அச்சம் என்பது மடமையடா - விமர்சனம் - அச்சமென்பது…. கவுதமின் ஆக்ஷன் மட்டுமே!

காதலின் வடிவமான கவுதம் மேனன், ஆக்ஷன் பவுடரை அள்ளி பூசிக் கொண்டால் எப்படியிருக்கும்? இரண்டும் நடந்திருக்கிறது படத்தில்! ட்ரங்க் பெட்டிக்குள்...

காதலின் வடிவமான கவுதம் மேனன், ஆக்ஷன் பவுடரை அள்ளி பூசிக் கொண்டால் எப்படியிருக்கும்? இரண்டும் நடந்திருக்கிறது படத்தில்! ட்ரங்க் பெட்டிக்குள் ஆப்பிள் ஐ போனை வைத்துக் கொடுத்த மாதிரி பொருந்தாத பேக்கிங்…

‘வாழ்க்கையில நாம பிளான் பண்ணுனது நடக்காது. ஆனால் அதைவிட பயங்கரமா நடக்கும்’ என்று முதல் டயலாக் வைத்தபோதே யூகித்திருந்தால், சட்டையில் ஒட்டிய நாலு சொட்டு ரத்தத்தை தவிர்த்திருக்கலாம். எனிவே… ஜோடியா போனவங்களுக்கு மட்டும் சோக்கான முதல் பாதி கியாரண்டியப்போவ்…!

படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் சிம்புவுக்கு, வீட்டுக்குள்ளேயே தேவதை கூடு கட்டுகிறது. தங்கையின் தோழி மஞ்சிமா சில நாட்கள் இவர் வீட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை. ஐஸ்கட்டியை கொண்டு வந்து உள்ளங் கைக்குக்குள் வைத்த பின், ஜில்லுக்கு குறைச்சல் என்ன? காதலின் இன்னொரு ஐகான் ஆன சிம்பு, உருகி உருகி வழிகிறார். ஏ.ஆர்.ரஹ்மானும், சிம்புவும், மஞ்சிமாவும், தாமரையுமாக சேர்ந்து நம்மை ஒரு கனவு மாளிகைக்குள் கடத்திக் கொண்டு போகிறார்கள். அடிக்கடி வரும் பாடல்கள் துளியாவது இம்சிக்க வேண்டுமே? இன்னும் இருக்கா… என்று ஏங்க வைக்கிறது. சட்டென்று மாறுது வானிலை… அப்புறம் என்ன? சிம்பு தன் தடந்தோள்கள் உயர்த்தி, தாறுமாறாக அடித்து, டப்பு டப்பென்று சுட்டு, செகண்ட் ஆஃப் சினிமாவை ‘தேமே’வாக்குகிறார். ஹ்ம்… என்னவோ ஆயிருச்சு கவுதம் மேனனுக்கு!

ரகசியமா பார்த்து, மனசுக்குள்ளேயே மழை பெய்ய வைச்சு, மஞ்சிமாவை மடக்கப் பார்க்கும் சிம்பு, “நாலு நாள் அப்படியே ஜாலியா பைக் டூர் போவலான்னு இருக்கேன். முதல்ல கன்னியாக்குமரி… அப்புறம் அப்படியே” என்று இழுக்க, ஆட்டத்திற்குள் இணைந்து கொள்கிறார் மஞ்சிமா. அதுவும் சிம்புவே எதிர்பார்க்காத அந்த ஸ்டார்ட்டிங் நிமிஷத்தில். ஜோடியாக கிளம்புகிற புறாக்கள், கன்னியாக்குமரியையும் தாண்டி, மஹாராஷ்டிரா வரை பயணிக்கிறது. அதுதான் மஞ்சிமாவின் சொந்த ஊர். “உங்க வந்து வீட்லேயே விட்டுட்டு போறேன்யா” என்று முனைப்பாகிற சிம்புவுக்கும், மஞ்சிமாவுக்கும் நேர்கிற அந்த வினாடி திருப்பம்… அதற்கப்புறம் படத்தையே வேறு திசையில் ஓட்டிக் கொண்டு கிளம்பிவிடுகிறது. மிச்ச மணித்துளிகள் சரியான ஆக்ஷன் மசாலா. வில்லனை பந்தாடி, காதலியை எப்படி காப்பாற்றினார் சிம்பு என்பதுதான் என்ட்.

துள்ளல் நிறைந்த அதே ஃபீலிங்ஸ் சிம்பு. நண்பர்களிடம் மஞ்சிமா பற்றி விவரிக்கும் போதெல்லாம், அப்படியே காற்றில் ஏறி கவிதையாய் மூச்சு விடுகிறார். “நம்ம காதல்தான் ஊருக்கே தெரியுமே?” என்று அவர் ஒரு டயலாக் விட, புரிந்து கொண்டு சிரிக்கிறது தியேட்டர். ஸ்கிரீனில் வெவ்வேறு வெயிட்டுகளிலும் லுக்குகளிலும் வந்தாலும், சிம்புவை ரசிக்க ஒரு நூறு வித்தைகள் இருக்கிறது அவரிடத்தில். கவுதமும் இவரும் சேரும்போதெல்லாம் நிகழும் காதல் மேஜிக்கை மட்டுமே ரசிக்க விரும்புகிறது ஊர். அப்புறம் ஏங்க சிம்புவுக்கு அந்த போலீஸ் கெட்டப்? “நான்தான் ரஜினிகாந்த்” என்று அவர் முரட்டுக் காட்டுவதெல்லாம் செம காமெடி பாஸ்…

இருபத்தியெட்டாவது பர்த் டேவுக்கு இப்பவே கேக் வெட்டிய ஷேப்பில் இருக்கிறார் மஞ்சிமா. அந்த அழகு முகத்தில் பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கும் கண்கள் மட்டும் ஸ்பெஷல் கிஃப்ட். மெல்லிய ஆச்சர்யங்களை மெனக்கடாமலே கொட்டுகிறது நடிப்பு. பிற்பாதி சினிமாவுக்கு மஞ்சிமா தேவைதான். அதனால் இருந்துவிட்டு போகட்டும் என்று அளந்து அளந்து காட்டுகிறார்கள். சுள்ளென்று வெயில் அடிக்கிறது தியேட்டரில்.

சிம்புவுக்கு இணையாகவே வருகிறார் பிரண்ட் சதீஷ். ஸ்பேஸ் கொடுத்த விதத்தில் சிம்புவுக்கும் பெரிய மனசுதான்!

படத்தின் ஹீரோ சிம்பு மட்டுமல்ல, ஏ.ஆர்.ரஹ்மானும், எடிட்டர் ஆன்ட்டனியும் கூட! தள்ளிப் போகாதே பாடல் செருகப்பட்டிருக்கும் அந்த இடம், செம ஷாக்! அதை பதமாக நிரவி, காட்சியின் வலியை நமக்கும் ஊட்டுகிற அந்த வித்தையில் விஸ்வரூபமாக உயர்ந்து நிற்கிறது ஆன்ட்டனியின் எடிட்டிங்! இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல, எல்லா சீன்களிலும் தன் இருப்பை காட்டுகிறது ஆன்ட்டனியின் திறமை.

பத்தே வினாடியில் பருப்பு துவையல் அரைச்சுடணும் என்கிற வேகத்தில் பாடப்பட்டிருக்கும் அந்த பைக் பாடல், எரிச்சலோ எரிச்சல். வரியும் புரியாமல், வார்த்தையும் புரியாமல் என்னய்யா ஸ்டைல் அது? மற்றபடி ரஹ்மானில் எல்லா பாடல்களும் ஏகாந்தம். சொர்க்கம்! தாமரையில் வரிகளில் அந்த ராஜாளி பாடல் அப்படியே அள்ளிக் கொண்டு போகிறது. படத்தில் சிம்புவின் பெயரே தெரியாமல் அவருடன் மஞ்சிமா லாங் டிரைவ் போவதும், இக்கட்டான நேரத்தில் வந்து ஐ லவ் யூ சொல்வதும் கவுதம் டச்!

ஒரு மொட்டை வில்லனை கடைசி வரைக்கும் விட்டு வைத்து, கதையை இழுத்துக் கொண்டே போகிறார் கவுதம். அதுவும் அந்த கலவரத்திற்கு இவர் சொல்ல வரும் பிளாஷ்பேக், சத்தியமா புரியல… அதனாலேயே அவுட்டோரில் கடலை கொரிக்க கிளம்பிவிடுகிறான் ரசிகன். எல்லாருமா சேர்ந்து பார்ட் 2 ன்னு கிளம்பிடாதீங்க பாஸ்.

இன்னும் ஆயிரம் ‘விண்ணை தாண்டி வருவாயா’ எடுத்தாலும், அசராமல் கைதட்ட ஒரு கூட்டம் இருக்கும் போது, அதையே தொடர்வதற்கு அச்சமென்ன கவுதம்?

அச்சமென்பது…. கவுதமின் ஆக்ஷன் மட்டுமே!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About