"ஜியோ-வுக்கு முகேஷ் அம்பானி சொன்னதைத்தான், 'இரும்புத்திரை' விஷால் சொல்கிறார்!" - 'இரும்புத்திரை' விமர்சனம்.

கடன் என்றாலே கடுப்பாகும் இராணுவ அதிகாரி, தன் தங்கையின் திருமணத்திற்காகப் போலி ஆவணங்களை சமர்ப்பித்து வங்கியில் கடன் பெறுகிறார். ஒட்டுமொத்த...

கடன் என்றாலே கடுப்பாகும் இராணுவ அதிகாரி, தன் தங்கையின் திருமணத்திற்காகப் போலி ஆவணங்களை சமர்ப்பித்து வங்கியில் கடன் பெறுகிறார். ஒட்டுமொத்தப் பணமும், ஹேக்கிங் கும்பலால் திருடப்படுகிறது. அதில் சம்பந்தப்பட்டவர்களைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கும் இராணுவ அதிகாரிக்கு, டிஜிட்டல் உலகத்தில் நடக்கும் ஊழலோடு, ஒட்டுமொத்த ஹேக்கர்களின் தலைவனைப் பற்றியும் தெரிய வருகிறது. ஹேக்கிங் கும்பலின் தலைவரைப் பிடித்தாரா... அவரின் முகத்திரையைக் கிழித்தாரா என்பதே `இரும்புத்திரை' சொல்லவரும் கதை!

இந்தியாவின் வழக்கமான நடைமுறைகளை வெறுக்கும் இராணுவ அதிகாரி கதிரவன் (விஷால்), சிறு வயதிலேயே அவரது அம்மாவை இழந்துவிடுகிறார். அப்பா டெல்லி கணேஷும் ஊரைச் சுற்றி கடன் வாங்கி ஒளிந்து வாழ்கிறார் என்பது பிடிக்காமல், தனது 12 வயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறி, இராணுவத்தில் சேர்ந்துவிடுகிறார். தன் தங்கையிடம்கூட பேசாமல் வீட்டைவிட்டுத் தள்ளி தனியாகவே இருக்கிறார். இராணுவத்தில் சேர்ந்த பின்னும், கண் முன் நடக்கும் சின்னச் சின்ன தவறுகளையும் சகித்துக்கொள்ள முடியாத விஷால், தவறு செய்தவர்களை அடித்துவிட்டுதான் அடுத்த கேள்வியே கேட்கிறார். இவரின் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டுவர, விஷாலின் உயர் அதிகாரி அவரை சைக்காலஜிஸ்ட் ரதிதேவிடம் (சமந்தா) கவுன்சலிங் பெற அனுப்பி வைக்கிறார்.

ஆரம்பத்தில் முரண்டு பிடித்தாலும், போகப்போக இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போய்விடுகிறது. வீட்டைவிட்டுத் தள்ளியே இருக்கும் விஷாலைச் சொந்த ஊருக்குச் சென்று 30 நாள்கள் இருக்கும்படி டாஸ்க் கொடுக்கிறார், சமந்தா. வீட்டிற்கு வருகைதரும் விஷாலை வரவேற்க மனமின்றி, பழைய கோபத்தில் அவருடன் பேசாமலேயே இருக்கிறார், தங்கை தர்ஷனா. அந்தச் சமயத்தில், தனது தங்கையின் காதல் கதை விஷாலுக்குத் தெரியவருகிறது. காதலை திருமணத்தில் இணைக்க 10 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. கல்யாணத்தை நடத்திக்கொடுத்து, தங்கையுடன் சமரசம் ஆகிவிடலாம் என்று நினைத்து பணத்தைப் புரட்ட, ஊரிலிருந்து சென்னைக்கு வருகிறார், விஷால்.

எத்தனையோ வங்கிகள் ஏறி இறங்கியும் விஷாலுக்குக் கடன் தொகை கிடைக்காமல் போகிறது. அந்தச் சமயத்தில், லோன் ஏஜென்ட் அப்துலின் அறிமுகம் விஷாலுக்குக் கிடைக்க, போலி ஆவணங்களைத் தயார் செய்து வங்கியில் கடன் பெறுகிறார். பணம் பரிவர்த்தனை ஆன கொஞ்ச நேரத்திலேயே கணக்கில் இருந்த ஒட்டுமொத்தப் பணமும் ஹேக்கர்களால் திருடப்படுகிறது. ஹேக்கர்களைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கும் விஷால், கிடைக்கும் துப்புகளை வைத்து ஒயிட் டெவில் (அர்ஜூன்) எனும் மெயின் ஹேக்கரைப் பற்றித் தெரிந்துகொள்கிறார். இவரைப் போலவே பலரும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததும், தனது மிலிட்டரி டீமை வைத்து ஹேக்கர்களின் தலைவன் ஒயிட் டெவிலைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார், விஷால். இரும்புத்திரையை உடைத்து, ஒயிட் டெவிலை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதே படத்தின் மீதிக் கதை.

`டேட்டா இஸ் தி நியூ பெட்ரோல்' - ஜியோ நெட்வொர்க் சேவையை ஆரம்பிக்கும்போது முகேஷ் அம்பானி சொன்னது இதுதான். அதையேதான் `இன்ஃபர்மேஷன் இஸ் வெல்த்' எனச் சொல்லியிருக்கிறது, இந்த இரும்புத்திரை. நம்முடைய ஒவ்வொருவரின் பெர்சனல் தகவல்களும் ஸ்மார்ட்போன்கள் மூலம் டேட்டாவாக ஒயிட் டெவில், பிளாக் ஏஞ்சல் என டிஜிட்டல் திருடர்கள் கையில் சென்றுகொண்டிருக்கிறது. அவர்களிடமிருந்து ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என டிஜிட்டல் உலகின் ஆபத்தை எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் உண்மைகளாகப் பதிவு செய்திருக்கிறார், அறிமுக இயக்குநர் மித்ரன். அதேசமயம், `லோன் வேண்டுமா, ஆதாரிலிருந்து அனைத்துத் தகவல்களையும் கொடுங்கள்' எனச் சொன்னால், ஏமாந்துவிடாதீர்கள்! என எச்சரிக்கை கொடுத்திருக்கிறார். வாழ்த்துகள் ப்ரோ!. 

`சுமோ'க்களைப் பறக்கவிடுவது, `ஊருக்குள் இறங்கியிருக்கும் நூறு ரவுடிகளைப் போட்டுப் பொளப்பது' என்ற விஷாலின் வழக்கமான டெம்ப்ளேட் இந்தப் படத்தில் இல்லை. `இரும்புத்திரை'யில் விஷால் செம ஸ்மார்ட் ஹீரோ. ராணுவ மேஜராக, அடாவடி மகனாக, அன்பான அண்ணனாக... பக்குவப்பட்ட நடிப்பில் அசத்துகிறார், விஷால். ஆனால், படத்தில் ஸ்வீட், கியூட் சமந்தா இருந்தும் ரொமான்ஸ் லேதும்மா!. படத்தில் சமந்தா சைக்கியாட்ரிஸ்ட்டா, சைக்காலஜிஸ்ட்டா என்பது பெரிய சந்தேகம். ரோபோ ஷங்கர், விஜய் வரதராஜ் எனக் காமெடிக்கு இருவர் இருந்தும், `கலகல' மொமென்ட்ஸ் படத்தில் கொஞ்சமே கொஞ்சம்தான்.

படத்தில் யுவன் ஷங்கர் ராஜாதான் இசையமைப்பாளர் என்பது அர்ஜூனின் பி.ஜி.எம்மில் மட்டும்தான் தெரிகிறது. ஜார்ஜ் சி. வில்லியம்ஸின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரிய அளவுக்கு வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. சமந்தாவை அழகாய்க் காட்டியதில் தொடங்கி, ரிச்சி ஸ்ட்ரீட்டில் இருக்கும் பரபரப்பு வரை... அத்தனை விஷயங்களையும் அழகாகப் படம் பிடித்திருக்கிறார், ஜார்ஜ். இரண்டாம் பாதிக்குமேல் படு சுவாரஸ்யமாக திரைக்கதை நகர, ரூபனின் எடிட்டிங் ரொம்பவே உதவியிருக்கிறது. விஷாலின் ஆர்ம்ஸ், சமந்தாவின் அழகு, அர்ஜூனின் வில்லத்தனங்களை நேர்த்தியாகக் கொண்டுவர நீரஜ் கோனா, சத்யாவின் காஸ்ட்யூம் டிசைனிங் சிறப்பாக உதவியுள்ளது.

பொதுவாக டிஜிட்டல் தொடர்பான சினிமாக்களில் லாஜிக் ஓட்டைகள் அதிகம் இருக்கும். ஆனால், அப்படி அபத்தங்கள் ஏதும் இந்தப் படத்தில் துருத்திக்கொண்டு நிற்காமல் இருக்க மெனக்கெட்டிருக்கிறார்கள். அந்தப் பெரும் உழைப்பு படத்தில் தெரிகிறது.

`இரும்புத்திரை', டிஜிட்டல் இந்தியர்கள் மிஸ் செய்யாமல் பார்க்கவேண்டிய சினிமா!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About