அப்போலோ செல்லவிடாமல் விஜயகாந்தை தடுப்பது எது?

அரசியல் என்றாலே எதிரும் புதிரும்தான் என்பது எழுதப்படாத புரிதலுக்கு உரிய அர்த்தம். ஆனால், உடல்நலக்குறைவால் ஒருவர் துன்படும்போது அவருக்கு ஆதர...

அரசியல் என்றாலே எதிரும் புதிரும்தான் என்பது எழுதப்படாத புரிதலுக்கு உரிய அர்த்தம். ஆனால், உடல்நலக்குறைவால் ஒருவர் துன்படும்போது அவருக்கு ஆதரவாகக் கரங்கள் நீள்வது அரசியலுக்கு அப்பாற்பட்ட கலாசாரமாகப் பார்க்கப்படுகிறது.


விருப்ப அறிக்கை

முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் கருணாநிதியிடம் இருந்து இப்படி ஒரு அறிக்கை வெளியானது. "ஜெயலலிதா என்னுடன் கொள்கை அளவில் வேறுபட்ட போதிலும், அவர் உடல் நலம் பெற்று, வழக்கமான பணிகளுக்குத் திரும்ப வேண்டும்" என்று விருப்ப அறிக்கை வெளியிட்டார். அதோடு நிறுத்திக் கொள்ளாமல் தன் சார்பில் மகன் மு.க.ஸ்டாலின், துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஆகியோரை அனுப்பி ஜெயலலிதாவின் உடல் நலன் குறித்து விசாரித்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் கருணாநிதியை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் ஜெயலலிதா. குறிப்பாக கருணாநிதியின் உடல்நிலை குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இவை எதையும் பொருட்படுத்தாமல் கருணாநிதி நடந்து கொண்டது எல்லோராலும் வரவேற்பைப் பெற்றது.


காங்கிரசின் கரிசனம்

இதெயெல்லாம்விட, சோனியா காந்தியை அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சித்த ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருக்கும்போது ராகுல் காந்தியும் வந்து விசாரித்து விட்டுச் சென்றார்.
ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் எதிரிகள் லிஸ்ட்டில் ஒருவராக இருந்த திருநாவுக்கரசர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆன நிலையில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிடுகிறார். "ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் படத்தை வெளியிட வேண்டும்" என்று கருணாநிதி கேட்டபோது, தி.மு.க கூட்டணியில் இருக்கின்றோம் என்பதைக் கூடப் பொருட்படுத்தாமல் , "முதல்வர் மருத்துவமனையில் இருப்பது போன்ற படங்களை வெளியிடத் தேவையில்லை" என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் திருநாவுக்கரசர்.


படையெடுக்கும் தலைவர்கள்

அ.தி.மு.க-வுக்கு எதிரணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட பலர் முதல்வர் உடல்நிலை குறித்து விசாரித்துச் சென்றிருக்கின்றனர்.


ஜெயலலிதாவின் விமர்சனங்கள் காரணமா?

அ.தி.மு.க கூட்டணியில் ஏற்கனவே இருந்த ம.தி.மு.க., பா.ம.க., கட்சிகள் இருந்திருக்கின்றன. ஆனால், அவர்களுக்கு எல்லாம் எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்து கிடைத்ததில்லை. ஆனால், அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டதால், எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்தும் விஜயகாந்துக்குக் கிடைத்தது. இருந்தும் அவர் முதல்வர் உடல்நிலை குறித்து விசாரிக்க வரவில்லை. அவர் சார்பில் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்தும் வரவில்லை.
விஜயகாந்த் தே.மு.தி.க கட்சியைத் தொடங்கியபோது, 2006-ம் ஆண்டு தேர்தலைச் சந்தித்தார். அப்போது விஜயகாந்த், அ.தி.மு.க வாக்குகளைப் பிரித்ததால்தான் தி.மு.க வெற்றி பெற்றது. இதனால் விஜயகாந்த் மீது கடும் கோபத்தில் இருந்தார். இதன்பிறகு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தின்போது விஜயகாந்தை கடுமையாகத் தாக்கிப் பேசினார். "ஊழலை ஒழிப்பேன், வீட்டுக்கு வீடு ரேஷன் பொருட்களை வழங்குவேன் என்று கூறுவதெல்லாம் குடிகாரன் பேச்சைப் போன்றதுதான். நான் யாரைச் சொல்கிறேன் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும். கறுப்பு எம்.ஜி.ஆர்., சிவப்பு எம்.ஜி.ஆர். என்று தங்களைத் தாங்களே சிலர் கூறிக் கொள்கிறார்கள். காலாகாலத்துக்கும் ஒரே ஒரு எம்.ஜி.ஆர்.தான். அவருடைய வாரிசுகள் நாம். எந்த நேரத்திலும் வேறு ஒருவர் எம்.ஜி.ஆர். ஆகி விட முடியாது" என்று பேசியிருக்கிறார்.

இன்னொரு சமயத்தில், "சட்டமன்றத்துக்கு குடித்துவிட்டு வருகிறார் விஜயகாந்த்" என்று சொல்லியிருக்கிறார். இதெற்கெல்லாம் பதில் அளித்த விஜயகாந்த், "ஜெயலலிதாதான் எனக்கு மது ஊற்றிக் கொடுத்தாரா?" என்று கேட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.


கட்சியை உடைத்தது காரணமா?

இதையெல்லாம் மனதில் வைத்திருந்தபோதிலும், அரசியலில் நிரந்தர எதிரி இல்லை என்ற வகையில் 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க உடன் விஜயகாந்த் கூட்டணி வைத்துப் போட்டியிட்டார்.

ஆனால், ஒரு ஆண்டு கூட முடியாத நிலையில் இரு கட்சிகளுக்கும் இடையே பிரச்னை வெடித்தது. 2012-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி சட்டசபையில் ஜெயலலிதாவுக்கும் -விஜயகாந்துக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. "தகுதி அற்றவர்களுக்கு ஒரு பெரிய பதவி கிடைத்தால், எப்படி நடந்து கொள்வது என்பது அவர்களுக்குத் தெரியாது" என்று கூறிய ஜெயலலிதா, " எங்களோடு இருந்ததால்தான் தே.மு.தி.க-வுக்கு வெற்றி முகம். இனிமேல் தோல்வி முகம், இறங்கு முகம்தான்" என்று சவால் விட்டார். இதன் தொடர்ச்சியாக தே.மு.தி.க-வில் இருந்த எம்.எல்.ஏ-க்கள் வரிசையாக அ.தி.மு.க-வுக்கு தாவினர். விஜயகாந்தின் எதிர்கட்சித் தலைவர் பதவியும் பறிபோனது.

அ.தி.மு.க-வின் பரம வைரியாகிப் போனார் விஜயகாந்த். இதன் பின்னர் நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் விஜயகாந்த்துக்கு எதிராகத் தொடர்ந்து பல கண்டன அறிக்கைகள் வெளியாகின. அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்கும் வகையில் அவை இருந்தன. அ.தி.மு.க பேச்சாளர்கள் விஜயகாந்தை தரம் குறைந்த வகையில் தாக்கிப் பேசினர்.


நல்ல அரசியல் இதுவல்ல...!

இவையெல்லாம் விஜயகாந்த் மனதில் எதிரொலிக்கிறது என்றும் அதுதான் அவரை அப்போலோ செல்லவிடாமல் தடுக்கிறது என்று விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். தவிர பிரேமலதாவையும் அவர் அப்போலோ அனுப்பி விசாரிக்கவில்லை.
அ.தி.மு.க கூட்டணியில் இருந்தவர், எதிர்கட்சித் தலைவராகவும் இருந்தவர், இது போல முதல்வர் உடல் நலக்குறைவின்றி இருக்கும் போது அதுபற்றி விசாரிப்பது நல்ல அரசியலுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் என்று நாலும் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். விஜயகாந்த் அப்போலோ செல்வாரா?

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog