ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் திரை விமர்சனம்

படம் எப்படி இருக்கின்றது, இல்லை என்பதை தாண்டி அட, இது விஜய் சேதுபதி படம் என்று நம்பி போகும் இடத்திற்கு சேதுபதி வளர்ந்துவிட்டார். அவரின் தரம...

படம் எப்படி இருக்கின்றது, இல்லை என்பதை தாண்டி அட, இது விஜய் சேதுபதி படம் என்று நம்பி போகும் இடத்திற்கு சேதுபதி வளர்ந்துவிட்டார். அவரின் தரமான பட வரிசையில் இந்த வாரம் திரைக்கு வந்துள்ள படம் தான் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், இந்த படமும் அந்த வரிசையில் சேர்ந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

எமசிங்கபுரம் இது தான் கதைக்கு அடித்தளம். ஊரின் இளவரசராக விஜய் சேதுபதி. மன்மதன் போல ஒரு தனி பிரதேசத்தில் ராஜாங்கம் செய்து வரும் இவரது குடும்பத்தில் ஒரு விசயம் நடந்து போக, எடுத்த சபதத்தை முடிக்க சென்னை நகரத்திற்கு தன் நண்பர்களுடன் பயணிக்கிறார்.

சென்னையில் வித்தியாசமான தோற்றங்களில் தன் கொள்கையை அடைவதற்காக மாறுகிறார். படத்தின் ஹீரோயின் நிகாரிகாவை பிளான் போட்டு கடத்தி தன் எல்லைக்கு கொண்டு செல்கிறார்.

இதற்கிடையில் கல்லூரியில் படிக்கும் ஹீரோயினின் விசயத்தில் கௌதம் கார்த்திக் உள்ளே நுழைகிறார். நண்பராகிறார். விளையாட்டாய் ஒன்றை செய்ய அது விவகாரமாய் முடிகிறது.

கடைசியில் கடத்தப்பட்ட தன் தோழி நிஹாரிகாவை தேடி இவரும் காட்டுக்குள் பயணப்படுகிறார். அங்கு உள்ளே சென்றால் பல நிகழ்வுகள். புது உலகம். புரியாத புதிர் தான்.

எப்படி எப்படியோ போய் கடைசியில் அந்த காட்டுவாசி எமலோக மக்களிடத்தில் இவரும் இவரது நண்பர் டேனியலும் மாட்டுகிறார்கள். ஹீரோயின் ஏன் கடத்தப்பட்டார்? அதன் பின்னணி என்ன?

விஜய் சேதுபதியின் சபதம் நிறைவேறியதா என்பது தான் கதை.

படத்தை பற்றிய அலசல்

விஜய் சேதுபதிக்கு எப்போதுமே ஒரு மாஸான வரவேற்பு இருக்கிறது. அவரின் புதிய முயற்சியாக வந்திருக்கிறது ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன். படம் முழுக்க இவரின் பங்கீடு காட்சிகளை நிறைவாக்குகிறது.

வினோத மனிதர்கள், விசித்திரமான கொள்கை என இருக்கிறார் விஜய் சேதுபதியின் அம்மாவாக வரும் விஜி சந்திரசேகர். அம்மாவுக்கும் மகனுக்கும் உள்ள உறவு கொஞ்சம் வித்தியாசம்.

படக்குழு ஆரம்பத்திலிருந்தே சொல்லி வந்தது போல கௌதம் கார்த்திக்கு ஒரு புதுமையான ரோல். இவரும் இவரது நண்பர் டேனியலும் சேர்ந்தால் ஒரே காமெடி கலாட்டா தான். தெலுங்கு பட சீரியஸ் விசயங்களை காமெடியாக்கியதை நீங்களும் பாருங்கள்.

ஆனால் விஜய் சேதுபதியுடன் படம் முழுக்க ட்ராவல் செய்கிறார். வாண்டட்டாக வந்து மாட்டி செமையாக வாங்கிகட்டும் காட்சிகள் படத்தில் நிறைய.

இது போக விஜய் சேதுபதியின் நண்பர்களாக ரமேஷ் திலக், ராஜ் குமார் ஆகியோர் காமெடி செய்கிறார்கள். காமெடிக்கு பஞ்சமில்லை. இவர்களுடனான ஒரு ஃபிரண்ட் ஷிப் ஒரு நல்ல எண்டர்டெயின் மெண்ட்.

ஹீரோயின் ஒரு அப்பாவியாக, நடப்பது ஒன்றும் புரியாமல் திணறுகிறார். விஜய் சேதுபதி ஏன் இவரின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார் என அவரின் தேடல் புதிரானது.

பின் அது குறித்து விசாரிக்கையில் இவருக்கே பெரும் அதிர்ச்சி. மலைவாழ் கூட்டத்திற்கு நடுவே இவர் தப்பிக்க உதவியாய் இருக்கிறார் இன்னொரு ஹீரோயின் காயத்திரி. அவருக்கும் ஒரு பெரிய ஃபிளாஷ் பேக் இருக்கிறது.

ஒரு வித்தியாசமான கதை என்பதை விட ஒரு முழுமையான பொழுது போக்கான படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆறுமுகக்குமார். இரண்டாம் பாகம் தொடருமா என்பதற்கு பதில் படத்தில் இருக்கும்.

எமலோகத்தை படத்தில் பார்த்தவர்களுக்கு இப்படத்தின் எமசிங்கபுரம் செட், ஆண்கள் தாலி லாஜிக் இடிக்கும் விசயங்கள் கூட புதுமையாக தெரியலாம்.

பாடல் காட்சிகள், காட்சிகளை படமாக்கிய விதம் என ஒளிப்பதிவு விசயங்களை நேர்த்தியாக்கியிருக்கிறார்கள்.

கிளாப்ஸ்

விஜய் சேதுபதியின் நடிப்புக்கு வழக்கம் போல கைதட்டல் தான். எமராஜவாக செம ஸ்கோர்.

தெலுங்கிலும் இனி இவருக்கு ஆடியன்ஸ் கூடுவார்கள் போல.

டேனியல், கௌதம் காமெடி படத்தில் சூப்பர் ஸ்கோர். சிரிப்புக்கு கியாரண்டி.

லம்பா பாடல், பின்னணி இசை என ஜஸ்டினின் இசை கேட்கும் ரகம்.

பல்ப்ஸ்

பெரிய எதிர்பார்ப்புடன் இருந்த கதைக்கரு கடைசியில் மிகவும் சிம்பிளானது போல் தெரிந்தது.

சில காமெடிகள் ஒர்க்கவுட் ஆகாதது போல இருந்தது.

மொத்தத்தில் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் முழுமையான பொழுதுபோக்கு. நம்பி போகலாம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About