வெற்றிலை, மருதாணி, அகத்தி... சளித் தொந்தரவு முதல் புற்றுநோய் வரை தடுக்கும் எளிய மூலிகைகள்!

`என் பையனுக்குத் திடீர்னு மூக்கு ஒழுகிச்சு... நொச்சி இலையை தண்ணிவிட்டுக் கொதிக்கவெச்சு ஆவி பிடிச்சேன். சரியாகிடுச்சு.' இது வெறும் டயலாக...

`என் பையனுக்குத் திடீர்னு மூக்கு ஒழுகிச்சு... நொச்சி இலையை தண்ணிவிட்டுக் கொதிக்கவெச்சு ஆவி பிடிச்சேன். சரியாகிடுச்சு.' இது வெறும் டயலாக் அல்ல. உண்மை. நாம் வீடுகளில் வளர்க்கும் பல செடிகளைச் சாதாரணமாகக் கருதுகிறோம். அவற்றில் பல மூலிகைச் செடிகள்; மருத்துவ குணம் நிறைந்தவை. நமக்கும் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் உடல்நலன் காக்க உதவக்கூடியவை. இவற்றை நம் வீடுகளில் எளிதாக வளர்க்கலாம். அந்த மூலிகைகள் என்னென்ன... அவற்றின் பலன்கள் என்னென்ன. பார்க்கலாமா?

துளசி மூலிகை

மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு, துளசி ஓர் அருமருந்து. காய்ச்சல், இருமல், தொண்டை கரகரப்பு, நுரையீரல் கோளாறுகளைப் போக்க துளசி கஷாயம், துளசி தேநீர் செய்து குடிக்கலாம்.

தூதுவளை

சளித் தொந்தரவுகளைப் போக்கக்கூடியது தூதுவளை. மழைக்காலங்களில் துவையல், சட்னி, சூப் என இதைச் செய்து சாப்பிட்டால் ஜலதோஷம் தீரும். தூதுவளையை அடிக்கடி உணவில் சேர்த்துவருவது புற்றுநோயைக்கூடத் தடுக்கும்.

ஆடாதொடை

சளி, இருமல், தொண்டைக் கட்டுக்கு ஆடாதொடை நல்மருந்து. இதன் இலையை மட்டும் நீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, வடிகட்டி தேன் சேர்த்துக் குடித்தால் ஆஸ்துமா, இருமல், காய்ச்சல் குணமாகும். காச நோயாளிகள் 40 நாள்கள் தொடர்ந்து இதைச் சாப்பிட்டால் அதன் தீவிரம் குறையும்.

ஓமவல்லி

இருமல், சளி, ஜலதோஷத்துக்கு ஓமவல்லி முக்கிய மருந்து. இதன் இலைச்சாற்றை லேசாகச் சூடுபடுத்தி தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் இருமல், மார்புச் சளி சரியாகும். மழைக்காலத்தில் மாலை நேரச் சிற்றுண்டியாக ஓமவல்லி பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.

கற்றாழை

கற்றாழை ஜூஸ் சாப்பிட்டால் மலச்சிக்கல், செரிமானக் கோளாறுகள் விலகும். சர்க்கரை நோயாளிகள் தினமும் கற்றாழை ஜூஸ் அருந்தினால், சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கலாம். கற்றாழையின் வேர் தாம்பத்ய உறவு மேம்பட உதவும்.

வெற்றிலை

குழந்தைகளுக்கு சளி, இருமலின்போது, ஒரு வெற்றிலையுடன் ஐந்து துளசி இலை சேர்த்து சாறு பிழிந்து 10 சொட்டுக் கொடுத்தால் குணமாகும். நெஞ்சுச்சளி இருந்தால் அது மலத்துடன் வெளியேறிவிடும். பாம்பு கடித்தவருக்கு வெற்றிலைச் சாறு கொடுத்தால், விஷம் முறிந்துவிடும்.

நொச்சி

நொச்சி இலையை நீரில் போட்டு கொதிக்கவைத்து, ஆவி பிடித்தால் சளி, இருமல் விலகும். தலையணையின் அடியில் நொச்சி இலையை வைத்துத் தூங்கினால் தலைபாரம், சைனஸ் தொந்தரவு நீங்கும்  மிளகு, பூண்டுடன் நொச்சி இலையைச் சேர்த்து மென்று தின்றால் ஆஸ்துமா குணமாகும்.

செம்பருத்தி

செம்பருத்திப் பூக்களை ஜூஸ் அல்லது தேநீராக்கிப் பருகினால் ரத்த அழுத்தம் குறையும். செம்பருத்தி இலை, பூக்களை வெறுமனே அரைத்துப் பூசினால் முடி உதிர்தல் பிரச்னை தீரும். இதைத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சியும் பயன்படுத்தலாம். செம்பருத்தி ஓர் இயற்கையான தங்கபஸ்பம்.

மருதாணி

மருதாணி இலையை மையாக அரைத்து கைகளில் போட்டுக்கொண்டால் உடல் வெப்பம் தணியும். நோய்கள் வராமல் தடுக்கும். அடிக்கடி மருதாணி போடுவது மனநோய் வராமல் தடுக்கும். ஆறாத வாய்ப்புண், அம்மைப்புண்ணுக்கு மருதாணி இலையை அரைத்து, நீரில் கரைத்து, வாய் கொப்பளிக்கலாம். தலையணைக்கடியில் மருதாணிப்பூவை வைத்தால் நன்றாகத் தூக்கம் வரும்.

மஞ்சள் கரிசலாங்கண்ணிவெள்ளை கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணி

குழந்தைகளுக்கு வரும் சளித்தொல்லையைப் போக்க இரண்டு சொட்டு கரிசலாங்கண்ணி இலைச்சாற்றுடன் எட்டு சொட்டு தேன் கலந்து குடிக்கலாம். மலச்சிக்கல் தீர கரிசாலை இலையைப் பருப்பு சேர்த்துக் கடைந்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். நோய்கள் வராமலிருக்க கீரையைச் சமைத்தோ, சாறு எடுத்துக் குடிப்பதோ நல்லது.

நிலவேம்பு

நிலவேம்பு முழு தாவரத்தையும் நீர்விட்டு, கொதிக்கவைத்து 30 மி.லி வீதம் காலை, மாலை வேளைகளில் மூன்று நாள் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும். நிலவேம்பு இலைச்சாறு அரை டம்ளர் வீதம் மூன்று நாள்கள் காலை, மாலை எனக் குடித்தால் கல்லீரல் தொடர்பான நோய்கள் குணமாகும்.

பிரண்டை

பிரண்டையைச் சிறு துண்டுகளாக நறுக்கி, நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வதக்கி உப்பு, புளி, காரம் சேர்த்துத் துவையலாக அரைக்கலாம். இதைச் சாப்பிட்டால் உடல் சுறுசுறுப்பாகும்; மூளை நரம்புகள் பலப்படும்; குடல் வாயுவை அகற்றும். குழந்தைகளுக்குக் கொடுத்தால் எலும்புகள் பலப்படும்.

திருநீற்றுப் பச்சிலை

நறுமணம் வீசும் இந்தச் செடியின் இலைகளை அரைத்து, கட்டிகளின் மீது பூசினால் சட்டென கரையும். தலைவலி, இதய நடுக்கம், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இதன் இலையை வெறுமனே முகர்ந்தால் பிரச்னை சரியாகும். இலையை மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் சரியாகும்.

முடக்கத்தான்

மழைக்காலங்களில் செழித்து வளரும் முடக்கத்தான் கீரையை அரைத்து, தோசை மாவுடன் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். இலையை நீர்விட்டு, கொதிக்கவைத்து உப்பு, மிளகுத் தூள் சேர்த்து சூப் செய்தும் அருந்தலாம். இதனால் மூட்டுவலி, முடக்கு வாதம், நரம்புத் தளர்ச்சி விலகும்.

கல்யாண முருங்கை

கல்யாண முருங்கை இலைச்சாறு 30 மி.லி அளவு எடுத்து வெறும் வயிற்றில் 10 நாள்கள் குடித்தால் மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்றுவலி குணமாகும். குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் அதிகமாகச் சுரக்க கல்யாண முருங்கை இலையைத் தேங்காய் எண்ணெயில் சமைத்துச் சாப்பிடலாம்.

நித்திய கல்யாணி

ஐந்து நித்திய கல்யாணிப் பூக்களை அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி கால் லிட்டராக்க வேண்டும். அதை ஒரு நாளைக்கு நான்கு வேளை குடித்தால் அதிக தாகம், அதிக சிறுநீர்ப்போக்கு மற்றும் அதனால் ஏற்படும் உடல் பலவீனம் சரியாகும். இதன் வேர்ச்சூரணம் ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் சிறுநீர்ச் சர்க்கரை குறையும்.

அம்மான் பச்சரிசி

அம்மான் பச்சரிசியின் பாலை முகத்தில் தடவினால் முகப்பரு குணமாகும். கால் ஆணி, பித்த வெடிப்பு மறையவும் இதன் பாலைப் பூசலாம். தாய்ப்பால் சுரப்பு குறைந்தவர்கள் அம்மான் பச்சரிசியின் செடிகளை அரைத்து எலுமிச்சைப் பழ அளவு எடுத்து பாலுடன் கலந்து காலை, மாலை சாப்பிட்டால் பால் சுரக்கும்.

அகத்தி

அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை சமைத்துச் சாப்பிட்டால், வெயிலில் அலைவதால் ஏற்படும் உடல் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை விலகும். அகத்திக்கீரையைத் தேங்காய்ப்பால் சேர்த்து அரைத்து, தேய்த்துக் குளித்தால்,  கண்களுக்குக் கீழே காணப்படும் கருவளையம் மறையும்.

கீழாநெல்லி

கீழாநெல்லியை (50 கிராம்) நன்றாகக் கழுவி 200 மி.லி எருமைத் தயிரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மஞ்சள்காமாலை குணமாகும். மருந்து சாப்பிடும் மூன்று நாள்களும், உணவுடன் மோர் சேர்க்க வேண்டும். கீழாநெல்லியுடன் கற்கண்டு சேர்த்து அரைத்து காலை, மாலை என நான்கு நாள்கள் சாப்பிட சிறுநீர் தொடர்பான நோய்கள் குணமாகும்.

சீந்தில் கொடி

சீந்திலின் முதிர்ந்த கொடிகளை உலரவைத்துப் பொடியாக்கி காலை, மாலை அரை டீஸ்பூன் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் பலம் பெறும். இதைப் பனங்கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிட சர்க்கரைநோயால் ஏற்படும் கை கால் அசதி, உடல் மெலிவு, அதிக தாகம் போன்றவை சரியாகும்.

தவசி முருங்கை

தவசி முருங்கை இலைச் சாற்றைச் சாப்பிட்டால், மூக்கில் நீர் வடிதல், உள்நாக்கு இருமல், இரைப்பு போன்றவை குணமாகும். தவசி முருங்கை இலை ஒரு கைப்பிடி, சிறிது உப்பு, மிளகு சேர்த்து அரைத்துப் பிழிந்த சாற்றுடன் தேன் சேர்த்து ஒரு டீஸ்பூன் வீதம் கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் வயிற்று உப்புசம் உடனே சரியாகும்.

திப்பிலி

திப்பிலியில் அதன் பூக்கள்தான் மருந்தாகப் பயன்படுகின்றன. இதை வறுத்துப் பொடியாக்கி ஒரு சிட்டிகை தேனுடன் கலந்து சாப்பிட்டால் இருமல், தொண்டைக் கமறல், பசியின்மை சரியாகும். திப்பிலியைப் பொடியாக்கி 1:2 என்ற விகிதத்தில் நெய்யுடன் கலந்து சாப்பிட ஆண்மை பெருகும்.

தொட்டாற் சிணுங்கி

தொட்டாற் சிணுங்கியை களிமண்ணுடன் சேர்த்து அரைத்து பற்றுப் போட்டால் வாத வீக்கம் நீங்கும். கீல் வாதத்துக்கும் இது நல்ல மருந்து. இதன் இலை, வேரைச் சம அளவு எடுத்து உலரவைத்து பொடியாக்கி 10 முதல் 15 கிராம் வரை பசும்பால் சேர்த்துச் சாப்பிட்டால் மூலம், சிறுநீர் நோய்கள் குணமாகும்.

நேத்திரப் பூண்டு

நேத்திரப் பூண்டு மூலிகையைப் பொடியாக நறுக்கி, செம்பு பாத்திரத்தில் போட்டு அது மூழ்குமளவு நல்லெண்ணெய் ஊற்றி பத்து நாள்கள் வெயிலில் வைத்து எடுத்து வடிகட்டவும். இதில் 2, 3 சொட்டுகள் காலை, மாலை கண்களில் விட்டுவந்தால் 96 விதமான கண் நோய்கள் சரியாகும். மெட்ராஸ் ஐ நோயும்கூட குணமாகும்.

பவளமல்லி

பவளமல்லி இலைகள் ஐந்து எடுத்து, நீர்விட்டு அலசி சிறிது இஞ்சி, பனங்கற்கண்டு சேர்த்துக் கொதிக்கவைக்க வேண்டும். இதை வடிகட்டி, தினமும் இரண்டுவேளை குடித்தால் சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் சரியாகும். ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்; சளி, இருமல் கட்டுக்குள் வரும்.

லெமன்கிராஸ்

லெமன்கிராஸ் இலை இரண்டை எடுத்து மூன்று கிராம்பு, லவங்கப்பட்டை - மஞ்சள்தூள் சிறிது, பாலுடன் சேர்த்துக் கொதிக்கவைத்து வடிகட்டவும். இதைக் குடித்தால் காய்ச்சல், இருமல், சளி குணமாகும். இதன் இலையுடன் தேயிலை, இஞ்சி, நாட்டுச்சர்க்கரை சேர்த்து நீர்விட்டுக் கொதிக்கவைத்து, தேநீர் போலவும் செய்து அருந்தலாம்.

ஊமத்தை

ஊமத்தை இலைகளை நல்லெண்ணெயில் வதக்கி ஒத்தடம் போட்டால் கீல் வாயு குணமாகும். அரை லிட்டர் தேங்காய் எண்ணெயில் அரை லிட்டர் ஊமத்தை இலைச் சாறு சேர்த்து நீர் வற்றும் வரை காய்ச்ச வேண்டும். இது குளிர்ந்ததும் பத்திரப்படுத்தி புண்கள், அழுகிய புண்களின் மீது வெளிப்பூச்சாகத் தடவினால் குணமாகும்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About