வாட்ஸ் அப்தான் காரணமா? திருவண்ணாமலை சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் உண்மை என்ன?

"ம்மா... இங்க ரேணுகாம்பாள் கோயிலுக்குப் போற வழி எது?" காரிலிருந்தபடி அந்த டிரைவர் கேட்கிறார். பக்கத்தில் குழந்தைகள் விளையாடிக்க...

"ம்மா... இங்க ரேணுகாம்பாள் கோயிலுக்குப் போற வழி எது?" காரிலிருந்தபடி அந்த டிரைவர் கேட்கிறார். பக்கத்தில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். காரிலிருந்து 65 வயது அந்த அம்மா கீழே இறங்குகிறார்.

``ஏப்பா...மோகன்...மலேசியாவுலருந்து சாக்லேட் வாங்கிட்டு வந்திருந்தீங்களே. அத எடுப்பா, இந்தக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்..."

தன் பையிலிருந்த சாக்லேட்களை எடுத்துக் கொடுக்கிறார் மோகன். அதை அந்தக் குழந்தைகளுக்குக் கொடுக்கப் போகிறார் அந்த அம்மா. அவ்வளவுதான்.

``ஐயோ...குழந்தைங்கள கடத்துற கும்பல் வந்திருக்கு. எல்லோரும் ஓடிவாங்க...``அந்த ஊரிலிருந்த ஒரு பெண்,  பெரும் குரலெடுத்துக் கத்துகிறார்.

திருவண்ணாமலை பெண் கொலை

அதன்பின்னர் அங்கு நடந்த அத்தனையுமே அராஜகம்...அநியாயம்...அபத்தம்... ஆபத்து... அசிங்கம்... அநீதி... கும்பலாக ஓடி வந்தவர்களில் ஒருவர் கூட...இவர்களை யார்? என்ன? என்பது குறித்து எதையுமே விசாரிக்கவில்லை. இழுத்துப் போட்டு அடிக்கத் தொடங்கினர்.

அவர்களிடமிருந்து தப்பி, காரை எடுத்துக்கொண்டு புறப்பட்ட அவர்களைத் தடுத்து நிறுத்தி, மீண்டும் அடித்து, உதைத்து கடைசியில்... 65 வயதான ருக்மணியைக் கொன்றே விட்டார்கள்.

இதைச் செய்தவர்கள் யாரும் அதிகார பலம் கொண்டவர்கள் கிடையாது. இவர்கள் யாரும் ரவுடிகளோ, கூலிப்படையோ கிடையாது. சாதாரணமான மக்கள்.

சென்னைப் பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்மணியும், மலேசியாவிலிருந்து வந்திருந்த அவரின் உறவினர்களும் திருவண்ணாமலை மாவட்டத்தின் அத்திமூர் கிராம மக்களால் மிகக் கொடூரமான தாக்குதலுக்குள்ளாகினர். அதில் ருக்மணி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற நால்வரும் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

கடந்த ஒரு மாதத்தில் நடந்த பல சம்பவங்களில் இதுவும் ஒன்று அவ்வளவே. ஆனால், நல்லவேளையாக இந்தச் சம்பவம்தான் இன்று தமிழகத்தையே இந்தப் பிரச்னை பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

பெண் அடித்து கொலை

இந்தப் பிரச்னைகளுக்கான ஆரம்பமாக பெரும்பாலானவர்கள் கைகாட்டுவது "வாட்ஸ் அப்". கடந்த ஒரு மாதமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் இப்படி ஒரு வாட்ஸ் அப் செய்தி பரவி வந்தது...

``வட இந்தியாவிலிருந்து ஒரு கும்பல் தமிழகத்திற்கு வந்துள்ளது. அவர்கள் குறிப்பாக வட தமிழ்நாட்டிலிருந்து பல குழந்தைகளைக் கடத்திக்கொண்டு போகப் போகிறார்கள்."

இது கன்னாபின்னாவென்று பகிரப்பட்டது. உச்சமாக, தவறான தகவல்களை அடிப்படையாக வைத்து உருக்கமான ஒரு வீடியோவை வெளியிட்டார் செய்யாறு பகுதி இளைஞர் ஒருவர். (அவர் இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்).

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வடதமிழகத்தில் இது போன்ற 15 க்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் பல பேர் கொலை செய்யவும் பட்டிருக்கிறார்கள். குறிப்பாக வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களும்.

ஆம்பூர் பக்கத்தில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கம்பத்தில் கட்டி வைத்து, அடி பின்னியெடுத்தது ஒரு கும்பல். வலிப்பது கூட தெரியாமல் சிரித்துக் கொண்டிருந்தார் அந்தப் பெண். குடியாத்தம் அருகே தவறாக ரயில் நிலையத்தில் இறங்குகிறார் ஒரு வடமாநிலத்தவர். மொழி தெரியாமல், இடம் புரியாமல் வழி கேட்க கிராமத்திற்குள் நடக்கிறார். தாகமாக இருக்க... ஒரு வீட்டில் தண்ணீர் கேட்கிறார். அவ்வளவுதான் அடித்தே கொலை செய்யப்படுகிறார்.

இப்படியாக பல சம்பவங்கள். பல மரணங்கள்.

ருக்மணி - திருவண்ணாமலை பெண் கொலை

ருக்மணி

இதில் யார் மேல் தவறு? யார் செய்தது குற்றம்? யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், இறந்தவர்களோ, இப்போது உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களோ எந்தத் தவற்றையும் செய்திடவில்லை என்பது மட்டும் உண்மை.

கொஞ்சம் ஆராய்ந்துப் பார்த்தோமானால் இந்தச் சம்பவங்களுக்குப் பின்னர் இருக்கும் மனோநிலையை அறிந்துகொள்ளலாம்.

இது ஒரு "Mob Lynching Psychology". அதாவது, மக்கள் ஒன்றுகூடி ஒரு கொலையை நிகழ்த்தும் மனோநிலை. உலகின் மிக முக்கிய உளவியல் ஆராய்ச்சியாளர் சிக்மண்ட் ஃப்ராய்டு (Sigmund Freud) இதை ஒரு ``மந்தை மனநிலை" (Herd Beahiour) என்று குறிப்பிடுகிறார். இது போன்ற சம்பவங்களில் மக்கள் மந்தைகளாகக் கூடும்போது "உக்கிரமான பைத்தியங்களாக" மாறிவிடுகிறார்கள் என்று குறிப்பிடுகிறார் ஃப்ராய்டு.

இது போன்ற சம்பவங்களில் நாம் பலரின் உளவியலையும் அலசிப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு செய்தி. பொய்யான செய்தி...மக்களின் உணர்வுகளை நேரடியாகப் பாதிக்கும் வகையில் பரப்பப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் ``குழந்தைகள் கடத்தப்படும்" என்பது. இந்தச் செய்தி அவர்களுக்கு ஒரு வித பயத்தை, பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. சந்தேகிக்கும் மனப்பான்மையை அதிகரிக்கச் செய்கிறது. தவறான முன்முடிவுகளை எடுக்க வைக்கிறது.

அந்தத் தவறான முன்முடிவுகள் அவர்களுக்கு ஓர் எளிய இலக்கைக்  (Easy Target) காட்டுகிறது. வலிமையற்ற அந்த இலக்கைத் தாக்க தயாராகிறார்கள். கூட்டம் கொடுக்கும் தைரியத்தில் முதலாமவன் தன் கையை ஓங்குகிறான். அவனோடு சேர்ந்து முதல் குழு தாக்குதலைத் தொடங்குகிறது. அங்கு எழும் அந்த உணர்ச்சிப் பேரலை...மக்களை ஃபிராய்டு சொன்னபடி மந்தைக் கூட்டமாக மாற்றுகிறது. மந்தை மனநிலைக்கு மக்கள் மாறுகிறார்கள். இவனை அடித்தால் நமக்கு எந்தப் பாதகமும் இல்லை என்பதை உணர, உணர அங்கு வேகம் கூடுகிறது.

மக்கள் மனநிலை

ஒரு கட்டத்தில் அந்த வேகம், அவனைக் கொல்வது ஒன்றே முக்கியம் என்ற மனநிலையை எட்டவைக்கிறது. எல்லாவித நியாய, தர்ம கோட்பாடுகளையும் கடந்து... அவனைக் கொலை செய்ய வேண்டும் என்ற ஒற்றை மனநிலை ஏற்படுகிறது. இதை உளவியலாளர்கள் ``Feline Instinct" என்று சொல்கிறார்கள். அதாவது ஒரு புலியோ, சிங்கமோ வேட்டையாடும் போது ... தன் இரை ஒன்றை மட்டுமே இலக்காக வைத்திருக்கும். சுற்றியிருக்கும் வேறு எந்தச் சூழலும் அதை பாதிக்காது. அப்படியான ஒரு நிலைக்கு மக்கள் எட்டுகிறார்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம் இந்தத் தாக்குதலில் ஈடுபடுபவர்களுக்கு... ஒரு கொலையே செய்துவிட்ட பின்னரும் கூட எந்தக் குற்ற உணர்ச்சியும் எழாது. தங்கள் செயலை நியாயப்படுத்தும் கற்பிதங்களை அவர்களுக்கு அவர்களே சொல்லிக் கொள்வார்கள்.
அடுத்ததாகப் பாதிக்கப்படும் நபர்களுடைய மனநிலை. முதல் அடி வாங்கும் போதே அவர்கள் மிகப் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகிவிடுவார்கள். அதிகபட்சமாக முதல் அடி அடிப்பவனுடைய முகம் மட்டும் அவர்கள் மனதில் பதியலாம். மற்றபடி வேறு எந்த விஷயமும் அவர்களால் உணர முடியாது, வலியைத் தவிர. அந்தச் சமயத்தில், அந்த வலியிலிருந்து தப்ப அவர்கள் எதையும் ஒப்புக் கொள்ளத் தயாராகவே இருப்பார்கள். கைகள் இரண்டையும் குவித்து மன்னிப்புக் கேட்கும் வகையில், தன்னிச்சையாக அவர்கள்  கைகள் நகரும்.

    அமெரிக்காவில் கறுப்பர்களுக்கு எதிராக இந்த ``Mob Lynching" ஒரு காலத்தில் மிக அதிகமாக இருந்தன. 1877 லிருந்து 1950 வரையிலான காலகட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான கறுப்பினத்தவர் மற்ற இனத்தவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர்.
    

இது அல்லாமல், அந்தக் கூட்டத்தில் சில மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் தாக்குதலில் ஈடுபட மாட்டார்கள். ஆனால், அதே சமயம் இதை ஆதரிப்பதா, எதிர்ப்பதா, தடுப்பதா என்று எந்த முடிவும் எடுக்க முடியாமல் குழப்பத்தோடு நின்று பார்த்துக் கொண்டேயிருப்பார்கள்.
இப்படியாக அந்தச் சமயத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருப்பார்கள்.

மக்களின் மனநிலை குறித்தும், உளவியல் குறித்தும் இன்னும் இன்னும் கூட பேசலாம்தான். எனில், இந்தக் குறிப்பிட்ட சம்பவத்தில் அரசு இயந்திரங்களுக்கு எந்தப் பங்குமே இல்லையா? என்று கேட்டால்... நிச்சயம் இருக்கிறது. அவர்கள்தாம் இதைத் தடுத்திருக்க வேண்டும்.
கடந்த ஒரு மாத காலமாகவே வாட்ஸ் அப்பில் இது மாதிரியான பொய் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது என்பது தெரிந்த உடனேயே, காவல்துறை ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும். மக்கள் மத்தியில் விழிப்புஉணர்வு பிரசாரங்களை மேற்கொண்டிருக்க வேண்டும். ஒருவேளை... ``சாமி பேர்ல... முதல்வர் பழனிசாமி பேர்ல அர்ச்சனை பண்ணுங்க" என்பது போன்ற காவிய விளம்பரங்களில் மூழ்கியிருந்ததால் இந்த விழிப்புஉணர்வு பிரசாரங்களை முன்னெடுக்க நேரமில்லாமல் போய்விட்டதோ என்னவோ?!

ஒரு மாதத்தில் 15ற்கும் அதிகமான சம்பவங்கள், பல கொலைகள் நடந்த பின்னர், இப்போது தெருத்தெருவாக மைக்கைப் பிடித்துக் கொண்டு விழிப்புஉணர்வு பிரசாரம் மேற்கொள்ளும் காவல்துறை இதை முன்னரே செய்திருக்க வேண்டும்.

ஆனால், எல்லாம் முடிந்து இதையெல்லாம் பேசி இப்போது என்ன பயன்?

திருவண்ணாமலை பெண் கொலை

இதை நினைத்துப் பாருங்கள். ஒருவேளை ருக்மணி கொல்லப்படாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

அவர் கொடுத்த சாக்லேட்டை குழந்தைகள் மகிழ்ச்சியாக வாங்கி ருசித்திருப்பார்கள். யாராவது ருக்மணிக்கு கோயிலுக்கான வழியைச் சொல்லியிருப்பார்கள். நல்லபடியாக தரிசனத்தை முடித்திருப்பார்கள். உறவினர்கள் திருப்தியாக மலேசியா கிளம்பிப் போயிருப்பார்கள். இந்நேரம் ருக்மணி சிரித்துப் பேசி மகிழ்ச்சியோடு இருந்திருப்பார்.

ஆனால், ருக்மணி இப்போது உயிரோடு இல்லை!!!

மேலும் பல...

1 comments

  1. இந்த சம்பவத்தை டிவியில் கேட்டவுடன் மனதுக்கு கஷ்டமாக இருந்தது. எப்படியான ஒரு ஆட்டுமந்தை சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
    இந்த ஆட்டுமந்தைகளின் ஓட்டால்தான், திரும்பத் திரும்ப நமக்கு கேவலமான ஆட்சியாளர்கள் நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆட்டுமந்தைகளின் ஓட்டுரிமையை தடைசெய்ய வேண்டும்.

    ReplyDelete

Search This Blog

Blog Archive

About