சசிகலாவுக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த ‘அசைன்மென்ட் ’ : சசிகலா: ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை!

சசிகலா-நடராஜன் திருமணமான சமயத்தில்.. சென்னையில், வீடியோ கடை நடத்திக் கொண்டிருந்த சசிகலாவுக்கு, போயஸ் தோட்டத்துக்குள் கால்வைக்க, கலெக்டர...

சசிகலா-நடராஜன் திருமணமான சமயத்தில்..

சென்னையில், வீடியோ கடை நடத்திக் கொண்டிருந்த சசிகலாவுக்கு, போயஸ் தோட்டத்துக்குள் கால்வைக்க, கலெக்டர் சந்திரலேகா ‘ரூட்’ போட்டுக் கொடுத்தார்; அவ்வளவுதான். ஆனால், அந்த ‘ரூட்’டில் சசிகலாவை, கச்சிதமாக, கவனமாக, பத்திரமாக 34 ஆண்டுகள் பயணம் செய்ய வைத்தவர் அவருடைய கணவர் நடராஜன்தான்.

நடராஜனை வைத்து ஜெயலலிதா போட்ட கணக்கு

சசிகலா-ஜெயலலிதா நட்பை வளர்த்தெடுத்ததிலும் நடராஜனின் பங்கு அளவிட முடியாதது. அதற்கு குறுக்கே, எம்.ஜி.ஆர் போட்ட தடைகளையே சமார்த்தியமாக தகர்த்து எறிந்தார் நடராஜன். எப்படி என்றால், கேசட் பரிமாற்றத்துக்காக ஏற்பட்ட, சசிகலா ஜெயலலிதா அறிமுகம் கொஞ்சம் நட்பாக துளிர்விடத் தொடங்கி இருந்தது. சசிகலாவின் குடும்ப விபரங்களை ஜெயலலிதா கேட்டுத் தெரிந்துகொண்டார். “ராமநாதபுரத்தில் இருந்து ஒருங்கிணைந்த தஞ்சைக்கு தன் முன்னோர்கள் குடிபெயர்ந்த கதை; திருத்துறைப்பூண்டியில் ‘இங்கிலீஷ்’ மருந்துக் கடைக்காரர் குடும்பம் என்று தன் குடும்பத்துக்கு பெயர் வந்த கதை; தனது அண்ணன் விநோதகன் டாக்டரான கதை” என்று சசிகலா சொன்னதில், ஜெயலலிதாவுக்கு பெரிதாக ஆர்வம் ஏற்படவில்லை. ஆனால், சசிகலா அவருடைய கணவரைப் பற்றிச் சொன்னபோது, ஜெயலலிதாவுக்கு கண்கள் ஆச்சரியத்தில் மலர்ந்தன. “தன் கணவர் நடராஜன், மொழிப்போராட்ட வீரர்; தி.மு.க மாணவர் இயக்கங்களில் பங்கெடுத்தவர்; அண்ணா, கருணாநிதியோடு நல்ல அறிமுகம் உள்ளவர்; பி.ஆர்.ஓ-வாகப் பணியாற்றுகிறார்; கலெக்டர் சந்திரலேகாவை தமிழகம் முழுவதும் பிரபலமாக கொண்டு சேர்த்ததில் தன் கணவரின் பங்கு அதிகம்'' என்றெல்லாம், சசிகலா சொல்லச் சொல்ல, ஜெயலலிதா மனதில் மின்னல் வெளிச்சம் பரவியது.

ஜெயலலிதாவுக்கு நடராஜனைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஒரு சுபயோக சுபதினத்தில், சசிகலா புண்ணியத்தில், நடராஜனும் போயஸ் கார்டன் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தார். ‘நடராஜன் தான் நினைத்ததுபோல், மிக சாதூர்யமான ஆள்’ என்பதை ஜெயலலிதா உணர்ந்து கொண்டார். ஆனால், அப்போது ஜெயலலிதா தன்னுடைய எதிர்காலத் திட்டங்கள் எதையும் நடராஜனிடம் பகிர்ந்துகொள்ளவில்லை. அது ஒரு சாதரண அறிமுகமாகத்தான் இருந்தது. ஆனால், எப்படியும் இந்த நபர், தனது அரசியல் வாழ்வில், மிகப்பெரிய  அஸ்திரமாக இருக்கப்போகிறார் என்பது ஜெயலலிதாவுக்கு மனதாரப் புரிந்தே இருந்தது.

இந்த காட்சிகள், போயஸ் கார்டனில் நடந்து கொண்டிருந்தபோதே, எம்.ஜி.ஆருக்கு விஷயம் போனது. அதற்காகவே, ஜெயலலிதாவின் வீட்டைச் சுற்றி எப்போதும் ஒற்றர்களை நியமித்து இருந்தார் எம்.ஜி.ஆர். போயஸ் கார்டனுக்குள் வந்துபோகும், புதிய பெண் யார் என்று விசாரிக்கச் சொன்னார். அவர்களை நேரில் வந்து சந்திக்கச் சொன்னார்.

சசிகலாவுக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த ‘அசைன்மென்ட்’

எம்.ஜி.ஆரின் உத்தரவு, சசிகலாவுக்கும் நடராஜனுக்கும் தெரிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவைச் சந்திக்க, போயஸ் கார்டனுக்குப் போனதுபோல், நடராஜனும், சசிகலாவும் எம்.ஜி.ஆரைச் சந்திக்க ராமவரம் தோட்டத்துக்கும் போனார்கள். நடராஜனை நேரில் பார்த்தபோது, எம்.ஜி.ஆருக்கு நன்றாக அவரைத் தெரிந்திருந்தது. தி.மு.க சகவாச நினைவுகள், நடராஜனை எம்.ஜி.ஆரின் நினைவடுக்குகளில் மேலே கொண்டு வந்தன. எம்.ஜி.ஆருக்கு மகிழ்ச்சி. காரணம், “நடராஜனுக்கு ஒரளவுக்கு நிலவரம் தெரியும். எனவே, தான் நினைத்த வேலை எளிமையானது” என்று எம்.ஜி.ஆர் நினைத்தார். “போயஸ் கார்டன் வீட்டில் என்ன செய்கிறீர்கள்” என்று ஒப்புக்கு கேட்டு வைத்தார். “ கேசட் கொடுப்பதற்காக என் மனைவி அங்கு போகிறார்” என்று நடராஜனும்  ஒப்புக்கு சொல்லி வைத்தார். சிரித்த முகத்தோடு கேட்டுக் கொண்ட எம்.ஜி.ஆர், சசிகலாவுக்கு கூடுதலாக ஒரு வேலையைக் கொடுத்தார். “போயஸ் கார்டனுக்கு வருகிறவர்கள் யார், ஜெயலலிதா யாரோடு பேசுகிறார், மொத்தமாக அங்கு என்ன நடக்கிறது?” என்பது பற்றி தெளிவாகத் தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார். “இந்தத் தகவல்களை கொடுக்க, எந்த நேரம் வேண்டுமானாலும் சசிகலா, ராமாவரம் தோட்டத்துக்கு வரலாம்... ஜானகி அம்மாள் உள்பட யாரும் தடுக்கமாட்டார்கள்” என்ற உத்தரவாதத்தையும்  எம்.ஜி.ஆர் சசிகலா-நடராஜன் தம்பதிக்கு அளித்திருந்தார். இதை ராமாவரம் தோட்டத்து ஊழியர்களும், பத்திரிகையாளர் வலம்புரிஜானும் பல்வேறு தருணங்களில் உறுதி செய்துள்ளனர்.

ஜெயலலிதாவை வைத்து நடராஜன் போட்ட கணக்கு

எம்.ஜி.ஆர் கொடுத்த அசைன்ட்மெண்டுக்கு சரியென்று தலையாட்டிவிட்டு வந்த நடராஜன்-சசிகலா தம்பதி, அந்த திட்டத்தை மாற்றிக் கொண்டதற்கு காரணம் இருந்தது. அப்போது, சசிகலாவின் வீடியோ கடை மூலம், ஜெயலலிதா பங்கேற்ற ஈரோடு, சென்னை நிகழ்ச்சிகள் படம் பிடிக்கப்பட்டன. ஜெயலலிதா அந்த வாய்ப்பை சசிகலா-நடராஜனுக்கு வாங்கிக் கொடுத்திருந்தார். அப்போது, ஜெயலலிதாவுக்குக் கூடிய கூட்டம் நடராஜனை பிரமிப்பில் ஆழ்த்தியது. ஏனென்றால், மாணவர் போராட்டங்களுக்கு கூட்டம் திரட்டிய அனுபவம் நடராஜனுக்கு இருந்தது. பத்துப்பேரை ஒரு நிகழ்ச்சிக்கு திரட்டுவதற்குள் நாக்குத் தள்ளிவிடும். ஆனால், ஜெயலலிதாவுக்கு தன்னிச்சையாக சாரை சாரையாக கூட்டம் திரண்டது. சாதரண விஷயமில்லை இது. இதைப் புரிந்து கொண்ட நடராஜன், இப்போது ஜெயலலிதாவை வைத்து ஒரு கணக்குப்போட்டார். “இப்போதைக்கு எம்.ஜி.ஆர்தான் கட்சி; எம்.ஜி.ஆர்தான் ஆட்சி என்ற நிலை இருக்கலாம்; எம்.ஜி.ஆரைச் சுற்றி இருக்கும் அதிகாரமையங்களில் ஜெயலலிதா கடைசி இடத்தில் இருக்கலாம்; ஆனால், எம்.ஜி.ஆருக்குப் பிறகு, ஜெயலலிதாவால் மட்டும்தான் கட்சியாக முடியும்; அதன்மூலம் ஜெயலலிதாவால் மட்டும்தான் ஆட்சியைப் பிடிக்க முடியும். அந்த ஆட்சியில் அதிகாரம் செலுத்த வேண்டுமானால், ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக வேண்டும்; ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக வேண்டுமானால், அது சசிகலாவின் வழியாகத்தான் தனக்குச் சாத்தியம்” என்று தீர்வுகளை அடுக்கியது நடராஜன் போட்ட கணக்கு.  அதனால், ஜெயலலிதாவை வேவு பார்க்கச் சொன்ன, எம்.ஜி.ஆரை எல்லாவழிகளிலும் சமாளிக்க முடிவு செய்தார் நடராஜன். சசிகலாவுக்கும் அதில் சில திட்டங்களைச் சொல்லிக் கொடுத்தார். “எம்.ஜி.ஆருக்கு விசுவாசமாக இருப்பதைவிட, ஜெயலலிதாவுக்கே விசுவாசமாக இருக்க வேண்டும்” என்று சசிகலாவுக்கு அறிவுறுத்தினார். ஆனால் நடராஜன் சொல்லாமலேயே, சசிகலாவுக்கு இயல்பாக அதுதான் கைவந்தது. “ஜெயலலிதாவும் பெண்; சசிகலாவும் பெண்” என்ற விதி வகுத்த நியதி அது. அதுபோல, தன் மனைவியைத் தவிர, வேறு யாரும் ஜெயலலிதாவை புதிதாக நெருங்காமல் பார்த்துக் கொண்டார் நடராஜன். சசிகலாவுக்கு முன்பே, ஜெயலலிதாவை நெருங்கி நட்பாக இருந்தவர்களை, எதிர்பாராத நேரங்களில் எல்லாம், அடித்துக் காலி செய்தார் நடராஜன். சசிகலா-ஜெயலலிதாவுக்கு இடையில் இருந்த, சசிகலா-ஜெயலலிதாவுக்கு இடையில் முளைத்த, அத்தனை தலைகளையும் நடராஜன் வெட்டித் தள்ளினார். அன்றும் சரி... இன்றும் சரி... இந்திரஜித்தைப்போல, மறைந்து இருந்தே அம்புகளைத் தொடுத்துப் பழக்கப்பட்டவர் நடராஜன். அவர் எப்போது தாக்குவார்? எப்படித் தாக்குவார்? எங்கிருந்து தாக்குவார் என்று அவர் எதிரிகள் திணறிக் கொண்டிருக்கும்போது, அவர்களை வீழ்த்திவிட்டு, அடுத்த களத்துக்குத் தயாராகிவிடுவார் நடராஜன். ஜெயலலிதாவுக்கு சசிகலாவைத் தவிர வேறு யாருமே இல்லாத நிலையை கச்சிதமாக உ ருவாக்கிய பிறகே ஒய்ந்தார் நடராஜன்.

ஜெயலலிதாவுக்குப் பின்னால் சசிகலா இருந்ததுபோல், சசிகலாவுக்குப் பின்னால் நடராஜன் இருந்தார்.

மேலும் பல...

0 comments

Blog Archive