

தந்தி தொலைக் காட்சியின் ‘மக்கள் முன்னால்‘ நிகழ்ச்சிக்கு கருத்தாக்கக் குழு ஆசிரியராக இருந்த நேரம். சீமான் நெறியாளுமை செய்தார். வாரம் ஒரு தலைப்பிலான நிகழ்ச்சிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை அழைத்தாக வேண்டும். பல நண்பர்களிடம் தொடர்பில் இருந்தேன். அப்படித்தான் திருவள்ளூர் மாவட்ட தினமலர் நிருபரான தம்பி தேவேந்திரன் ’மீஞ்சூர் கோபி’யை தரைமணி திரைப்பட படபிடிப்பு தளத்திற்கு அழைத்த வந்தார். ஏற்கனவே அறிந்திருந்த சகோதரர்தான். ஆனால் நிகழ்ச்சிகளில் பேசி கண்டதில்லை.

இன்றைய ஊடகங்களில் ‘வரும்’ சமூக ஆர்வலர்களுக்கான ‘கோட்வேட்’ ஏதுமில்லை கோபியிடம். அப்பட்டமான கிராமத்து முகம்.பேச்சும் அப்படித்தான். கண்கள் மட்டும் எரிந்து கொண்டிருந்தது அனலாக. இந்த நிகழ்ச்சிக்கு சரியாக இருக்குமா என்ற தயக்கம். ‘சாதாரணமா நினைக்காதீங்க. அடிச்சி பட்டைய கிளப்புவாரு அண்ணன்’ என்றார் தம்பி தேவா.

அதற்குள் தளத்திற்கு சீமான் அவர்கள் வந்துவிட்டார். கோபியைக் கண்டதும், ‘அடடே நீயாடா தம்பி, வா..வா என தழுவிக்கொண்டார். அவர்களுக்குள் அறிமுகம், பரவாயில்லை என்ற நிம்மதி. நிகழ்ச்சி தொடங்கி பரபரப்பாக நகர்ந்து கொண்டிருந்தது விவாதம்..

அப்போதுதான்.“ப்ளாஸ்டிக் கவர் வேண்டும் என்று நாங்களா வரிசையில நின்று மனுக்கொடுத்தோம். சாராயக்கடை வேண்டும்னு நாங்களா மனுக்கொடுத்தோம். யாரைக் கேட்டு இதையெல்லாம் கொண்டு வந்தீங்க.

ரோடு வேணும். தண்ணி வேணும். பள்ளிகூடம் வேணும்னு எத்தனையோ தேவைக்கு சுதந்திரம் வாங்கினதிலிருந்தே மனுக் கொடுத்து போராடி செத்துகிட்டிருக்கோமே. அதையெல்லாம் நிறைவேற்றாத அரசு, யாருமே கேட்காத ப்ளாஸ்டிக்கையும் சாராயத்தையும் என் தெருவில, என் வீட்டு வாசல்ல கொண்டு வந்து நிறுத்துகிறதே ஏன்? என் அப்பன் தாத்தன் எல்லாம் மஞ்ச பையிலதான எல்லாமும் வாங்கிகிட்டு இருந்தான். இப்ப எங்க கையில ப்ளாஸ்டிக் பையை யாரு தினிச்சது. நாங்க யாராவது வந்து, ‘ஐயா, சாமி, அந்த ப்ளாஸ்டிக் பை இல்லாட்டி சோறு தண்ணியில்லாம செத்துபோயிடுவோம்னு வந்து கேட்டோமா? அது எல்லாமும் முதலாளிகளுக்காக, பெரு முதலாளிகளுக்காக நீங்க கொண்டு வந்தீங்க. மக்களுக்காக என்ன செய்தீங்க…” என்று கோபி சீறிய போது அரங்கம் கை தட்டலில் அதிர்ந்தது. அவருக்குள் இருக்கும் நெருப்புக் கோபம் அன்றுதான் எனக்கு சுட்டது.

அதிலிருந்து தொடர்ச்சியாக வாய்ப்புள்ள நிகழ்ச்சிகளில் அந்த நெருப்பு மனிதனை பயன்படுத்திக் கொண்டேன்.

அப்போது தான் ஒரு நாள் சந்திக்கனும்ணே என்றார்.

வழக்கம் போல் வீட்டிற்கு வந்தார். அப்போது ‘கத்தி’ திரைப்படம் வெளியான நேரம். தன் கதை எப்படி திருடப்பட்டது, யார் யாரிடமெல்லாம் ஓடினேன் என்பதை சொல்லச் சொல்ல, மொட்டை மாடி காற்றிலும் எனக்கு புழுக்கம் அதிகரித்து.

ஒரு எளியவரின் கதையை, அறிவை, செல்வாக்கில் இருப்பவன் திருடும் வலியை நான் நிறையவே அனுபவித்திருக்கின்றேன். கலங்காதீர்கள். தோல்விகள் தான் நம்மை அடுத்த களங்களை நோக்கி நகர்த்தும். முன்பைக் காட்டிலும் நீங்கள் வேகமாக சுழன்றியங்குவீர்கள் என்றேன். அவரது சிரிப்பில் ஆயிரம் துரோகங்களும், அவமானங்களும் உள்வாங்கிய அலட்சியம் தெரிந்தது.

இரவு பத்து முப்பதுக்கு அவர் புறப்பட்டு போக, அதன் பிறகும் உறங்க பிடிக்காமல் மாடியிலேயே உட்கார்ந்திருந்தேன். அதிகாரம், செல்வாக்கு பெற்றவரிகள் திருட்டு எளியவர்களை எப்படியெல்லாம் அடித்து வீழ்த்துகிறது என்ற தவிப்பு, கோபம்.

அப்போதுதான், ‘நான்கு இட்லி+ ஒரு டீ= கத்தி சுட்ட கதை” என்ற பதிவை எழுதினேன். மனதை சுட்ட உண்மைகள் தான் அதில் இருந்தது. அடுத்த நாள் காலையிலேய பத்திரிகை நண்பர்களான ஆந்தை குமார், அந்தணன் உள்ளிட்ட பலரிடமும் அதைச் சொல்ல, அடுத்த சில மணி நேரங்களில் ஆன்லைன் மீடியாக்களில் பரபரப்பாகியது.
யாழ்பாணத்திலிருந்த என் பத்திரிகை நண்பர் Jegan Janakeswaran தொடர்பு கொண்டார். அந்த பதிவு உதயம் பத்திரிகையில் அப்படியே வந்தது. பேசுபொருளாக மாற இப்படி பல நண்பர்கள் பின் நின்றார்கள்.
அதோடு நின்று விடாமல், ஏதாவது செய்தாக வேண்டுமே என்று பலரிடமும் ஓடி நின்றார். வேண்டினார். புலம்பினார். எல்லாமும் பஞ்சாயத்தோடவே நின்றது. ஒவ்வொரு முறையும் சுவற்றில் அடித்த பந்தாகவே சோர்வுடன் திரும்பி வருவார். சோர்ந்து போகாதீர்கள் என்பேன். அப்போது ப்ரான்ஸில் இருந்த செந்தில்நாதன் சேகுவேரா உள்ளிட்ட பல நண்பர்களின் தொடர்பை ஏற்படுத்தினேன்.

கடைசியாக நீதி மன்றத்தில் வழக்கு போடுவதென்று முடிவானது. முதல் முயற்சியில் பிரபல வழக்கறிஞர்களும் பாதியில் நின்றுவிட இரண்டாவது கட்ட முயற்சி சரியாகவே பலனளித்தது. அந்த முயற்சிக்கு இரண்டு பேரின் சாட்சியம் வேண்டும். திருவள்ளூர் பத்திரிகையாளரான தம்பி தேவேந்திரனோடு, நீங்களும் சாட்சியமளிக்க வரவேண்டும் என்றார் கோபி.

ஒப்புக்கொண்டு சென்றேன்.

எழும்பூர் நீதி மன்றத்தில் காலையிலிருந்து காத்துக் கிடப்போம். கையில் காசு இருக்காது. இருப்பதை வைத்து டீ குடிப்பதோடு சரி.

ஒரு நாள், தம்பி தேவேந்திரன், வீட்லிருந்தே கறிசோறு எடுத்து வந்திருந்தார். கூடவே வறுத்த ஈரலும்..உருட்டி உருட்டி ஆளுக்கு நான்கு வாய் சாப்பிட்டோம். மாலையில் நீதிபதி அழைத்தார். அவர்முன் சாட்சியமளிக்க எல்லாமும் தட்டச்சு செய்யப்பட்டு, அதை சரி பார்த்து கையொப்பமிட்டு கிளம்புவதற்கே மாலையாகிவிட்டது.

இப்படி பல போராட்டங்கள். அவமானங்கள். சோர்ந்து போனாலும் துவண்டு விடவில்லை கோபி. தோல்விகளையே படிகற்களாக மாற்றிக் கொண்டிருந்தார் என்பதை அப்போது உணரவில்லை. அவர் பட்ட அவமானங்களை வேறு யாராகிலும் பட்டிருப்பார்களா? தெரியவில்லை. அனைத்தையும் உரமாக்கிக் கொண்டது அவரின் நெஞ்சுரம். அதுவும் அவரால் மேலே சென்றவர்கள் அவரைப் பார்த்து ஏலனத்தோடு சிரிக்கும் இடம் இருக்கிறதே…அது எதிரிக்குகூட வரக்கூடாது.

ஒவ்வொன்றிலிருந்தும் மீண்டு எழுந்தார். தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் என்பதற்கு நிகழ்கால உதாரணமானார்.

திடீரென்று ஒரு நாள் வந்தார். அறம் படம் குறித்த விஷயத்தை சொன்னார். மனதிற்கு மகிழ்ச்சியளித்தது. தடைகளும் தடங்கலும் வரலாம். விடாமல் நகர்த்தி முடிக்க வேண்டும் என பேசிக்கொண்டோம். பிறகு படப்பிடிப்பு தொடங்கியிருந்த போது ஒரு நாள் வந்தார். பத்திரிகையாளர்கள் பங்கெடுக்கும் காட்சியை பற்றி கூறி, அதற்கான ஒத்துழைப்பு வேண்டும் என்றார். அந்த நேரத்தில் எனக்கு ஒரு புத்தக வெளியீட்டு வேலை நெருக்கத்தில் இருக்க முடியாமல் போனது. ஆனாலும், ‘உங்களுக்கு தெரியாததையா நான் சொல்லிவிட முடியும் கோபி என்று கூறி அனுப்பினேன்.

இப்போது படத்தை பார்த்து முடித்து பல மணி நேரமாகிறது.

எனக்குள்ளான அந்த அதிர்வு இன்னும் நிற்கவில்லை. எனது 25 வருட சென்னை வாழ்க்கையில் திரையரங்கு சென்று பார்த்தது பத்து பதினைந்து படங்களுக்குள்ளாக தான் இருக்கும். எனக்கு அதில் நாட்டம் இருப்பதில்லை. நண்பர்களின் படம் என்றால் சிறப்புக் காட்சியின் போதே பார்த்துவிடுவதுண்டு. ஆனால் கோபி நயினாரின் அறம் படத்தை மக்களோடு மக்களாக அமர்ந்து பார்க்க வேண்டும் என்றே பார்த்தேன். என்னைப் போலவே என் அருகில் இருந்தவர்களும் நுனி சீட்டில் அமர்ந்து திகிலடிக்க பார்த்ததை கண்டேன்.

அந்த ஊடக காட்சிக்கள்தான் சற்று தொய்வு. ஆனாலும் குறையில்லை. சற்று மூச்சுவாங்கிக் கொண்டு நிமிர்ந்து பார்க்க அந்த காட்சிகள் தேவைப்படுகிறதுதான்.

தேர்வு செய்யப்பட்ட குளிர் காற்று வீசும் மலைப் பிரதேசங்கள் இல்லை. விருந்தினர் மாளிகைகள் இல்லை. கலை நயமிக்க வீடுகள், சாலைகள் என்றில்லை.

ஒரு கால் நூற்றாண்டில் பொட்டல் காடுகளாகி, சீமைக் கருவேல மரங்களாகி நின்ற இதோ இருக்கும் பூண்டி கடரோரப் பகுதி கிராமங்கள்தான். நெய்தல் நிலத்தை ஒட்டிய வேளாண் பகுதியாக இருந்த இடம்தான். அரசின் பல்வேறு திட்டங்களால் நிலத்தடி நீர் அற்று வறண்ட பூமியாக மாறிப்போன சாதாரண பொட்டல் பகுதிதான் படப்பிடிப்பு தளம்.

அதில் வரும் மனிதர்களும், அவர்கள் வாழும் குடியிருப்புகளும் கூட யாதார்த்தமானவைதான். முகப்பூச்சுகள் இல்லை, செட்டப்புகளும் இல்லை. அவர்கள் பேசிய வசனங்கள், கோபங்கள், கொந்தளிப்புகள்….என ஒவ்வொன்றும் ‘சினிமாவுக்கென்று’ படைக்கப்படவில்லை.

ஒவ்வொன்றுமே அந்த மக்களிடம் இருந்த நிஜம்.

கால் நூற்றாண்டாக அவர்களுக்குள் தேங்கியிருந்த கொந்தளிப்பு. இயக்குனர் கோபி நயினார் அதை அப்படியே திரைப்படத்தில் கடத்தியிருக்கிறார். சினிமாத்தனம் இல்லாத ‘மக்கள் கலைஞர்கள்’தான் இப்படி சாதிக்க முடியும் என்பதை மெய்பித்திருக்கிறார்.

மற்றொரு அதிசயமும் நிகழ்ந்திருக்கிறது. கதாநாயகி நயன்தாரா என்றவுடனே ஒரு பாடலுக்கே பத்து பதினைந்து உடையலங்காரம், உடல் அழகை வெளிப்படுத்தும் கோணங்கள், முத்தக் காட்சிகள் என்றிருக்கும் இன்றைய சினிமாக்களில், வெறும் இரண்டே இரண்டு புடவை ஜாக்கெட்டோடு ஒரு கதாநாயகியை, அதுவும் உடல் அழகை வெளிப்படுத்தாத கோணங்களில் காட்டி வெற்றியடைய வைப்பது கனவிலும் நடக்காத ஒன்று. ஆனால் ‘அறம்’ படத்தில் உண்மையாகி நிற்கிறது. அதுவும் பெறும் வெற்றியோடு. ஒரு கதாநாயகியை யார் எப்படி வெளிக் காட்டுகிறார்கள் என்பததான் இயக்குனரின் திறமை.

கோபி அழகை வெளிப்படுத்தி வெற்றி காண்பதில் நம்பிக்கை வைத்திருக்கவில்லை. மக்களின் அவலங்களை வெளிப்படுத்துவதில் நம்பிக்கை வைத்திருக்கிறார். அதை மெய்பித்தும் இருக்கிறார்.

சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்து, அது மீட்கப்படும் பரபரப்பான அந்த திகிலடைந்த காட்சிகளுக்குள்ளாகவே தண்ணீர் அரசியல் குறித்தும், சூழலியல் குறித்தும், முதலாளி வர்கம் குறித்தும் என எல்லாமும் பேச முடியும் என்றால் அது யதார்த்த கலைஞன் கோபியால் மட்டுமே சாத்தியம் என்பதை சாதித்திருக்கிறார்.

ஆழ்துளை கிணறுக்குள் குழந்தை விழுந்துவிட்ட அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து சருக்கி விழுந்து எழுந்தோடும் அந்த காட்சியாகட்டும், தீயணைப்பு வாகனத்தை ஒட்டி, இத்தூண்டு இடத்தில் பைக்கை ஓட்டி வந்து சறுக்கி விழுந்தபடியே எழுந்து ஓடும் காட்சிகளாகட்டும், பிரபல ஹாலிவுட் திரைப்பட சண்டைக் காட்சிகள் தோற்றுப்போகும். அவ்வளவு உயிர்ப்பு. உறைந்து உடைந்து நின்ற தருணங்கள் அது.

ஒளிப்பதிவு ஓம் பிரகாஷ்! ஜிப்ரானின் இசை, பாடலாசிரியர் உமா, இவர்களை எல்லாம் கட்டிக் கொண்டாட வேண்டும்.

சமீபத்தில் ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரபலங்கள் சூழ, மேல விமானத்தில் பறந்து பல ஆயிரம் அடிகள் உயரத்தில் இருந்து நவீன பாராசூட் பலூனில் குதித்து கொண்டாடினார்களே…

இந்த அறம் படத்தை கொண்டாட வேண்டும் என்றால் அதற்கும் மேல் நிலவைத்தான் தேட வேண்டும். இந்த ஆண்டின் மிகச் சிறந்த திரைப்படம்.

மேலும் பல...

1 comments

  1. Thank you Sir for Sharing the pain of Real Director. One more good example- "ARAM VELLUM"

    ReplyDelete

Search This Blog

Blog Archive

About