இனி ஜெயலலிதாவை எப்போதெல்லாம் மிஸ் செய்வோம் தெரியுமா?

ஒற்றை ஆள், எத்தனை அவதூறுகளை தாங்க முடியும்? எவ்வளவு பகடிகளை புறந்தள்ள முடியும்? எத்தனை விமர்சனங்களை எதிர்கொள்ள முடியும்? எவ்வளவு பாரத்தை...

ஒற்றை ஆள், எத்தனை அவதூறுகளை தாங்க முடியும்? எவ்வளவு பகடிகளை புறந்தள்ள முடியும்? எத்தனை விமர்சனங்களை
எதிர்கொள்ள முடியும்? எவ்வளவு பாரத்தை சுமக்க முடியும்? முடியும் நீங்கள் ஜெயலலிதாவாக இருந்தால்...! சந்தேகமே இல்லை. இந்திய அரசியலின் இரும்புப் பெண்மணிதான் இவர். தன் ஆளுமையால் தமிழகம் தொடங்கி உலகளாவிய அரசியல்வாதிகள் வரை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். கண்டிப்பாய் இது ஈடு செய்ய முடியாத இழப்புதான். இந்த இழப்பினால் நேர்ந்த வெற்றிடத்தை இனி நிறைய தருணங்களில் நாம் உணரத்தான் போகிறோம்.

பொதுக்குழு கூட்டங்கள்:

தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியின் தலைவர் தான். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர ஆயிரம் பேர் இருக்கிறார்கள்தான். ஆனாலும் தீராத் தனிமையில்தான் உழன்றார் ஜெ. 'நான் யாரையும் சார்ந்திருந்ததில்லை. அதற்கான கொடுப்பினை எனக்கு கடைசி வரை இல்லை. இதுதான் என் விதி, என் தலையெழுத்து' - இது 2013-ல் நடந்த கட்சி பொதுக்குழு கூட்டத்தில் ஜெ. நெகிழ்ந்து சொன்ன வார்த்தைகள். தன் தலைமையில் நடக்கும் கூட்டத்திலேயே தான் மனதளவில் தனியாள்தான் என்பதை உருக்கமாக வெளிப்படுத்திய தலைவர் ஜெயலலிதாவாக மட்டுமே இருக்கும். அவருக்கு யாருமில்லை என்ற எண்ணம்தான் 'உங்களுக்கு நாங்க இருக்கோம்' என கோடிக்கணக்கான பேரை அவர் பின்னால் திரள வைத்தது. இனி யார் இருக்கிறார்கள் அவர்களை வழிநடத்த?

சினிமா:

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என மூவேந்தர்கள் சினிமா ராஜ்ஜியத்தை கட்டியாண்ட காலம். வெண்ணிற ஆடை படத்தில் துறுதுறு பெண்ணாய் அறிமுகமாகிறார் ஜெ. அப்போது யாருக்கும் தெரியாது அடுத்த ஐம்பது ஆண்டுகள் சினிமாவுலகை மட்டுமல்ல, மொத்தத் தமிழகத்தையும் ஆளப் போகும் ராணி அவர் என. சினிமாவில் அவரின் இடம் சும்மா கிடைத்துவிடவில்லை. ஆண்டுக்கு சராசரியாய் பத்து படங்கள். 1968-ல் மட்டும் 21 படங்கள். இது பட்டி தொட்டி எல்லாம் கல்லா கட்டிய ஹீரோக்களுக்கே கஷ்டம்தான். வேகம், அதிவேகம் எல்லாம் தாண்டி மின்னல் வேக உழைப்பு. பெரும்பாலும் சில்வர் ஜுப்ளி படங்கள். தொடவே முடியாத ரெக்கார்ட் இது. ஜெ. தமிழ் சினிமாவின் சகாப்தம்.

சட்டமன்றம்:

எதிர்க்கட்சி ஆட்களால் சூழப்பட்ட அரங்கில் தனியொரு ஆளாக உங்களால் தைரியமாக செயலாற்ற முடியுமா? ஜெ.வால் முடியும். அந்த கெத்துதான் அவரின் சொத்து. 'நீங்கள் கஷ்டப்பட்டு காவலர்களை அனுப்பி, அவர்கள் பகீரத பிரயத்தனத்துக்குப் பின் கூச்சலிடும் எதிர்க்கட்சியினரை வெளியே தூக்கிச் செல்வார்கள். ஆனால் அவர்களை வெளியே அனுப்ப எனக்கு 'கச்சத்தீவு, மதுவிலக்கு' என இரு வார்த்தைகள் போதும். உங்கள் வேலையை நான் சிம்பிளாக்குகிறேன்' என நகையாடுவதாகட்டும், 'நான் இருக்கும் வரை இந்த இயக்கம் தமிழர் வாழ்வு செழிக்க பாடுபடும்' என கம்பீரக் குரலில் உரக்கச் சொன்னதாகட்டும் ஜெ. ஜெ.தான். அவரில்லாத சட்டமன்றம் எதிரி இல்லாத போர்க்களம் போல. இதை பரம வைரியான தி.மு.கவே ஒப்புக்கொள்ளும்.

தேர்தல் பிரசாரம்:

2011 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தென் தமிழகத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது அ.தி.மு.க. 'இந்தக் கூட்டமே வெற்றிக்கூட்டமாகிவிடுமோ' என ஆளுங்கட்சி தரப்பில் அத்தனை நெருக்கடிகள். அத்தனையையும் தாண்டி திரண்டார்கள் லட்சக்கணக்கான மக்கள். மேடையில் தோன்றிய ஜெ. கக்கிய அனல் வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் ஆர்ப்பரித்தது மக்கள் கூட்டம். அது இந்தத் தலைமுறை பார்த்திராத எழுச்சி. 2014. மக்களவை தேர்தல் சமயம். மொத்த இந்தியாவும் மோடி மந்திரம் உச்சரித்துக் கொண்டிருந்தன. ஒற்றையாளாய் களத்தில் நின்று 'மோடியா இந்த லேடியா என பார்த்துவிடுவோம்' என வாளைச் சுழற்றினார். 'செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா?' - காற்றில் இன்னமும் இருக்கிறது இந்த கர்ஜனை. விழுந்தன ஓட்டுகள். பின் நிகழ்ந்தது வரலாறு. இத்தனை ஆவேசமாக களமாடும் தலைவரை இனி தமிழகக் களம் காணுமா?

துணிச்சல் முடிவுகள்:

அரசியலுக்கென சில வரைமுறைகள் உண்டு. தலைவர்களுக்கே உண்டான சில தயக்கங்கள் உண்டு. ஆனால் ஜெ. விஷயத்தில் இவை செல்லுபடியாகாது. ஒற்றை முடிவை எடுத்து மொத்த தமிழகத்தையும் அதிரடிக்க அவருக்கு இரண்டு நிமிடங்கள் போதும். இதற்கு சாட்சியாய் வரலாறு முழுக்க விரவியிருக்கின்றன சம்பவங்கள். உண்மைதான். அவற்றில் சில சம்பவங்களின் மேல் கடுமையான விமர்சனங்கள் எல்லாருக்கும் உண்டு. ஆனால் எதற்கும் துணிந்தவர் என்ற அடையாளத்தை கடைசிவரை ஜெ. விட்டுத்தரவே இல்லை. மீடியாக்கள் சித்தரிக்கும் 'அதிரடி' என்ற வார்த்தைக்கு ஆல்டைம் சொந்தக்காரர் இவர். இப்படியான 'அதிரடிகள்' இனி தமிழக மக்கள் காணக் கிடைப்பது சந்தேகமே.

தனியே தன்னந்தனியே:

இந்திய அளவில் செல்வாக்கு இருக்கும் ஒரு தலைவரை சுற்றி கண்ணுக்குத் தெரிந்த அதிகார வட்டம் ஒன்று இருக்கத்தான் செய்யும். அதுதான் இயற்கை. ஆனால் ஜெ. எப்போதுமே தனித்துதான் இருந்தார் 'மனதளவில்'. டெல்லியோ, தமிழகமோ அவர் எடுப்பதுதான் முடிவு. 'வாழ்க்கையில் எது நடந்தாலும் நானே தனியாக அதை சந்தித்து, தனியாகவே முடிவு செய்து வந்திருக்கிறேன்' என தன் கட்சிப் பொதுக்குழுவில் அவர் பேசிய வார்த்தைகளே சாட்சி. ஆட்சி, அதிகாரம், வசதி என அத்தனை இருந்தும் மனதளவில் தனிமைப்பட்ட தலைவரை இனி வரும் தலைமுறையினருக்கு அதிசயமாக இருக்கும்!

சவால்:

சவால்கள் ஜெ.விற்கு மிகவும் பிடிக்கும். அவர் இறுதியாக வீற்றிருந்த இதே ராஜாஜி ஹாலில்தான் எம்.ஜி.ஆர் மறைவின்போது அவமானப்படுத்தப்பட்டார். உள்ளே நுழையக்கூட அனுமதி மறுத்தார்கள். அவமானம் அவருக்கு வைராக்கியத்தைக் கற்றுக்கொடுத்தது. வைராக்கியம் அவரை சவால்களை சந்திக்கக் கற்றுக்கொடுத்தது. பின் நிகழ்ந்ததெல்லாம் வரலாறு. 'ஆடம்பரச் செலவுகள் செய்வார்' என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியபோது நகைகளைத் துறந்தவர்தான். அதன்பின் இறுதிக்காலத்தில்தான் தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப சின்னதாக நகை அணியத் தொடங்கினார். இப்படி எக்கச்சக்க வைராக்கிய நிகழ்வுகள் அவர் சுயசரிதை எங்கும் கொட்டிக் கிடக்கின்றன. ​​​​​​​

இந்திய அரசியல் அரங்கு:

1991-ல் தேசிய அளவில் கிடைக்கப் பெற்ற முக்கியத்துவம். அவரின் இறுதிக்காலம் வரை இம்மிக் குறையவில்லை. தேசியக் கட்சிகள் தேடி வந்து கூட்டணி வைப்பதாகட்டும், மூன்றாம் அணி அமைக்க வேண்டும் என பிற மாநிலக் கட்சிகள் கைகோர்ப்பதாகட்டும், ஜெ.வின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருந்தது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 2014 தேர்தலின்போது மூன்றாம் அணியின் பிரதமர் வேட்பாளராகவே பார்க்கப்பட்டார் ஜெ. தமிழகம் போன்றே பிற மாநிலங்களிலும் முடிவுகள் வந்திருந்தால் எதிர்ப்பார்க்காத மாற்றங்கள் நிகழ்ந்திருக்கக் கூடும். இந்திய அரசியலில் இவரின் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

நேர்காணல்கள்:

ஜெ. அரசியலுக்கு வந்தபின் நிறைய பேட்டிகள் அளிப்பதில்லை. அதுவே அவர் கொடுக்கும் ஒவ்வொரு பேட்டியையும் ஸ்பெஷலாக்கியது. 'எனக்கு நாரி கான்ட்ராக்டர் மேல் க்ரஷ் இருந்தது' என கன்னம் சிவக்கக் கூறியது, ஆ ஜா ஷனம் பாடலை மெல்லிய குரலில் பாடியது என சிமி கேர்வாலுடனான நேர்காணல் அவரின் மென்மையான பக்கத்தைக் காட்டியது. அதே சமயம், 'எனக்கு உங்களோடு பேசியதில் சுத்தமாக மகிழ்ச்சியே இல்லை' என கரன் தாப்பரிடம் சிடுசிடுத்துவிட்டு மைக்கை வீசிவிட்டுப் போன நேர்காணல் அவரின் கோப முகத்தை காட்டியது. ஒளிவு மறைவில்லாமல் தோன்றியவற்றை பேசும் அவரின் நேர்காணல்களை இனி எக்காலத்திலும் பார்க்க வாய்ப்பில்லை.​​​​​​​

சர்வதேச தொடர்புகள்:

ஜெ.வின் மொழி வளமை அசாத்தியமானது. தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் என எல்லா மொழிகளிலும் சிக்ஸர் அடிக்கும் தில் லேடி. எதிர்கருத்துக்களை வலுவாக வைப்பார் ஜெ. ஆனால், அதையும் குறுக்கிடாமல் கேட்பார்கள் எதிராளி. இந்த ஆளுமைதான் சர்வதேச தலைவர்களையும் அவரைத் தேடி வர வைத்தது. உலகத்தின் பெரியண்ணனான அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியையே இந்தியாவின் தென்கோடி தமிழகத்தில் கால் வைக்கச் செய்தது அவரின் ஆளுமைதான்!

இத்தனையையும் தாண்டி அவர் வெற்றிடத்தை உணர்வதற்கு ஒரு பெரிய காரணம் இருக்கிறது. ஏனென்றால்... அவர் ஜெயலலிதா! இவரைப் போல முன்னரும் ஒருவர் இல்லை... இனியும் ஒருவர் இருக்கப் போவது இல்லை!  

ஜெயலலிதாவின் முதல் படமான வெண்ணிற ஆடையில் அவரின் முதல் வசனம், 'கடவுளே நீ எங்க இருக்க? எப்படி இருக்க? ஏன் இருக்க?' என்பதுதான். 51 ஆண்டுகள் கழித்து இந்தக் கேள்விகளுக்கு விடை தேடிச் சென்றிருக்கிறார் ஜெ. மிஸ் யூ மேடம்!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About