உரு / விமர்சனம்

டிகாஷன் காபிக்கு ஆசைப்படும் நாக்குக்கு “ஹேய்… இது ‘ப்ரூ’ டா!?” என்று அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுக்கும் கிச்சன் கேபினெட் போல, ஹேய...

டிகாஷன் காபிக்கு ஆசைப்படும் நாக்குக்கு “ஹேய்… இது ‘ப்ரூ’ டா!?” என்று அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுக்கும் கிச்சன்
கேபினெட் போல, ஹேய் இது ‘உரு’டா என்று நம்மை உருள விடுகிறது படம்! வாழுகிற காலத்திலேயே பெரிய கட்டுரை ஒன்று பாராவாக தேய்ந்து… அந்த பாராவும் பின்பு வரியாக சுருங்கி, கடைசியில் ஒரு எழுத்துக்குள் அடங்கிவிடுகிற அளவுக்கு உளுத்துப் போகிறார் எழுத்தாளர் கலையரசன். “உங்க கதைக்கெல்லாம் முன்ன மாதிரி வாசகர்கள்ட்ட ஒரு மரியாதையும் இல்ல. போய் நல்ல கதையா எழுதிட்டு வாங்க” என்று பிடறியை பிடித்து தள்ளாத குறையாக அனுப்பும் பதிப்பக உரிமையாளருக்கு பாடம் கற்பிக்கும் விதத்தில் ஒரு கதை பண்ண பிரியப்படும் மிஸ்டர் எழுத்தாளர், கொடைக்கானலுக்கு கிளம்புகிறார். ஏன்? கதை எளுதறதுக்குத்தான்!

அவரது இளம் மனைவி தன்ஷிகா, “ஏங்க… கொஞ்ச நாள் வரைக்கும்தான் உங்களுக்கு டைம். நல்ல நிலைக்கு வரலேன்னா எழுதறத விட்டுத் தொலைச்சுட்டு வேற வேலைய பாருங்க” என்கிறார். (படத்தில் அப்படியாவது வேறு வேலைகளுக்குரிய கசா முசா இருக்குமா என்றால், தன்ஷிகா என்ற திராட்சை தோட்டத்தில் யானை புகுந்து எலும்பை நொறுக்குகிறதே தவிர ரொமான்டிக்காக ஒரு சுச்சுவேஷனும் இல்லை)

கொடைக்கானல் வருகிற கலையரசன் கதை எழுத எழுத அந்த கதையில் வரும் சம்பவங்கள் எல்லாமே அவருக்கு நிகழ்கிறது. ஒரு கட்டத்தில் அவரையே கொல்ல வரும் அந்த முகமூடி மனிதன் யார்? அவன் ஏன் தன்ஷிகாவை விரட்டி விரட்டி துன்புறுத்துகிறான்? கணவனை தேடிக் கொடைக்கானல் வரும் தன்ஷிகா அங்கிருந்து உயிருடன் தப்பினாரா? இதெல்லாம்தான் முழு படமும்.

படம் முழுக்க அரையிருட்டு. யாராவது யாரையாவது துரத்தி துரத்தி அடிக்கிறார்கள். ரத்தம் குபு குபுவென கொப்பளிக்கிறது. நமது பின் சீட்டில் ஒரு கை முளைத்து காதை திருகினால் என்ன பண்ணுவது என்கிற அளவுக்கு அச்சம் அனத்துகிறது. நல்லவேளை… அவ்வளவு வன்முறைகளையும் அதன் காரம் மணம் சுவை குறையாமல் நமது மனதுக்குள் இறக்கி வைக்க பெரிதும் உதவியிருக்கிறது பிரசன்னா எஸ்.குமாரின் ஸ்மார்டான ஒளிப்பதிவு.

படத்தின் ஹீரோ யார்? தன்ஷிகாவா, கலையரசனா என்கிற குழப்பம் இல்லாமல் நீங்கள் தியேட்டரை விட்டு வெளியே வர முடியாது. அந்த முகமூடி மனிதனிடமிருந்து தப்பித்து ஓடி ஒளியும் காட்சிகளில் தன்ஷிகா நிஜமாகவே மூச்சிரைத்து நிஜமாகவே அலறுகிறார். இது நடிப்புதாம்ல? என்று பெட் கட்டினாலும் கட்டியவருக்கு தோல்விதான். அந்தளவுக்கு தன்ஷிகா ஆஹா ஓஹோ. (அவ்வளவு கலவரத்திலேயும் உங்க லிப்ஸ்டிக் கலையலையே, அது என்னம்மா ரகசியம்?)

அதற்கப்புறம் கலையரன். இவ்விருவரையும் தாண்டி படத்தில் குறிப்பிட ஒருவரும் இல்லை. கலையரசனுக்கு ஏற்பட்டிருக்கும் அந்த வியாதி அவரோடு ஒழியட்டும். இனி எந்த சினிமாவிலும் வேண்டாமப்பா…

ஆங்காங்கே எட்டிப் பார்க்கிறார் மைம் கோபி. அட நல்லது பண்ணப் போகிறார் என்று பார்த்தால் கடைசியில் இவரும் தன்ஷிகாவை அடிக்க கட்டையை ஓங்குவது அநியாயம்ப்பா…

ஜோகனின் பின்னணி இசைக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவம் பாடல்களுக்கு இல்லாமல் போனது வேதனையே. (அட… பாட்டே இல்லீங்க சாமீய். இருக்கிற ஒரு பாடலிலும் அரை பாட்டு ஸ்வாகா)

ஒரு பங்களா… அதற்குள் தனியாக மாட்டிக் கொள்ளும் தம்பதி என்று பலமுறை பார்த்த த்ரில்லர் ஜானர்தான்! நல்லவேளை… பேய் ஆவி பில்லி சூனியம் என்று சுற்றி வளைக்காமல் விட்டதற்காக ‘உரு’வுக்கும் படத்தின் இயக்குனர் விக்கி ஆனந்துக்கும் ஒரு உருப்படியான நமஸ்காரம்!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About