அனுபவம்
நிகழ்வுகள்
’செக்க சிவந்த வானம்’ படத்தை பார்க்க தூண்டும் 5 காரணங்கள்
September 26, 2018
செக்க சிவந்த வானம் படத்தை ஏன் பார்க்க வேண்டும்..??
‘செக்க சிவந்த வானம்’- இந்த படத்தை ரசிகர்கள் பார்க்க மணிரத்னம் என்ற ஒரு சொல் போதும் தான். ஆனால் அதையும் மீறி இருக்கும் முக்கிய காரணங்களை விரிவாக பார்க்கலாம்.
பிரமாண்ட கூட்டணி
ஏ.ஆர். ரஹ்மான், வைரமுத்து உடன் 14வது முறையாகவும், ஸ்ரீகர் பிரசாத்துடன் 9வது முறையாகவும், சந்தோஷ் சிவனுடன் 6வது முறையாகவும், அரவிந்த சாமியுடன் 5வது முறையாகவும், பிரகாஷ் ராஜ் உடன் 5வது முறையாகவும், ஜெயசுதா உடன் 2வது முறையாகவும், அதிதி ராவுடன் 2வது முறையாகவும், மற்றும் விஜய்சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன் முதல்முறையாகவும் இணைந்து மணிரத்னம் இயக்கியுள்ள படம் ’செக்க சிவந்த வானம்’
திரைப்பட இலக்கணத்தோடு படங்களை இயக்குபவர்களில் மணிரத்னம் தான் முன்னோடி. அதே சமயத்தில் அந்த இலக்கணங்களை மீறி புதிய எல்லைகளை படைப்பதிலும் அவர் தான் முன்னோடி. மணிரத்னம் இயக்கிய படங்கள் பல தோல்வியை தழுவி இருந்தாலும், அவரது கதை சொல்லும் மொழி, திரையாக்கம் ரசிகர்களை என்றுமே கவராமல் இருந்ததில்லை.
இந்தியாவின் ஆகச்சிறந்த கதைச்சொல்லி
ஆம், மணிரத்னத்திற்கு மட்டுமே இந்த பெயர் பொருந்தும். பல படங்கள் தோல்வி அடைந்த போதிலும் இன்னும் மணிரத்னத்தின் படங்களை பார்க்கும் போது ஏற்படும் தாக்கங்கள் வேறு தான். படத்தின் கதை, வசனங்கள் புரியாமல் இருக்கலாம். ஆனால் அவரது திரைமொழி என்றுமே ரசிகர்களை ஏமாற்றியது கிடையாது. படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, இசை அமைப்பு, காட்சியமைப்பு, ஒளி அமைப்பு என ஏதோ ஒரு திரை மொழி வடிவம் மணிரத்னம் படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தவே செய்கிறது.
செக்க சிவந்த வானம்
தற்போது இந்த படத்திற்கு வருவோம். கேங்க்ஸ்டர், அதை எதிர்க்கும் நாயகர்கள், துப்பாக்கிகள், சிதறும் தோட்டகள் என கமர்ஷியல் படங்களுக்கான அத்தனை அம்சங்களுடன் ’செக்க சிவந்த வானம்’ தயாராகியுள்ளது. பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து வரவேற்பை பெற்றுவிட்ட நிலையில்,
சிம்பு, விஜய்சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல பிரபலமானவர்களுடன் இந்த படத்தில் கூட்டணி அமைத்துள்ளார் மணிரத்னம். அது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் கூட்டுகிறது.
நட்சத்திர பட்டாளம்
அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஜெயசுதா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், தியாகராஜன், மன்சூர் அலிகான் என பிரமாண்ட நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் உள்ளது. மல்டி-காஸ்டிங் கதாபாத்திரங்களை கையாளுவதில் மணிரத்னத்திற்கு நிகர் அவர் மட்டுமே. அதற்கு தளபதி, இருவர், ராவணன், குரு போன்ற படங்களே சாட்சி. அந்த வரிசையில் நிச்சயம் செக்க சிவந்த வானமும் இடம்பெறும். அதை டிரெய்லரை கட் செய்த விதத்திலேயே கணிக்க முடிகிறது.
தமிழகமும் செக்க சிவந்த வானமும்
செக்க சிவந்த வானத்திற்கும், தமிழகத்திற்கும் பல தொடர்புகள் உள்ளன. அரசியல் பின்புலத்துடன் செக்க சிவந்த வானத்தை குறிக்கும் கட்சி உதயமான பிறகு தான் தமிழகம் முற்போக்கு மாநிலமாக மாறியது. அதை பின்பற்றி இந்திய அரசியலில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அரசியல் பின்புலமா..??
’செக்க சிவந்த வானம்’ படத்தின் தலைப்பு மற்றும் டிரெய்லர் வெளியான பிறகு அவை குறிப்பிட்ட அரசியல் கட்சி மற்றும் முதுபெரும் அரசியல் தலைவர் குடும்பத்துடன் ஒப்பிட்டு செய்திகள், மீம்ஸுகள் வெளியாகின. மேலும் இந்த படம் ‘பொன்னியன் செல்வன்’ என்ற வரலாற்று நாவலுடனும் ஒப்பீடு செய்யப்பட்டது. இவை இரண்டும் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்ததோடு, ’செக்கம் சிவந்த வானம்’ படத்திற்கு செலவின்றி விளம்பரத்தையும் பெற்று கொடுத்தது.
0 comments