செயல்- எதிர்பாராமல் அடித்த இன்ப புயல்! திரைவிமர்சனம்,

நார்த் மெட்ராஸ் கதையென்றாலே வேர்த்துக் கொட்டுகிற அளவுக்கு முந்தைய ‘அருவா மார்க் ’ அனுபவங்கள் இருக்க…. மறுபடியும் ஒரு நார்த் மெட்ராஸ் படமா? ...

நார்த் மெட்ராஸ் கதையென்றாலே வேர்த்துக் கொட்டுகிற அளவுக்கு முந்தைய ‘அருவா மார்க் ’ அனுபவங்கள் இருக்க…. மறுபடியும் ஒரு நார்த் மெட்ராஸ் படமா? சற்றே தடதடப்போடு முதல் சில காட்சிகளை கடக்கிற நமக்கு, செம ட்விஸ்ட்! இது நாம நினைக்கிற மாதிரி அருவா இல்லை. ஆறுதல், அசத்தல்!

மார்க்கெட் ஏரியாவையே தன் கைக்குள் வைத்திருக்கிற சமக் சந்திரா, தனது அல்லக்கைகள் சகிதம் மாமூல் வசூலில் கொடி கட்டி பறக்கிறான். ஏதோ ஒரு வேலையாக மேற்படி மார்க்கெட்டுக்குப் போகும் ஹீரோ ராஜன் தேஜேஸ்வர் சம்பந்தமில்லாமல் தன்னிடம் முண்டா தட்டும் சமக்கை போட்டு புரட்டி எடுக்க…. ஏரியாவே துவம்சம் ஆகிறது. அதுவரை அலறிக் கொண்டு மாமூல் கொடுத்தவர்கள் எல்லாம், “போங்கடா… உங்க அண்ணன் ஒரு சின்ன பையன்ட்ட அடி வாங்குனவன்தானே?” என்று வில்லனின் அடியாட்களை துரத்தி துரத்தி அவமானப்படுத்துகிறார்கள்.

“அண்ணே… அதே ஏரியாவுல அவனை வச்சு தூக்கலேன்னா நமக்கு மாமூலும் இல்ல. மரியாதையும் இல்ல” என்று கதறுகிறார்கள் அல்லக்கைகள். வேறு வழியில்லாத வில்லன், சம்பந்தப்பட்ட ஹீரோவுக்கே போன் போட்டு, “மார்க்கெட்டுக்கு வா. உன்னை அடிக்கணும்’ என்று அழைக்க… “கொஞ்சம் வேலை இருக்குன்னா. ஒரு வாரம் கழிச்சு வர்றேன்” என்கிறார் ஹீரோ. எப்படியாவது இவரை மார்க்கெட்டுக்கு கொண்டு வர துடிக்கும் வில்லனும், மார்க்கெட்டுக்குப் போய் மறுபடியும் அவனை புரட்டி எடுக்கணும் என்று துடிக்கிற ஹீரோவும் தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டார்களா என்பதுதான் முழு கதையும்.

நடுவில், காதல் காமெடி, சோஷியல் மெசேஜ், லேடீஸ் சென்ட்டிமென்ட் என்று சகல ஏரியாவிலும் நின்று ரசிக்க விட்டிருக்கிறார் இயக்குனர் ரவி அப்புலு! பெரிய பெரிய படங்கள் எல்லாம் நம்மை இழுத்து வச்சு ரம்பம் போடுகிற நேரத்தில், எங்கிருந்தோ வந்த இவர்கள் கொடுத்த ஆறுதல் இருக்கிறதே… அப்பப்பா. நல்லாயிருப்பீங்கப்பா!

இந்தப்படத்தின் ப்ளஸ்சே, போகிற போக்கில் கிச்சு கிச்சு மூட்டிவிட்டுப் போவதுதான். மாமூல் வரத்து நின்று போக, தன் மனைவியின் தாலியிலிருக்கும் ஒவ்வொரு காசாக விற்று செலவு பண்ணும் வில்லனிடம், “அண்ணே… உங்க வொய்புக்கு ஒரு தாலிதான் கட்னீங்களா?” என்று அல்லக்கைகள் கேட்கிற அந்த இடம், வாவ்… அம்சம்! சொல்ல ஆரம்பித்தால் இப்படி படம் முழுக்க இறைந்து கிடக்கிறது.

ஹீரோ ராஜன் தேஜேஸ்வருக்கு வேறு யாரையாவது டப்பிங் பேச வைத்திருக்கலாம். அது ஒன்றுதான் பெரும்குறை. மற்றபடி ஆரம்ப கால விஜய்யிடம் இருந்த அதே துறுதுறுப்பு… ஆக்ஷன் வேகம் எல்லாமும் இருக்கிறது இந்த புதுமுகத்திடம். இதே போல கதை கேட்கிற நாலெட்ஜும், இயக்குனர் தேர்வு செய்கிற அறிவும் இருந்தால் வெகு சீக்கிரம் ஒரு சீட் இருக்கு தம்பி!

நாயகி தருஷி வேக வைத்த வெடக்கோழி போலிருக்கிறார். கண்ணுக்கு நிறைவு.

இவர்களையெல்லாம் விட, கடைசிவரைக்கும் தன் முறைப்பை குறைத்துக் கொள்ளாத அந்த வில்லன் தண்டபாணி, அதாவது சமக் சந்திராவுக்கு இஷ்டம் போல ஓட்டு குத்தலாம். மற்றவர்களை சிரிக்க வைத்து தான் மட்டும் சீரியசாகவே இருக்கிற அந்த நடிப்பும் முகமும் பலே பலே!

லொட லொட பேச்சு ரேணுகாவுக்கு அம்மா கேரக்டர். தன் மகனை மாப்பிள்ளை கேட்டு வந்திருக்கிற சம்பந்தியையே மணப்பெண் என்று நினைத்துக் கொண்டு இவர் பொங்குகிற பொங்கலும், சீற்றமும் செம லாஜிக் லாஃபிங்!

ஒரு அறிமுக ஹீரோவுக்கு விஜய் அஜீத் லெவலுக்கு பைட் கம்போசிங் செய்வதற்கே ஒரு தனி தைரியம் வேண்டும். கனல் கண்ணன் அதை செய்திருக்கிறார் என்றாலும், அதை நம்ப வைத்ததே இயக்குனரின் திரைக்கதைதான்!

இப்படி, தன் வரைக்கும் திரைக்கதையை தொங்காமல் பார்த்துக் கொண்ட இயக்குனர் ரவி அப்புலுவுக்கு, நல்ல விறுவிறுப்பான நேரத்தில் பாடல்களை நுழைத்து இம்சை பண்ணுகிறோம் என்கிற சுதாரிப்பு மட்டும் இல்லாமல் போனது ஏனோ?

இசை சித்தார்த் விபின். பின்னணி இசையில் அட போட வைக்கிறார். பாடல்கள்தான் சொதப்பல்!

செயல்- எதிர்பாராமல் அடித்த இன்ப புயல்!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About