புடவை விற்ற ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை...

‘‘இனி, வாரம் ஒருமுறை பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறேன்’’ என்று 2011-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற ஜெயலலிதா சொன்னார். ஆனால், அவர் வார்த்தைக...

‘‘இனி, வாரம் ஒருமுறை பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறேன்’’ என்று 2011-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற ஜெயலலிதா சொன்னார். ஆனால், அவர் வார்த்தைகள் காற்றில் கரைந்துதான் போயின. ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. அதிகபட்சமாக அவர், ஐந்து முறை பத்திரிகையாளர்களைச் சந்தித்து இருப்பார்...
அவ்வளவுதான்.  வரலாற்றைக் கொஞ்சம் ஊடுருவிப் பார்த்தோமானால், அவர் தொடக்கக் காலத்தில் இவ்வாறாக இல்லை. ஆம்...  ஊடகவியலாளர்களுடன் நெருங்கிய நட்பு பாராட்டி இருக்கிறார். அப்போது, பல அதிகார மையங்களைத் தாண்டியெல்லாம் இல்லை... வெகு சுலபமாக அவரைச் சந்திக்க முடிந்து இருக்கிறது. அவரும் மனம்விட்டுத் தன் சொந்தப் பிரச்னைகளைக்கூடப் பகிர்ந்து இருக்கிறார். ஏன்? ஒரு வார இதழ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க புடவைகள்கூட விற்று இருக்கிறார்!

ஜெயலலிதாவுக்குப் புடவை விற்கத் தெரியுமா...?

கோவையில் நடைபெற்ற கைத்தறிக் கண்காட்சி நிகழ்வில் மா.பொ.சிவஞானம், “சினிமா நட்சத்திரங்கள் தேச நலன் கருதி கைத்தறிப் புடவைகளைத்தான் உடுத்தவேண்டும். தான் உடுத்துவது மட்டுமல்லாமல் தன் ரசிகர்களுக்கும் இதையே பரிந்துரைக்க வேண்டும்” என்று பேசி இருக்கிறார். இதை முன்வைத்து அப்போது ஒரு வார இதழ், கட்டுரை எழுத முடிவு செய்தது. அதாவது, ஒரு பிரபலத்தைப் புடவை விற்கவைத்து, அந்த அனுபவங்களைக்  கட்டுரையாக எழுதுவது. இதற்காக அவர்கள் தேர்வுசெய்த பிரபலம் ஜெயலலிதா...!

இதை ஜெயலலிதாவிடம், அந்த பத்திரிகையின் நிருபர் திரைஞானி சொன்னவுடன், ஜெ. கேட்ட கேள்வி, “சரி நான் வருகிறேன்... ஆனால், எனக்கொரு சந்தேகம். என்னை ஏன் இதற்காகத் தேர்வுசெய்தீர்கள்...?” என்பதுதான்.

இதுதான் காரணமா என்றெல்லாம் தெரியாது. ஆனால், திரைஞானி ஒரு பதிலைச் சொல்லி சமாளித்து இருக்கிறார். அந்தப் பதில் இதுதான், “ ‘கைத்தறிப் புடவைகளைத்தான் உடுத்த வேண்டும்’ என்று சொன்னவர் பெயர் சிவஞானம். நீங்கள் குடியிருக்கும் தெருப்பெயர் சிவஞானம் தெரு. அதனால்தான்...!”

ஜெ. சிரித்தப்படி... “சரி... தெருத்தெருவாகத்தான் விற்க வேண்டுமா...” என்று தயக்கத்துடன் கேட்க, அதற்கு திரைஞானி, “தெருத்தெருவாகக் கூவி விற்க வேண்டும் என்பதில்லை. தெரிந்தவர்கள் யாருக்காவது விற்றால் போதும்” என்றிருக்கிறார்.

ஜெயலலிதா கைத்தறிப் புடவை உடுத்திக்கொள்ள... ஒரு மூட்டை கைத்தறித் துணிகளுடன், அவர்கள் புடவை விற்கச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் சென்ற இடம் அந்தச் சமயத்தில் ஜெ-வுக்கு நெருக்கமாக இருந்த எழுத்தாளர் சிவசங்கரி வீடு.

ஏதோ ஒரு கட்டுரைக்காகத்தானே செல்கிறோம் என்றில்லாமல்... புடவைகள் குறித்து முழுவதுமாகத் தெரிந்துகொண்டு, “இது கோயம்புத்தூர் காட்டன்; இது காஞ்சிபுரம்; இது கந்துவால்; இது வெங்கடகிரி...’’ என்று ஒவ்வொரு புடவையின் சிறப்புக் குறித்தும் விளக்கி இருக்கிறார். இதுகுறித்து திரைஞானி, “ஒரு காரியத்தில் ஈடுபட்டால் அதைப்பற்றி முழு விவரங்களையும் தெரிந்துகொண்டு இண்டலெக்ஸுவலாக நடந்துகொள்வார்...” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதுபோல இன்னொரு சம்பவமும் இருக்கிறது. பாலா என்ற பத்திரிகையாளர் ஒரு திரைப்படப் படப்பிடிப்பு நடக்கும்போது, ஜெயலலிதாவை பேட்டிகாணச் சென்றிருக்கிறார். இவர் கேட்ட கேள்விகளுக்கு... ஜெ., சுவாரஸ்யமாக பதில் சொல்லிக்கொண்டிருக்க... அப்போது அந்தப் படத்தின் கதாநாயகன் அந்த இடத்துக்கு வந்திருக்கிறார். பாலா தயக்கத்துடன் அங்கிருந்து எழ... அதற்கு ஜெயலலிதா, “ஏன் எழுகிறீர்கள்... இப்போது நீங்கள் என் கெஸ்ட்... யாருக்காகவும் எழுந்திருக்கத் தேவையில்லை” என்றிருக்கிறார். இதைப் பின்னாளில் பாலா, தான் எழுதிய ஒரு கட்டுரையில் பதிவுசெய்திருக்கிறார்.

இதையெல்லாம் படிக்கப்படிக்க உண்மையில் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. ஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் 200-க்கும் மேற்பட்ட வழக்குகளைப் போட்ட ஜெயலலிதாவா இது...? 2001-ம் ஆண்டு பத்திரிகையாளர்களை ஓடஓட விரட்டித் தாக்கிய ஜெயலலிதாவா இது...?

ஹூம்... பெருமூச்சு விட்டுக்கொள்ள வேண்டியதுதான். காலமும், அது தந்த பதவியும்... பதவி தந்த அதிகாரமும் ஒரு மனிதனை இவ்வளவு இறுக்கமாகவா ஆக்கும்...? ஆம்... இவரை ஆக்கி இருக்கிறது! இப்போது புடவை எல்லாம் விற்க வேண்டாம்தான். அது ஒரு முதல்வரின் வேலையும் இல்லைதான். ஆனால், தமிழகத்தின் தலையாயப் பிரச்னைகளின் போதாவது, ஊடகவியலாளர்களைச் சந்தித்து இருக்கலாம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About