துபாயில் நடந்த 2.0 இசை வெளியீட்டு விழாவில் ரஜினி & ஷங்கர் பேசியது என்ன?

ரஜினி-ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.0 படத்தின் இசைவெளியீட்டு விழா துபாயில் நேற்று (அக்டோபர் 27) கோலா கலமாக நடைபெற்றது. படத்தில் இடம்...

ரஜினி-ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.0 படத்தின் இசைவெளியீட்டு விழா துபாயில் நேற்று (அக்டோபர் 27) கோலா கலமாக நடைபெற்றது. படத்தில் இடம்பெறும் மூன்று பாடல்களில் இரண்டு பாடல்கள் நேற்று வெளியாயின. இந்நிகழ்ச்சியின் பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தும் விதமாக, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், இயக்குநர் ஷங்கரும் ரயில் வடிவிலான வாகனத்திலேயே மேடைக்கு வந்தனா். நிகழ்ச்சியில் ரஹ்மான் 125 சிம்பொனி கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நேரலையாக நடத்தினார். 2.0 படத்திலிருந்து ஒரு பாடல் மேடை யில் இசைக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து 2.0 வின் இரண்டு பாடல்கள் முதல்கட்டமாக வெளியிடப்பட்டன. பாடல்கள் வெளியான சில மணி நேரங்களில் இவை இணையத்தில் வைரலாகத் தொடங்கின

துபாயில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்ற விழாவில் இதில் நடிகர் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன், இயக்குநர் ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், ராஜு மகாலிங்கம் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஆர்.ஜே.பாலாஜி, ராணா டகுபதி, கரன் ஜோஹர் தொகுத்து வழங்கினர்

விழாவில் இயக்குநர் ஷங்கர் பேசியதாவது:

ஓர் இந்தியப் படத்திற்கு 300 கோடி, 350 கோடி என முதலீடு செய்ய யாருமே தயாராக இருக்க மாட்டார்கள். ஆனால், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் இக்கதையைக் கேட்டு பிடித்ததினாலும், தமிழ் சினிமாவின் மீதுள்ள காதலாலும் தயாரித்திருக்கிறார். அதற்கு முதலில் நன்றி.

‘2.0’ திரைப்படம் ‘எந்திரன்’ படத்தின் தொடர்ச்சி அல்ல. இது வேறொரு கதைக் களம். உலகளாவிய ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறேன். நமக்கு பரிச்சயமான டாக்டர் வசீகரன், சிட்டி, 2.0 போன்றவர்கள் எல்லாம் இக்கதையில் வருவார்கள். இப்படி நடந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே ‘2.0’. அக்கற்பனை என்னை எங்கெல்லாம் இழுத்துக் கொண்டு போனதோ அங்கெல்லாம் பயணித்திருக்கிறேன். அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.

மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது கூட, டெல்லியில் 47 டிகிரி வெயிலில், 12 கிலோ எடையுள்ள உடையை போட்டுக் கொண்டு நடித்துக் கொடுத்த ரஜினி சாருக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். பேட்மேன், சூப்பர்மேன் மாதிரியான உடை அது. இந்திய சினிமாவில் அந்த மாதிரி உடைகள் வந்ததில்லை.

அதே போன்று திருக்கழுக்குன்றத்தில் பெரிய பள்ளம் தோண்டி, அனிமேட்ரானிக்ஸ் காட்சிகளுக்காக 4 மணி நேரம் மண்ணிற்குள் மூடி, ப்ராக்ஸ் வைத்து நடிக்க வேண்டும். அதையும் பிரமாதமாக செய்துக் கொடுத்தார். இவ்வளவு வருடங்கள் நடித்த பிறகும் கூட, இப்போதும் என்ன காட்சிகள் எடுத்தாலும், அக்காட்சியில் இதுவரை செய்யாத மாதிரி நடிக்க வேண்டும் என்று மெனக்கிடுவது ரஜினி சாரிடம் பாராட்டுக்குரிய விஷயம்.

ஒருநாள் கூட சாதாரணமாக வந்தோமா, மேக்கப் போட்டோமா, நடித்தோமா என்பது அக்‌ஷய்குமாருக்குக் கிடையாது. தினமும் 4 மணி நேரம் மேக்கப் போட வேண்டும். அதற்கு மேல் எடை அதிகமான உடையைப் போட்டுக் கொண்டு வெயிலில் நடித்தார். அவர் இதுவரை நடித்த படங்களின் கஷ்டத்தை, ஒரே படத்தில் பட்டிருக்கிறார். அதை படம் பார்க்கும் போது உணர்வீர்கள்.

படத்தில் 3 பாடல்கள் என்றாலும், அதற்காக ஏ.ஆர்.ரஹ்மான் கடுமையாக உழைத்திருக்கிறார். பாடல்களைத் தாண்டி பின்னணி இசையில் அவருக்கு நிறைய பணிகள் இருக்கின்றன. இசை மட்டுமன்றி, படப்பிடிப்புக்குப் பிறகு நடைபெறும் பணிகளில் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, ரசூல் பூக்குட்டி என அனைவருக்குமே சவாலான பணி காத்திருக்கிறது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பிலிருந்து கிராபிக்ஸ் பணிகள் இப்போது வரை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நான் நினைத்த மாதிரி கொண்டுவர வேண்டும் என்று கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். -இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி, “’முதல்வன்’ சமயத்திலிருந்தே ரஜினி சாரோடு படம் பண்ண வேண்டும் என்று பேசிக் கொண்டே இருந்துள்ளீர்கள். தற்போது அவரோடு இணைந்து 3 படம் செய்துவிட்டீர்கள் எப்படி இது சாத்தியம்?” என்று ஷங்கரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ஷங்கர், “சூப்பர் ஸ்டாரை அவ்வளவு எளிதில் நெருங்கிவிட முடியுமா… படம் பண்ணலாம் என்று பேசிப் பேசி 11 வருடங்கள் கழித்து தான் சாத்தியமானது. 3 படம் செய்து விட்டேன். கதை விவாதத்திற்காக கூர்க்கில் இருக்கும் போது, ஒரு குடும்பத்தினர் வந்தார்கள். “நீங்கள் 10 வருடம் முன்பு பிறந்திருக்கக் கூடாதா” என்றார்கள். “ஏன்?” என்றவுடன் “இன்னொரு 3 படம் ரஜினி சாரோடு செய்திருப்பீர்களே” என்றார்கள்

அதை அடுத்து ரஜினிகாந்த் பேசியதாவது:

ஷங்கர் மீதான நம்பிக்கையினால் மட்டுமே ‘2.0’வில் நடித்தேன். வெயிலில் கஷ்டப்பட்டேன் என்று அவர் இங்கு தெரிவித்தார். வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால், அதைவிட முட்டாள் யாருமே இருக்க முடியாது.

ஒருவர் பெயர், புகழோடு இருக்கிறார் என்றால், அது திறமையாலும், கடின உழைப்பாலும் மட்டும் கிடையாது. அவருக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்று அர்த்தம். ஒரு சிலருக்கு வாய்ப்புகள் தானாக வரும், அது ஆண்டவனின் அருள். அப்படி வரவில்லை என்றால் நாமே தேடி வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளவேண்டும். அந்த வாய்ப்புகள் மற்றவர்களின் வயிற்றில் அடிக்காமலும், மற்றவர்களின் வாய்ப்பைப் பறிக்காமலும், நாணயமாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும்.

இப்போது தான் துபாய்க்கு முதல் முறையாக வந்துள்ளேன். பல நாடுகளுக்கு சென்றபோது துபாய்க்கு வருவேன், விமானத்திற்காக விமானநிலையத்திற்குள் இருந்துவிட்டு, விமானம் ஏறி போய்விடுவேன். இப்போது தான் முதல்முறையாக விமான நிலையத்தை விட்டு வெளியே வந்திருக்கிறேன். இந்திய மக்கள் பலரும் இங்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு துபாய் அரசாங்கத்திற்கு இந்தியன் என்ற முறையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் ஒரு பந்தம் இருக்கிறது. 1960-70களில் பேருந்து நடத்துநராக இருக்கும்போது, பல இஸ்லாமிய சகோதரர்களுடன் தான் இருப்பேன். சென்னைக்கு நடிக்க வாய்ப்பு தேடி வந்த போது, ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டின் உரிமையாளர் ஓர் இஸ்லாமியர் தான். பெயர், புகழ் கிடைத்தவுடன் போயஸ் கார்டனில் சொந்த வீடு வாங்கினேன். அதுவும் ஓர் இஸ்லாமியரிடமிருந்துதான் வாங்கினேன். ராகவேந்திரா மண்டபம் இருக்கும் இடமும் ஓர் இஸ்லாமிய சகோதரரிடமிருந்துதான் வாங்கினேன். இதுவரை பல படங்கள் நடித்திருந்தாலும், ஒரு படத்தின் பெயர் சொன்னால் அனைவருக்குமே தெரியும். அது ‘பாட்ஷா’. அதில் இஸ்லாமியராக தான் நடித்திருந்தேன்.

‘2.0’ படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் ஷங்கருக்கும், தயாரிப்பாளர் சுபாஷ்கரனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஷங்கர் சாருடைய கதைக் களத்திற்கு, சுபாஷ்கரன் மாதிரி ஒருவர் முதலீடு செய்யவில்லை என்றால் இப்படம் நடந்திருக்காது. இதன் மூலம் பெரிய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை சுபாஷ்கரனுக்கு கிடையாது. அவர் மிகப்பெரிய தொழிலதிபர். இந்திய மண்ணுக்கு ஒரு நல்ல படம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தவருக்கு ஷங்கர் சார் மாதிரி ஓர் இயக்குநர் கிடைத்தது நல்ல வாய்ப்பு.

ஏ.ஆர்.ரஹ்மான், ரசூல் பூக்குட்டி என இப்படத்தில் அனைவருமே தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி இருக்கிறார்கள். இனிமேல் இப்படியொரு படம் இந்தியாவில் வருமா என எனக்குத் தெரியாது. ஷங்கராலும் இதே போல் முடியாது. நாம் மட்டுமே ஹாலிவுட்டை மீறிய படம் என்று சொல்லிக் கொண்டிருந்தால், நாமே சுயதம்பட்டம் அடித்து கொண்டது போல் இருக்கும். ஆகவே, இதனை படம் பார்த்தவுடனே அனைவரும் உணர்வார்கள்.

இதில் பல ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிந்திருக்கிறார்கள். அவர்கள் பணத்துக்காக மட்டும் இதில் பணி புரியவில்லை. ஏற்கனவே பிஸியாக இருந்தவர்கள், இதன் கதையைக் கேட்டு தேதிகளை மாற்றிக் கொண்டு பணிபுரிந்திருக் கிறார்கள் என்றால் இக்கதை எப்படியிருக்கும் என நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். இதற்கு மேல் இப்படத்தைப் பற்றி சொல்ல மாட்டேன்”இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About