'அந்த நாள் ஞாபகம்' - வெண்கலக்குரலோன் டி.எம்.எஸ் #BirthdaySpecial

திரையிசை உலகின் வெண்கலக்குரலோன் என்று போற்றப்படுபவர் டி.எம்.சௌந்தரராஜன் என்னும் டி.எம்.எஸ். இவர் பாடினால் தமிழ் இனிக்கும்; உணர்ச்சிகள் சிலி...

திரையிசை உலகின் வெண்கலக்குரலோன் என்று போற்றப்படுபவர் டி.எம்.சௌந்தரராஜன் என்னும் டி.எம்.எஸ். இவர் பாடினால் தமிழ் இனிக்கும்; உணர்ச்சிகள் சிலிர்க்கும். தொகுளுவா மீனாட்சி அய்யங்கார் செளந்தரராஜன் எனும் டி.எம்.எஸ் 1922- ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி மதுரையில் பிறந்தார். ஆம், இன்று அவருடைய பிறந்த தினம் என்பதால் அவருடனும் நெருங்கிப்பழகிய இயக்குனர் விஜயராஜிடம் அவருடைய சிறப்புகளைக் குறித்துக் கேட்டோம்...

டி எம் சௌந்தரராஜன்

11000 தமிழ்ப் பட பாடல்களையும், 2000-க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடி நம்மையெல்லாம் பரவசப்படுத்திய டி.எம்.எஸ் அவர்களின் வாழ்க்கையே நமக்கெல்லாம் ஒரு பாடம் தான். அவர் தனது கடைசி காலம் வரை தனக்கான வேலைகளை தானே செய்து கொண்டவர். அவர் ஓய்வு எடுத்து நான் பார்த்ததே இல்லை. 'நாம் அரசு ஊழியர் இல்லை, ஓய்வெடுக்க. ஒரு கலைஞன் தன்னை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் அவனுக்கு வாய்ப்பு கிடைக்கும். அப்போது அவன் பணியாற்றத் தயாராக இருக்க வேண்டும்' என்று கூறுவார். அப்படி அவர் சொல்லும்போதே அவர் 90 வயதை தொடவிருந்தார். பாடுவதைப்போலவே அவர் சமையலிலும் கைதேர்ந்த கலைஞர். அவர் ரசம் வைத்தால் தெரு முழுக்க மணக்கும் என்பார்கள். நிஜமாகவே ஒரு அற்புதமான ரசனைக்காரர் அவர். அவர் விரும்பியே தனது ஒவ்வொரு கணத்தையும் வாழ்ந்தார். எல்லா செயலிலும் ஒரு தனித்துவம் இருக்க வேண்டும் என்று விரும்புவார். அதற்காக உழைப்பார்.

டி எம் எஸ்

டி.எம்.எஸ் அவர்களின் 90-வது பிறந்த நாள் தொடக்கத்தை மலேசியாவின் பத்துமலை முருகன் கோயிலில் அவரோடு  கொண்டாடினோம். அங்கு அவர் பாடிய கந்தசஷ்டி கவசம், சண்முக கவசம் பாடல்களின் சிடியை கோயிலில் கொடுத்தோம். அவர்கள் அதை உடனே கோயிலில் ஒலிபரப்பி அவரை பெருமைப்படுத்தினார்கள். அப்போது முருகப்பெருமானின் கருணையை எண்ணி வியந்து நெகிழ்ந்துப்போனார். தான் முருகப்பெருமானுக்காக உருகி உருகிப்பாடிய பாடல்களையெல்லாம் சொல்லி கண்கலங்கினார். முருகப்பெருமானின் பாடல்கள் என்றாலே டி.எம்.எஸ் தான் என்று நாம் நினைப்பதற்குக் காரணம் நிஜமாகவே அவர் முருகனின் பக்தராக இருந்தது தான். எத்தனையோ பாடகர்கள் வரலாம், என்றாலும் டி.எம்.எஸ்... டி.எம்.எஸ் தான்' என்றார்.

ஆம், மல்லிகைப் பூவை மறைத்துவிட முடியும்! வாசத்தை?

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About