‘நம் பழைய சாதத்தின் அருமை அமெரிக்கர்களுக்கு தெரிந்திருக்கிறது!’ - இயக்குனர் வெற்றிமாறன்

துலா என்ற கைத்தறி ஆடைகளை விற்பனை செய்யும் அமைப்பு, சென்னை சவேரா ஓட்டலில் மஸ்லின் துணிகளால் ஆன கைத்தறி ஆடை கண்காட்சியை நடத்தி வருகிறது. அதில...

துலா என்ற கைத்தறி ஆடைகளை விற்பனை செய்யும் அமைப்பு, சென்னை சவேரா ஓட்டலில் மஸ்லின் துணிகளால் ஆன கைத்தறி ஆடை கண்காட்சியை நடத்தி வருகிறது. அதில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், நடிகைகள் ரேவதி, ரோகிணி உள்ளிட்டோர்கள் கலந்துக் கொண்டனர்

இந்நிகழ்ச்சியில் பேசிய வெற்றி மாறன், "சிறிது நாட்களாக எனக்கு என்னுடைய வாழ்க்கை முறை மீது சில கேள்விகள் எழுகின்றன. எந்த மாதிரியான வாழ்க்கை முறையை நாம் கற்றுக் கொள்கிறோம், எகோ- ஃப்ரண்ட்லியான சூழ்நிலையில் நாம் இருக்கிறோமா, இருபது வருடங்களுக்கு முந்தைய மாதிரி இப்போது இருக்க முடியவில்லை, உடல் பருமன் உள்ளிட்ட உடல் நலன் சாராத பிரச்னைகள் கூட இன்று உடல் நலன் சார்ந்த பிரச்னைகளாக காண்பிக்கப்படுவது என்று நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். நாம் எந்த மாதிரியான சூழ்நிலையில் வாழ்கிறோம் என்று என்னால் உணர முடியவில்லை. அன்று ஆரோக்கியமான உணவை எனது பெற்றோர் எனக்கு ஊட்டினர். அதனால் உடல் நலம் சார்ந்த பிரச்னைகள் இல்லாமல் இருந்தது.

வெற்றிமாறன் ரேவதி ரோகிணி

அன்றைய கால கட்டத்தில் விளையாடும்போது மண்ணில் மண்புழு அதிகமாக இருக்கும். மண்புழு ஒன்றே விவசாயத்துக்கு போதுமான உரமாக இருக்கும். ஆனால், இன்று மண்புழுவை விலை கொடுத்து வாங்கி விவசாயத்தில் பயன்படுத்தும் நிலைதான் உள்ளது. குழந்தைகளுக்கு நல்லது செய்கிறோம் என்று கண்டதையும் குழந்தைகள் மீது திணித்து, குழந்தைகளுக்கு நம்மை அறியாமல் விஷத்தை ஊட்டிக் கொண்டு இருக்கிறோம். இரவில் மிச்சமான பழைய சாதத்தை நாம் குப்பையில் கொட்டுகிறோம். ஆனால், அமெரிக்க மருத்துவர்கள் பழைய சாதம், இட்லி என்று நம் உணவு வகைகளை மருத்துவ காரணங்களுக்காக நோயாளிகளுக்கு  பரிந்துரைக்கிறார்கள். ஆனால், நாம் ஓட்ஸ் எந்த கடையில் கிடைக்கும் என்று தேடிக் கொண்டு இருக்கிறோம். நம்மால் நல்லது செய்ய முடியவில்லை என்றாலும் நல்லது செய்பவர்களை ஊக்குவிக்கலாமே என்று தான் நமது பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் கைத்தறி ஆடை நெசவாளர்களின் நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக பங்கெடுக்கிறேன்” என்றார்.

நடிகை ரோகிணி பேசும்போது, "துலா இந்த மாதிரியான முயற்சிகள் எங்கு செய்தாலும் எங்களின் பங்கு நிச்சயம் இருக்கும். சினிமாவில் நாங்கள் இருப்பதால் மக்கள் நாங்கள் சொன்னால் கொஞ்சம் கேட்பார்கள் என்று வருகிறோம். பாரம்பர்யத்தை மீட்க வேண்டும் பாரம்பர்ய விதைகளை மீட்க வேண்டும் என்கிற ஒரு பகுதி தான் இந்த கைத்தறி ஆடை கண்காட்சி. இந்த ஆடைகளை எப்படி நெய்து இருக்கிறார்கள், இதற்கு பின்பு இருக்கும் உழைப்பு என்று நாம் தான் மக்களிடம் கைத்தறி ஆடையின் அருமைகளை கொண்டு செல்ல வேண்டும். இது போன்ற நல்ல முயற்சிகளை இப்போது எல்லோரும் வரவேற்கிறார்கள். குறிப்பாக இளைஞர்கள், இது போன்ற முயற்சிகளை மிகவும் ஆர்வத்தோடு வரவேற்கிறார்கள், நிறைய நபர்கள் பாரம்பரிய விதைகள் உள்ளிட்டவற்றை மீட்டெடுக்கும் விஷயத்தில் ஈடுபடுகிறார்கள். மனசுக்கு திருப்தி தரக்கூடிய ஒரு விஷயம், ஆயிரம் மடங்கு இது போன்ற மகிழ்ச்சி தரக் கூடிய செயல்கள் தொடர வேண்டும்" என்றார்.

மஸ்லின் துணிகள் கண்காட்சியில் நடிகை ரேவதி

நடிகை ரேவதி பேசும்போது, "எனக்கு பருத்தி ஆடைகள் என்றால் சிறு வயதில் இருந்தே பிடிக்கும். குழந்தைகளுக்கு ஆடம்பரமானவற்றை தருவதை விட நல்ல மண், நல்ல உணவு, சுவாசிக்க நல்ல காற்று தரமுடியுமா என்று தான் நாம் சிந்திக்க வேண்டும். பூமி மீது பகுதி நேரமாக உழைப்பை செலுத்தினால் பயனில்லை. முழு உழைப்பையும் அதன் மீது செலுத்தினால்தான் பயன் கிடைக்கும். அதனால் பாரம்பரியமான கைத்தறி ஆடைகள் அணிவதால் மனதுக்கும், உடலுக்கும் நன்மை. நாமும் இது போன்ற பாரம்பரியங்ககளை மீட்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட வேண்டும்" என்று பேசினார்.'

மஸ்லின் துணிகள்

இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ஆனந்து பேசும்போது, "அணுகுண்டு வீசும் நாட்டுக்கு ஆடைகளை தயாரிக்க தெரியாமல் இல்லை. கைத்தறி ஆடைகள் மிகவும் எளிமையானவை மற்றும் தூய பருத்திகளால் கையால் நெய்யப்படுபவை. ஆண்கள், பெண்கள் என்று அனைவருக்குமான ஆடைகளும் உள்ளன. இதற்கு செயற்கை முறையில் வர்ணம் பூசுவதில்லை கருங்காலி, மாதுளை, கடுக்காய், செம்பருத்தி, சங்கு புஷ்பம் என்று இயற்கை சாயங்களை தான் பயன்படுத்துகிறோம். இது நம்மிடம் இருந்த முறை தான் அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்கள் பழ நூற்றாண்டுகளை கடந்தும் நிலைக்கிறது என்றால் அது தான் நமது சிறப்பு. பழைய முறைகளை காலப்போக்கில் மறந்து விட்டோம், மல்கா, மஸ்லின், நேச்சர் ஹாலி உள்ளிட்ட பல வகையான கைத்தறி ஆடைகள் இங்கு உள்ளன" என்றார்.

விழாவில் மஸ்லின் ஆடைகள், கைத்தறி ஆடைகள் மற்றும் பாரம்பர்ய ஆடைகள் ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

- அ.பா.சரவண குமார்,

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About