ஒடிசா அமைச்சர்களுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் அளித்திருக்கும் வீட்டுப்பாடம்!

ஒடிசாவின் முதலமைச்சராகத் தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெற்றி வாகை சூடியிருக்கிறார் நவீன் பட்நாயக், தொடர் வெற்றிகளுக்கு, அவர் ஆட்சியில் காட்டி...

ஒடிசாவின் முதலமைச்சராகத் தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெற்றி வாகை சூடியிருக்கிறார் நவீன் பட்நாயக், தொடர் வெற்றிகளுக்கு, அவர் ஆட்சியில் காட்டிவரும் அதிரடிகள்தான் காரணம் என்கிறார்கள் மக்கள். மத்திய அரசுக்கு முன்னதாகவே விவசாயிகளுக்குப் பத்தாயிரம் ரூபாய் மானியம் வழங்கும் காலியா திட்டத்தை அறிமுகப்படுத்தியது, மாணவர்களுக்கு, பெண்களுக்கு வட்டியில்லாக் கடன், பழங்குடியினர் நலத்திட்டங்கள், உணவு தன்னிறைவு, தரமான வீடுகள் என்று அனைத்து அடிப்படைத் தேவைகளையும் குறையின்றி பூர்த்தி செய்திருக்கிறார்.

ஊழலற்ற ஆட்சி இவரது தனித்துவமான வெற்றி என்கிறார்கள். ஊழல் புகார் எழும் பட்சத்தில் யாராக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிகிறார் நவீன். 2019-ம் ஆண்டின் ஒடிசாவின் சட்டமன்ற, நாடாளுமன்ற இரு தேர்தல்களிலும் அபார வெற்றி பெற்று, கடந்த மே மாதம் 29-ம் தேதி ஐந்தாவது முறையாக அரியணை ஏறியிருக்கிறார்.

இந்த முறை அரசியலில் அதிக அனுபவம் வாய்ந்தவர்களுக்கும் பெண்களுக்கும் நிறைய புதுமுகங்களுக்கும் இளைஞர்களுக்கும் அமைச்சர் பதவி. 33 சதவிகிதம் பெண்களுக்கான இட ஒதுக்கீடும் அளித்திருக்கிறார். முக்கியமாக, ஒவ்வொருமுறை வெற்றி பெற்றதும், தனது தேர்தல் அறிக்கையையே, அரசு கொள்கையாக அறிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்சி அமைத்ததும், வழக்கம்போல அவரது அதிரடிகள் தொடங்கி விட்டன. அதில் இன்று முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து வெளியாகி இருக்கும் ஒரு சுற்றறிக்கை நாட்டின் அரசியல் தலைவர்களுக்கு ஒரு பாடம்.

பிஜு ஜனதா தளத்தின் அமைச்சர்கள், இனி ஒவ்வொரு மாதமும் 7 தேதி அன்று, கடந்த மாதம், கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் விஷயங்களை நிறைவேற்ற அவர்கள் என்னென்ன பணிகள் செய்தார்கள் என்று அறிக்கையை முதலமைச்சர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார் நவீன்.

வருடம் ஒரு முறை, தான் பதவி ஏற்ற நாள் அன்று, கடந்த ஆண்டு தேர்தல் அறிக்கையில் என்ன சொன்னோம், என்ன செய்தோம், எவ்வளவு பாக்கி இருக்கிறது என்று தனது ஆட்சிக்கான மதிப்பெண் பட்டியலை அவர் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, அமைச்சர்களும் தாங்கள் என்ன பணி செய்திருக்கிறோம் என்று மக்களுக்கும் தெரியப்படுத்த வலியுறுத்தி இருக்கிறார்.

மக்களுக்குச் செய்து தருவதாக வாக்களித்த விஷயங்களுக்கு முன்னுரிமையும், அவற்றைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடித்தே ஆக வேண்டும் என்ற வரையறையும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. சரிவர பணியாற்றாத அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும் வரலாறும் அவரது ஆட்சியில் உண்டு என்பதால், அமைச்சர்கள் விரைந்து பணிகளைத் தொடங்கிவிட்டனர் என்கிறார்கள் ஒடிய நண்பர்கள்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About