இந்தியாவின் இந்தியானா ஜோன்ஸ்... தமிழகத்தின் டார்ஸானா இவன்! - `இந்திரஜித்' விமர்சனம்

விலைமதிக்க முடியாத பொக்கிஷத்தைத் தேடி, கரடி, கழுதைப்புலி, காண்டாமிருகமெல்லாம் வாழும் அடர்ந்த காட்டுக்குள் ஐந்து பேர் சாகசப் பயணம் செல்லும் ...

விலைமதிக்க முடியாத பொக்கிஷத்தைத் தேடி, கரடி, கழுதைப்புலி, காண்டாமிருகமெல்லாம் வாழும் அடர்ந்த காட்டுக்குள் ஐந்து பேர் சாகசப் பயணம் செல்லும் அதே இந்தியானா ஜோன்ஸின் இந்தியன் வெர்ஷன்தான் இந்திரஜித். இந்தியானா ஜோன்ஸ் - இந்திரஜித். டைட்டிலுக்கான காரணம் புரியுதா மக்களே...

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சூரியனிலிருந்து ஒரு துகள் பிரிந்து, பூமியை வந்து சேர்கிறது. பொதுவாக விண்கல் விழும் இடங்களில் புல், பூண்டுகூட முளைக்காது என்றுதான் ஹாலிவுட்காரர்கள் பயமுறுத்துவார்கள். ஆனால், இந்தப் படத்தில் விண்கலம் விழும் இடத்தில் புல், பூண்டு மட்டுமல்ல பூவெல்லாம் மலர்கிறது. அந்த அளவுக்கு பாஸிட்டிவ் பவர் கொண்ட அற்புதமான, ஆச்சரியமான, அதிசயமான கல். அதன் மருத்துவ சக்தியைச் சரியாகப் பயன்படுத்தினால், இப்போதுள்ள இந்தியாவை அடுத்துவரும் 400 ஆண்டுகளுக்கு நோய்-ஃப்ரீ நாடாக மாற்றலாம். எனவே, அதைத் தேடிக் கண்டுபிடித்து நாட்டின் சேவைக்காகப் பயன்படுத்த ஒரு ஹீரோ குழுவும் தனது தேவைக்காக பயன்படுத்த வில்லன் குழுவும் மூட்டை முடிச்சுகளோடு காட்டுக்குள் கிளம்புகிறார்கள். இறுதியாக, யார் கையில் அந்த அதிசயக் கல் கிடைத்தது என்பதுதான் `இந்திரஜித்' படத்தின் மீதிக்கதை.

நாயகன் இந்திரஜித்தாக கௌதம் கார்த்திக். இந்தியானா ஜோன்ஸ், பேர் கில்ஸ், டார்ஸான் அல்லது `ஜங்கிள் புக்' மோக்லியையாவது ரெஃபரென்ஸாக எடுத்துக்கொண்டு நடிக்க வேண்டியவர், `சந்தோஷ் சுப்ரமணியம்' ஜெனிலியாவை ரெஃபரென்ஸாக எடுத்துக்கொண்டு நடித்திருக்கிறார். குறும்புத்தனம் என அவர் காட்டும் சில `க்யூட்' எக்ஸ்பிரஷன்களைப் பார்க்கும்போது கிறுகிறுவென வருகிறது. கௌதம் கார்த்திக்கை சரியா யூஸ் பண்ணிக்கலை இயக்குநரே! படத்தில் `ஹேப்பி' எனும் கதாபாத்திரத்தில் சிஜியின் உதவியோடு ஒரு நாய்க்குட்டி நடித்திருக்கிறது. ஒட்டுமொத்த காட்டையுமே கொத்தமல்லி, கருவேப்பிலை போல அசால்ட் செய்யும் `ஹேப்பி' நாய்க்குட்டி, உண்மையிலேயே க்யூட். இவர்களைத் தவிர வேறு எந்தக் கதாபாத்திரமும் மனதில் நிற்கவில்லை. யாரெல்லாம் படத்தில் கோட் அணிந்திருக்கிறார்களோ அவர்கள் எல்லோருமே வில்லன்கள்தான். ஒரே ஒரு கேரக்டர் மட்டும் விதிவிலக்காக கோட் அணிந்து சுற்றிக் கொண்டிருக்க, `அது எப்படி இவரை மட்டும் விட்டு வைப்போம். இவரும் வில்லன்தான்' என அக்குல் பொங்கல் அடித்திருக்கிறார்கள். ஹீரோயினாக வரும் அஷ்ரிதா அழகு. நடிப்பதற்கான எந்த வாய்ப்புமே அவருக்கு இல்லை.

மேலே சொல்லியிருக்கும் கதையை முதல் 30 நிமிடத்திலேயே சொல்லிவிடுகிறார்கள். மீதிக்கதை என்று சொன்னது எல்லாமே நமக்கு சோகக்கதைதான். புதையலைத் தேடி காட்டுக்குள் பயணம்,  காட்டு விலங்குகளின் அட்டாக், ஹீரோவின் சாகசம் என விறுவிறு திரைக்கதை அமைக்க படத்தில் அத்தனை வாய்ப்புகள் இருந்தும் தவறவிட்டிருக்கிறார் இயக்குநர். அந்த அடர்ந்த அருணாசலப் பிரதேசக் காட்டை வண்டலூர் ஜூவைப்போல ட்ரீட் செய்திருக்கிறார்கள். காட்டெருமையே அடித்ததுபோல் படு பவர்ஃபுல்லாக அமைத்திருக்க வேண்டிய திரைக்கதை, கட்டெறும்பு கடித்தது போன்றுகூட அமைக்காமல் மிஸ் செய்திருக்கிறார்கள். `முத்துராமலிங்கம்' படத்தில் சொன்ன `மசாலாவை அரைச்சு வை' வசனத்தை கௌதம் கார்த்திக் இந்தப் படத்தின் இயக்குநரிடம் சொல்லியிருக்கலாம். தரமான விஷுவலை தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராசாமதி. படம் முழுக்க வரும் அனிமேஷன் காட்சிகள் `நூற்றுக்கு நூறு சதவிகிதம் தரம், பலம், நிறம்' இல்லையென்றாலும், 70 சதவிகிதமாவது `நச்' என இருக்கிறது. கேபியின் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசையில் ஓர் இடம் `சம்போ சிவ சம்போ' பாடலை எல்லாம் ஞாபகப்படுத்துகிறது.

ஏழு கழுதை வயதான நமக்கு `இந்திரஜித்தை' கண்டாலே செம காண்டாகும் அல்லது காமெடியாக இருக்கும். ஆனால், சுட்டி விகடன் படிச்சுட்டு, சுட்டி டிவி பார்த்துகிட்டு திரியும் வாண்டுகளை நிச்சயம் `இந்திரஜித்' ஈர்ப்பான். வயசானாலும் நான் குழந்தைதான் என்பவர்களையும் நிச்சயம் ஈர்ப்பான்...

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About