மதுரவீரன் திரை விமர்சனம்

விஜயகாந்த் ஒரு காலத்தில் ரஜினி, கமலுக்கு போட்டியாக இருந்த நடிகர், தீவிர அரசியலால் நடிப்பில் இருந்து விலகினார். இந்த நிலையில் தன் மகன் சண்மு...

விஜயகாந்த் ஒரு காலத்தில் ரஜினி, கமலுக்கு போட்டியாக இருந்த நடிகர், தீவிர அரசியலால் நடிப்பில் இருந்து விலகினார். இந்த நிலையில் தன் மகன் சண்முகபாண்டியனை விஜய்காந்த் சகாப்தம் படத்தின் மூலம் களம் இறக்கினார். ஆனால், அப்படம் பெரும் தோல்வியடைய அதை தொடர்ந்து மதுரவீரனாக மீண்டும் சண்முகபாண்டியன் களம் கான, இந்த மதுரவீரன் சகாப்தம் படைத்தாரா? பார்ப்போம்.

கதைக்களம்

சமுத்திரக்கனி ஊரில் எல்லோரும் மதிக்கும்படி இருக்கும் ஒரு நபர். ஜல்லிக்கட்டில் மேல் ஜாதி, கீழ் ஜாதி இருக்க கூடாது எல்லோரும் இறங்கி மாடுபிடிக்க வேண்டும் என்பதே அவரின் விருப்பம்.

ஒரு கட்டத்தில் சமுத்திரக்கனியையே ஒரு கும்பல் கொல்ல, தன் அப்பாவை கொலை செய்தது யார் என்று கண்டுப்பிடிக்க, சண்முகபாண்டியன் மலேசியாவிலிருந்து தன் சொந்த ஊருக்கு வருகின்றார்.

வந்த இடத்தில் தன் தந்தை ஜல்லிக்கட்டிற்காக தான் போராடினார் என அவரின் நோக்கம் அறிந்து ஜல்லிக்கட்டையும் நடத்த வேண்டும், அதே சமயம், தன் அப்பாவை கொன்றவனையும் பிடிக்க வேண்டும், இது இரண்டையும் சிறப்பாக சண்முகபாண்டியன் செய்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

சண்முகபாண்டியன் சகாப்தம் படத்திற்கு எவ்வளவோ தேவலாம், நல்ல முன்னேற்றம் இருந்தாலும் இன்னமும் ஏதோ கேமரா பயம் தெரிகின்றது. அப்பாவை போலவே ஆக்‌ஷன் நன்றாக வருகின்றது, இன்னும் கொஞ்சம் மெனக்கெடுத்தால் அப்பாவை போலவே ஒரு ரவுண்ட் வரலாம் சார்.

மீனாட்சி அப்படியே கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் பொருந்தி போகின்றார். சமுத்திரக்கனி இதுவரை அவர் படங்களில் என்ன செய்தாரோ, அதே தான், அட்வைஸ் செய்வது, பொறுப்பாக இருப்பது என பார்த்து பழகி போன கதாபாத்திரம் என்றாலும் அதையும் சிறப்பாக செய்து முடித்துவிட்டார்.

படத்தில் சமுத்திரக்கனியின் கொலையை கண்டுப்பிடிக்க வரும் சண்முகபாண்டியன் திடிரென்று ஜல்லிக்கட்டு பக்கம் திரும்புகின்றார். அதை தொடர்ந்து தமிழகத்தில் நடந்த மாபெரும் ஜல்லிக்கட்டு போராட்ட வீடியோக்கள், விஜய் ஜல்லிக்கட்டு ஆதரவு வீடியோ என இரண்டாம் பாதி முழுவதும் பல மலரும் நினைவுகளை ஒரு தொகுப்பாக தொகுத்து கொடுத்துள்ளார் முத்தையா.

படத்தின் மிகப்பெரும் பலம் ஒளிப்பதிவு தான், இயக்குனரே ஒளிப்பதிவாளர் என்பதால், மிகவும் சிறப்பாக செய்துள்ளார், சந்தோஷின் பின்னணி இசை மிரட்டல்.

இப்படி ஒரு பாசிட்டிவான கதைக்களம், மக்கள் உணர்வோடு விளையாடும் ஒரு களம் என்றாலும், ஜல்லிக்கட்டு காட்சிகள் போதும் போதும் என்று நீள்வது கொஞ்சம் மைனஸாக தெரிகின்றது. ஏனெனில் சண்முகபாண்டியன் வந்த நோக்கத்தை விட்டு வேறு திசையில் திரும்புவது, சமுத்திரக்கனியை கொன்றவன் யார்? என்ற த்ரில்லை உடைத்து கொஞ்சம் தடுமாறுகிறது திரைக்கதை.

க்ளாப்ஸ்

ஜல்லிக்கட்டு என்ற வீரவிளையாட்டில் இருக்கும் ஜாதி மோதலை மிக தைரியமாக காட்டிய விதம்.

படத்தின் ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை.

ஜல்லிக்கட்டு போராட்ட வீடியோக்கள் நாம் இதுவரை பார்க்காத பல விஷயங்களை தொகுத்து வழங்கிய விதம்.

பல்ப்ஸ்

முன்பே சொன்னது போல் இரண்டு திசையில் கதை நகர்வது கொஞ்சம் திரைக்கதையில் தடுமாற்றம் தெரிகின்றது.

அதிலும் ஜல்லிக்கட்டு வீடியோக்கள் வந்தால் மக்கள் கைத்தட்டுவார்கள் தான், அதற்காக அத்தனை நீளமா?.

மொத்தத்தில் மதுரவீரன் சகாப்தம் படைப்பாரா என்று தெரியவில்லை, ஆனால், மக்களின் மனதை வெல்வான்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About