முதல் பார்வை: இந்திரஜித் - இலக்கணப் பிழை!

அபூர்வ விண்கல் ஒன்றை தேடிச் செல்லும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் இடைவிடாத பயணமே 'இந்திரஜித்'! மத்திய தொல்லியல் ஆராய்ச்சித் துறை ...

அபூர்வ விண்கல் ஒன்றை தேடிச் செல்லும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் இடைவிடாத பயணமே 'இந்திரஜித்'!

மத்திய தொல்லியல் ஆராய்ச்சித் துறை இயக்குநராக இருந்த சச்சின் கடேகர் அதற்குப் பிறகு பேராசிரியராகத் தன் பணியைத் தொடங்குகிறார். சில மாணவர்கள் உதவியுடன் அபூர்வமும், அதிசயமும் உள்ள விண்கல் ஒன்றைத் தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதை அறிந்துகொள்ளும் தொல்லியல் துறை இயக்குநர் சுதான்ஷு பாண்டே அதற்குத் தடையாக இருக்கிறார். இந்நிலையில் சச்சினின் மாணவர் குழுவில் கவுதம் கார்த்திக் இணைகிறார். விண்கல் இருக்கும் இடத்தை எப்படி கண்டறிகிறார்கள், விண்கல்லை தேடிச் செல்வதற்கான இலக்கு என்ன, அந்தப் பயணத்தில் யாருக்கு என்ன நேர்கிறது, அதற்குப் பிறகான விளைவுகள் என்ன என்பது மீதிக் கதை.

'சக்கரகட்டி' தந்த இயக்குநர் கலாபிரபு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'இந்திரஜித்' மூலம் களம் இறங்கியிருக்கிறார். விண்கல் தொடர்பான அந்த கதையின் முடிச்சு சுவாரசியம் மிகுந்தது. ஆனால், அதை முழுமையாக ரசிகர்களுக்குக் கடத்துவதில் இயக்குநர் தவறியிருக்கிறார்.

கவுதம் கார்த்திக் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்திருக்கும் ஐந்தாவது படம் 'இந்திரஜித்'. துறுதுறுப்பு, குறும்பு, சேட்டைகள் செய்யும் புத்திசாலி கதாநாயகனாக தன்னை வெளிப்படுத்திக்கொள்ள கவுதம் கார்த்திக் முயற்சித்திருக்கிறார். ஆனால், அந்த முயற்சி முழுமையடையவில்லை. புன்சிரிப்புடன் ஹாய் சொல்லி அறிமுகமாவது, தத்துவம் என்ற பெயரில் வளவளவென பேசுவது, சீரியஸ் தருணங்களில் ஜாலியாக இருப்பது, பின் அதற்கொரு காரணம் பகிர்ந்து நியாயப்படுத்துவது, அப்பா கார்த்திக்கைப் போல பேச நினைப்பது என கவுதம் கார்த்திக் தான்தோன்றித்தனமாக நடித்திருக்கிறார். பள்ளத்தைத் தோண்டி, தலையில தொப்பி, வாயில சுருட்டு, கையில சவுக்கு என அவர் அதிஉற்சாகத்துடன் பேசும் வசனங்கள் சிரிப்பையே வரவழைக்கின்றன. விழுவதும், புரள்வதும், தொங்குவதுமாக எடுக்கும் கவுதம் எடுக்கும் சாகச ரிஸ்க்குகள் மட்டும் ஓரளவு பலன் அளிக்கின்றன.

சோனாரிகாவும், அஷ்ரிதா ஷெட்டியும் பெயரளவில் நாயகிகளாக படத்தில் வந்து போகிறார்கள். சோனாரிகா சில காட்சிகளில் கவுரவத் தோற்றதுடன் விடை பெறுகிறார். அஷ்ரிதாவுக்கு எந்த முக்கியத்துவமும் படத்தில் இல்லை. இறுதியில்தான் அஷ்ரிதா - கவுதம் கார்த்தி காதல் புலப்படுகிறது.

பேராசிரியராக நடித்திருக்கும் சச்சின் கடேகர் விண்கல் குறித்தான மீட்புப் பயணத்தில் தன் தவிப்பையும், இருப்பையும் பதிவு செய்கிறார். தொல்லியல் இயக்குநர் சுதான்ஷு பாண்டே பக்குவமாக நடித்திருக்கிறார். அவரின் மீதான பிம்பம் சண்டைக் காட்சியில் உடைந்து நொறுங்குகிறது. எம்.எஸ்.பாஸ்கர் சில இடங்களில் மட்டும் டெம்ப்ளேட் கலகலப்புக்கு பயன்பட்டிருக்கிறார். நாகேந்திர பாபு, அமித், ராஜ்வீர் சிங், ரஞ்சன் உள்ளிட்டோர் அரங்க உடைமைப் பொருள் போல இருக்கிறார்கள்.

கோவாவின் விசாலப் பரப்பையும், காங்கோ காடுகளின் அழகையும் ராசாமதி தன் கேமராவுக்குள் படம் பிடித்திருக்கிறார். கே.பி.யின் இசையில் பாடல்கள் சம்பந்தம் இல்லாத இடங்களில் இம்சை தருகின்றன. பின்னணி இசையில் பாஸ்மார்க் வாங்குகிறார். வி.டி.விஜயன், எஸ்.ஆர்.கணேஷ்பாபு களம் உணர்ந்து சரியாக கத்தரி போட்டிருக்கிறார்கள்.

விண்கல் என்ற ஒற்றை வரியை வைத்துக்கொண்டு விறுவிறு ஆக்‌ஷன் சினிமா கொடுத்திருக்க வேண்டிய இயக்குநர் வெறுமனே வேடிக்கை பார்த்ததுதான் பெருங்குறை. தொல்பொருள் ஆராய்ச்சியில் கரை கண்டவர்களே கண்டுபிடிக்காத அம்சங்களை, குறியீடுகளை, எல்லைகளை நாயகன் மட்டும் கண்டறிவதும், அடுத்தடுத்து நடக்கும் எல்லா காட்சிகளும் தற்செயல் நிகழ்வாக சித்தரிக்கப்படுவதும் நம்பும்படியாக இல்லை. படத்தில் எந்த அசம்பாவிதம் நடந்தாலும் யாரும் அதற்காக வருந்துவதோ, கவலைப்படுவதோ இல்லை. அலட்டிக்கொள்ளாமல் அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிடுகிறார்கள். பயமும், பதற்றமும் இல்லாமல் ஆபத்தை எதிர்கொள்கிறார்கள். எந்த பாதிப்பையும் உணராமல் பயணிக்கும் இந்தத் தன்மையே இலக்கணம் மீறியதாக இருக்கிறது.

கிராபிக்ஸ் காட்சிகளிலும், கலை இயக்கத்திலும் கவனம் செலுத்திய இயக்குநர் திரைக்கதையில் சொதப்பி இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. விண்கல்லுக்கான பயணத்தை பின்புலத்தோடு சொல்வது தற்போதைய கதைக்குள் இணையாமல் தனித்து துருத்தி நிற்கிறது. சண்டைக் காட்சிகள், சேஸிங் என எதிலும் லாஜிக் இல்லை. இதில் எதற்கு மாவோயிஸ்ட்களை வம்புக்கு இழுக்கிறார்கள்?, விமான விபத்தில் யாருக்கும் எந்தக் காயமும் இல்லாமல் தப்பிப்பது எப்படி, விண்கல் எப்படி காங்கோ காடுகளில் இருக்கிறது என்பதெல்லாம் மிகைத்தன்மையுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இப்படி லேசுபாசாக அணுகிய விதத்தில் 'இந்திரஜித்' இலக்கணப் பிழையாகவே இருக்கிறது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About