''மாவட்டச் செயலாளர் பதவியா? எத்தனை 'சி' செலவு செய்வீர்...?" - ரஜினி மக்கள் மன்ற இன்டர்வியூ காட்சிகள்!

'கடந்த 30 ஆண்டுகளாக ரஜினி மன்ற நிர்வாகியா? உங்களுக்கு மாவட்டத்தின் கௌரவப் பதவி தருகிறோம்!' என்று வெளிப்படையாகச் சொல்கிறார்கள் ரஜினி...

'கடந்த 30 ஆண்டுகளாக ரஜினி மன்ற நிர்வாகியா? உங்களுக்கு மாவட்டத்தின் கௌரவப் பதவி தருகிறோம்!' என்று வெளிப்படையாகச் சொல்கிறார்கள் ரஜினியின் ஆலோசகர்கள். பவர்ஃபுல் ஆன மாவட்டச் செயலாளர் பதவிக்கு இவர்கள் போடும் கண்டிஷன் அதிர்ச்சி ரகம்.

பழைய நிர்வாகிகளிடம் ரஜினியின் ஆலோசகர்கள் கேட்கும் கேள்வி...

"தப்பா நினைக்கக் கூடாது... இது போர்க்களம். தி.மு.க, அ.தி.மு.க என்கிற ஊழல் முதலைகள் கோடிக்கணக்கில் பணம் சேர்த்து வைத்திருக்கிறார்கள். அரசியல் அவர்களுக்கு தொழில். போலீஸ் மற்றும் தாதாக்கள் அவர்கள் பக்கம். தேர்தல் நேரத்தில் அந்த அரக்கர்களை நீங்கள் சமாளித்து மாவட்ட அளவில் அரசியல் செய்ய வேண்டும். அதற்குத் தேவை.. முதலில், பணம். அடுத்து, ஆள் பலம். ஜாதி ஆதரவு. நீங்கள் எத்தனை 'சி' செலவு செய்வீர்?"

இந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்பாராத பழைய நிர்வாகிகள், "மன்றம் சார்பில் போஸ்டர் ஒட்டினோம். ஏதோ அன்றாடக் கூலியாக வேலை பார்க்கிறோம். ரஜினி எங்களின் தெய்வம். அவருக்காக வேலை செய்ய தைரியம் இருக்கிறது. நீங்கள் எதிர்பார்க்கும் பணம் எங்களிடம் இல்லை" என்று கைவிரிக்க... இதை எதிர்பார்த்தது போலவே, "ஓ.கே. பரவாயில்லை. ஒரு 'சி' க்கு மேல் செலவு செய்யக்கூடிய நபர் யாராவது நம் மன்றத்தில் இருக்கிறார்களா? நீங்களே அவர்களது பெயர்களை சிபாரிசு செய்யுங்கள். நாங்கள் அவர்களை நியமிக்கிறோம். உங்களுக்கும் மாவட்ட அளவில் கட்சியில் கௌரவப்பொறுப்புகள் தருகிறோம்" என்று கண்டிஷன் போடுகிறார்களாம் ரஜினியின் ஆலோசகர்கள்.

இந்த வகையில், வேலூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் முக்கியப் பொறுப்புகளுக்கு மட்டும் பதவி நியமனம் நடந்திருக்கின்றன. தூத்துக்குடி, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களுக்கு ஒன்றிய - நகர அளவிலான பதவிகளுக்கு நியமனம் நடைபெற்றுள்ளன. இந்த வாரம், காஞ்சிபுரம், விழுப்புரம் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ராகவேந்திரா மண்டபத்தில் இன்டர்வியு நடைபெறவிருக்கிறது. நிர்வாகிகள் நியமனத்தை அடுத்து வரும் நாள்களில் தொடர்ச்சியாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்த நியமனங்கள் முடிந்ததும், ரஜினியின் சுற்றுப்பயணம் தொடங்கும். இதுதான் ரஜினியின் அரசியல் திட்டம்!

தேனி மாவட்ட நிர்வாகிகள் தேர்வின்போது... பதவி கேட்டு சிலர் குரல் கொடுத்தனர். அதைக்கேட்ட, சீனியர் தலைவர் ஒருவர் ஆவேசமாக எழுந்து, ''ஏம்பா...இப்படி பதவிக்காக சண்டை போடுகிறீர்கள்? நாம்தான் ரஜினியை அரசியலுக்கு வரச் சொல்லி அழைத்தோம். அவரும் வந்தார். அடுத்து, அவரை முதல்வராக உட்கார வைக்கவேண்டிய பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது. இந்த நேரத்தில், நமக்குள் எதற்கு சண்டை?" என்று குரல் கொடுக்க... அங்கிருந்தவர்கள் அமைதியானார்களாம். போட்டியே இல்லாமல் நியமனம் நடந்ததாம். வந்திருந்த தேனிக்காரர் ஒருவர், தனது சட்டையை விலக்கி, ''1996 ம் வருடம் ரஜினி மன்றத்தினரை சில அரசியல் கட்சியினர் எதிர்த்தார்கள். சண்டை வந்தது. என்னைக் கத்தியால் குத்திவிட்டனர். பயங்கரக் காயம். இதோ பாருங்கள்... காயத்தை!'' என்று காட்டினாராம். ஏராளமான தையல்கள் போட்டிருந்த வடுவைப் பார்த்து மேடையில் இருந்தவர்கள் அதிர்ந்தார்களாம். இத்தனை வருடங்களாக இவரைப் பற்றி ரஜினிக்குத் தெரியாதாம். முதல்முறையாக, தகவல் சொன்னார்களாம். நெகிழ்ந்துபோனாராம் ரஜினி!


இங்கும் பிரச்னை. பாண்டிச்சேரி மாநிலத்துக்கு நிர்வாகிகள் நியமன நேரம் வந்தது. மாநில துணைச் செயலாளர் பதவி கேட்டு ஒருவர் அடம்பிடிக்க... அவருக்குக் கொடுக்கக் கூடாது என்று மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ரஜினியின் ஆலோசகர்கள் குழம்பிப்போய் நிற்க... ரஜினியிடமிருந்து போன் வந்ததாம். 'திருமண மண்டபம் அருகே டீக்கடையில் பாண்டி சங்கர் என்பவர் கடந்த நாலரை மணி நேரமாக நிற்கிறார். அவரை அழைத்துப் பேசுங்கள்' என்றாராம். ஆரம்ப காலத்தில் ரஜினியின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாகத் திகழ்ந்தவர் இவர். கடந்த சில வருடங்களாக ஏதோ சில காரணங்களைச் சொல்லி, இவரை மன்றத்தை விட்டு விலக்கிவிட்டனர். இருந்தாலும், ரஜினி மீது இருந்த விசுவாசத்தால் புதுவை நிர்வாகிகள் நியமன நாளன்று சங்கர் நேராக சென்னைக்கு வந்துவிட்டார். அவருக்கு அழைப்பிதழ் இல்லாததால், உள்ளே விடவில்லை. மண்டபத்தின் உள்ளே ஆலோசனைக் கூட்டத்தில் என்ன நடக்கிறது? என்பதைத் தெரிந்துகொள்ள டீக்கடையில் காத்திருந்தார். அவருக்கு அடித்தது அதிர்ஷ்டம். சங்கர் வருகை பற்றியத் தகவல் ரஜினியை எப்படியோ எட்டியிருக்கிறது. இதையடுத்து, மாநிலப் பொறுப்பாளர் பதவிக்கு அறிவிக்கப்பட்டார் சங்கர். மாநிலச் செயலாளராக பிரபாகரன் நியமிக்கப்பட்டார். இதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. சுமுகமாக முடிந்தது.

பணத்தை இன்வெஸ்ட் செய்கிறார்களா?

ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் பதவிக்கு கோடீஸ்வரர்கள்தான் வரமுடியும் என்கிற நிலை உருவாகிவிட்டது. இதைச் சுட்டிக்காட்டிய பழைய நிர்வாகிகள், "மன்றத்தைப் பற்றி ஏதும் தெரியாத அவர்கள் வந்து என்ன செய்வார்கள்? போட்ட பணத்தை அறுவடை செய்யத்தானே பார்ப்பார்கள்? அப்பேர்பட்ட பச்சோந்திகளுக்குப் பதவியா... அடியாட்கள் பலம் இருந்தால் போதுமா?" என்று கேட்க...  "அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். ரஜினியை முதல்வராக அமர வைப்பதுதான் முதல் அஜென்டா. அவரை உட்கார வைத்தபிறகு, அடுத்து என்ன... எப்படி செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்"  என்று பதில் வந்ததாம். இதை நம்புவதா? வேண்டாமா? என்கிற குழப்பத்துடன் மன்ற முக்கியஸ்தர்கள் கிளம்பிப்போனார்களாம்.

மன்றத்தினரிடம் நாசூக்காகப் பேசி, அவர்களை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்துவருகிறார்கள் ரஜினியின் ஆலோசகர்கள். 'இதெல்லாம் ரஜினிக்குத் தெரியாமலா நடக்கும்?' என்று கேட்கிறார்கள் ரசிகர் மன்ற மூத்த நிர்வாகிகள்!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About