நிரம்புகிறதா வெற்றிடங்கள்? என்ன செய்யப் போகிறார் ரஜினிகாந்த்!

முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு முழுமையாக ஓரு ஆண்டு கழித்து  “நான் அரசியலுக்கு வருவது உறுதி. தனிக்கட்சி ஆரம்பித்து 234  சட்டமன்றத் தொகுதிகளில...

முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு முழுமையாக ஓரு ஆண்டு கழித்து  “நான் அரசியலுக்கு வருவது உறுதி. தனிக்கட்சி ஆரம்பித்து 234  சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுவேன்,” என்று தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி முதன் முதலாக வெளிப்படையாக அறிவித்தார் ரஜினிகாந்த்.

கடந்த டிசம்பர் மாதம் ஆங்கில இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “ஒவ்வொரு மணி நேரத்திற்கும்  அரசியல் மாற்றங்கள்,” நடைபெறுகிறது என்று சொன்னவரும் ரஜினிகாந்த் தான். அவர் அரசியலுக்கு வருவேன் என்று சொன்ன நாள் முதல் இன்று வரையில் நடந்துள்ள முக்கிய அரசியல் மாற்றங்களைக் கவனித்தால், அடுத்து ரஜினி என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

டிசம்பர் 31, 2017 ல் ரஜினி அறிவித்த போது தமிழ்நாட்டு அரசியலில் ஜெயலலிதா கிடையாது. முதுமையால் அரசியல் செயல்பாடுகளிலிருந்து முற்றிலும் விலகி இருந்தார் கருணாநிதி. அப்போது முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலினும் இருந்தார்கள். இன்றும் அதே நிலையில் இருவரும் இருக்கிறார்கள் . ஆனால், இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களை எளிதாக கடந்து சென்று விட முடியுமா?

அப்போது எடப்பாடி பழனிசாமி அரசின் ஆயுட்காலம் நித்யகண்டம் பூரண ஆயுசாக இருந்து கொண்டிருந்தது. இப்போதும் அப்படியே என்றாலும், இந்த அரசு முழுமையான ஆட்சிக்காலத்தை முடிக்கும் என்ற நம்பிக்கை பொதுமக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. 9 தொகுதிகளில் அதிமுகவின் இடைத்தேர்தல் வெற்றி அதையே சுட்டிக் காட்டுகிறது. 37 நாடாளுமன்றத் தொகுதிகளில் அதிமுக கூட்டணி தோல்வியுற்ற போதிலும், எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சியின் முகமாக,  தலைவராக அறியப்பட்டுள்ளார்.

பாஜகவுக்கு ஆமாம் சாமி போட்டு மக்கள் விருப்பங்களுக்கு எதிரான நீட், மீத்தேன், எட்டுவழிச் சாலை போன்ற திட்டங்களை தமிழ்நாட்டில் திணித்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில்  கூட்டணி கட்சிகள் பிரதமரை தேர்வு செய்யும் கூட்டத்தில் ‘பிரதமரை வழிமொழியும்’ பெருமையையும் பெற்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அது அத்தனை சாதாரணமான ஒரு நிகழ்வு அல்ல.

சசிகலா சிறைக்குச் சென்ற நிலையில், எங்கிருந்தோ வந்தது போல் தடாலடியாக வந்த டிடிவி தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றி, அவரை மு.க.ஸ்டாலினுக்கு இணையான தலைவராக முன் நிறுத்தியது.  அதிமுக அவருடைய கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள், விஸ்வரூபம் எடுப்பார் என்று நினைத்த டிடிவி தினகரனை முடக்கிப் போட்டுள்ளது.

சசிகலாவின் அரசியல் எதிர்காலமும் இதனால் கேள்விக் குறியாகி உள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக இருந்த அவரை நீக்கியது செல்லாது என்று தீர்ப்பு வந்தால் மட்டுமே, ஏதாவது செய்யக் கூடிய நிலையில் இருக்கிறார். இல்லையென்றால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவியாகத் தொடர்வது மட்டுமே அவருக்குரிய வாய்ப்பு.

விளையாட்டாக அரசியலில் குதித்தது போல் வந்த கமல்ஹாசன், விஸ்வரூபம் எடுக்கவில்லை என்றாலும் கூட நகர்ப்புறங்களில் கவனிக்கத் தக்க அளவில் வாக்குகளைப் பெற்றுள்ளார். தேர்தல் முடிந்ததும் நடிக்கப் போய்விடுவார் என்று எண்ணி இருந்தவர்களுக்கு போக்கு காட்டி விட்டு, விறுவிறுப்புடன் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார். இவருக்கான வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவிடமிருந்து தான் வந்துள்ளது என்பதைச் சொல்ல, கோவை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் முடிவே சாட்சி.

நாம் தமிழர் என்று சொல்லி சொல்லி உசுப்பேத்தியே கட்சி வளர்த்த சீமானும், தேர்தலுக்கு தேர்தல் கூடுதல் வாக்குகளைப் பெற்று வருகிறார். தமிழக அரசியலில் முதன் முறையாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம அளவில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்து, கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைக்கப் பார்க்கிறார்.

கருணாநிதி இருந்தவரையிலும் அவருடைய நிழலிலேயே இருந்து வந்த மு.க.ஸ்டாலினுக்கு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் மிகப்பெரிய வாய்ப்பைத் தந்தது. ஒரு காலக் கட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி வேண்டாம் என்று சொன்ன ஸ்டாலினே,  கருணாநிதி சிலை திறப்பு மூலம் மீண்டும் கூட்டணி அமைத்தார். ராகுல் காந்தி மீதான நன்மதிப்பையும், மோடிக்கு எதிரான வாக்குகளையும் தேர்தல் களப்பணி மூலம் தங்கள் அணிக்கு மாபெரும் வெற்றி ஆக்கிக் கொண்டார்.

திமுகவின் தலைவராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார் மு.க.ஸ்டாலின். கருணாநிதியின் இடத்தை நிரப்ப முடியாது என்றாலும், தமிழ்நாட்டு அரசியலின் ஒரு  தலைமைக்கான வெற்றிடத்தை நிரப்பி விட்டார் என்று சொல்லலாம். பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு இல்லையே என்பவர்கள், தமிழ்நாட்டின் இரண்டு கட்சித் தலைவர்களும் ஒன்றாக பிரதமர் பதவியேற்பு விழாவில் முன்னர் எப்போதாவது பங்கேற்றுள்ளார்களா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அது தான் இன்றும் தொடரும் தமிழ்நாட்டு அரசியல்.

இன்னொரு தலைமைக்கான வெற்றிடம் என்ன ஆச்சு?. அதை டிடிவி தினகரனால் நிரப்ப முடியவில்லை. கமல்ஹாசன் அதை எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. நாம் தமிழர் கட்சி சீமான் அரசியலில் இன்னும் வளர வேண்டிய காலம் இருக்கிறது. பாமக, தேமுதிக கட்சிகளின் படுதோல்விக்குப் பிறகு அன்புமணி, விஜயகாந்தால் அந்த இடத்திற்கு கனவு மட்டும் தான் காண முடியும்.

மீதம் இருப்பவர்கள் எடப்பாடி பழனிசாமியும், ஒ.பன்னீர் செல்வமும் தான். இரட்டைத் தலைமை ஏற்று கட்சியையும் ஆட்சியையும் நடத்தி வருபவர்களுக்குள் பனிப்போர் முற்றியுள்ளது. நேற்றைய கூட்டத்தில் சமாதானத் தோற்றம் இருந்தாலும், பொதுக்குழுக் கூட்டம் வரைக்கும் அது நீடித்தாலே அதிசயம் தான். சைலண்டாக ஒபிஎஸ்-ஸை ஒதுக்கி விட்டு கட்சிப் பொதுச்செயலாளர் பதவியைக் கைப்பற்ற அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார், இபிஎஸ் என்றழைக்கப்படும் எடப்பாடி பழனிசாமி.

இபிஎஸ்ஸின் அரசியல் சாணக்கியத்தனத்தை குறைத்து மதிப்பிட முடியவில்லை. ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பின் போது, “எப்போது வேண்டுமானாலும் இபிஎஸ் ஆட்சி கவிழ்ந்து விடலாம்” என்ற நிலை இருந்தது. இரண்டரை ஆண்டுகள் ஆட்சியை வெற்றிகரமாக முடித்து விட்ட இபிஎஸ், கட்சியின் பொதுச் செயலாளராகவும் ஆகிவிட்டால், இரட்டை இலையை தக்க வைத்துக் கொண்டு கட்சியையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வார் என்பதில் சந்தேகமில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு நீண்டநாட்கள் அதிமுக சார்பில் முதல்வராக இருப்பவர் இபிஎஸ் தான். அதுவே அதிமுக தொண்டர்களுக்கு அவர் மீது நம்பிக்கையை வளர்த்துள்ளது.

பிரதமர் மோடியின் அரசு, இந்தித் திணிப்பு போல்  தமிழ் மக்களின் எண்ணங்களுக்கு எதிரான ஏதாவது திட்டங்களை அறிவித்துக் கொண்டே இருக்கும் வரையிலும் திமுக-காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வலுப் பெற்றுக் கொண்டே இருக்கும். அந்தப் பக்கத்தின் வாக்குகளும் முழுமையாக அவர்களுக்கு கிடைத்து விடும்.

இந்தப் பக்கம் அதிமுக கட்சி, இபிஎஸ் தலைமையில் நிலைத்து நின்று விட்டால் அதிமுக விசுவாசிகளின் வாக்குகள் அப்படியே தங்கி விடும். கமல் ஹாசன், நாம் தமிழர் சீமான் போன்றவர்களும் மீதி வாக்குகளைப் பிரிக்கும் போது, வேறு யாரெல்லாம் ரஜினிகாந்துக்கு வாக்களிப்பார்கள் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. ரசிகர்களின் வெளிப்படையான களப்பணி மூலம், பாஜகவுக்கு ஆதரவான தோற்றம் சற்று கூடுதலாக ரஜினிகாந்துக்கு கிடைத்து விட்டதால், திமுக சைடிலிருந்து ரஜினி பக்கம் தாவுக்கூடியவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாகத் தெரிகிறது.

அதிமுக வாக்காளர்கள் எவ்வளவு பேரை இழுக்க முடியும், பெண்களின் வாக்குகளை முழுமையாகப் பெற முடியுமா?, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளுக்கு வாக்களித்தவர்களை தன் வசம் திருப்ப முடியுமா? போன்ற கேள்விகளுக்கான விடைகளே ரஜினிகாந்தின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்யும்! இரண்டு தலைமைகளுக்கான வெற்றிடங்களும் நிரப்பப் பட்டுள்ளதா அல்லது யார் நிரப்புவார்கள் என்ற கேள்விக்கான விடையும் அதிலேயே அடங்கி உள்ளது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About