'அரசியலுக்கு வருகிறார் ரஜினி: திட்டங்கள், கொள்கைகள் தயாரிப்பில் தீவிரம்'

 இந்த முறை ரஜினி அரசியலுக்கு வருவதை கடவுள் தீர்மானித்துவிட்டார். போர் வரும் வரை எல்லாம் காத்திருக்க வேண்டாம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கம...

 இந்த முறை ரஜினி அரசியலுக்கு வருவதை கடவுள் தீர்மானித்துவிட்டார். போர் வரும் வரை எல்லாம் காத்திருக்க வேண்டாம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

மே 15- 19-ம் தேதி வரை ரஜினி ரசிகர்களோடு நடத்திய சந்திப்பும், அதில் ரஜினி பேசிய பேச்சும் தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் இன்றளவும் பேசு பொருளாக இருந்துவருகிறது.

"ஜனநாயகம் கெட்டுப் போய் இருக்கிறது. அரசியல் பற்றி, ஜனநாயகம் பற்றி மக்களின் மன ஓட்டமே மாறி இருக்கிறது. முதலில் ஜனநாயகத்தை மாற்ற வேண்டும். மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும். அப்போதுதான் நாடு உருப்படும். அது அனைவருமே சேர்ந்து செய்ய வேண்டியது.

எனக்கும் கடமைகள், தொழில் மற்றும் வேலை இருக்கிறது. உங்களுக்கும் கடமைகள், தொழில் மற்றும் வேலை இருக்கிறது. உங்களுடைய கடமைகளைச் செய்துகொண்டே இருங்கள். போர் வரும் போது பார்த்துக் கொள்வோம். ஆண்டவன் இருக்கிறான்" என்று ரசிகர்களுடனான இறுதிநாள் சந்திப்பில் ரஜினி பேசியது ஹைலைட்டாக இருந்தது.

ரசிகர்களுடனான சந்திப்பு முடிந்தவுடன் 'காலா' படத்தின் படப்பிடிப்புக்காக மும்பைக்குப் பயணமானார் ரஜினி. முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு, சென்னை திரும்பியிருப்பவரை பல்வேறு அரசியல் தலைவர் சந்திக்கத் தொடங்கியுள்ளார்கள்.

ஜூன் 18-ம் தேதி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். ஜூன் 19-ம் தேதி இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் ரஜினியைச் சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அதே வேளையில் திருமாவளவன் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று வெளிப்படையாக வரவேற்பதுடன், மிகப் பெரிய மாற்று சக்தியாக ரஜினி இருப்பார் என்றும் கூறி வருகிறார்.

அரசியல் தலைவர்கள் மத்தியில் பேசு பொருளாக இருந்து வரும் ரஜினியின் மனநிலை என்ன என்பது குறித்து, அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்த போது கிடைத்த தகவல்கள்:

தமிழகத்தில் நிலவும் தற்போது நிலவும் பல்வேறு பிரச்சினைகளை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார் ரஜினி. மேலும், தான் அரசியலுக்கு வந்தால் தமிழக மக்களிடம் எந்தளவுக்கு வரவேற்பு இருக்கும் என்பதைக் கணக்கெடுத்துக் கொடுக்குமாறு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மூவரிடம் பேசிப் பெற்றுள்ளார்.

அக்கணக்கெடுப்பில் மக்கள் கண்டிப்பாக வரவேற்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்கள். இதனால் ரஜினி மிகவும் சந்தோஷமாக அடுத்தகட்டப் பணிகளில் இறங்கிவிட்டார்.

தனது அரசியல் அறிவிப்பு முதல் கூட்டத்தில் அறிவிக்கவுள்ள திட்டங்கள் குறித்து, பல்வேறு தரப்பில் ஆலோசனைகளை நடத்தி வருகிறார் ரஜினி. மக்களைக் கவரும் வெறும் கவர்ச்சி திட்டங்களாக இல்லாமல், தமிழகத்தில் நீண்டகாலமாக இருக்கும் பிரச்சினைகளை களையும் விதத்தில் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார் ரஜினி.

அவரைச் சுற்றியிருப்பவர்கள் கவர்ச்சிகரமான திட்டங்கள் கூறிய போது கூட "இதெல்லாம் அறிவித்தால் நமக்கும், மற்றவர்களுக்கு என்ன வித்தியாசம் சொல்லுங்கள்" எனக் கூறியுள்ளார் ரஜினி.

முதலில் ரஜினி அரசியலுக்கு வரத் திட்டமிட்ட போது, குடும்பத்தினர் மத்தியில் சிறு அளவு எதிர்ப்பு நிலவி உள்ளது. சிங்கப்பூரில் சிகிச்சையில் இருக்கும் போது, இங்குள்ள மக்கள் தனக்குக் கொடுத்த ஆதரவு ஒவ்வொன்றையும் பார்த்த பிறகே, கண்டிப்பாக அரசியலுக்கு வந்து நல்லது செய்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்துள்ளார் ரஜினி. அப்போது குடும்பத்தினர் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

அரசியலுக்கு வருவது எனத் தீர்மானித்தவுடன், முதலில் இதுவரை திரையுலகிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் செய்த தவறு என்ன என்பதைத் தெரிந்து கொண்டுள்ளார். மேலும் அரசியல் ரீதியாகப் பேசுவதற்குத் தன்னைச் சுற்றி மிகவும் நெருக்கமானவர்களை மட்டுமே சேர்த்துள்ளார்.

எந்தவொரு காரணத்தைக் கொண்டும், அரசியல் ரீதியாக நாம் பேசும் கருத்துகள் எதுவும் வெளியே கசிந்துவிடக்கூடாது என்பதுதான் அதற்குக் காரணம்.

ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் அரசியல் தொடர்பாக எந்தவொரு விவாதத்திலும் கலந்து கொள்ளக் கூடாது. கருத்து தெரிவிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காரணம், தன்னுடைய முதல் அரசியல் கூட்டத்தில், தனது கட்சிக்கான கொள்கைகள், கோட்பாடுகள் உள்ளிட்டவற்றை எடுத்துரைக்கவுள்ளார் ரஜினி. அதுவரை ரஜினியின் கொள்கைகள் என யாரும் எதையும் பேசிவிடக் கூடாது என்பது தான் முக்கியக் காரணம்.

தனது பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், உண்மையில் ரஜினி இன்னும் அதைப் பற்றி முடிவு செய்யவில்லை. மிகவும் பொறுமையாகத் தன்னுடைய ஒவ்வொரு அசைவும் இருக்க வேண்டும்.

தற்போது திட்டங்கள், கொள்கைகள் உள்ளிட்ட அனைத்துமே முடிவானவுடன் மட்டுமே முதல் கூட்டம் எப்போது என்பதை முடிவு செய்யவுள்ளார் ரஜினி.

ஆகையால், இந்த முறை ரஜினி அரசியலுக்கு வருவதை கடவுள் தீர்மானித்துவிட்டார். போர் வரும் வரை எல்லாம் காத்திருக்க வேண்டாம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். 

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About