`நீங்க கண்ணடிக்கிற ஸ்டைலே தனிதான்!' - ஸ்பீச் தெரபி, ஞாபக மீட்புக்கு இடையே கலகலக்கும் விஜயகாந்த்

அரசியல்ரீதியான அறிக்கைகளைத் தவறாமல் வெளியிட்டு வருகிறார் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த். ' தைராய்டு உள்ளிட்ட சில பிரச்னைகளுக்காகத் தொடர்ந...

அரசியல்ரீதியான அறிக்கைகளைத் தவறாமல் வெளியிட்டு வருகிறார் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த். ' தைராய்டு உள்ளிட்ட சில பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார். நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில், பழைய நண்பர்களை சந்தித்துப் பேசி வருகிறார். இதுவும் சிகிச்சையின் ஓர் அங்கம்தான்' என்கின்றனர் தே.மு.தி.க நிர்வாகிகள்.

பேருந்து கட்டண உயர்வாக இருந்தாலும் மாணவர்களை வதைக்கும் தேர்வுகளாக இருந்தாலும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்திடம் இருந்து தவறாமல் அறிக்கை வந்துவிடுகிறது. தன்னை சந்திக்க வருகிறவர்களிடம், அரசியல் நடப்புகளைப் பற்றி விரிவாகப் பேசி வருகிறார். கடந்த வாரம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், விஜயகாந்தை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, ' அரசியலில் ரஜினி, கமலைவிட நான் சீனியர் என நீங்கள் கூறியதாகப் படித்தேன். உண்மைதான்' எனக் கூறியபோது, பலமாக சிரித்தார் விஜயகாந்த்' எனப் பதிவு செய்திருந்தார் நடிகர் கமல்.

இந்நிலையில், திரையுலகப் பிரமுகர்களுக்கு நேற்று விஜயகாந்திடம் இருந்து திடீர் அழைப்பு. இந்த சந்திப்பில், திரைத்துறையில் நடந்த பல விஷயங்களை விஜயகாந்திடம் பேசி நினைவூட்டியுள்ளனர் சிலர். ' கேப்டன் நீங்க கண்ணடிச்சு நடிக்கிற ஸ்டைலே தனிதான்' என ஒருவர் பேச, அதை வெகுவாக ரசித்திருக்கிறார். ' விடிய விடிய நடக்கும் ஷூட்டிங்கில் நள்ளிரவில் உங்களை சந்தித்ததுபோது, நீங்கள் பேசிய விஷயங்களை மறக்க முடியாது' என அந்தக் காட்சிகளை விவரித்தபோது, ' ஆமாமா...அதையெல்லாம் எப்படி மறக்க முடியும்' எனப் பேசியிருக்கிறார். தொடர்ந்து ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக பேசியிருக்கிறார் விஜயகாந்த்.

தே.மு.தி.க நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். " இரண்டு ஆண்டுகளாக தொடர் சிகிச்சையில் இருக்கிறார் விஜயகாந்த். கடந்த ஆண்டு மார்ச் மாதம் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ' வழக்கமாக மேற்கொள்ளப்படும் பரிசோதனைதான்' என தே.மு.தி.க தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் சிங்கப்பூர் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டார். அடிக்கடி கண்ணில் நீர்வடிதல், சர்க்கரை குறைபாடு, தைராய்டு உள்பட சில உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளானார். அவரது கழுத்துப் பகுதியும் சற்று வீக்கமாகவே காணப்பட்டது. சிங்கப்பூர் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெறும் படங்களும் வெளியானது. தொடர்ச்சியான மருந்துகளால் ஞாபக மறதி உள்பட சில விஷயங்களில் பாதிப்படைந்திருக்கிறார். இதனை மீட்டுக் கொண்டு வருவதற்காக மருத்துவர்கள் தெரபி முறைகளைப் பரிந்துரைத்தனர்" என்றார்.

" வாரம் ஒருமுறை தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை கொடுக்கப்பட்ட ஒன்றிரண்டு நாட்கள், தலைமை அலுவலகத்துக்கு வந்து பணிகளைத் தொடர்கிறார். அதன்பிறகு முழுக்க வீட்டிலேயே ஓய்வு எடுக்கிறார். தன்னை சந்திக்க வருகிறவர்களிடம் அரசியல் தொடர்பான ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார். தொடக்கத்தில் ஸ்பீச் தெரபி கொடுத்துவந்தனர். தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட மாத்திரைகளின் விளைவாகத்தான், ஞாபக மறதி சிரமத்துக்கு ஆளானார். நண்பர்களை சந்திப்பதன் மூலம், உற்சாகமான மனநிலைக்கு மாறிவிடுகிறார். வெகுவிரைவில் சிகிச்சைக்காக, மீண்டும் சிங்கப்பூர் செல்ல இருக்கிறார்" என்கின்றனர் அவரது நட்பு வட்டத்தில் உள்ளவர்கள்.

தே.மு.தி.கவின் 13-ம் ஆண்டு விழாவைக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டாடியபோது அறிக்கை ஒன்றை வெளியிட்டார் விஜயகாந்த். அதில், ' எந்த வித வன்முறைக்கும் இடம்கொடுக்காமல் அறவழியில் மக்கள் பிரச்னைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து போராடி வருகிறது நமது இயக்கம். கடினமான நேரத்தையும் காலத்தையும் தந்து, கடவுள் நம்மை சோதிக்கும் போதெல்லாம் பொறுமையாக காத்திருக்கும் எங்கள் உறுதிக்கு நீங்கள் தரப்போகும் வெற்றிக்காக உயர்ந்த சிந்தனையோடு, தமிழக மக்கள் நம் இயக்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் உயர்த்தும் வண்ணம் செயல்படுவோம்' எனக் குறிப்பிட்டார். ' தன்னை வருத்தும் சோதனைகளில் இருந்து மீண்டு, கேப்டன் நேரடியாகக் களத்துக்கு வர வேண்டும்' என்கின்றனர் அவரது தொண்டர்கள்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About