'சாப்பிட சோறு வேணும்னா களத்துக்கு வாங்க!’ - கொந்தளிக்கும் பேராசிரியர் ஜெயராமன்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜல்லிக்கட்டுக்காக வீறுகொண்டு போராடி வெற்றிகண்ட பின்னர், 'சற்று அசரலாம்' என்று நினைப்பதற்குள் தமிழர்களுக்க...

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜல்லிக்கட்டுக்காக வீறுகொண்டு போராடி வெற்றிகண்ட பின்னர், 'சற்று அசரலாம்' என்று நினைப்பதற்குள் தமிழர்களுக்கு அடுத்தடுத்த சோதனைகளைத் தயாராகவே வைத்திருந்தன மத்திய, மாநில அரசுகள். தொடர்ச்சியாக நெடுவாசல், கதிராமங்கலம், நீட் தேர்வு என்று மக்களைப் பாதித்த பிரச்னைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். எல்லாப் போராட்டங்களுக்கும் தொடக்கத்தில் ஆதரவளித்த பல்வேறு தரப்பினரும் சிலநாள்களில் தங்களின் ஆதரவை வேறுதிசையில் திருப்பியதால், அது மறைந்து போக, பிரச்னையால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே களத்தில் எஞ்சி நின்றனர்; இன்னும் நிற்கின்றனர். ஒருவகையில், உள்ளூர் மக்கள் களத்தில் இறங்கும் போராட்டங்களே வெற்றிபெறுவதை வரலாறு நெடுக பார்த்துக்கொண்டு வருகிறோம். அப்படி, 160 நாள்களையும் தாண்டி நடந்து வரும் நெடுவாசல் போராட்டத்திலும், டெல்டா மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் எண்ணெய் நிறுவனங்கள் குழாய் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் களமாடி வரும் பேராசிரியர் ஜெயராமன், சென்னையில் பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைத்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். நிகழ்ச்சி ஹைட்ரோகார்பன் திட்ட பாதிப்பு விழிப்புஉணர்வு குறித்தான கிருத்திகா சீனிவாசனின் தோல்பாவை கூத்துடன் தொடங்கியது.

33 ஆண்டுகளாக வரலாற்றுப் பேரசிரியராகப் பணியாற்றிய ஜெயராமன், மண்ணைக் காக்கக் களத்தில் இறங்கிப்  போராடியபோது இந்த அரசு, கடந்த ஜூன் மாதம் 45 நாள்கள் சிறைத்தண்டனையை அவருக்குப் பரிசாக அளித்தது. சிறையிலிருந்து வெளியே வந்த பின்னரும், தற்போது களத்தில் இறங்கி மக்களைப் பாதிக்கும் திட்டங்களுக்கு எதிராக மீண்டும் போராட ஆரம்பித்துள்ளார் அவர். நீண்ட நாள்களுக்குப் பின்னர் சென்னையில் ‘காவிரி டெல்டாவும் ஹைட்ரோ கார்பன் திட்டமும்’ என்ற தலைப்பில் பேசினார் ஜெயராமன். அவர் பேசுகையில், "தமிழகத்துக்கு இப்ப பல பிரச்னைகள் தலைமேல கத்தி மாதிரி தொங்கிக்கிட்டு இருக்கு. ஆனா, அதை எல்லாத்தையும்விட டெல்டா பகுதியில் ஓ.என்.ஜி.சி முதற்கொண்டு பல்வேறு தனியார் நிறுவனங்களால் பதிக்கப்படும் எண்ணெய் குழாய்கள்தான் மிகவும் ஆபத்தானதுன்னு உறுதிபட சொல்ல முடியும். காரணம் ரொம்ப சுலபம். தமிழ்நாட்டில் நாம சாப்பிடும் உணவில் 37 சதவிகிதம் டெல்டா பகுதியில் இருந்துதான் வருது. அதை இன்னும் தெளிவாச் சொல்றேன்.

தினம் நீங்க சாப்பிடும் ஆறு இட்லியில் ரெண்டு இட்லி டெல்டா பகுதியில விளையறதுதான்.. எனவே, சோறு வேணும்னா களத்துக்கு வாங்க. உணவு தற்சார்பை இழக்கும் ஒரு சமூகம் கண்டிப்பா அகதிகளாத்தான் ஆகும். இன்னைக்கு நீங்களெல்லாம் களத்துக்கு வந்து போராடலேன்னா, நாளைக்கு உங்க சந்ததி சோத்துக்குக் கையேந்துற நிலை கண்டிப்பா வரும். இதுக்காகத்தான் 2014-ம் ஆண்டில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் `டெல்டா மாவட்டங்கள் பாதுகாப்பட்ட வேளாண் மண்டலங்கள்’ என அறிவிக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றினோம். அதை நோக்கித்தான் ஓடிக்கிட்டு இருக்கோம்" என்று தங்கள் போராட்டத்தின் நிலைப்பாட்டை விளக்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், "சில அடிப்படை விஷயங்களை இங்க கூடியிருக்கிற நீங்க தெரிஞ்சுக்கணும். காரணம், நான் சென்னைக்கு வந்து இப்படி உரையாற்றுகிற வாய்ப்பெல்லாம் அரிதாவே கிடைக்குது. பொதுவா, குழாய் பதிச்சிருக்கிற கிராமங்களிலும் போராட்டக் களத்திலும்தான் தொடர்ச்சியா வேலை செய்துட்டு வர்றோம். அங்க சில நேரத்தில் மொட்ட வெயிலில் வெறும் ரெண்டு பேருக்கு முன்னாடி தொண்டத்தண்ணி வத்திப்போக பேசின சம்பவமெல்லாம் நடந்திருக்கு. அதனால, வருத்தம் ஒண்ணுமில்லை. யாராவது ஒருத்தர் மனம் மாறி எங்களுக்கு தோள் கொடுத்தாலும் அது எங்கள் போராட்டத்தின் வெற்றிதான்.

முதலில் போராட்டத்தின் அடிப்படையை நான் விளக்கியாகணும். அதாவது, மீத்தேன் திட்டத்தை எதிர்த்தோம், இப்ப ஏன் ஹைட்ரோ கார்பன் திட்டத்த எதிர்க்கிறீங்கன்னு கேட்கிறாங்க. மீத்தேன், ஈத்தேன், புரோபேன், ஹைட்ரோ கார்பன்… எல்லாமே, நிலத்த பிளந்து எண்ணெய் எடுக்கிற விஷயம்தான். நமக்கு இது தாயின் மடி, அவங்களுக்கு இது 'ஆயில் ஃபீல்ட்’. ஓ.என்.ஜி.சி அதிகாரிகளெல்லாம் ‘வெறும் 120-க்கு 120 சதுர மீட்டர் அளவுக்குத்தான் குழாய் அமைக்கிறோம். இதனால பெரிய பாதிப்பு வராது’-ன்னு சொல்றாங்க. வருங்கால விளைவுகள் எப்படி இருக்கும்ன்னு சொல்றதில்லை. குழாய் போட்டு, ரெண்டு பக்கமும் சுமார் மூன்று கிலோ மீட்டருக்கு தோண்டிட்டு போவாங்க. மொத்தம் ஆறு கிலோ மீட்டர். இப்போ பாதிக்கும் இடத்தின் அளவு, 36 கிலோ மீட்டர். ஒரேயொரு குழாய் அமைக்கும்போது, அதனால உடனடியா பாதிக்கப்படப்போறது 36 கிலோ மீட்டர் நிலம். எல்லாக் குழாய்களும் வயல்வெளியிலும்,கொல்லைப்புறத்திலேயும் அமைக்கப்படுது. இந்த சூழ்நிலையில் பாதிப்பு யாருக்கு வருது. தாயும், தாய் மண்ணும் வெவ்வேறு இல்லைங்க. இப்படி எடுக்கிற எண்ணெயையோ எரிவாயுவையோ நமக்கு குண்டானுல ஊத்திக் கொடுப்பானா? இல்ல நமக்கு காசுக்குத்தான் விற்பானா? எடுத்துக் கணக்கே இல்லாம ஏற்றுமதி செய்வார்கள். அதுவும் டாலர்களில். ஆனால், குழாய் பதிக்கப்பட்டது நம்ம வாழ்விடத்தில். இந்த பாதிப்பெல்லாம் மறைச்சிட்டு ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் சிலர், `இங்க நீங்க பிரசாரம் செய்யுறது போல எந்த பாதிப்பும் இல்லை. தேவையில்லாமல் மக்களைத் தூண்டி விடாதீங்க..’-ன்னு சொல்லும்போதெல்லாம், அவங்களுக்கு அந்தப் பகுதியில இருக்கிற தண்ணீரை குடிங்கன்னுதான் சொல்லுவோம்.  எண்ணெய் மட்டும் அந்தத் தண்ணீரில் தனியா மிதக்கும். இப்படி எங்களை கேள்விகளால் எதிர்கொள்ள முடியாம, `கதிராமங்கலம் மாடல்’ என்ற திட்டத்தை வகுத்திருக்காங்க… (சிரித்துக்கொண்டே)

அதாவது, போராட்டம் நடக்கப்போகுதுன்னு தெரிந்த உடனேயே அதற்கு முதல் நாளே ஊர் மக்களை மிரட்டி வீட்டில் இருந்து வெளியே வரக்கூடாதுன்னு சொல்றது. போராட்டக்காரர்களைக் கைது பண்ணி அடைச்சு வைக்கிறது, தொடர்ச்சியா ரோந்து போய்கிட்டே இருக்கிறதுன்னு பல அடுக்குமுறைகள் இருக்கும். ஆனால், அந்த கிராமங்களில் பல பேர் வீட்டில் கழிவறையே இல்லாததால். அவர்களை வீட்டுக்குள்ளையே சிறை வைப்பதன் வழியாக அடிப்படை வாழ்க்கைக்கே பாதிப்பு ஏற்படுத்துறாங்க.

இந்தப் பிரச்னைகளுக்காக நீதிமன்றத்தை நம்பி பிரயோஜனமில்லை. எதை மக்கள் பிரச்னையாகக் கோர்ட் பார்க்கும் எதைப் பார்க்காது என்னும் விழிப்புஉணர்வு எங்களுக்கு இருக்கு. அதனால் நாங்கள் மக்கள் கிட்ட பேசி, அவங்கள ஒண்ணு திரட்டி, குழாய் பதிக்கிற இடத்துக்கு நேரடியா போய் வேலையை நிப்பாட்டுவோம். அதுதான் எங்க உத்தி. அவங்ககிட்ட ஒரு கதிராமங்கலம் மாடல் இருக்குன்னா. அதை எதிர்கொள்ள எங்க கிட்டேயும் ஒரு மாடல் இருக்கு. ஒருவேளை கோர்ட்டுக்கு போய் கேஸ் போட்டு, தீர்ப்பு சொல்ற ஜட்ஜ், `இனி போராடவே கூடாது’ன்னு சொல்லிட்டா. இந்த அழிவு திட்டங்கள ஒழிச்சுக்கட்டவே முடியாத நிலைமை வந்திடும். இந்திய அரசும் அதே போலதான், தமிழகத்தில தமிழர்கள் இருக்கக்கூடாது என்பதில் தெளிவா இருக்காங்க.  பிரச்னையால பாதிக்கப்படறது மக்கள். பிரச்னை பண்றது அரசு. அப்ப, மக்களுக்கும் அரசுக்கும் இடையிலதான் பிரச்னை. இதை, களத்தில இறங்கினாதான் சரிகட்ட முடியும். டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா அறிவிக்கிறது மூலமாகத்தான் அதை செஞ்சுகாட்ட முடியும்" என்றார் தீர்க்கமாக.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About