NGK Review: நந்தகோபாலன் குமரன்... சுருக்கமா என்ஜிகே... அரசியலில் பாஸா? பெயிலா? விமர்சனம்!

தேசத்தை நேசிக்கும் ஒரு இளைஞன் அரசியலில் அடிமட்ட தொண்டனாக சேர்ந்து, எப்படி நாட்டின் முதலமைச்சர் ஆகிறான் என்பதே என்ஜிகே. நந்தகோபாலன் குமரன்...

தேசத்தை நேசிக்கும் ஒரு இளைஞன் அரசியலில் அடிமட்ட தொண்டனாக சேர்ந்து, எப்படி நாட்டின் முதலமைச்சர் ஆகிறான் என்பதே என்ஜிகே.

நந்தகோபாலன் குமரன், சுருக்கமாக என்.ஜி.கே. ஒரு படித்த பட்டதாரி இளைஞன். பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்கும் குமரன், வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு வந்து இயற்கை விவசாயத்தில் ஈடுபடுகிறார். நிறைய சமூக சேவைகளையும் செய்கிறார். இதனால் உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் வியாபாரிகளின் பகைக்கு ஆளாகிறார்.

தான் மிகவும் கஷ்டப்பட்டாலும் செய்ய முடியாத பெரிய காரியங்களை, அரசியலில் இருக்கும் அடிமட்டத் தொண்டன் எளிதாக சாதித்துவிடுவதை பார்த்து வியப்படைகிறார். தானும் அரசியலில் இறங்க முடிவு செய்து, உள்ளூர் எம்எல்ஏ இளவரசுவிடம் எடுபிடியாக சேர்கிறார். கழிவறையை சுத்தம் செய்வது முதல், இளவரசுக்கு சாப்பாடு ஊட்டிவிடுவது வரை அனைத்து காரியங்களையும் தானாக முன்நின்று செய்கிறார். இளவரசுவின் அன்புக்கு பாத்திரமாகிறார்.

இளவரசு மூலமாக கட்சியின் தலைவர் பொன்வண்ணன் மற்றும் அவருக்கு பக்கபலமாக நிற்கும் பிஆர் அதிகாரி ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரின் அறிமுகம் கிடைக்கிறது. ரகுலுடன் நட்பை வளர்க்கிறார் சூர்யா. அவர் மூலம் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறுகிறார். இதனால் பகையும் அதிகமாகிறது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் கவனம் முழுவதும் சூர்யாவின் பக்கம் திரும்புகிறது. சூர்யாவை போட்டுத்தள்ள துடிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பித்து, சூர்யா எப்படி மக்கள் தலைவனாக மாறுகிறார்? தமிழ்நாட்டின் முதலமைச்சராக எப்படி உயர்கிறார்? என்பது தான் செல்வராகவன் ஸ்டைல் என்ஜிகே.

செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகும் முதல் படம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் செல்வராகவன் படம் என என்ஜிகேவுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனால், அந்த பொறுப்பை உணர்ந்து செயல்பட மறந்துவிட்டனர் செல்வாவும், சூர்யாவும்.

மக்களாட்சி, ஏழை ஜாதி, முதல்வன் தொடங்கி சமீபத்தில் வெளியான எல்கேஜி வரை நிறைய அரசியல் படங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்து, ரசித்து கொண்டாடியிருக்கிறார்கள். ஆனால் சூர்யா -செல்வா என மிகப்பெரிய கூட்டணி இருந்தாலும், என்ஜிகே படம் இந்தப் பட்டியலில் சேருமா என்பது சந்தேகமே.

இதற்கு முக்கிய காரணம் படத்தின் கதையும் திரைக்கதையும் தான். அரசியல் கட்சியில் அடிமட்டத்தில் இருக்கும் ஒரு தொண்டன், முதலமைச்சராக எப்படி உயர்கிறான் என்பது தான் படத்தின் ஒன்லைன். இந்த ஒன்லைனில் நிறைய படங்கள் வந்துவிட்டன. அதுவும் சமீபத்தில் வெளியாகி ஹிட்டான எல்கேஜி படத்தின் சாயல், என்ஜிகேவில் நிறைய தெரிகிறது. இருபடங்களின் கதை ஒன்று தான். ஆனால் அதை சொன்ன விதத்தில் தான் வேறுபடுகின்றன.

புதுப்பேட்டை படத்தின் திரைக்கதையை அப்படியே என்ஜிகேவுக்கு பயன்படுத்தி இருக்கிறாரோ செல்வா என்றே எண்ணத் தோன்றுகிறது. புதுப்பேட்டையில் ஜெயிலுக்குள் இருந்தபடி கொக்கி குமார் தனது கதையை சொல்வது போல், இப்படத்தில் எக்ஸ்ட்ரீம் குளோஸ்அப் ஷாட்டில், எங்கோ அமர்ந்தபடி கதை சொல்கிறார் சூர்யா. ஆனால், கொக்கிகுமார் அளவுக்கு நம் மனதில் சூர்யா பதியவில்லை என்பது தான் உண்மை.

முதல்பாதி படத்தில் சுமார் 45 நிமிடங்கள் வரை சுவாரஸ்யமான காட்சிகளே இல்லை. படத்தோட பேரு மாதிரி காட்சிகளின் நீளத்தையும் சுருக்கியிருக்கலாம். அதை செய்யத் தவறி இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் சமீபத்தில் ஒரு அமைச்சர் மீது கூறப்பட்ட பாலியல் புகார் தொடர்பான காட்சிகள் படத்தில் வருகிறது. பரபரப்பிற்காக அப்படியான காட்சிகளை சேர்த்தார்களா என்பதை, இனி அதற்கு கிடைக்கும் இலவச எதிர்ப்பு விளம்பரத்தைப் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால், உண்மையில் படத்தில் அக்காட்சிகள் தான் ரசிக்கும்படியாக இருக்கின்றன.

இரண்டாம் பாதியில் மருந்துக்கூட அதுபோன்ற சுவாரஸ்யமான காட்சிகள் எதுவும் இல்லை. ஒரு படித்த இளைஞன், பெரிய கட்சியில் அடிமட்ட தொண்டனாக சேரும் போது, அவன் எப்படி எல்லாம் நடத்தப்படுவான், எந்த அளவுக்கு கீழே இறங்கி வேலை செய்ய வேண்டி வரும் என்பதை உண்மையாக சொல்ல நினைத்திருக்கிறார் செல்வா. ஆனால் அதில் சினிமாத்தனமே மேலோங்கி இருக்கிறது.

சூர்யாவின் நடிப்பில் செல்வாவே அதிகமாக தெரிகிறார். பல காட்சிகளில் நடிகர் திலகம் சிவாஜியை நினைவுப்படுத்துகிறார். மற்றபடி, சூர்யாவின் நடிப்பு செயற்கையாகவே தெரிகிறது. ஆயுத எழுத்து மாதிரியான அரசியல் படத்தில் நடித்த சூர்யா இந்த ஸ்கிரிப்டை எப்படி தேர்வு செய்தார் என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது. அப்படத்தில் இருந்த கம்பீரம் நந்தகோபாலன் குமாரனிடம் மிஸ்ஸிங். காப்பானாது சூர்யாவை காப்பாற்றும் என நம்புவோம்.

சாய் பல்லவிக்கு இதில் சூர்யா மனைவி என்பதை தவிர வேறு ஏதும் முக்கியத்துவம் இல்லை. ரௌடி பேபி காலை கட்டி, தலையில் சுத்தியலை ( நேசமணி எபெக்டுங்க..) போட்டு விட்டீர்களே விட்டீர்களே செல்வா. நிறைய காட்சிகளில் ரகுல் தான் அதிகம் ஸ்கோர் செய்கிறார். இருவருக்குமான சக்களாத்தி சண்டை மட்டும் கொஞ்சம் ரசிக்கும்படியாக இருந்தது. படத்தில் முன்னணி நாயகிகள் இருந்தும், கலர்புல்லாகவே இல்லை. பெரும்பாலான காட்சிகளில் ரகுல் முகத்தில் சோனியா அகர்வால் மாஸ்க்.

இவர்கள் மூவரை தவிர, நிழல்கள் ரவி, உமா பத்மநாபன், இளவரசு, பாலாசிங், பொன்வண்ணன், கன்னட நடிகர் தேவராஜ் என நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அனைவர் முகத்திலும் செல்வராகவனின் மாஸ்க்கைத் தான் நம்மால் பார்க்க முடிகிறது. தலைவாசல் விஜய் மற்றும் வேல.ராமமூர்த்தி ஆகிய இரண்டு பேரும் அட்மாஸ்பியரில் நிற்கும் ஜூனியர் ஆர்டிஸ்ட்களை போல் வந்து போகிறார்கள்.

யுவனின் இசையாவது நல்லாயிருக்கும் என நினைத்தால், அதிலும் ஏமாற்றமே. தண்டல்காரன் பாட்டு கேட்க ஓகே, ஆனால் திரையில் ஏன், எதுக்குன்னே தெரியாமா வந்துட்டு போகுது. காட்சிகள் பலவீனமாக இருப்பதால், பின்னணி இசையும் செட்டாகவில்லை.

சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு படத்தை ஒரே மூடில் கொண்டு செல்கிறது. பிரவீன் கே.எல்.வின் எடிட்டிங்கில் முதல் பாதி மட்டும் ஓகே.

ரகுல் - சூர்யா உறவும், ஒரு ட்ரீம் பாடலும் தேவையில்லாத ஸ்பீட் பிரேக்கர்கள். வழக்கமாக செல்வராகவன் படத்தைப் பார்த்தால், அதன் தாக்கம் நம் மனதில் இருந்து நீங்க சில காலம் ஆகும். ஆனால், அப்படியான உணர்வுப்பூர்வமான காட்சிகள் எதுவும் படத்தில் இல்லாதது மிகப்பெரிய மைனஸ்.

படத்தில் தமிழகத்தின் சமகால அரசியலைப் பற்றி நாசுக்காகப் பேசியிருக்கிறார் செல்வா. தமிழகத்தில் இரண்டு பெரிய கட்சிகளைத் தவிர, வேறு யாரும் ஆட்சிக்கு வரமுடியாது. வேண்டுமென்றால் அவர்கள் கட்சியில் சேர்ந்து உயர் பதவியில் அமரலாம் என்பது தான் படத்தின் மறைமுகக் கருத்து. ஆனால், இப்படியான படங்களைப் பார்த்தால், படித்த இளைஞர்கள் அரசியலில் குதிக்க, தனிக்கட்சி தொடங்க நிச்சயம் தயங்குவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அரசியல் மாற்றத்தை பலரும் எதிர்பார்க்கும் வேளையில் இளைஞர்களைத் திசை திருப்புகிறான் இந்த என் ஜி கே என்றே சொல்ல வேண்டும்.

மொத்தத்தில் என்.ஜி.கே., சூர்யா - செல்வராகவன் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றமே.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About