''ரஜினி - மோடி சந்திப்பு மீண்டும் நிகழுமா..?'' அரசியலில் திடீர் திருப்பங்கள் அரங்கேற்றம்!

பிரதமர் என்ற முறையில் அரசியலுக்கு அப்பாற்பட்டு, கட்சி எல்லைகளைத் தாண்டி மோடியின் செயல்பாடுகள் இருந்துவருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் பிரதம...

பிரதமர் என்ற முறையில் அரசியலுக்கு அப்பாற்பட்டு, கட்சி எல்லைகளைத் தாண்டி மோடியின் செயல்பாடுகள் இருந்துவருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் பிரதமர் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்போது, அந்தந்த மாநிலங்களின் மூத்த தலைவர்களைச் சந்தித்து வருகிறார். தமிழகத்திற்கு கடந்த ஆண்டு வந்திருந்தபோது, யாரும் எதிர்பாராத வகையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்ததுடன், கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரித்தார். தற்போது, தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வரும் 24-ம் தேதி சென்னைக்கு வரவிருக்கும் பிரதமர் மோடி, யாரையெல்லாம் சந்திக்கப் போகிறார் என்ற கேள்வி இப்போதே எழுந்துள்ளது.

2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, பி.ஜே.பி. தேசியத் தலைவர் அமித் ஷா, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வடமாநிலங்களில் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து, கேரளா, ஆந்திரா, கர்நாடகம், பாண்டிச்சேரி வந்து சென்று விட்ட அமித்ஷா-வின் தமிழகச் சுற்றுப்பயணம், இதுவரை மூன்று தடவை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க உள்கட்சி பிரச்னைகளோடு பி.ஜே.பி-யை பல கட்சிகளின் தலைவர்களும் முடிச்சுப் போட்டதால்தான் அமித்ஷா பயணம் தள்ளிப்போனதாகச் சொல்லப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோருக்கு இடையே நடந்த அதிகார மோதலில் மத்திய பி.ஜே.பி. அரசின் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதன்காரணமாக பி.ஜே.பி-யைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் தமிழகம் வருவதைத் தவிர்த்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு, ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் அணிகள், டெல்லி சென்றிருந்தபோது, அவர்கள் தனித்தனியே பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுகையில், "தாங்கள் நடத்தும் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழாக்களில் கலந்துகொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தன. அண்மையில் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டசபையில் திறந்துவைக்கப்பட்டது. "இந்த விழாவுக்கும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கும் பிரதமர் மோடி வரவேண்டும்" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார். ஆனால், அந்தக் கோரிக்கைகள் குறித்து பிரதமர் அலுவலகம் எந்த இசைவும் தெரிவிக்காததால், பிரதமர் இல்லாமலேயே ஜெயலலிதா படத்தை சட்டமன்றத்தில் திறந்துவைத்து விட்டனர். இந்நிலையில், பிப்ரவரி 24-ம் தேதி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளன்று, 'அம்மா இரண்டு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை' தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வருகிறார். விழா ஏற்பாடுகள் சென்னைக் கலைவாணர் அரங்கில் நடந்து வருகிறது.

 தமிழகத்தில் தற்போது ரஜினி, கமல்ஹாசன் ஆகியோரின் அரசியல் பிரவேசம் புதிய எதிர்பார்ப்புகளை கிளப்பியிருக்கிறது. கமலின் அரசியல் பிரவேசம் தொடங்கியுள்ள நிலையில் அவரது போக்கு, கம்யூனிஸ்ட் பார்வையில் இருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஆனால், ரஜினியின் திசை 'பி.ஜே.பி-யை நோக்கி இருக்கும்' என்று சொல்கிறார்கள். அவர் தன் அரசியல் பயணத்தை, 'ஆன்மிக அரசியல்' என்று சொல்லி இருப்பதால் ரஜினியோடு பி.ஜே.பி-யை இணைத்துப் பேசுகிறார்கள். ஆனால், இந்தக் கருத்துகளை எல்லாம் ரஜினி ரசிகர்கள் மறுத்துள்ளனர்.

ரஜினியைப் பொறுத்தவரை இப்போது தன்னுடைய ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, தமிழகம் வந்த மோடி, சென்னையில் திடீரென்று போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தார். அப்போது, ''தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து'' தெரிவித்ததாக மோடி கூறினார். மோடிக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்தார்.

 இந்தச் சந்திப்புக்குப் பிறகு கடந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி சென்னையில் நடந்த 'தினத்தந்தி' நாளிதழின் பவள விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மோடி, விழா முடிந்ததும், தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்து அவரின் உடல் நலத்தையும், கருணாநிதி மனைவி தயாளு அம்மாள் உடல் நலத்தையும் விசாரித்தார். திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் அந்தச் சந்திப்பு அமைந்தது.

அ.தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டில் பி.ஜே.பி. உள்ளது என்ற எண்ணத்தை உடைக்கும் வகையில், மோடியின் அந்தச் சந்திப்பு இருந்தது. அதேபோல், ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்டு, மாவட்டவாரியாக நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள சூழலில், பிரதமர் மோடி சென்னையில் ரஜினியைச் சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரஜினியின் அரசியல் பயணம் வெளிப்படையாக சூடு பிடிக்கவில்லை என்பதே உண்மை. ஆனால், நடிகர் கமல்ஹாசனோ வேகமாக அரசியல் களத்தில் இறங்கிவிட்டார்.

ரஜினியின் தயக்கத்தைப் போக்கும் வகையில் மோடி, சென்னையில் மீண்டும் ரஜினியின் வீட்டுக்குச் செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், ஜெயலலிதா உருவப்பட திறப்பு விழாவில் கலந்து கொள்வதை மோடி தவிர்த்த நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ''பிரதமர் மோடி சொன்னதால்தான், எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தேன். அவர் அறிவுரைப்படியே அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டேன்'' என்றார். அ.தி.மு.க - பி.ஜே.பி. இடையே தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும்நிலையில், ஜெயலலிதா பிறந்தநாள் விழா அன்று, தமிழக அரசின் இருசக்கர வாகனத் திட்டத்தை மோடி தொடங்கி வைக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க. நிர்வாகிகளுக்காக இல்லாவிட்டாலும் அந்தக் கட்சியின் தொண்டர்களை மனதில் வைத்தே மோடி, இந்த விழாவில் கலந்து கொள்ளவிருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இதனிடையே, சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 48-வது ஆண்டு விழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, ''ரஜினியும், பி.ஜே.பி-யும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும். தமிழக அரசியலில் ரஜினிக்கு மிகச்சிறந்த வாய்ப்பு இருக்கிறது'' என்றார். அதைத்தான் மோடியின் வருகையோடு முடிச்சுப்போட்டு, இப்போது சென்னையில் மோடி, ரஜினியைச் சந்திப்பார் என்று பேசத்தொடங்கி இருக்கிறார்கள்.

என்ன நடக்கிறது என்று பார்ப்போம்...!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About