அப்போலோ... அறை எண்: 2008... இன்று எப்படி இருக்கிறது?

அப்போலோ. க்ரீம்ஸ் ரோடு. கடந்த 75 நாட்களாக ஜெயலலிதாவின் முகவரி. முதலில் அறை எண் 2008ல் அனுமதிக்கப்பட்டார் என்று செய்திகளில் அடிபட்டது. பிறகு...

அப்போலோ. க்ரீம்ஸ் ரோடு. கடந்த 75 நாட்களாக ஜெயலலிதாவின் முகவரி. முதலில் அறை எண் 2008ல் அனுமதிக்கப்பட்டார் என்று செய்திகளில் அடிபட்டது. பிறகு அறை மாற்றப்பட்டார். உள்ளே அவர் எந்த அறையில் இருக்கிறார் என்று தெரியாவிட்டாலும், அப்போலோ என்ற முகவரி  அதிமுக பிரமுகர்கள், தொண்டர்கள்,
பத்திரிகையாளர்கள் என்று அனைவரும் வந்து சென்றுகொண்டிருந்த இடமாக இருந்தது.  ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த இத்தனை நாட்களில் முன்வாயிலுக்கு வெளியே பத்திரிகையாளர்களுக்கும், கேமராமேன்களுக்கும் அமைக்கப்பட்டிருந்த இடத்தில்தான் அவர்களுக்கு அனுமதி. மருத்துவமனை ஊழியர்கள் வெளியில் காத்திருக்கும் செய்தியாளர்களுக்கு தேவையான நேரத்தில் உணவோ, தேநீரோ தேவையென்றால் வழங்கிக் கொண்டிருந்தனர். எத்தனை முயன்றும் எளிதில் யாரும் உள்ளே நுழைந்து செய்தி சேகரிக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பும், கெடுபிடிகளும். ஒரே ஒருநாள் மழை பெய்தபோது, வெளியே காத்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களையும், காவலர்களையும் அப்போலோ ஊழியர்கள் உள்ளே அழைத்து அமரவைத்தனர். அப்போதும் அதற்கு மேல் அனுமதி இல்லை.

75 நாட்கள் முதல்வர் ஜெயலலிதா அட்மிட் ஆகியிருந்த அப்போலோ, இன்று எப்படி இருக்கிறது?

உள்ளே செல்லும்போது வாசலில் பேரிகார்டுகள் அப்படி அப்படியே இருந்ததைக் காணமுடிந்தது. மருத்துவமனையில் செக்யூரிடிகள் இருவர் வாக்கி டாக்கியோடு நின்றிருந்தனர். பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அமர்ந்திருந்தனர். நேற்றைக்கிருந்த அதே கவனம் அவர்கள் கண்களில் இருந்தாலும், களைப்பும் தெரிந்தது. யார் என்ன என்று கேட்டுத் தடுக்கவில்லை. உள்ளே நுழைந்தபோது, மருத்துவமனை ஊழியர்கள் காலை பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். நோயாளிகள் அங்கும் இங்கும் அவர்கள் மருத்துவரைத் தேடி, அறையைத் தேடி நடந்து கொண்டிருந்தனர். ஆனால் எவரிடமும் வேகமில்லை.

முதல்வர் இருந்த அறையாகச் சொல்லப்பட்ட அறை எண் 2008, இரண்டாவது ஃப்ளோரில் இருந்தது. முதலாவது ஃப்ளோரிலிருந்து இரண்டாவது ஃப்ளோருக்குச் செல்லும் வழியில் சில தினங்களுக்கு முன் ஒரு கதவு வைக்கப்பட்டது. மருத்துவமனை ஊழியர்களும், மருத்துவர்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். இன்றைக்கும் அந்தக் கதவு இருக்கிறது. ஆனால் கெடுபிடி இல்லை.

இரண்டாவது ஃப்ளோர் வெறிச்சோடிக் காணப்பட்டது. 75 நாட்கள் தமிழகத்தின் விவிஐபி இருந்த அறை இருக்கும் வராண்டாவில் இரண்டொருவர் மட்டுமே நடமாடிக் கொண்டிருந்தனர். ஜெயலலிதா இருந்த அறையும் பிற அறைகளும் இருக்கும் CCU Suites-க்குச் செல்லும் மெய்ன் கதவில் செக்யூரிட்டி நின்று கொண்டு வருபவர்களிடம் விசாரித்து அனுப்பிக் கொண்டிருந்தார்.

ஜெயலலிதா


“இங்கதான் இருந்தாங்க” என்று ஒரு ஊழியர் சொன்னபோது அவரது குரலில் அத்தனை நடுக்கம். ஊழியர்கள் எல்லாருடைய முகங்களிலும் ஒருவித இறுக்கம் குடிகொண்டிருந்தது. ஒன்றிரண்டு இடங்களில் இருந்த தொலைக்காட்சியில் ஜெயலலிதாவுக்கு பொதுமக்களும், பிரபலங்களும் இறுதி அஞ்சலி செலுத்தும் காட்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதை சோகம் கவ்விய முகத்தோடு சிலர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சில வெளி மாநில மக்களும் அங்கே இருந்தனர். அதைப் பார்த்தபடியே இருந்தனர். அவர்களும் சிலநாட்களாகவே அங்கே இருந்தவர்கள் என்றார்கள். ஜெயலலிதாவின் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பையும், அபிமானத்தையும் கண்ட சாட்சிகளாக அவர்கள் இருந்தனர்.

அந்த வராண்டாவிலிருந்து கீழே வரும்போது, ஒன்றிரண்டு செக்யூரிடிகள் அதிகமாக இருந்தனர். ஆங்காங்கே மருத்துவர்களும், செவிலியர்களும் நடந்து கொண்டிருந்தனர்.

ஒரு நாளின் காலையில் சக ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சொல்லிக் கொள்ளும் வணக்கம் இன்றைக்கு எவரிடமும் இல்லை. நான் சென்றது காலையாக இருந்தும், பரஸ்பர புன்னகைப் பரிமாற்றங்கள் இல்லை. வழக்கமாக கடந்து சென்ற ஒருவரிடம் மெல்ல எதையோ கேட்டபோதும் எதையும் பேசும் மனநிலையில் யாரும் இருக்கவில்லை. நேற்று இரவு ஜெயலலிதாவின் உயிர்பிரிந்த அந்த கட்டடம், வெறும் மௌன சாட்சியாக எல்லா வடுக்களையும் தாங்கி நின்று கொண்டிருந்தது.

வெளியில் கேட்டிற்கு முன்னே ஒரு சிறுவனை நிற்க வைத்து அவரது அப்பா ‘தள்ளி நில்லு.. செண்டரா வா.. கரெக்ட். அங்கயே நில்லு’ என்று செல்ஃபோனில்  புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட ஒரு நினைவிடம் போல ஆகிவிட்டது அந்த இடம்.

‘அட்மிட் ஆனப்ப ஒண்ணும் தெரியல. அவ்ளோ நல்லா இருந்தவங்கதானே. ரெண்டொரு நாள்ல டிஸ்சார்ஜ் ஆகிருவாங்கனு நெனைச்சுட்டிருந்தேன் நாளாக ஆக, பதற்றமா இருந்தது. அவங்களோட இன்னொரு வீடு மாதிரி இருந்தது இது. இன்னைக்கு அவங்க இல்லைன்னு நெனைக்கவே முடியல’ என்றார் வெளியில் வாயிலில் நின்று கொண்டிருந்த ஓர் இளைஞர்.

‘நீங்க இங்க வேலை செய்யறீங்களா?’

‘இல்லை’

’அதிமுகவா?’

‘இல்லைங்க’

‘வெளில கடை வெச்சிருக்கீங்களா?’

‘அதெல்லாம் இல்லைங்க. ஆஃபீஸ் போறப்ப டெய்லி இந்த வழியா போவேன். கொஞ்ச நேரம் நின்னு பார்த்து விசாரிச்சுட்டுதான் போவேன். இன்னைக்கு இங்க வரணும்னு தோணிச்சு. வந்தேன். மனசு என்னமோ ரொம்ப பாரமா இருக்கு’

இதைப்போன்ற பலரை தனது கம்பீரத்தால் சம்பாதித்து வைத்திருந்தவர் இன்று இல்லை. வெளியில் காவல்துறையினர் பெரிய வேன்களில் அங்கிருந்த பேரிகார்டுகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். பூசணிக்காய்கள் உடைக்கப்பட்ட, சூடம் ஏற்றப்பட்ட, நூற்றுக்கணக்கானவர்கள் அழுது புரண்ட அந்தச் சாலை ஒரு கொடிய அரக்கனின் கறுப்பு நாவைப்போல நீண்டு நெளிந்து தெரிந்தது.  

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About