நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்!

உடல்பருமன், நம்மை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் பெரிய பிரச்னை. உயர் ரத்தஅழுத்தம், இதயநோய் போன்ற பல உடல்நலக் கோளாறுகளை வரவேற்கும் வாசல். அதிக ...

உடல்பருமன், நம்மை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் பெரிய பிரச்னை. உயர் ரத்தஅழுத்தம், இதயநோய் போன்ற பல உடல்நலக் கோளாறுகளை வரவேற்கும் வாசல். அதிக அளவில் பெரியவர்களைப் பாதித்துக்கொண்டிருந்த இந்தப் பிரச்னை, இப்போது குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை. `உடல்பருமன் குழந்தைகள் அதிகமுள்ள நாடுகளில் இந்தியா’ இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம். கடந்த ஆறு மாதங்களுக்கு முந்தைய நிலவரப்படி, இந்தியாவில் ஒரு கோடியே 44 லட்சம் குழந்தைகள் உடல்பருமனோடு இருக்கிறார்கள். சரி.. உடல்பருமன் எப்படி ஏற்படுகிறது. நம் உடல் இயக்கத்துக்கு உதவும் கொழுப்பு, உணவின் மூலமாகத்தான் கிடைக்கிறது. உணவின் வழியாக நமக்குக் கிடைக்கும் அதிகப்படியான கொழுப்பு உடலில் தேங்கும்போது உடலின் தோற்றமே மாறிவிடும். அந்தக் கூடுதல் கொழுப்பினால்தான் நாம் உடல்பருமன் பிரச்னையை எதிர்கொள்கிறோம். ``நம் உடலில் இருக்கும் இன்னொரு கொழுப்பே உடல் எடை குறைப்பதற்கும் உதவும் என்பதை அண்மையில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதன் பெயர் பிரௌன் ஃபேட் (Brown Fat)’’ என்கிற பிசியோதெரபிஸ்ட் ரம்யா, அது குறித்து விரிவாகப் பேசுகிறார்.

உடல் எடை

அது என்ன பிரௌன் ஃபேட்?

நம் உடலில், `மஞ்சள் நிறக் கொழுப்பு’, `பிரௌன் நிறக் கொழுப்பு’ (Brown adipose tissue (BAT) or Brown fat) என்று இரண்டு வகைக் கொழுப்புகள் உள்ளன. உணவிலிருந்து கிடைக்கும் மஞ்சள் கொழுப்பு உடல் எங்கும் படியும். பெண்களுக்கு இடை, வயிறு ஆகிய இடங்களில் படியும். ஆண்களுக்கு வயிற்றுப் பகுதியில் படியும். உணவிலிருந்து பெறப்படும் இந்த வகைக் கொழுப்பு எனர்ஜியாக மாற்றப்பட்டு உடல் இயக்கத்துக்கு உதவும். தசைகளில் கொழுப்பாகப் படியும்.டாக்டர் ரம்யா

பிரௌன் ஃபேட் உடலில் இயற்கையாகவே இருக்கிறது. இது கழுத்து மற்றும் தோள்பட்டைப் பகுதியில் படிந்திருக்கும். குழந்தைப் பருவத்தில் சுறுசுறுப்பாக இயங்கும். உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும். உணவிலிருந்து கிடைக்கும் எனர்ஜியை எரிக்கும் வேலையை பிரௌன் ஃபேட் செய்கிறது. குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்னர் இந்தக் கொழுப்பு கும்பகர்ணனைப்போலத் தூங்க ஆரம்பித்துவிடும். குளிர் அதிகரிக்கும்போது பிரௌன் ஃபேட் தூண்டப்படும். குளிரான சூழலில் உடல் வெப்பநிலையை அதிகரிக்கும் வேலையை பிரௌன் கொழுப்பு செய்யும். இதனால்தான் குழந்தைகள் குளிரில் அதிகமாக நடுங்குவதில்லை.

ஆய்வாளர்கள் பிரௌன் ஃபேட்டை அதிகரிக்கவும், அதைத் தூண்டி இயக்கவும் ஆய்வுகள் செய்துவருகிறார்கள். பெட் ஸ்கேன் (Pet scan) மூலம் நம் உடலில் எங்கெல்லாம் பிரௌன் கொழுப்பு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இந்த ஸ்கேன் பரிசோதனை காஸ்ட்லியானது. உடலில் புற்றுநோய் செல்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய உடலில் பெட் ஸ்கேன் பரிசோதனை செய்வார்கள். புற்றுநோய் செல்களைக் கண்டறிய ரேடியோஆக்டிவ் மெட்டீரியல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் பரிசோதனையின்போது புற்றுநோய் செல்களின் நிறம் மாறுகின்றன. இதைவைத்து, உடலில் எங்கெல்லாம் புற்றுநோய் செல்கள் இருக்கின்றன என்பது கண்டறியப்படுகிறது.

அதேபோல் உடலில் எந்தெந்த இடங்களில் பிரௌன் ஃபேட் இருக்கிறது என்பதைக் கண்டறிய பெட் ஸ்கேனின்போது ரேடியோஆக்டிவ் சுகர் மாலிக்கியூல் (Radioactive Sugar Molecules) உடலில் இன்ஜெக்ட் செய்யப்படும். உடலில் செலுத்தப்படும் சுகர் மாலிக்கியூலை, பிரௌன் கொழுப்பு ஈர்த்துவிடும். இதன் மூலமாக உடலில் எங்கெங்கு பிரௌன் ஃபேட் இருக்கிறது என்பதைக் கண்டறியலாம். இந்த பிரௌன் ஃபேட்டை செயல்படச் செய்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும் என்கின்றன சில ஆய்வுகள். அப்படி, உடற்பயிற்சி செய்வதன் மூலமாக இதைத் தூண்ட முடியும்.

இதைத் தூண்டிச் செயல்படவைக்க கூல் தெரபியும் (Cool Therapy) கொடுக்கப்படுகிறது. வயிற்றுப் பகுதியில் இருக்கும் கொழுப்பைக் கரைக்க கூல் தெரபியைப் பயன்படுத்துகிறார்கள். உடலின் மார்பகப் பகுதி மற்றும் இடுப்பின் கீழ்ப்பகுதியை மறைத்துவிட்டு அறையை மைனஸ் டிகிரியில் குளிரச் செய்வார்கள். அப்போது வயிற்றுப் பகுதியில் இருக்கும் பிரௌன் ஃபேட் தூண்டப்பட்டு, அதிகமாகச் சேமிக்கப்பட்டுள்ள மஞ்சள் கொழுப்பு கரைக்கப்படும். கூல் தெரபி மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும்.

இதுவரை பிரௌன் ஃபேட்டை அதிகரிப்பதற்கான உணவுகள் என்று எதுவும் கண்டறியப்படவில்லை. பிரௌன் கொழுப்பைச் செயல்படவைக்க உடற்பயிற்சி உதவும். உங்கள் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், குறைக்கவும்..பிரௌன் கொழுப்பைத் தூங்கவிடாமல் வைத்திருந்தாலே போதும்’’ என்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா.

உடல் எடை குறைப்புக்கான கொழுப்புகள் குறித்து டெர்மடாலஜிஸ்ட் (Dermatologist) ரேவதியிடம் பேசினோம்... ``உடல் எடைக் குறைப்புக்கு மெஷினரியை நம்புறவங்களுக்கு தோல் பகுதியில் படியும் வெண் கொழுப்பைக் கரைத்து, குறைக்கிறோம். இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே கொழுப்பைக் குறைக்க முடியும். இன்னொன்று, உடல் உறுப்புகளில் உள்ள விஸிரல் ஃபேட் (Visceral Fat (Active Fat). இது இயற்கையா நம் உடல் உறுப்புகள்ல இருக்கும் கொழுப்பு. வயிற்றுப் பகுதியில் இருக்கும் உள் உறுப்புகள்ல இந்த விஸிரல் ஃபேட் காணப்படும். இதை டயட் மற்றும் உடற்பயிற்சி மூலமா குறைக்கலாம். பேலியோ டயட்ல இது போலத்தான் நடக்குது. கார்போ ஹைட்ரேட் எடுத்துக்காதபோது உடலில் இருக்கும் கொழுப்பை, நம்ம உடம்பில் உள்கட்டமைக்கப்பட்டிருக்கிற மெக்கானிசம் கார்போ ஹைட்ரேட்டா மாத்துது. அப்போ உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு கரைந்து, உடல் எடை குறையும். உடற்பயிற்சி மூலமாவும் உடல் உறுப்புகளில் இருக்கும் விஸிரல் ஃபேட்டைக் குறைக்க முயற்சி செய்யலாம். ஆனாலும் இதற்கு கடுமையான டயட் மற்றும் உடற்பயிற்சி செய்யணும். கொழுப்பு மெதுவாகத்தான் குறையும்.டாக்டர் ரேவதி

உடலில் தேங்கியிருக்கும் பிரௌன் ஃபேட்டை `நல்ல கொழுப்பு’னு சொல்றோம். இந்தக் கொழுப்புல இரும்புச்சத்து அதிகம் இருக்கிறதால அடர் சிவப்பு நிறத்துல இருக்கும். பிரௌன் ஃபேட் அதிகளவில் ஆக்சிஜனை எடுத்துக்கும். இது கழுத்தைச் சுற்றி கவசம் மாதிரி படர்ந்திருக்கு. பிரௌன் ஃபேட் செயல்படும்போது உடல் வெப்பத்தை அதிகரிக்க, வெண் கொழுப்பைக் கரைக்கும் வேலையையும் பார்க்குது. மனிதர்கள், மிருகங்கள் குளிர் பிரதேசங்கள்ல இருக்கும்போது உடல் வெப்பத்தைத் தக்கவைக்கிற வேலையை பிரௌன் ஃபேட் செய்யும். பிறந்த குழந்தைகளிடம் இது அதிக சுறுசுறுப்பாகச் செயலாற்றும். உடலில் பிரௌன் ஃபேட் ஆக்டிவாக இருப்பவர்கள் அவ்வளவு எளிதில் குண்டாக மாட்டாங்க. குண்டாக இருப்பவர்களின் உடலில் இருக்கும் பிரௌன் ஃபேட் செம தூக்கத்தில் இருக்கும். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை ஹைப்போதெர்மியா (Hypothermia) நோயிலிருந்து பாதுகாக்கும் வேலையை பிரௌன் ஃபேட் செய்கிறது.

உடல் எடை பிரச்னையைச் சமாளிக்க பல்வேறு ஆய்வுகள் நடந்துவருகின்றன. அவற்றில், பிரௌன் ஃபேட்டைச் செயல்படவைத்து, உடல் எடை கூடுவதைத் தடுக்க முடியுமா என அறியும் ஆய்வுகளைத் தீவிரப்படுத்தியிருக்காங்க. உண்மையில் உடலில் உள்ள பிரௌன் ஃபேட் அளவைக் கூட்டுவதற்கான வழி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. குறைஞ்ச வெப்பநிலையில் உடலில் உள்ள பிரௌன் ஃபேட் ஆக்டிவேட் செய்யப்பட்டவர்களின் உடலில் அதிக கலோரி செலவு செய்யப்பட்டதுனு ஓர் ஆய்வுல கண்டுபிடிச்சிருக்காங்க. இதுக்கான சிகிச்சைகள் இன்னும் பரவலாக்கப்படலை. பிரௌன் ஃபேட்டைவெச்சு வெண் கொழுப்பைக் கரைக்கவும் ஆய்வுகள் நடக்கின்றன. எதிர்காலத்துல உடல் எடை குறைப்புல இந்த பிரௌன் ஃபேட்டோட பங்கு முக்கியமானதா இருக்கும்’’ என்கிறார் மருத்துவர் ரேவதி.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About