அண்ணாவின் மரணமும் ஜெயலலிதாவின் மரணமும்! - மருத்துவர்கள் எழுப்பும் சந்தேகங்கள்

தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்துவிட்டார். தொடக்கம் முதலே அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து தெளிவாகச் சொல்லப்படவில்லை என்ற ஆதங்கம...

தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்துவிட்டார். தொடக்கம் முதலே அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து தெளிவாகச் சொல்லப்படவில்லை என்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் வலம் வருகிறது. 'பூரண நலத்துடன் முதல்வர் இருக்கிறார் என்று
சொல்லப்பட்டு வந்த நிலையில், திடீரென இதயத் துடிப்பு நின்று போனது ஏன்?' எனக் கேள்வி எழுப்புகின்றனர் மருத்துவர்கள்.

அப்போலோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. தொடர்ந்து 75 நாட்கள் நடந்து வந்த சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 5-ம் தேதி மரணமடைந்துவிட்டார். அவரது மரணம் அ.தி.மு.கவினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. "தனிநபர் விருப்பத்தையும் தாண்டி மக்கள் பணி பாதிக்கப்படும் பட்சத்தில் மக்கள் பிரதிநிதிகளின் உடல்நிலை குறித்த விஷயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் எனச் சட்டம் சொல்கிறது. ஆனால், முதல்வர் ஜெயலலிதா விவகாரத்தில் மருத்துவமனையின் செயல்பாடுகள் அவ்வளவு திருப்தியாக இல்லை. பல கேள்விகளுக்கு பதிலே சொல்லப்படவில்லை" என ஆதங்கத்தோடு பேசினார் சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தின் புகழேந்தி. இது குறித்து அவர் விரிவாக நம்மிடம் பேசினார்.

"பேரறிஞர் அண்ணாவுக்கு உணவுக்குழாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக, வெளிநாடு சென்று மருத்துவ சிகிச்சையும் கதிர்வீச்சு சிகிச்சையும் எடுத்துக் கொண்டார். நாடு திரும்பிய அவருக்கு மீண்டும் மருத்துவச் சிக்கல்கள் ஏற்பட்ட நிலையில், என்ன செய்ய வேண்டும் என வெளிநாட்டு மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. மீண்டும் அவருக்கு கதிர்வீச்சு சிகிச்சையே கொடுக்க பரிந்துரை செய்யப்பட்டது. அவரது மருத்துவ சிகிச்சையைக் கண்காணிக்க ஏற்படுத்தப்பட்ட குழுவில் இருந்த  டாக்டர் சுப்ரமணியம் இதை வன்மையாக எதிர்த்துள்ளார். 'அவருக்கு ஏற்கெனவே பரிந்துரைக்கப்பட்ட கதிர்வீச்சு கொடுக்கப்பட்டுள்ளது. மேற்படி கொடுத்தால் பின் விளைவுகள் ஏற்படும்' என எச்சரித்தும் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக இதயத்தைச் சுற்றி நீர் கோர்த்து 1969 பிப்ரவரி 3-ம் தேதி அவர் இறக்க நேரிட்டது. அறிவியல் ரீதியான கதிர்வீச்சு தராமல் இருந்திருந்தால், இன்னும் சில காலம் அவர் உயிர் வாழ்ந்திருக்கக் கூடும். தவற்றின் மூலம் பாடம் கற்றுக் கொள்ளாவிட்டால் மீண்டும் மீண்டும் தவறு நிகழ வாய்ப்புள்ளது. அண்ணாதுரை பற்றிய மருத்துவ விஷயங்கள் மக்கள் கவனத்துக்குக் கொண்டு வரவில்லை. மீண்டும் தவறு நிகழக் கூடாது என்பதற்காகத்தான் டாக்டர்.சுப்ரமணியம் போன்றோர், இதை அழுத்தமாக சொல்லிவிட்டுச் சென்றனர். இப்போதெல்லாம் மருத்துவத்தின் மீதும் மக்கள் மீதும் காதல் கொண்ட மருத்துவர்களைப் பார்ப்பதே அரிதாக இருக்கிறது.

நோயாளியின் உரிமை, சட்டம்-ஒழுங்கு பிரச்னையை தவிர்த்தல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட பக்கவாத பிரச்னையும் மக்கள் கவனத்துக்கு உடனடியாக கொண்டு வரப்படவில்லை. பின்னரே அது வெளிச்சத்துக்கு வந்தது. ஆனால், கடந்த டிசம்பர் 5-ம் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பில், மருத்துவரீதியான பல கேள்விகளுக்கு இதுவரையில் பதில் இல்லாமல் இருப்பது சோகத்தையும் மனவேதனையையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா போன்று அறிவியல்ரீதியான முடிவுகள் எடுக்கப்படவில்லையோ என்ற அச்சமே மேலோங்கியிருக்கிறது. ஜெயலலிதா மரணத்தில் மருத்துவரீதியாக ஏராளமான சந்தேகங்கள் அணிவகுத்து நிற்கின்றன" என விவரித்தவர், தொடர்ந்து, "டிசம்பர் 4-ம் தேதி மாலை அவருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு, இதயத் துடிப்பு தற்காலிகமாக நின்று போனது. அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார் என்று அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. மக்கள் குழம்பிப் போயிருந்த நிலையில், முதல்வருடைய உடல்நிலை மேலும் மோசமடைந்துவிட்டது எனவும் இதனால் எக்மோ (ECMO-Extra corporeal membrane oxygenation) சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவ அறிக்கை வெளியானது. ஆனால், ஆச்சரியமாக அதற்கெல்லாம் சில தினங்களுக்கு முன்பு வெளியான அப்போலோ அறிக்கையில், 'அவர் பூரண குணமடைந்துவிட்டார். அவருடைய உறுப்புகள் (நுரையீரல் உள்பட) அனைத்தும் நன்றாகச் செயல்படுகின்றன' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உடல் உறுப்புகள் நன்றாகச் செயல்படும் நிலையில் Ventricular Fibrillation (வெண்டிரிகல் சரியாக சுருங்கி விரியாமல், புழு போன்ற நெளிவுத்தன்மை) ஏற்பட்டிருக்கலாம் என இதய நிபுணர்கள் கூறினர். இதை உறுதிப்படுத்த அப்போலோ அறிக்கையில் எந்தத் தகவலும் இல்லை. 'இவ்வாறு நிகழ்வது வழக்கமான ஒன்றல்ல' என நிபுணர்கள் கூறி வந்ததையும் நாம் கவனிக்க வேண்டும். Ventricular Fibrillation இருந்து கார்டியாக் அரெஸ்ட் நிகழக் காரணமாக இருந்த காரணிகள் எது? ஏன் இதுவரை மக்களுக்கு விளக்கப்படவில்லை? அது திடீரென நிகழ்ந்ததா அல்லது மெல்ல நிகழ்ந்ததா என்ற செய்திகளும் இல்லை. தற்காலிகமாக நின்ற இதயத் துடிப்பை சீராக்க எவ்வளவு காலம் ஆனது எனவும் அப்போலோ நிர்வாகம் விளக்கவில்லை.

அவரது உடல் பின்னடைவைச் சந்திக்க எவ்வளவு நேரம் ஆனது என்பது மருத்துவரீதியாக மிகமிக முக்கியமானவை. முதல்வரின் இதயத் துடிப்பு சீராக 40 நிமிடம் ஆனது என முதலில் செய்தி வெளியானது. அப்படியெனில் மூளைச் சாவு ஏற்படுவதைத் தடுத்திருக்க முடியாது. ஏனென்றால், 5 முதல் 8 நிமிடங்கள்தான் நமது மூளையால் ரத்த ஓட்டமின்றி உயிர் வாழ முடியும். அப்படியெனில் எக்மோ பொருத்தப்பட்டது உண்மையா? பொதுவாக மூளைச் சாவு ஏற்படுவதைத் தடுக்கவே எக்மோ கருவி பொருத்தப்படும். அன்று இரவு 11.30 மணிக்கு வெளியான அப்போலோ அறிக்கையில், 'முதல்வரின் உடலில் உள்ள பிற காரணங்களால் அவரைக் காப்பாற்ற முடியாமல் போனதாக' செய்தி வெளியானது. அந்த பிற காரணங்கள் எவை என்பது துளியளவுகூட விளக்கப்படவில்லை.

'கார்டியாக் அரெஸ்ட் வந்த ஒருவருக்கு முதலுதவி தராமல் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு பத்து சதவீதம் குறையும்' என மருத்துவம் சொல்கிறது. முதல்வருக்கு கார்டியாக் அரெஸ்ட் வந்தபோது, எக்மோ கருவி எங்கிருந்தது? முதல்வருக்கு அருகே கொண்டு செல்ல எவ்வளவு நேரமானது? அதை பொருத்துவதற்கு எவ்வளவு நேரமானது? கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுவதற்கு முந்தைய நாளில், முதல்வர் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், மருத்துவர் அறைக்குள் நுழைந்தார். அப்போது அவருக்கு லேசான மூச்சுத் திணறல் ஏற்பட்டது என்று செய்தி வெளியானது. இன்னொரு தகவலோ, மருத்துவர் நுழையும்போது முதல்வர் அவரை வரவேற்கவோ புன்னகைக்கவோ இல்லை. அப்போதே அவருக்கு மூச்சுத் திணறல் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகின. அப்படியானால், அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதை மருத்துவர்களோ நர்சுகளோ கவனிக்கவில்லையா? பகல் நேரத்தில் முதல்வருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படவில்லை என அப்போலோ அறிக்கை சொல்கிறது. எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, சனிக்கிழமை இரவு முழுவதும் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படவில்லை. இதன் விளைவாகவே இப்படியொரு நிலை ஏற்பட்டிருக்கலாம் என அச்சப்படுகிறோம். செயற்கை சுவாசத்தை மாற்றி அமைத்தது அப்போலோ இதய நோய் சிறப்பு மருத்துவர் ராபர்ட் மாவ். இது அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவா அல்லது உயர் மருத்துவ அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த முடிவா, யாருடைய உத்தரவின்பேரில் இவ்வாறு செய்யப்பட்டது என்பதையும் விளக்க வேண்டும்!" என்றார் ஆதங்கத்தோடு.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About