ஆளுங்கட்சி புள்ளிகள் மீது பாய்ந்த ஐ.டி ரெய்டு! -திணறடிக்கும் ‘திடீர்’ வியூகம்

ஆளுங்கட்சிக்கு நெருக்கமான புள்ளிகள் மீது வருமான வரித்துறையின் நடவடிக்கைகள் பாய ஆரம்பித்துவிட்டன. ' பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிய பின்னண...

ஆளுங்கட்சிக்கு நெருக்கமான புள்ளிகள் மீது வருமான வரித்துறையின் நடவடிக்கைகள் பாய ஆரம்பித்துவிட்டன. ' பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிய பின்னணியிலேயே தொழிலதிபர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டன' என்கின்றனர் வருமான வரித்துறை அதிகாரிகள்.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆயக்கர் பவனில் கடந்த சில நாட்களாக தீவிர விவாதம் நடந்து வந்தது. ' திங்கள்கிழமையன்று நடவடிக்கையில் இறங்கலாம்' என முடிவு செய்தனர். ' எத்தனை கார்கள் தேவைப்படும்' என்பதையும் முடிவு செய்து, தனியார் ட்ராவல் ஏஜென்சிக்குத் தகவல் கொடுத்தனர். சுமார் 15 லட்ச ரூபாய் வரையில் செலவாகலாம் என்பதைக் கணக்கிட்டுள்ளனர். இன்று நடந்த சோதனையில் புதிய ரூபாய் நோட்டுகளாக 70 கோடி ரூபாய்கள் பிடிபட்டுள்ளன. ' சென்னையில் எட்டு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 100 கிலோ தங்கம் உள்பட 90 கோடி ரூபாய் வரையில் பிடிபட்டுள்ளது. தொழிலதிபர்கள் சேகர் செட்டி, சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகியோரை குறிவைத்து சோதனை நடத்தப்பட்டது' என்கின்றனர் அதிகாரிகள்.

"பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பிறகு, புதிய ரூபாய் நோட்டுகளைப் பெறுவதற்காக வங்கி நிர்வாகிகளை அணுகியுள்ளனர் தமிழக அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமான தொழிலதிபர்கள் சிலர். அண்மையில் கர்நாடக அரசு அதிகாரிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 5 கோடி ரூபாய் புதிய நோட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. முடிவில், 1,100 கோடி ரூபாய் அளவுக்கு புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றப்பட்ட தகவலை அறிந்தனர். இந்தக் காரியத்தில் 27 வங்கிகள் ஈடுபட்டிருப்பதை அறிந்து மத்திய அரசு அதிர்ச்சியில் ஆழ்ந்தது. இதையடுத்து, பணத்தை மாற்றியவர்கள்; தங்கமாக மாற்றியவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்கத் தொடங்கினர். தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த அறிவிப்பு வெளியானதால், திங்கள்கிழமை அன்று ரெய்டு நடத்த முடியவில்லை. இன்றும் நாளையும் ரெய்டு நடவடிக்கைகள் பாயும்" என்கின்றனர் வருமான வரித்துறையினர்.

“தமிழக சீனியர் அமைச்சர் ஒருவரின் சம்பந்தி உள்பட மூன்று பேர் வீடுகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் காட்டப்படாத ஆவணங்களும் பணமும் பிடிபட்டன. இன்று ரெய்டில் சிக்கியவர்களில் ஒருவர், மாநில அரசில் கோலோச்சும் அரசு செயலர் ஒருவருக்கு மிகவும் வேண்டியவர். மணல் வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்கிறார். சீனியர் அமைச்சர்களோடு நெருங்கிய உறவில் இருப்பவர். இவர்களுடைய அண்ணா நகர், தி.நகர் வீடுகளில் சோதனை நடந்துள்ளது. பழைய நோட்டுகளை மாற்றியது குறித்து, விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது. பணத்தை மாற்றிய சீனியர் அமைச்சர்கள் குறித்த தகவலையும் சேகரித்துள்ளனர். மத்திய அரசின் அறிவிப்புக்குப் பிறகான இவர்களின் செயல்பாடுகளையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். வருமான வரித்துறையின் வலையில் எளிதாகவே சிக்கினர். மாநில அமைச்சர் ஒருவரின் உறவினர்களை வளைத்தது; அரசின் உயர் செயலர் பொறுப்பில் உள்ளவரின் நண்பர் வீட்டில் ரெய்டு நடத்தியது என ‘எதையோ’ மனதில் வைத்து மத்திய அரசு களமிறங்கியுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சுபவர்களை குறிவைத்துத் தாக்குவதாக உணர்ந்து கொள்ளத் தோன்றுகிறது” என்கிறார் தலைமைச் செயலக அதிகாரி ஒருவர்.

‘புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தபோது, சென்னை பாரிமுனை உள்பட சில இடங்களில் மார்வாடிகளை குறிவைத்துக் களமிறங்கியது வருமான வரித்துறை. ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு ஆளுங்கட்சிக்கு நெருக்கமான புள்ளிகள் குறிவைக்கப்படுவதை அவ்வளவு எளிதாகப் பார்க்க முடியவில்லை’ என்கின்றனர் அ.தி.மு.கவினர். 

மேலும் பல...

1 comments

  1. அப்போலோ நாடகத்தின் அடுத்த காட்சி அரங்கேறுகிறதோ:)

    ReplyDelete

Blog Archive